நாள்தோறும் சென்ட்ரல் ஸ்டேஷனை நோக்கி வாகனங்களில் கடக்கும் பல்லாயிரக்கணக்கான பயணிகளில் நீங்களும் ஒருவராக இருந்தால் ரிப்பன் பில்டிங் அருகே ஒயிலாக உயர்ந்து காணப்படும் அந்த அழகான சிவப்புநிறக் கட்டடத்தை பார்க்காமல் கடந்திருக்க முடியாது. அந்தக் கட்டடத்தின் பெயர் விக்டோரியா ஹால். பல வருடங்களாகக் கேட்பாரற்றுக் கிடந்த இந்த அரங்கை பல கோடி செலவுசெய்து புதுப்பித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கை அவர் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திறந்துவைத்தார்.
சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சியின் எச்சமாய் இதுபோல பல செந்நிறக் கட்டடங்கள் இருக்க, முதல்வர் ஏன் இதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்?
1996-ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்த காலத்திலேயே இதைப் புதுப்பிக்க நினைத்தார். ஆனால் அப்போது அவரால் முடியவில்லை. காரணம், அது அப்போது ஒரு தனியார் ட்ரஸ்டுக்குச் சொந்தமானதாக இருந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு அந்த ட்ரஸ்டிடமிருந்து விக்டோரியா ஹாலை வாங்கி, மாநகராட்சியின் சொத்தாக மாற்றினார். மெட்ரோ பணிகள் காரணமாக தடைப்பட்டு வந்த விக்டோரியா ஹாலைப் புதுப்பிக்கும் குறிக்கோள் தற்போதுதான் நிறைவேறியிருக்கிறது.
அவர் அப்படி இதில் தீவிரம் காட்ட என்ன காரணம் என நீங்கள் கேட்கலாம். முதல்வர் மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் திராவிட மாடல் ஆட்சி என்ற சொற்பிரயோகத்துக்கான விதை இங்குதான் விழுந்தது.
1914-ஆம் ஆண்டு இங்கு நடந்த ஒரு கூட்டத்தின் வாயிலாகத்தான் நடேசனார், டி.எம். நாயர், பனகல் அரசர் சர் பி.டி. தியாகராயர் போன்ற தலைவர்கள் ஒன்றுகூடி நீதிக்கட்சியைத் துவக்கினர். ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் இயக்கமாகத் துவங்கி, பின் சென்னை வணிகர் சங்கமாக இயங்கி, தொடர்ந்து நீதிக்கட்சி என உருமாற்றம் கண்டது அதன் வரலாறு. அத்தகைய ஒரு வரலாறு உருவான இடத்தை எளிதில் விட்டுவிடமுடியுமா?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/cm1-2025-12-29-16-59-30.jpg)
பொது அரங்கு கட்டப்பட்டதும் ஒரு தனிக்கதை. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இயங்கும் ஜமீன்தாரர்களுக்கு, நிலப்பிரபுக்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு என அனைவரும் சந்திக்கவும் நடனம், ஆடல்-பாடல் கண்டுகளிக்கவும் ஒரு பொதுஇடம் தேவைப்பட்டது. ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, மொத்தம் ஒண்ணேகால் லட்ச ரூபாயில் பெருமாள் என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டது. 1887- 88-ல் பிரிட்டிஷார் குடியேறும் காலத்தில், இங்கிலாந்தின் ராணி விக்டோரியாவின் பொன் விழாவை நினைவுகூர்ந்து கட்டப்பட்டது.
விவேகானந்தர் தமிழகத்தில் இந்த அரங்கில்தான் தன் முதல் உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியிலிருந்து, அப்போது எழுந்த புதுத் தலைவர்கள் என அனைவரும் இங்குதான் தங்களது உரையை நிகழ்த்தினர். சுதந்திர இயக்கத்துக்கு வேகம் சேர்த்துக்கொண்டதும் இந்த அரங்கில்தான்.
பாரிஸில் முதன்முதலில் சினிமா கருவியைக் கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் ஊர் ஊராகச் சென்று தாங்கள் கண்டுபிடித்த சினிமாவை திரையிட, அப்போது மெட்ராஸில் திரையிட ஏற்ற ஒரே இடமாக இருந்தது விக்டோரியா ஹால்தான். இங்குதான் முதன்முதலில் லூமியர் சகோதரர்கள் எடுத்த சினிமா திரையிடப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/cm2-2025-12-29-17-01-35.jpg)
இங்கிருந்து உருவான சினிமாதான் படிப்படியாக வளர்ந்து மௌனப் படங்கள் திரையிடப்பட்டு டி.பி..ராஜலக்ஷ்மி போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் உருவாகினார்கள். அதன்பிறகு வந்த குரல்கள் பதிவுசெய்யப்பட்ட சினிமாவில் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றோர் உருவாகி, எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரின் பராசக்தி, வேலைக்காரி போன்ற படங்கள் வெளிவந்து திராவிட அரசியலின் தொடக்கமாக விளங்கியது இந்த விக்டோரியா ஹால்தான்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போதும், சமூக வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளின்போதும் மிக முக்கியமான உரைகள், கூட்டங்கள் நடைபெற்றன. மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் பழைய காலத்தில் உரைவீச்சு நிகழ்த்திய இடமாகவும் இது விளங்குகிறது. இத்தனை புகழ்வாய்ந்த சென்னையின் கலாச்சார பெருமைமிக்க இந்த கட்டடம் காலப்போக்கில் பராமரிப்பின்றிக் கிடந்ததைக் கண்டுதான் தமிழக முதல்வர் இதை புனரமைக்க முடிவெடுத்தார். இந்திய- முகலாயக் கலை பாணி கட்டடமான இதை புனரமைத்து, வரலாற்றுச் சின்னமொன்றின் வாழ்வை நீட்டித்துள்ளார்.
தமிழக அரசின் "சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ், 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பராமரிப்புப் பணிகள் ரூ32.62 கோடி செலவில் 2 ஆண்டு காலமெடுத்து, கட்டடத்தின் அடிப்படைக் கட்ட மைப்பு, கட்டட பாதுகாப்பு, கூரை, பிரம்மாண்ட மரத் தகடுகள், மின் சார மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்ற அனைத்தையும் புதுப்பித்தது. தற்போதைய கட்டடம் நிலநடுக்கத் தையும் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப் பட்ட அரங்கத்துக் குள் தரைப்பகுதி யில் வரலாற்று அருங்காட்சியகம், முதல் மாடியில் நிகழ்ச்சி அரங்கம், கலாச்சார மேடை, சுற்றுப் புறத்தில் பழங்கால நகர காட்சிப் பகுதிகள் என்று புதிய அம்சங் களுடன் மறுபிறப்பு எடுத்துள் ளது விக்டோரியா அரங்கு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/29/cm3-2025-12-29-17-01-47.jpg)
திறப்பு விழாவின்போது அனைவரையும் வியக்க வைத்தது இரண்டு முக்கிய நிகழ்வுகள். ஒன்று, விக்டோரியா பொதுஅரங்கின் வரலாற்றைச் சொல்லும் ஒரு அற்புதமான ஆவணப் படம். எழுத்தாளர் அஜயன்பாலா எழுத்தில் சிறப்பாக உருவாக்கம் பெற்றிருந்தது. இரண்டாவதாக அனுஷம் குழுவினரின் நாட்டிய நிகழ்வு. கவிதா ராம் இலியாஸ் ஐ.ஏ.எஸ். அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நாட்டிய நிகழ்வில், பார்வையாளர்கள் கண்முன்னே வரலாற்றை மீள நிகழ்த்திக் காட்டினர் கலைஞர்கள். 8-ஆம் வகுப்பு படிக்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த சிறுமியான வர்ஷா, விக்டோரியா ஹா-ன் வரலாற்றைச் சொல்லச் சொல்ல, பின்னணியில் எல்.இ.டி. திரையில் அந்தந்தக் காலகட்ட நிகழ்வுகளையும் காட்டியது பொருத்தமாக இருந்தது. இந்த நாலரை ஆண்டுக் காலத்தில் தமிழக முதல்வர், விக்டோரியா அரங்கை மட்டும் புதுப்பித்திருக்கவில்லை, கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகம், சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுள்ள அகழாய்வுப் பொருட்களுக்கான பொருநை அருங்காட்சியகம் என தமிழை வரலாற்றிலும், உலக அரங்கிலும் தூக்கி நிறுத்தும் வேலைகளையும் மேற்கொண்டு வரலாற்றின் மீதான தன் கரிசனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சென்னையின் இதயத்தில் புதுப்பொலிவுடன் உயிர்ப்பிக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கு, நீண்ட காலத்துக்குப் பின் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைத்த தால், சென்னையின் சமூக -கலாச் சார வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/cm-2025-12-29-16-59-15.jpg)