தான் பெற்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையை, கையாலும், செருப்பாலும் கடுமையாகத் தாக்கி, குழந்தையின் கால் விரலிலும், வாயிலிருந்தும் ரத்தம் வழியும் அளவிற்கு ஈவிரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட -கொடூர மனங் கொண்ட தாயின் வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மணலப்பாடி ஊராட்சி. இங்குள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வடிவழகன் (37 வயது). இவரது மனைவி துளசி. இவர்களுக்கு கோகுல் (4 வயது), பிரதீப் (2 வயது) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்த வடிவழகன், கொரோனா காரணமாக சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டியிருக்கிறார்.
சொந்த ஊருக்கு வந்ததிலிருந்தே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை வந்த படி இருந்திருக்கிறது. இடையே, அவர்களது இரண்டாவது குழந்தை பிரதீப்பின் உடலில் அவ்வப்போது காயங்கள் வருவதும், மருத்துவ மனையில் சிகிச்சை எடுப்பதுமாக துளசி இருந்துள்ளார். காயத்துக்கான காரணத்தைக் கேட்டபோது. குழந்தை தத்தித்தத்தி நடக்கையில் கீழே விழுந்து காயம் ஏற்படுவதாக துளசி சொல்வதை நம்பியிருக்கிறார். செல்போனில் அடிக்கடி யாரிடமோ துளசி பேசுவது குறித்து ஒருகட்டத்தில் வடிவழகன் விசாரித்ததில் சண்டை பெரிதாகி, துளசி, ஆந்திராவிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில்தான் குழந்தையை தாய் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருக் கிறது. அதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். துளசி, தனது செல்போன் கேமராவை ஆன் செய்து வைத்துக்கொண்டு குழந்தையைத் துன்புறுத்தி வீடியோ எடுத்துள்ளார். இது பிப்ரவரி மாதமே நடந்துள்ளது. இது எதுவுமே அவரது கணவருக்குத் தெரியாமல் நடந்திருக்கிறது. தற்செயலாக துளசியின் செல்போனை வடிவழகன் எடுத்துப் பார்த்தபோது, குழந்தையை துளசி தாக்கிய வீடியோவைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். அதன்பின்னரே குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயங்களின் காரணம் புரிந்திருக்கிறது.
அதன்பின்னர், துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் புகாரளிக்க, போலீசார், ஆந்திராவுக்குச் சென்று துளசியை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது உண்மையை ஒப்புக்கொண்டார். துளசிக்கு மனநல பாதிப்பு இருக்குமோவென்ற சந்தேகத்தில், மனநலப் பரிசோதனை செய்ததில், அப்படியேதும் பாதிப் பில்லை என்று தெரியவந்தது. அதையடுத்து துளசியிடம் துருவித்துருவி விசாரித்ததில், திருமணத்துக்குப்பின் சென்னையில் கணவருடன் தங்கியிருந்தபோது, பிரேம்குமார் என்பவரோடு ஐந்தாண்டு காலமாகத் தொடர்பு இருந்ததாகவும், மேட்டூருக்கு வந்தபின்னர் அவரைச் சந்திக்க முடியாததால் செல்போனில் மட்டுமே தொடர்புகொண்டு பேசிவந்ததும் தெரிய வந்தது.
எப்படியாவது பிரேம்குமாரைச் சந்திக்க வேண்டு மென்று நினைத்த துளசி, பிரேம்குமார் ஆலோசனைப்படி, குழந்தையைத் துன்புறுத்துவதன் மூலம் கணவனோடு சண்டை ஏற்பட்டு, விவாகரத்து வாங்கலாமென்று திட்டமிட்டிருக்கிறார். அதேபோல, துளசியின் முதல் குழந்தை துளசியைப்போல் இருப்பதாகவும், இரண்டாவது குழந்தை வடிவழகனைப்போல் இருப்பதாகவும், எனவே, தான் இல்லாவிட்டாலும் துளசி சந்தோசமாக வாழ்கிறார் என்றும் பிரேம்குமார் துளசியிடம் கூறியிருக்கிறான். எனவே காதலனிடம், தான் சந்தோசமாக இல்லை என்று நிரூபிப்பதற்காகவே வடிவழகனைப் போல இருக்கும் தனது இரண்டாவது குழந்தையைத் துன்புறுத்தி, உன்னைப் பிரிந்து நான் நிம்மதியில்லாமல் வாழ்கிறேனென்று கூறி அந்த வீடியோவை அவனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
மேலும் இதில் இன்னொரு குற்றவாளியாகவுள்ள பிரேம்குமாரைத் தேடி சென்னைக்கு ஒரு போலீஸ் படை சென்றுள்ளது. துளசி, தனது காதலன் பிரேம்குமாரைச் சந்தோசப்படுத்துவதற்காகத் தனது அந்தரங்கக் காட்சிகளை இருநூறுக்கும் மேற்பட்ட வீடியோக்களாக எடுத்து அவனுக்கு அனுப்பியிருக்கிறார். இந்த வீடியோக்களை வடிவழகன் காண நேர்ந்தபோது, குடும்பத்தின் மானம் பறிபோகக்கூடாதென்று வெளியில் சொல்லாதிருந்திருக்கிறார். ஆனால் தனது இரண்டாவது குழந்தைமீது தாக்குதல் நடத்திய வீடியோக்கள் குறித்து தனது நெருங்கிய நண்பருடன் வடிவழகன் பேசியபோது, அவர்தான் இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு அந்தக் கொடூரமான பெண்ணுக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டுமென்று கூறியிருக்கிறார். எனவே அவரே அந்த வீடியோவைப் பலருக்கும் தனது செல்பேசியிலிருந்து பரப்பியிருக்கிறார். அப்படித்தான் அந்த வீடியோ உலகெங்கும் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடியே வீடியோ வைரலாக, அதன்பின்னர் தனது மனைவிமீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்.
காதலன் பிரேம்குமார் போலீசாரிடம் சிக்கினால் அவனிடமிருந்து மேலும் பல உண்மைகள் வெளிவரக் கூடும் எனத் தெரிகிறது. எல்லை மீறிய உறவுக்காக, தான் பெற்ற குழந்தையை கொடூரமான முறையில் சித்திரவதை செய்த துளசி என்ற பெண்ணின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்று கொதிப்புடன் கூறுகிறார்கள் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த தாய்மார்கள்.