கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஜூலை 11-ந் தேதி மாலத்தீவிற்கு சென்றது "விர்கோ 9' எனப் பெயரிடப்பட்ட "பார்ஜியா' வகையிலான சிறு சரக்குக்கப்பல். விவின் குணசீலன் என்ற மாலுமியின் தலைமையில், இந்தோனேசியாவை சேர்ந்த 8 பேர், தூத்துக்குடியை சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோவுடன் கடந்த 27-ஆம் தேதி திரும்பிய போதுதான் ஒரு பிரச்சனை முளைத்தது. கப்பலிலுள்ள ஜி.பி.எஸ்.ஸைக் கண்காணித்த கப்பலின் தூத்துக்குடி முகவர் கடலோர காவல்படைக்கு கப்பலில் புதிதாக ஒருவர் ஏறியதாகக் தகவல்சொல்ல, கப்பலை வழிமறித்த கடலோரக் காவல்படை உள்ளே இருந்தவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானது.
உள்ளே இருந்தவர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப். ஒட்டுமொத்த உளவுத்துறை யும் அங்கு ஆஜரானது. "இவரை எப்படி ஏற்றிக் கொண்டு வரலாம்' என்று கேப்டன் விவின் குணசீலனிடம் விசா ரணை நடத்த, அவரோ கடல்சட்டப்படி கடலில் ஒருவர் உதவி கேட்டால் செய்யலாம் என்பதன் அடிப்படையில் அவரை ஏற்றிக்கொண்டு வந்ததாகச் சொல்லி சமாளித்திருக்கிறார்.
"துணைஅதிபர் பதவியில் இருந்த அவரை நாம் எப்படி விசாரிக்கலாம்?' என எஸ்.ஐ. ரேங்கி லுள்ள உளவு அதிகாரிகள் தயங்க, மீடியாவிற்கு கசியக்கூடாது விசாரித்துக் கொள்ளலாமென மேலிடத் தகவல் வர எங்கள் டீம் விசாரிக்கத் தொடங்கியது. முதலில் MAS PAPPUWA 77 எனப் பெயரிடப்பட்டு மலேசியக் கொடியுடன் மலேசியத் தொழிலதிபரிடம் இருந்த இந்தக் கப்பல், பல கைகள் மாறி தற்பொழுது மாலத்தீவை சேர்ந்த முராய்ப்பால் வாங்கப்பட்டு விர்கோ 9 ஆக மாறியிருக்கின்றது.
அகமது அதீப்பை விசாரிக்க அவர், பெய்து எனப்படும் தீவிலிருந்து சிறு படகுமூலமாக 28-ஆம் தேதி கப்பலில் ஏறியிருக்கின்றார். அவருடைய இலக்கு தூத்துக்குடி அல்ல..! வரும் வழியில் ராமநாதபுர மாவட்ட கடற்பரப்பிலுள்ள வாலைத்தீவின் அருகிலிருக்கும் படகு மூலமாக இலங்கை சென்று அங்கிருந்து வெளிநாடு தப்பிச்செல்வதே நோக்கம். இதற்காக இலங்கை மட்டக்களப்பு எனும் பகுதியில் காத்திருந்த இவரது நண்பரை எங்களுடைய தகவல்மூலம் கைதுசெய்துள் ளது இலங்கை உளவுத்துறை. அகமதுவிட மிருந்து டுராய் சாட்டிலைட் போன் ஒன்று, 7000 அமெரிக்க டாலர்கள் மற்றும் டூப்ளிகேட் பாஸ்போர்ட் கைப்பற்றப்பட்டது'' என்கிறார் விசாரணைக்குழுவிலுள்ள ஐ.பி. அதிகாரி ஒருவர்.
மாலத்தீவின் அரசியல் சாசனப்படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிபராக அல்லது துணை அதிபராக பதவியேற்க முடியும். ஹவாலா பணப்பரிமாற்றத்தில் உலகளவில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள வருக்காக அந்த அரசியல் சாசனத்தையே திருத்தி 34-வது வயதிலேயே துணை அதிபராக்கப்பட்டார் அகமது அதீப் காபர். பின்னாளில் அதிபருக்கும், துணை அதிபருக் கும் பிணக்கு ஏற்பட, அதிபர் கொலை முயற்சிக்கு இவர்தான் காரணம் என அகமது அதீப்பை 24-10-2015-ல் கைது செய்த மாலத்தீவு அரசு தனித்தீவில் அடைத்தது... அதன்பின் தேர்தல் மூலம் அமைந்த புதிய அரசோ, முன்னாள் அதிபர் மற்றும் துணை அதிபர் மீது 2 லட்சம்கோடி பணம் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி வழக்கினைத் தொடுத்தது. அதில் ஜூலை 31-ஆம் தேதி வாய்தா வாங்கிய நிலையில் எஸ்கேப்பாகி யிருக்கின்றார் அகமது அதீப்.
சீனாவின் பின்புலத்தில் லண்டனில் இயங்கும் GURNEICA 37 எனப்படும் நீதி அமைப்பு இந்திய அரசிற்கு ஒரு அறிக்கை யை எச்சரிக்கையாக அனுப்பியது. அதில், "கைது செய்யப்பட்டவர் ஒரு நாட்டின் முன் னாள் துணை அதிபர், அவரை கண்ணிய மாக நடத்தவேண்டும். உடனே அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது அகதி அந்தஸ்தாவது கொடுக்கப்பட வேண்டும் இல்லையெனில் ஐ.நா. சபைக்கு செல்வோம்' என எச்சரித்தது. சில வருடங்களுக்கு முன்பு துபாய் மன்னரின் மகள் கோவா வந்திருந்த பொழுது இதே நாடகத்தை நடத்திய இந்த அமைப் பினைப் பற்றி முன்னரே தெரிந்திருந்ததால் உளவுத்துறை உஷாராக, அகமது அதீப் விஷயத்தில் மௌனம் சாதித்தது இந்திய அரசு. அகமது அதீப்பின் சட்ட விரோத ஊடுருவல் சர்வதேசத்தில் விவாதப்பொருளாக மாறிய வேளையில், முழுமையான விசாரணைக்குப் பின் மாலத்தீவிடமே திரும்ப ஒப்படைத்தது இந்தியா. ரா அதிகாரி ஒருவரோ, ""சீனாவிற்கும் அகமது அதீப்பிற்கு மான தொடர்பு உலகமறிந்த விஷயம். சீனாவுடன் சேர்ந்து என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது? இந்தியாவிலுள்ள சீன உளவாளிகள் யார்… யார்..? அவர்களுக்குள் பணப்பரிமாற்றங்கள் என்னென்ன? இவர்களுக்கு உதவுபவர்கள் யார்? என்ற பல கேள்விகளுக்கு நடுக்கடலில் விடைகிடைத்துள்ளது. விரைவில் அவர்கள் சிக்குவார்கள்'' என்கிறார் அவர்.
மாலத்தீவின் முன்னாள் அதிபரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மத்திய, மாநில உளவு அமைப்புக்கள் தீவிரமாக களத்திலிறங்கியுள்ளன. விரைவில் திமிங்கலமே சிக்கும் என்கின்றனர் உளவுத்துறையினர்.
-பரமசிவன், நாகேந்திரன்