டாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்தியா- சீனாவுக்கு இடையே மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மே 5-ஆம் தேதிவாக்கில் லடாக்கிலுள்ள பங்காங் ட்ஸோ ஏரியருகே இந்திய- சீன ராணுவ வீரர்கள் துப்பாக்கியின்றி மோதிக்கொண்டனர். இதையடுத்து இந்திய விமானங்கள் இப்பகுதிக்கு பறந்தன. எல்லைப் பகுதியில் இத்தகைய உரசல்கள் வழக்கமானதுதான் என்ற விளக்கம் தரப் பட்டது. மேலும் மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் சீன ராணுவம் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுவருவது தொடர்பாக, இந்தியப் பிரதமர் முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பிரச்சனையால் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெறவிருந்த ராணுவத் தளபதிகளுடனான கமாண்டர்ஸ் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அது மே 27 முதல் மே 29 வரை நடைபெற்று, சீனா பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ic

Advertisment

லடாக்கில் நடப்பது என்ன?

இந்திய- சீன எல்லைக்கோடு என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் என பல்வேறு மாநிலங்களோடு தொடர்புடையது. இதில் சில எல்லைத் தகராறுகள் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவருகின்றன.

தற்போது கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியிலும், சுடுநீருற்றுப் பகுதியிலும் சீனப்படை தனது வழக்கமான எல்லையைவிட்டு அத்துமீறி முன்னேறியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கின் கே.எம். 120 எனப்படும் நிலைப்பகுதியில் 10- 15 கிலோமீட்டர்கள் முன்னேறி நூற்றுக்கணக்கான டெண்டுகளை சீன ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 5000 சீன ராணுவ வீரர்கள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் பாங்காங் ஏரியில் படகு மூலம் ரோந்துவந்தும் இப்பகுதியை சீனா கண்காணித்து வருகிறது. இது வழக்கமானதல்ல. இப்பகுதியில் இந்தியா வழக்கமாக 250 ராணுவ வீரர்களையே நிறுத்தும். சீனாவின் அத்துமீறலால் இந்தியாவும் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களைக் கொண்டுவந்து ஆயத்தநிலையில் நிறுத்தியுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சீனா சரியான பதில்தர ஆயத்தமாகிவருவதாகக் குறிப்பிட்டுள்ளது சீனப் பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ்.

அப்படியென்ன இந்தியா சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது?

""கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா சாலையமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலைகள் பரி பூரணமாக நிறைவடையுமானால், இந்திய ராணுவம் வாகனங்களில் விரைவாக கிழக்கு லடாக் பகுதியை வந்தடைய முடியும். இதற்காக ஒரு கிளைச்சாலை அமைப்பதில் இந்தியா முனைந்துவருகிறது. இதுதான் சீனாவை உறுத்துகிறது'' என்கிறார்கள் இந்தியத் தரப்பில்.

ic

சீனாவின் திருட்டுத்தனம்

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1999-ல் கார்கில் போர் நடந்தது. அந்தப் போரில் இந்திய ராணுவத்தின் கவனம் முழுக்க பாகிஸ்தான்மேல் இருக்கையில், சீனா திருட்டுத்தனமாக ஒரு வேலை செய்தது. லடாக்கின் இந்திய சீன எல்லையில் உள்ளங்கை போன்ற அமைப்பிலான பகுதி இருக்கிறது. அதில் 4-வது விரல்போன்ற தோற்றத்துடன் இருக் கும் பகுதியில் சீனா அத்துமீறி ஒரு சாலை அமைத்துக் கொண்டது. இந்தச் சாலை, அவர்களது ராணுவ வாகனங்கள் வந்துசெல்வதற்கான வசதியை சீனாவுக்கு ஏற்படுத்தித் தந்தது.

சீனா இத்தகைய ஆயத்த நிலையிலிருக்கும்போது இந்தியா சும்மாயிருக்க முடியுமா? மூன்றாவது விரல்போன்று இருக்கும் இடத்தில் இந்தியா சாலை அமைத்துவருவதுதான் சீனாவுக்கு எரிச்சலை மூட்டிவருகிறது.

தயார்நிலையில் சீனா

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் திபெத்தின் காரி குன்சா விமானநிலையத்தில் சீன போர் விமானங்கள் இருப்பதையும், அங்கிருந்து சற்றுத் தொலைவில் ராணுவ விமானங்கள் செல்லவும், ராணுவத் தள வாடங்களை ஏற்றிவரவும் சாலை அமைப்பதில் சீனா மும்முரம் காட்டிவருவதை வெளிப்படுத்தியுள்ளன. அப்பகுதியில் சீனாவின் ஜே 11, 16 ரக விமானங்கள் குவிக்கப்பட்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் உறுதிசெய்கின்றன. இத்தோடு, போர் ஆயத்தநிலையில் இருக்குமாறு சீன அதிபர் ஜின்பிங் கூறியதையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கார்கிலுக்கு அடுத்தபடியான ஒரு மோசமான இக்கட்டில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கு நிகராக போர்த் தளவாடங்களையும் பொருளாதார வல்லமையையும் பெற்றிருக்கும் சீனாவின் பெரியண்ணன் மனோபாவத்தை, மோடி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் இந்தியாவின் முன்னிருக்கும் வினா.

சீனாவாவது தன் எல்லையிலிருந்து சற்றே முன்னேறி இன்றோ நாளைக்கோ தான் முற்றுகையைத் தொடங்குவோம் என்ற நிலையில் இருக்கிறது. ஆனால் வெட்டுக்கிளிகளோ ஏற்கெனவே இந்தியாவின்மீது போரைத் தொடங்கிவிட்டன.

Advertisment

ic

வெட்டுக்கிளிகள் என்ன செய்து விடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒரே சமயத்தில் வயல்வெளிகளின்மீதும் பச்சைப் பசுமையின்மீதும் பாய்ந்துவிழும் போது, அவற்றின் அசுரப்பசிக்கு இந்த உலகமே போதாதோ என்ற எண்ணம் தான் பார்த்தவர்களிடையே எழும்.

வழக்கமாக ஆப்பிரிக்காவில்தான் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகமாக நிகழும். பின் அங்கிருந்து அரேபியா வழியாக பாகிஸ்தானில் நுழைந்து சமயங்களில் ராஜஸ்தான் வரைகூட நுழைந்து தனது தாக்குதலை நடத்திவிட்டுப் போகும். வழிப்பறிக் கொள்ளையைவிட மோசமானது இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல். வழிப்பறி செய்பவர்கள் நகை, ஆபரணங்கள், பணத்தைத்தான் கொள்ளையிட்டுப் போவார்கள். இவை பச்சைப் பசுமையையே கபளீகரம் செய்துவிடுவதால் ஒட்டுமொத்த விளைச்சலும் பாதிப்புக்குள்ளாகி பஞ்சத்தையே ஏற்படுத்த வல்லவை.

வேண்டாத விருந்தாளிகள்

1993-க்குப் பின் இவ்வாண்டு குஜராத், மத்தியப்பிரேதேசம், ராஜஸ்தானுக்கு சேதத்தை விளைவித்துவிட்டு தென் பகுதியை நோக்கி வெட்டுக்கிளிகள் விரைவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் இவற்றின் தாக்குதல் அபூர்வமாக நடப்பதால் தோராயமாக எவ்வளவு வெட்டுக்கிளிகள் வரும், எந்தளவு சேதத்தை விளைவிக்கும் என கணக்கிடுவது சிரமம் என்கிறார் ஏ.எம் பாரியா. இவர் வெட்டுக்களி தாக்குதலிலிருந்து தாவரங்களை பாதுகாக்கும் அமைப்பில் அலுவலராகப் பணிபுரிகிறார்.

லோகஸ்ட் எனப்படும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தன் நடத்தை, பழக்கவழக்கங்கள், நீண்ட தொலைவுக்கு இடம்பெயர்தல் போன்ற குணத்தால் சாதாரண வெட்டுக்கிளிகளிலிருந்து மாறுபடுகின்றன. இரண்டு கிராம் எடையிருக்கும் இவை இரண்டு கிராம் எடையளவுக்கே சாப்பிடக் கூடியவை. இப்படிச் சொன்னால் புரியாது… உங்கள் எடை அறுபது கிலோ என வைத்துக்கொண்டால், உங்களால் அறுபது கிலோ எடையளவுக்கு உணவை உண்ணமுடியுமா! ஆனால் வெட்டுக்கிளிகள் தன் உடல் எடை அளவுக்கு உணவு உண்பவை.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஐந்து லட்சம் ஹெக்டேர் பரப்பிலான விவசாயப் பயிர்களை அழித்திருக்கின்றன இந்த வெட்டுக்கிளிகள் என ராஜஸ்தான் மாநில அரசு கதறுகிறது.

அசாதாரண இனப்பெருக்கம்

சாதாரணமாக இந்த வெட்டுக்கிளி 100-லிருந்து 160 முட்டைகள் இடும். தன் வாழ்க்கைச் சுழற்சியில் மூன்று முறை முட்டையிடும். சாதாரணமாக ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்வில் முன்னூறிலிருந்து நானூற்று எண்பது வெட்டுக் கிளிகளை உருவாக்கிவிடும். இதுதான் இதன் ஆபத்தே. படையெடுத்துவரும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளும் இனப்பெருக்கம் செய்யும்போது அவற்றின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கும் என நீங்களே மனக்கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சரி, இந்த வெட்டுக்கிளிகளை என்ன செய்யலாம். பூச்சிமருந்து ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். ஆனால், இதற்காக அடிக்கும் மாலத்தியான் பூச்சிமருந்தின் தாக்கம் உணவிலும் நிலத்திலும், நிலத்தடி நீரிலும் கலந்து மனிதனையும் பாதிக்கும்.

ஆப்பிரிக்கர்கள் இந்த வெட்டுக்கிளி வரும் காலத்தை எதிர்பார்த்து அவற்றைப் பிடித்து சமைத்துச் சாப்பிட்டு ஓரளவுக்கு அவற்றைக் கட்டுப்படுத்துவர். இந்தியர்கள் பூச்சிகளை அருவருப்புடன் பார்க்கும் பழக்கம் இருக்கும்போது, சமைத்து உண்ணுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. மிச்சமிருப்பது பறவைகள், ஓணான் போன்ற இயற்கையைச் சமன்செய்யும் விலங்கு களின் தயவைத்தான்.

காடு அழிப்பு, வேட்டையாடுதல், புவிவெப்ப நிலை உயர்வு மூலம் இயற்கை சமன் தவறிக் கிடக்கும் நிலையில் இது அத்தனை பலனளிக்கு மென எதிர்பார்க்கமுடியாது.

வாழப் பழகிக்குங்க

ஆயத்தத்துடன் இருப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. ஆயத்தத்துடன் இல்லாததன் பலனை கொரோனா தொற்று விவகாரத்தில் தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புக் குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தான் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தாததால்தான் இந்தியாவுக்கு ஆபத்தென மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இதுவரை தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடந்ததில்லையாம். இதற்குமுன்பு எட்டிப் பார்த்திராத மகாராஷ்டிரத்தை தாக்கும்போது தமிழகத்துக்கு ஏன் வெட்டுக்கிளிகள் வரக்கூடாது? தமிழக விவசாயிகள் அரசை நம்புவதைவிட, தங்க ளுக்குத் தாங்களே உஷாராக இருந்துகொள்வது நல்லது.

- க.சுப்பிரமணியன்