கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அருகே உள்ளது கல்வராயன்மலை. இதையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது பூட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 24 வயதில் லாவண்யா, 21 வயதில் ரிஷிகா, 17 வயதில் ரீனா ஆகிய மூன்று பெண் குழந்தைகளும், 13 வயதில் அபினேஷ் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவரது தாய் வசந்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஏழை விவசாயக் கூலியான கமலக் கண்ணன் கூலிவேலை செய்து பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட கமலக்கண்ணன் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி திடீரென இறந்துபோனார். நான்கு பிள்ளைகளும் தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தக்கூட கையில் பணமில்லாது வறுமை யில் தவித்தனர். பிள்ளைகளின் நிலைமையை அறிந்த அக்கம்பக்கத்தினர், ஊர்மக்கள் செலவழித்து கமலக்கண்ணனின் இறுதிச்சடங்குகளைச் செய் துள்ளனர்.
கமலக்கண்ணனின் பிள்ளைகளின் திக்கற்ற நிலைமையை அறிந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள், சமூக ஊடகங்களில் குழந்தைகளின் நிலைமையை வெளியிட்டனர். இந்தத் தகவல் முதல்வரின் கவனத்திற்கு சென்றது. முதல்வர் உடனடியாக அதிகாரிகள் மூலம் கமலக்கண்ணனின் பிள்ளைகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கமலக்கண்ணனின் மூத்த மகள் லாவண்யாவிடம், “"நான் ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் குடும்ப சூழ்நிலையை கேள்விப்பட்டு கண்கலங்கிவிட்டேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். அவர் உங்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அத்தனையையும் செய்துகொடுப்பார்''’என்று தைரியமளித்துள்ளார். லாவண்யா விடம் வேறு கோரிக்கை ஏதாவது இருக்கிறதா என கேட்க, "குடியிருக்க வீடு இல்லை, தங்கை, தம்பிகள் படிப்பு தொடரவேண்டும், எங்கள் சகோதரிகள், தம்பியைக் காப்பாற்ற எனக்கு அரசு பணி கிடைத்தால் உதவியாக இருக்கும்'' என்று லாவண்யா தெரிவித்துள்ளார். "உங்கள் எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் தைரியமாக இருங்கள்'' என்று ஆறுதல் கூறினார் முதல்வர்.
அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் விரைந்துவந்து பிள்ளைகளைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல்கூறிய அமைச்சர் வேலு, தி.மு.க. கட்சி சார்பாக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கினார். உடனிருந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் "முதல்வர் உத்தரவின்படி உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்போம்'' என்று ஆறுதல் கூறினார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் உதவிக்கரம் நீட்டிய சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-எஸ்.பி.எஸ்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/21/cm-2025-11-21-10-19-35.jpg)