சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதனை முட்டையுடனான சத்துணவாக்கியவர் கலைஞர். ஒவ்வொரு மாவட்டத் திலும் கோழிப்பண்ணை நடத்தியவர் களிடமிருந்து தரமான முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. முட்டை விலை என்பது தேசிய முட்டை விலை நிர்ணயக் கழகம் நிர்ணயித்த விலையைவிட அதிகமாக விற்கக்கூடாது என்ற அடிப்படையில் கொள்முதல் நடந்தது.
எடப்பாடி ஆட்சியில் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, மாநிலம் முழுக்க ஒரே டெண்டர் என்றானது. 37 மாவட்டங்களுக்கும் ஒரேயொரு காண்ட்ராக்டர் சப்ளை செய்யவேண்டும். அவர் 5 கோடி ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். 25 கோடி ரூபாய் அளவிற்கு திவா லாகாத தன்மையுள்ளவராக இருக்கவேண்டும். அந்த கம்பெனி ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் 2020-2025 வரை பெற்றி ருக்க வேண்டும். அவர்கள் சப்ளை செய்யும் முட்டை அக்மார்க் முத்திரை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தங்கத்தை மதிப்பிட பயன்படும் பி.ஆர்.எஸ். ஹெச்.ஏ.சி.சி.பி. மற்றும் எப்.ஏ.எஸ்.ஏ.ஐ. என்ற உயர்தர உணவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்களை எடப்பாடி அரசு போட்டது.
கேட்பதற்கு இனிக்கும் நிபந்தனைகள் இவை. ஆனால், மாவட்டங்களில் உள்ள சிறிய அளவிலான கோழிப் பண்ணை யாளர்களால் இந்தளவுக்கு முதலீட்டுடன் செயல்படமுடியாது என்பதுதான் புதிய விதிமுறைகளுக்கு காரணம். அதனால், அ.தி.மு.க. அமைச்சராக இருந்த தங்கமணிக்கு வேண்டிய கிறிஸ்டி நிறுவனம் எளிதாக உள்ளே நுழைந்தது.
ஆண்டு முழுவதும் ஒரு முட்டை ரூபாய் 4.86 என்ற அளவில் கிறிஸ்டி நிறுவனம் சப்ளை செய்தது. புல்லட் முட்டை எனப்படும் கோழி போடும் மிகச்சிறிய முட்டைகளே பெரும்பாலும் இந்த விலையில் சப்ளை செய்யப்பட்டன. இதன் மூலம், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் பார்த்தது.
தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகும், கிறிஸ்டி நிறுவனம்தான் பழைய ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து, முட்டை சப்ளை செய்துவருகிறது. சத்துணவுத் திட்டத்திற்கு பருப்பு சப்ளை செய்வதற்கும் கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் எடுக்க தி.மு.க. ஆட்சி அனுமதித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ பருப்பின் விலை 85 ரூபாய் இருக்கும் பொழுது, கிறிஸ்டி நிறுவனம் ஒரு கிலோ ரூ.97-க்கு சப்ளை செய்தது. தி.மு.க. ஆட்சியில் மார்க்கெட்டில் ஒரு கிலோ 95 ரூபாய் என பருப்பு விற்கும் இந்த சூழலில், கிலோ 85 ரூபாய்க்கு சப்ளை செய்கிறோம் என அந்த டெண்டரை கிறிஸ்டி நிறுவனம் வீம்புக்கென எடுத்திருக்கிறது என்பவர்கள், மற்ற நிறுவனங்களை உள்ளே விடாமல் தடுக்கவே இந்த வீம்பு என்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் பருப்பு, பாமாயில், சர்க்கரை, முட்டை என அனைத்தையும் சப்ளை செய்தது கிறிஸ்டி நிறுவனம். எதையுமே அது உற்பத்தி செய்யவில்லை. டிரான்ஸ்போர்ட், சேமிப்பு கிடங்கு எல்லாமும் காண்ட்ராக்ட் தான். அதிக ரேட் கொடுத்து டெண்டர் எடுத்து மார்க்கெட் விலையை விட அதிகமான விலையில் சப்ளை செய்வதன் மூலம் சுமார் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
அ.தி.மு.க. ஆட்சியில் கிலோ 97 ரூபாய்க்கு பருப்பு சப்ளை செய்த கிறிஸ்டி, தி.மு.க. ஆட்சியில் 85 ரூபாய்க்கு சப்ளை செய்ய முன்வந்ததே, அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்ததற்கான ஒப்புதல் வாக்குமூலம். அதை வைத்து, அந்த நிறுவனத்தின் மீது உணவு அமைச்சர் சக்கரபாணி ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்திற்கே பருப்பு சப்ளைக்கான ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
கிறிஸ்டி நிறுவனம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கு தேர்தலில் செலவு செய்ய பணம் கொடுத்தது என கள நிலவரம் சொல்கிறது. ஈஸ்வரனும், நாமக்கல் எம்.பி.யான சின்னராசுவும் உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்த கொ.ம.தே.க.வினர். அவர்கள்தான் கிறிஸ்டியின் கொள்ளை லாபத்திற்கு உதவுகிறார்கள் என்கிறார்கள் கொங்குநாடு முட்டை உற்பத்தியாளர்கள்.
இந்நிலையில், முட்டை சப்ளை செய்வதற்கான சப்ளையர்கள் கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தியது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கூர் ஐ.ஏ.எஸ்., குழந்தைகள் நல திட்ட இயக்குநர் அமுதவல்- ஐ.ஏ.எஸ். ஆகியோர் நடத்திய அந்தக் கூட்டத்தில் கிறிஸ்டி நிறுவனம் கலந்துகொண்டது. அதே கூட்டத்தில் கலந்து கொண்ட முட்டை உற்பத்தியாளர்கள் அனைவரும் கிறிஸ்டிக்கு எதிராக பெருங் கூச்சல் எழுப்பியதால் அந்தக் கூட்டம் முடிவெடுக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று 4 ரூபாய்க்கு அதிகமாக விற்கும் முட்டையை 2.50-க்கு ஆண்டு முழுவதும் அளிப்போம் என கிறிஸ்டி நிறுவனம், நாளிதழ்களில் ஒரு பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய நிறுவனத்தின் பெயரில் முதல்பக்க விளம்பரம் கொடுத்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு மண்டலத்தில் பலவித எதிர்ப்புகளை சந்தித்த தி.மு.க., இந்த கிறிஸ்டி நிறுவனத்தால் முட்டை உற்பத்தியாளர்களின் பகைக்கும் ஆளாகிறது என்கிறார்கள்.