இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரையைப் போலவே, கைலாஷ் யாத்திரையை தங்கள் கடமையாகப் பார்க்கிறார்கள் இந்துக்கள். கூடவே, மானசரோவர் தீர்த்தக்கரையையும் வழிபடுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பக்தர்களை அனுமதிக்கிறது இந்திய அரசு. சுற்றுலா நிறுவனங்கள் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பக்தர்களைக் கூட்டிச்செல் கின்றன.
இப்படிச் செல்லும் பக்தர்களை சீன அதிகாரிகள் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள். இந்துமதத்தின் பாதுகாவலர்களாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசோ, இதைத் தட்டிக்கேட்க திராணியற்றுக் கிடப்பதாக திட்டித்தீர்க்கிறார்கள் கைலாஷ் யாத்திரை பக்தர்கள். சில தினங்களுக்கு முன்னர் கைலாஷ் பயணம் சென்று திரும்பியிருக்கும் சிவபக்தரான விராலிமலை பூபாளன், தனது கசப்பான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
""சைவக் கடவுளான சிவன் குடிகொண்டி ருக்கும் கைலாய மலையை தரிசிக்கவும், மானசரோவர் தீர்த்தகரையில் வழிபடவும் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம்பேர் வரை செல்கிறார்கள். கைலாய மலைக்குசெல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, உ.பி.யிலிருந்து நேபாளம் நேப்பாள் கஞ்ச் சென்று, அங்கிருந்து சிறிய விமானம் மூலம் சிமிகாட்டிற்கு சென்று, பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹில்ஷாவில் இறங்கி, அங்கே சீன திபெத் எல்லையில் இருக்கும் தொங்குபாலத்தில் நடந்துசென்று சீன எல்லைக் குள், அவர்களின் அனுமதிபெற்று தக்கல்கோட் என்ற இடத்தின் வழியே செல்லவேண்டும். இரண்டு, டெல்லியிலிருந்து நேபாளம் தலைநகர் காத்மண்டு சென்று, அங்கிருந்து நான்கு நாட்கள் பஸ் பயணமாக சாகா டோங்பா வழியாக மானசரோவர் தீர்த்தக்கரை செல்வார்கள். இதில், வயதானவர்கள் முதல் வழியையே தேர்ந் தெடுப்பார்கள்.
நாங்களும் முதல் வழியைத்தான் தேர்ந் தெடுத்தோம். பல இடையூறுகளுக்குப் பிறகு சீன சோதனை அலுவலகம் சேர்ந்தோம். அங்கே பக்தர்களை சோதனைசெய்ய வைத்திருக்கும் மூன்று ஸ்கேனர்களையுமே சாக்கு போட்டு மூடியிருந்தார்கள். சோதனை என்ற பெயரில் எங்களை வெயிலில் நிறுத்தினார்கள். எங்கள் கைடிடம் கேட்டால், "எதுவும் பேசாதீங்க. படம் எடுக்கக்கூடாது. மீறினால், இங்கேயே நிறுத்தி வச்சிருவாங்க' என்று சொல்லிவிட்டார். எல்லோரும் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால், வெயிலில் சுருண்டுவிட்டோம். வெறும் 40 பயணிகளை மூன்றுமணிநேரம் கைகளால் சோதனை செய்தனர். அங்கிருக்கும் அலுவலகத்தில் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத ஒரேயொரு கழிப்பறைதான் இருந்தது. மூக்கைப்பிடித்துக் கொண்டே போகவேண்டிய அவலம்.
ஒவ்வொரு நாட்டிலும் இமிகிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகங்கள் அருகருகேதான் இருக்கும். ஆனால், சீனாவில் இந்தியப் பயணி களுக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவே கஸ்டம்ஸ் அலுவலகத்தை 20 கி.மீ. தள்ளி கட்டியிருந்தார்கள். அங்கே மீண்டும் சோதனைக்கு உட்பட வேண்டியிருந்தது. மானசரோவர் ஏரிக்கரையில் தங்கியபோது, படுகேவலமான, கதவுகளே இல்லாத கழிவறைகள் இருந்தன. வெளியிடங்களில் மைனஸ் 10 டிகிரி வரை குளிரடித்ததால், அங்கேயும் செல்லமுடியாமல் முதியவர்கள் பட்ட கஷ்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதேபோல், தொரல்புக், டோல்மாபாஸ் ஆகிய இடங்களிலும் பராமரிப் பில்லாத கழிவறைகளால் ரொம்பவே கஷ்டப் பட்டோம்.
இத்தனை துன்பங்களையும் கடந்து கைலாய மலையைப் பார்த்துவிட்டு திரும்பிவந்தால், இமிகிரேசனில் வேண்டுமென்றே 4 மணிநேரம் பேருந்துகளில் இருந்து பயணிகளை கீழே இறங்கவிடாமல் காக்கவைத்தனர். உறைகுளிரில் துடித்துக் கிடந்தோம். பின்னர் தாமதமாக அனுப்பியதால், ஹெலிகாப்டர் சென்றுவிட்டது. கூடுதலாக இரண்டுநாள் மலைப்பகுதியில் தவித்தோம். தக்கல்கோட் என்ற ஊரில் பல கி.மீ. தூரத்திற்கு மரப்போத்துகளை நட்டு, அவை சீக்கிரம் வளர்வதற்காக நுண்ணூட்ட கரைசல்களை குளுக்கோஸ் பாட்டில்களின் மூலம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். மரங்களை வளர்க்கவே இத்தனை நவீனவசதிகள் செய்யும் சீன அரசு, இந்திய பக்தர்களை வாட்டி வதைப்பது வேதனைக் குரியது.
இதெல்லாம் இந் திய அரசுக்கு தெரியவே தெரியாதா? அங்கிருக் கும் தூதரகம் இதுபற்றி ஏன் கேள்வி எழுப்ப வில்லை? இந்திய பக் தர்களின் வருகையின் போது, அங்கே இந்திய அதிகாரிகள் இருந்திருக்க வேண்டுமே? எந்த இடத் திலும் மருத்துவ வசதி கிடையாது. இதனால், தொரல்புக் வரை சென்றபின்பு உடல் சுகவீனம் ஏற்பட்டு வயதான பயணிகள் வீடு திரும்புகின்றனர். அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இதையெல்லாம் சீன அரசிடம் பேசி இந்திய அரசு சரிசெய்ய வேண்டும்' என்றவர், ""ஹஜ் பயணத்திற்கு வழங்குவதுபோல், கைலாஷ் யாத்திரைக்கும் தமிழக அரசு இந்து அறநிலையத்துறையின் வாயிலாக 500 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் வரை கொடுக்கிறது. ஆனால், அங்கு நாங்கள் படும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாதது வேதனை தருகிறது. சீன அரசின் பொதுக்கழிவறைகள் அத்தனை சுத்தமாக இருக்கும். இமிகிரேசனிலும் கனிவாக நடப்பார்கள். அதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். ஆனால், கைலாஷுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் சீன அதிகாரிகள் செயல்படுவதை உணரமுடிகிறது. நமது அரசுக்கும் இந்தியர்கள் அங்கே செல்வதில் விருப்பமில்லைபோல'' என்றார் ஆதங்கத்துடன்.
நிம்மதி தேடி கோவிலுக்குச் செல்பவர்கள் படும் துன்பத்தை, மதத்தின் பேரால் ஆட்சி நடத்தும் அரசு கண்டுகொள்ளுமா?
-இரா.பகத்சிங்