புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதலமைச்சர் ரங்கசாமி சிபாரிசு செய்து துணைநிலை ஆளுநர் கைலாசநாதனுக்கு கோப்பனுப்பியிருந்தார். முதலமைச்சரின் சிபாரிசைக் கண்டுகொள்ளாமல் அதற்கடுத்த நிலையிலிருந்த செவ்வேள் இயக்குந ராக்கப்பட்டார். கூட்டுறவுதின விழாவில் முதலமைச் சர், கவர்னர் இருவரும் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருந்த ரங்கசாமிக்கு இது தெரிவிக்கப்பட்டதும் கொதித்துப்போனார். 

அந்த விழாவைப் புறக்கணித்த என்.ஆர்., தலைமைச்செயலகத்துக்கு வந்து சபாநாயகர் செல்வத்தை அழைத்து, "சட்டசபையைக் கலைக்கப் போறன், உங்க கட்சி தலைமைக்குச் சொல்லிடுங்க'' எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். இது பா.ஜ.க. நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்தது. சபா செல்வம், பா.ஜ.க. அமைச்சர் நமச்சிவாயம் என சிலர் முதலமைச்சரை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்களிடம், முதலமைச்சரின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தறார். என் கட்சியிலிருந்து யாரை அமைச்சராக்கணும்னு எனக்கு உத்தரவு போடறார். நான் பா.ஜ.க.வோடு கூட்டணி தான் வச்சிருக்கேன், கட்சியவே இணைக் கல'' என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மறுநாள் ஜூலை 9-ஆம் தேதி முதலமைச்சர் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு, சட்டசபை வளாகத்தில் தனி ஆளாக அமர்ந்து, மாநில அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதப் போராட் டம் நடத்தியவர், துணைசபாநாயகர் ராஜவேலு விடம் தனது ராஜினாமா கடிதத்தைத் தந்தார். அதேநேரத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் செல்வத்தைச் சந்தித்து மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம்தரும் தீர்மானத்தை நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்தவேண்டும் என கடிதம் தந்தனர். இது பா.ஜ.க.வுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

Advertisment

இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத் தில் விசாரித்தபோது, "முதலமைச்சரின், 72 கோப்பு களை ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்துள்ளார். சுகாதாரத்துறை முதலமைச்சர் வசமிருக்கிறது. 8 மாதத்துக்கு முன்பு இயக்குநர் பதவிக்கு அனந்த லட்சுமி பெயரை சிபாரிசுசெய்து அனுப்பியிருந்தார். அப்போது விதிகளை மீறி ஓய்வுபெற 7 மாதமே இருந்தவரை இயக்குநர் பதவியில் நியமித்தார். மீண்டும் அனந்த லட்சுமியை சிபாரிசு செய்தால் கவர்னர் விருப்பத் துக்கு ஒருவரை நியமிக்கிறார். முதலமைச்சர் ஊழல்வாதி என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கிறார் கவர்னர். லோக்கல் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு என்.ஆர் பலம் என்னவென்பது தெரியும். எங்கள் ஆதரவு இல்லாமல் அதிகபட்சம் 2 தொகுதிக்கு மேல் அவர்களால் வெற்றிபெற முடியாது'' என கொதித்துப்போய் பேசினார்கள்.

இதுகுறித்து ஆளுநருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது, "ஆளுநர் அரசியல் செய்யவில்லை. சுகாதாரத்துறையில் மருந்து கொள்முதலில் மட்டும் ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி... அதோடு துறையில் பலவற்றில் ஊழல் செய்யவே அப்பெண்மணியை கொண்டுவர முயற்சிக்கிறது முதல்வர் தரப்பு. எல்லாமே மக்கள் நலனுக்காகத்தான்'' என்கிறார்கள்.