சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்த் ரவி திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட பிறகு ஒரு நாள் கழித்துதான் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு நான்கு நாட்கள் தொடர்ந்து ஹேமந்த் ரவி, அவரது அப்பா ரவிச்சந்திரன், அவரது தாயார் வசந்தா ஆகியோரை போலீசார் தொடர் விசாரணைக் குள்ளாக்கினார்கள். அப்பொழுது பல்வேறு கேள்விகள் அவர்களை நோக்கி கேட்கப்பட்டன. கடைசியாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ரவிச்சந்திரன், வசந்தா, ஹேமந்த் ரவி ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். ஆர்.டி.ஓ. பிரதீபா பிரபா மூவரிடமும் ஸ்டேட்மெண்ட் வாங்க தயாரானார். ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென போலீசார் ஹேமந்த் ரவியை கைது செய்தார்கள். இது அவர்களது பெற்றோர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

chitra

டென்ஷன் ஆன ஹேமந்த் ரவியின் அப்பா ரவிச்சந்திரன் அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம், ""போலீசார் திடீரென்று எனது மகனை கைது செய்திருக்கிறார்கள். சித்ராவின் தற்கொலைக்கு காரணமானவர்களை பாதுகாப்பதற்காக எனது மகனை கைது செய்திருக்கிறார்கள்'' என வெடித்தார்.

சித்ராவின் தற்கொலையில் யார் சம்மந்தப் பட்டுள்ளார்கள்? யாரை பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கிறது? என ஹேமந்த் ரவியின் தாயார் வசந்தாவை கேட்டோம். அதற்கு அவர், ""நான்கு நாட்கள் எங்கள் மூன்று பேரையும் தனித்தனியாக போலீசார் விசாரித்தார்கள். 5வது நாள் எனது மகனை "தற்கொலைக்கு தூண்டியவர்' என கைது செய்கிறார்கள். இதைத்தான் எனது கணவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்'' என்றார்.

Advertisment

நாம் தொடர்ந்து முயற்சி செய்து ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டோம். ""எனது மகனின் கைது நான் எதிர்பாராதது. நான்கு நாட்கள் நாங்கள் போலீசார் விசாரணைக்கு உள்ளானோம். ஆர்.டி.ஓ. விசாரணை என எங்களை அழைத்துச் சென்றுவிட்டு வேகவேகமாக எனது மகனை குற்றவாளி என போலீசார் ஐந்து நாள் கழித்து கைது செய்கிறார்கள். சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் எங்களுக்கு தெரிந்தவற்றை யெல்லாம் போலீசாரிடம் தெளிவாகவே எடுத்துச் சொன்னோம். சித்ராவுடன் அவர் தற்கொலை செய்து கொண்ட அன்று எனது மகன் உடனிருந்தார் என்பதைத் தவிர வேறு எந்த தவறும் அவன் செய்யவில்லை. திடீரென நடந்த நிகழ்வாக அந்த தற்கொலை நடந்து முடிந்தது. எங்களையும் சித்ராவின் தாயாரையும் தந்தை யையும் விசாரித்த போலீஸ், 5வது நாள் எங்கிருந்தோ வந்த ஒரு உத்தரவின் அடிப்படையில் அவனை குற்றவாளியாக்கிவிட்டார்கள். இதை தகுந்த ஆதாரங்களுடன் நான் விரைவில் மீடியாக்களிடம் தெரிவிப்பேன். அதனால்தான் அதற்கு முன்னோட்டமாக அவன் கைது செய்யப் பட்டவுடன் அங்கு நின்றிருந்த மீடியாக்களிடம் யாரையோ காப்பாற்ற எனது மகனை பலிகடாவாக்கிவிட்டார்கள் என்ற அர்த்தத்தில் பேசினேன்'' என்ற அவரிடம், ""உங்கள் பையன்மீது அவர் ஒரு ஏமாற்று பேர்வழி, அவர் பலரை பண விவகாரத்தில் ஏமாற்றியிருக்கிறார், அவர் எந்த தொழிலும் செய்யவில்லை என்றெல்லாம் புகார்கள் வருகிறதே'' என்று கேட்டோம். ""அதெல்லாம் உண்மையில்லை'' என்றார்.

வேறு யார் யாருக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்டோம். ""என் மகன் ஜாமீனில் வரட்டும், நான் மீடியாக்களிடம் சித்ராவின் மரணத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்று தெளிவாக கூறுவேன். அதைப் பற்றி உங்களுக்குத்தான் முதலில் சொல்வேன்'' என்றார்.

chitra

Advertisment

உண்மையில் என்ன நடந்தது என போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம். சித்ரா விவகாரத்தில் போலீசார் எந்த முடிவையும் எடுக்காமல் மெதுவாக விசாரித்து வந்தனர். ஆனால் நக்கீரனில் பெரம்பலூர் எம்எல்ஏ இலம்பை தமிழரசன் மற்றும் அதிமுக அமைச்சர் ஒருவர் இந்த தற்கொலையில் சம்மந்தப்படுகிறார் என செய்திகள் வந்தது. அந்த செய்திகள் வந்தவுடன் இலம்பை தமிழரசனுக்கு மிக நெருக்கமானவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சிறப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகிக்கும் ராஜேஷ் தாசுக்கு இந்த வழக்கு விசாரணையை நீட் டிக்காதீர்கள் என உத்தரவு அமைச்சர் மூலம் வந்தது. அந்த உத்தரவின்படி சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் ரவியை கைது செய்து வழக்கை முடித்துவிட்டார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

சித்ராவின் மரணம் தற்கொலையே அல்ல. அது ஒரு கொலை என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான ரகோத்தமன், ""ஒரு மரணத்தில் எப்படி அவர் இறந்தார் (Mode of death) என்பது முக்கியமானது. தற்கொலை செய்துகொண்ட சித்ராவின் முகத்தில் உள்ள காயம் போன்றவற்றை பார்க்கும்போது அவரை பின்னால் இருந்து வந்து ஒருவர் வாயை மூடி மூச்சை அழுத்தி கொன்றிருக்க வாய்ப்புள்ளது என பிரபல தடயவியல் துறை நிபுணர் ஜெயசிங் என்பவர் என்னிடம் தெரிவித்தார்'' என்ற அவர், நம் முன்பே ஜெயசிங்கிடம் இதுகுறித்து பேசினார்.

chitra

இந்த சந்தேகங்களுடன் இந்த வழக்கை விசாரித்த சென்னை மேற்கு பகுதி இணை கமிஷனர் மகேஷ்வரியிடமும் துணை கமிஷனரும் மருத்துவருமான டாக்டர் தீபா சத்யன் அவர்களிடமும் கேட்டோம். ""பிரேத பரிசோதனை ஒரு நாள் கழித்து நடந்ததற்கு காரணம், ஆர்.டி.ஓ. வர ஏற்பட்ட தாமதம்தான். சித்ராவின் முகத்தில் ஏற்பட்ட காயம் அவர் தூக்குப்போட்டுக்கொண்ட துணி கன்னத்தில் அழுத்தியதுதான் மற்றப்படி சித்ராவின் மரணம் முழுக்க முழுக்க தற்கொலை தான்'' என்றார்கள்.

சித்ராவின் மரணம் பற்றி நம்மிடம் பேசிய சித்ராவின் தோழிகள் ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னார்கள். ""மரணம் நடந்த இரவு சித்ராவுக்கும் ஹேமந்த் ரவிக்கும் இடையே சென்னை தாம்பரம் பகுதியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை யார் பெயரில் வாங்குவது என்பது தொடர் பான வாக்குவாதம் நடந்தது. அத்துடன் ஒரு தனியார் வங்கியில் ஒரு கோடி ரூபாய் ccகடன் வாங்கி வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக வாதம் நடந்திருக்கிறது. அத்துடன் சித்ரா நடித்து வரும் சீரியலில் அவருடன் நடித்து வரும் ஒரு நடிகருடன் சித்ரா நெருங்கி பழகுவது தொடர்பாக வாதம் நடந்தது. இந்த மூன்று விஷயங்கள்தான் மரணத் திற்கு முன்பு ஹேமந்த்துக்கும் சித்ராவுக்கும் இடையே நடந்த வாத பிரதிவாதங்களுக்கு காரணமாக அமைந்தது.

சித்ராவுக்கு நிறைய அரசியல்வாதிகளுடன் பழக்கம் இருந்தது. குறுகிய காலத்தில் பெசண்ட் நகரில் ஒரு வீடு, மடிப்பாக்கம் ராம்நகரில் ஒரு வீடு, திருவான்மியூரில் பார் வசதியுடன் கூடிய பங்களா ஆகியவற்றை ஆடி காருடன் சேர்த்து சித்ரா வாங்கினார். கோட்டூர்புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒற்றை படுக்கையறை கொண்ட ஒரு வீட்டில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த தந்தையுடன் வாழ்ந்து வந்த சித்ரா, பந்தா பாலு என்கிற நபருடன் முதலில் நட்பாக பழகியுள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட பாலுதான் சித்ராவை வளர்த்தவர். அவர் மூலம் மீடியா, சினிமா என ccவளர்ந்த சித்ரா வசதியடைந்தவுடன் அதே குடியிருப்பில் ஆடி காரை நிறுத்தி ஏகப்பட்ட கொண்டாட்டங்களை நடத்தினார்.

இப்படி பிரம்மாண்டமாக குறுகிய காலத்தில் வளர்ந்த சித்ரா, ஒரு கார் மோசடியில் பந்தா பாலு சிக்கியவுடன் அவரிடம் இருந்து விலகினார். அதன்பிறகு ஒருவரை காதலித்தார். அந்த காதல் தோல்வியில் முடிய கொரோனா பாதித்த மார்ச் மாதத்திற்கு முன்பு ஹேமந்த் ரவியை சந்தித்தார். ஹேமந்த் ரவி சித்ராவின் சமூகப் பிரிவை சேர்ந்தவர். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இருவரும் நெருக்கமானார்கள். ஹேமந்த் ரவி ஒரு பெரிய பிஸினஸ்மேன். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குடும்பத்திற்கு நெருக்க மானவர். அவர்தான் அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். சென்னை நகரில் மூன்று கறிக்கடைகளை நடத்தி வருகிறார். ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்கிறார் என ஹேமந்த் ரவியை பற்றி நண்பர்களிடம் வர்ணித்திருக்கிறார் சித்ரா.

வெகு விமர்சையாக நிச்சயதார்த்த விழாவை நடத்திய சித்ரா, ரகசியமாக ஹேமந்த் ரவியை பதிவுத் திருமணம் செய்திருக்கிறார். இப்படி அவசரமாக திருமணம் செய்ததற்கு என்ன காரணம் என தோழிகள் கேட்டதற்கு முதல் காதல்தான் தோற்றுப்போய்விட்டது. இந்தக் காதல் பப்ஜி விளையாட்டில் தொடங்கியது. இது விளையாட்டாக தோற்றுபோய் விடுமோ என்கிற பயத்தில்தான் திருமணம் செய்தேன்'' என்றார்.

ஆனால் ஹேமந்த் ரவி ஒரு ஏமாற்றுப் பேர்வழி. அவர் பலரை பண விவகாரத்தில் ஏமாற்றியுள்ளார் என தோழிகள் சொன்ன போதெல்லாம் சித்ரா அதை தட்டிக்கழித்தார். ஹேமந்த் ரவிக்கு சித்ராவின் நடவடிக்கைகள் எல்லாமே தெரியும். அவருடைய பலம், பலவீனம், அவருக்கு வருமானம் வருகின்ற வழி, அவர் எப்படி சொத்து சேர்க்கிறார் உள்பட அனைத்தும் தெரியும். இதில் சித்ராவுக்கும் அவரது தாயாருக்குமான தொடர்பை ஹேமந்த் ரவி துண்டித்தார். இதனால் ஹேமந்த் ரவியை நம்பாதே என சித்ராவின் தாயார் அழுத்தம் கொடுத்துள்ளார். ஹேமந்த் ரவியும் சித்ராவை சந்தேகப்பட்டார். இதற்கிடையே சித்ராவும் நடிகர் ரக்ஷன் என்பவருக்கும் இடையே இருந்த தொடர்பும் அதனால் எழுந்த சில வில்லங் கங்களும் பிரச்சனையானதால் சித்ரா ddமரணமடைந் தார் என்கிறது அவரது நண்பர்கள் வட்டாரம்.

இதுபற்றி ரக்ஷனிடம் கேட்டபோது, ""சித்ராவின் கணவர் ஹேமந்த் ஒரு ஏமாற்று பேர்வழி என எங்கள் துறையில் பேசிக்கொள்வார் கள். நான் சித்ராவுடன் டேட்டிங் சென்றதாகவும் அதை வீடியோ எடுத்து அவரை மிரட்டியதாகவும் வரும் செய்திகள் உண்மையானவை அல்ல. நான் இன்றும் சொற்பத் தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டு ஒரு கூலித் தொழிலாளியாகவே வாழ்க்கையை நடத்தி வருகிறேன். சித்ரா எனக்கு நல்ல தோழி. அவ்வளவுதான். அவரது மரணத் திற்கு நானும் சென்றிருந்தேன். எல்லோரும் ஹேமந்த் ரவியைத்தான் குறை சொல்லி அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தோம். இதைத்தவிர எனக்கும் சித்ராவின் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார்.

சித்ராவிற்கு அ.தி.மு.க. அரசியல்வாதிகளிடம் நிறைய தொடர்பு உண்டு. சித்ராவுடன் அரசியல் வாதிகள் நிற்கும் புகைப்படங்களை அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். சித்ராவின் மரணம் எழும்பும் கேள்விகள், ஆளும் கட்சியை நோக்கி திரும்பி வருகிறது என்பதால் அவசர அவசரமாக போலீசார் சித்ராவின் வழக்கை முடித்துவிட்டார்கள் என்கிறார்கள் சித்ராவுக்கு நெருக்கமான நண்பர்கள்.

-தாமோதரன் பிரகாஷ், அரவிந்த்