வெளிநடப்பும் வெளியேற்றமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றத்தில் இந்தமுறை வெளிநடப்பு குறைவுதான்; வியாழன்வரை வெளியேற்றமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் முன்வைத்து ஆளும் கட்சியிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுப்பும் கேள்விகள் சட்டமன்றத்தில் பரபரப்பையும் காரசார விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

ass

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தி.மு.க. கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா, ஆளும்கட்சிக்கு எதிரான தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்தார். அப்போது, அவசரமாக மைக் பிடித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின்தான் திட்டத்திற்கு ஒப்புதல் தந்ததாகச் சொல்ல, இந்த குற்றசாட்டை எதிர்கொண்ட ஸ்டாலின், "ஆய்வு செய்வதற்காகத்தான் அனுமதி தரப்பட்டதே தவிர திட்டத்திற்கு நாங்கள் ஒப்புதல் தரவில்லை' என காட்டமாக பதிலடி தந்தார். இதனால் சண்முகத்துக்கும் ஸ்டாலினுக்கும் கடுமையான விவாதம் நடக்க, ஒரு கட்டத்தில் அமைதியானார் சண்முகம்.

assநீட் பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய ஸ்டாலின், ""நீட் தேர்வு விலக்கு குறித்து இந்த அவையில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை கடந்த 2017, செப்டம்பரிலேயே ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார். கிட்டத்தட்ட 19 மாதங்களாகியும் அதனை சபைக்கு தெரிவிக்காமல் மறைத்திருக்கிறீர்கள். இதனால் நீட்டுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்'' என போட்டுத் தாக்கினார்.

Advertisment

இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் சண்முகம், ""ஜனாதிபதியிடமிருந்து வந்த கடிதத்தில் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, நிராகரிக்கப்பட்டதாக சொல்லப்படவில்லை. எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்கு பதில் இன்னும் வரவில்லை. அதனால் நீட் மசோதா இந்த அவையில் மீண்டும் தாக்கல் செய்வதில் பிரச்சனை இல்லை'' என்று ஆவேசமாக பேசிய அவர், ""நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். அதேபோல நீங்களும் ராஜினாமா செய்யத் தயாரா?'' என கேட்க, தி.மு.க.வினர் கொந்தளித்தனர். ஸ்டாலினுக்கும் சண்முகத்துக்கும் காரசார விவாதம் நடக்க, ஒரு கட்டத்தில், ""மாணவர்களின் பிரச்சினை இது. இதில் ஏட்டிக்கு போட்டியாக பேசுவது பொறுப்பற்ற செயல். நீட் விசயத்தில் நீங்கள் மறைக்கிறீர்கள்'' என சுட்டிக்காட்டிவிட்டு, "அமைச்சரின் விளக்கத்தில் திருப்தி இல்லை' என வெளிநடப்பு செய்தார் ஸ்டாலின். இதனால் சபையில் சிறிதுநேரம் கூச்சல் எதிரொலித்தது.

ஸ்டாலினைப் போலவே சபையில் பேசிய தி.மு.க. உறுப்பினர்கள் பலரும் தெளிவான வாதங்களை எடுத்து வைத்தனர். பள்ளிக்கல்வித் துறையின் மானிய கோரிக்கையின்போது, மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையின் பாதிப்புகளை பட்டியலிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் மாணவரணிச்செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன், "முதல்வர் ஜி', "துணை முதல்வர் ஜி', "அமைச்சர் ஜி' என்றும், "செங்கோட்டையன் ஜி' என்றும் விளித்தபோது, ஆளும் கட்சி தரப்பிலிருந்து அடிக்கடி குறுக்கீடுகள் இருந்தன. அப்போது, "தேசிய கல்விக் கொள்கை இந்தி மொழியில் இருப்பதை சுட்டிக்காட்டவே இப்படி பேசினேன்' என சொன்னபோது சபையில் ஏகத்துக்கும் சிரிப்பலை. இதனையடுத்து தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சத்தை ஒரு பிடிபிடித்த எழிலரசன், எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு நீட் தேர்வை எழுதி உள்ளே செல்ல வேண்டும். அதேபோல, 4 வருடங்கள் கழித்து ஹவுஸ் சர்ஜன் செய்ய வெளியே வரும்போது எக்சிட் எக்ஸாம் எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்தான் ஹவுஸ் சர்ஜன் ஆக முடியும்னு அந்த கொள்கையில் இருக்கிறது ஜி'' என போட்டுத் தாக்கினார். தேசிய கல்விக் கொள்கையில் நமது மாநில உரிமை எப்படியெல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை அவர் எடுத்துரைத்ததை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய துறையின் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய "பொண்ணு-மாப்பிள்ளை' கதை சுவாரஸ்யம். இதனால் அமைச்சர்கள் பலரும் தற்போது குட்டிக் கதைகளை தேடி, இலக்கியவாதிகளை அணுகத் துவங்கியுள்ளனர்.

Advertisment

ass

சமூக நலத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபு, அத்துறையிலுள்ள பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டிவிட்டு, "ஸ்டாலின் முதல்வராக வருவார். அவர் வந்ததும் இந்தப் பிரச்சினைகளெல்லாம் களையப்படும்' என சொன்ன போது, மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர் தி.மு.க.வினர். அப்போது சட்டென்று எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், "வரும்; ஆனா வராது' என கமெண்ட் பண்ண... அ.தி.மு.க.வினர் மேஜையை தட்டி ஆர்ப்பரிக்க, சபையில் ஏகத்துக்கு சிரிப்பலை.

இப்படி காரசார விவாதங்களும், மோதல்களும், சுவாரஸ்யங்களுமாகச் செல்லும் சட்டமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் அடிக்கடி சபையிலிருந்து வெளியே சென்று கேண்டீனில் ஒன்றுசேர்ந்து கைக்குலுக்கி கொள்கிறார்கள். அரசியல் அப்படித்தான்.

-இரா.இளையசெல்வன்