காவல் சித்ரவதையால் உயிரிழந்த அஜித்குமார் வழக்கினை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.யிடமிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டது. இதே வேளையில், பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையோ, விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, விசாரணை அதிகாரியாக மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை நியமித்தது.
அஜித்குமார் கொலை குறித்தான விசாரணையை சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் 2ஆம் தேதி தொடங்கினார் நீதிபதி. முதல் நாளில், காலை 10.45 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை, ஏறக்குறைய 11 மணி நேரம் வரை விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், மடப்புரம் கோவிலில் பணியிலிருந்த உதவியாளர் சக்தீஸ்வரன், கோவில் உதவி ஆணையரின் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேல், பாதுகாவலர்கள் குமார், வினோத்குமார், கோவில் பாதுகாப்பு அலுவலரும் சி.சி.டி.வி. கண்காணிப் பாளருமான சீனிவாசன், பிரவீன், நகை மாயமான காரை இயக்கிய அருண் மற்றும் அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான கணேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணையை நடத்திய நீதிபதி, அதனை எழுத்துப்பூர்வமாகவும், காணொலி வடிவமாகவும் பதிவு செய்தார். முன்னதாக, நகை தொலைந்து போனது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட சி.எஸ்.ஆர். மற்றும் எஃப்.ஐ.ஆர். ஆவணங்கள், காவல்நிலைய மற்றும் கோவில் சி.சி.டி.வி. டி.வி.ஆர். ஆகிய ஆவணங்களை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி. சுகுமார் ஆகியோர் நீதிபதியிடம் கொடுக்க, அது தொடர்பாகவும் விசாரணை நடந்தது.
இதனிடையே, காவலாளி அஜித்குமார் மீது போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சித்ரவதையை ரகசியமாக வீடியோ எடுத்ததை நீதிமன்றத்தில் ஆவணமாக சமர்ப்பித்தார் கோவிலில் பணியாற்றிய சக்தீஸ்வரன். அந்த வீடியோ, அஜித்குமாரின் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக அமைந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து காவலர்கள் தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட போலீசாரில் ஒருவரெனக் கூறப்படும் தனிப்படை காவலர் ராஜா, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுடன் தொடர்புடையவராக இருந்ததும், தற்போது சக்தீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத் தினருக்கு நேரடியாக உயிருக்கு அச்சுறுத்தல்களும், தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை டி.ஜி.பி.க்கு மனுவாக அனுப்பிய நிலையில், சக்தீஸ் வரனின் பாதுகாப்பை உறுதி செய்ய, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசாரை நியமித்து 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கியது காவல்துறை.
தனிப்படை காவல்துறையினர் தாக்குதல் நடத்தி மயங்கிய நிலையில் தூக்கிச்சென்று ஆட்டோவில் ஏற்றிய கோவில் உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக்வேலோ, "கோசாலையில் வைத்து அஜித்குமாரை தனிப்படையினர் அடித்தபோது சத்தம் கேட்டது. மயங்கிய நிலையிலிருந்த அவரை தூக்கிவந்து ஆட்டோவில் ஏற்றி விட்டேன். இதனை நீதிபதியிடம் தெரி வித்துவிட்டேன்'' என்றார். இதேவேளையில், அஜித்குமாரை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்ற ஆட்டோ ஓட்டுநர் அய்யனாரோ, "சக்தீஸ்வரன் தான் வந்து என்னை கூப்பிட்டார். மயங்கிய நிலையில் கண்களை மூடிக்கிடந்த அஜித்குமாரை 4 காவலர்கள், கோவில் பணியாளர் ஆகியோர் சேர்ந்து தூக்கிவந்து என்னுடைய ஆட்டோவில் வைத்தனர். ஆட்டோவில் ரத்தம் ஏதும் சிந்தவில்லை. இருந்தாலும் மயங்கிய அஜித்தை காவலர்கள் சேர்ந்து எழுப்ப முயன்றனர். மருத்துவமனைக்கு வந்த பொழுது என்னை காத்திருக்க வைத்து என்னுடைய பெயர், செல் எண் உள் ளிட்டவற்றை குறித்துக்கொண்டு அனுப்பி னார்கள். அப்போதே அஜித்குமார் இறந்து விட்டதாகக் கூறினார்கள். இதுதொடர்பாக நீதிபதியிடமும் விளக்கமாக கூறியுள்ளேன்.'' என்றார். ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த உடற்கூராய்வின் மூலம், சனிக்கிழமையே அஜித் மரணித்தார் என்ற தகவல் வெளியான நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் வாக்குமூலம் முக்கிய சாட்சியாக மாறியுள்ளது.
இரண்டாவது நாள் விசாரணையில் போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோவில் பாதுகாவலர்கள் வினோத், பெரியசாமி மற்றும் பிரபு ஆகிய நால்வரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அஜித் குமார் கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் நகை மாயமானதாக புகார் கொடுத்த நிகிதா கோவிலுக்கு வந்த நேரம், அங்கு நடந்த விவாதம், உரையாடல்கள் குறித்தும் இடம்பெற்றுள்ளது. அதுபோக, விசாரணை அதிகாரியான மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சம்பவ இடங்களான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், உதவி ஆணையர் அலுவலகம், கோசாலை, அஜித்குமாரை கூட்டிச்சென்ற டெம்போ உள்ளிட்டவைகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். மதிய நேரத்தில் அஜித்குமாரின் தாய் மாலதி, தம்பி நவீன்குமார் மற்றும் உறவினர்கள் ரம்யா, சரவணன் ஆகியோரையும் அன்றைய நாளில் விசாரணை செய்தார். கோயில் உதவி ஆணையர் கணபதிமுருகனோ, "ஜூன் 28ஆம் தேதியன்று சிவகங்கை எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தின் உத்தரவின்பேரில் வந்த எஸ்.ஐ. ராமச்சந்திரன் முறைப்படி எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு இங்கிருந்த சி.சி.டி.வி.யின் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றார்'' என நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். அந்த சி.சி.டி.வி.யில் தான், போலீசார் அஜித்தை அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் அழைத்துச் செல்வது, உயிரிழந்த பின் கோயில் ஊழியரான கார்த்திக்வேலு, வினோத் ஆகியோர் உதவியுடன் அஜித்குமாரை தூக்கி வந்து ஆட்டோவில் ஏற்றிச்செல்வது வரையிலான காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக அந்த சி.சி.டி.வி. டி.வி.ஆரை நீதிபதியிடம் கொடுத்துள்ளது காவல்துறை.
இதேநாளில், அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையோ, இந்த காவல் படுகொலை திட்டமிட்டு, தொடர்ந்து, பலமணி நேரம் நடத்திய தீவிரமான காவல் சித்ரவதை என்றும், சட்டவிரோத விசாரணை மற்றும் படுகொலை என்றும் விவரித்துள்ளது. அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புறக் காயங்கள் காணப்படுகிறது. இதில் 12 சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக்கட்டுக்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காயங்கள், இரும்பு, பிளாஸ்டிக் பைப், ரப்பர் போன்ற ஆயுதங்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், கட்டி வைத்து, பல பேர் பல இடங்களில் தாக்கியிருப்பதற்கான சாத்தியம் தெரிகிறது. குறிப்பாக, வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம், தலையில், கபாலத்தில் விழுந்த அடியால் மூளையில் ரத்தக்கசிவு, அதுபோல் சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமும் உள்ளது'' என்றும் குறிப்பிடுகிறது.
அஜித்குமார் மீது புகாரளித்த சீட்டிங் நிகிதாவோ, "நான் எங்கும் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை'' எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இருப்பினும் தன்மீது குவிந்துவரும் புகார்களால் மூன்றாம் தேதியன்று திருமங்கலத்திலிருந்து எஸ்கேப்பானவர் பொள்ளாச்சி சென்றிருக்கின்றார். அங்கிருந்த கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் பருகும்போது, நிகிதா இங்குதான் அமர்ந்திருக்கின்றார் என ஒருவர் 100க்கு போன் செய்துள்ளார். இருப்பினும் குறித்த நேரத்தில் காவல்துறை அங்கு வராததால் அங்கிருந்து கோவைக்கு சென்றிருக்கிறார் நிகிதா.
இது இப்படியிருக்க, "சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வரின் எண்ணம் மதிப்பிற் குரியது. ஆனால் அதைக்காட்டிலும் தமிழக காவல் துறையிலேயே மூத்த நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். ஆகையால் அவர்களைக்கொண்டு இந்த விசாரணையை மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும்'' என இடதுசாரிகள் கூட்டமைப்பின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன்.
மூன்றாவது நாளாக சுமார் ஒன்பது மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், "காலையில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், அஜித்குமாரின் வழக்கறிஞரான கார்த்திக் ஆகியோரிடமும், மதியம் 2.30 மணி முதல் 5.45 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக அஜித்குமார் உடலை உடற்கூராய்வு செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களான சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோரிடம் ஆய்வறிக்கை குறித்தும், உடலில் இருந்த காயங்கள் குறித்தும், அஜித்குமார் உயிரிழப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்தான தகவல்களை விசாரணை செய்தார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்.
விசாரணைக்கு வந்த திருப்புவனம் மருத்துவர் கார்த்திகேயனோ, "ஜூன் 28 மாலை 6:35 மணிக்கு போலீஸார் ஆட்டோவில் அஜித்குமாரை தூக்கிவந்தனர். பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா? எனக் கேட்டபோது, சிவகங்கை கொண்டுசெல்கிறோம் என போலீசார் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர்'' என்றார்.
இதனிடையே, அஜித் உயிரிழப்பிற்கு காரணமான நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், மேலும் "விசாரணைக்காக காவல்துறையினரின் ரகசிய சித்ரவதைக் கூடங்களை நடத்தி வருகின்றனர். தலைகீழாகத் தொங்கவிட்டு விசாரணை எனும் பேரில் அடித்து உதைக்கின்றனர். இந்த சித்ரவதைக்கூடம் காரைக்குடி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் சரகத்திற்குட்பட்ட சாக்கோட்டையில் இயங்கிவருகிறது. இதுபோன்ற கட்டடங்களையும், சித்ரவதைக்காக பயன்படும் அரசு வாகனங்களையும் ஆட்சியர் கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் சமூகநல இயக்கங்கள் சார்பில் சிவகங்கை ஆட்சியர் பொற்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது.
நான்காவது நாள் காலை 7.50க்கு துவங்கிய விசாரணை மதியம் இரண்டு மணி வரை நடந்தது. கடந்த 27ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்த பாரா போலீஸான இளையராஜாவிடம் விசாரணை செய்தார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்.ஐ. சிவப்பிரகாசத்தை விசாரித்தார். விசாரணை அதிகாரியின் முன்பு ஏ.டி.எஸ்.பி. சுகுமார் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் ஆஜராகினர். இதில், டி.எஸ்.பி., "நடந்த நிகழ்வில் தனக்கு எதுவுமே தெரியாது. எஸ்.பி.க்கும் தெரியாது'' என சாட்சியம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நீதிபதி வெங்கேடேஷ் பிரசாத்தும் விசாரணையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அஜித்குமார் கொலை குறித்தான மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷின் நீதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனால் என்னென்ன பூகம்பம் கிளம்புமோ என்பதுதான் காவல்துறையை பதட்டமடைய வைத்துள்ளது.