அ.தி.மு.க.வை அழிப்பது, துண்டுதுண்டாக உடைப்பது, எதிர்காலத்தில் அ.தி.மு.க. என்கிற கட்சியை கபளீகரம் செய்து அதை இந்துத்துவா இயக்கமாக மாற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டம். அந்த திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் சமீபத்தில் செங்கோட்டையனை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு நெருக்க மானவர்கள். 

Advertisment

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.க. அவருக்கு எதிராக அப்போது மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானை வெறும் நாற்பது தொகுதிகளில் மட்டும் களமிறக்கி தோற்கடித்தது. அதன்பிறகு குறைந்த தொகுதியில் ஜெயித்த நிதிஷ்குமாரை கூட்டணி மந்திரிசபை அமைத்து முதல்வர் ஆக்கினார்கள். மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சியை உடைத்தார்கள். அவரது குடும்பத்தைச் சேர்ந்த  அஜித் பவார் மீது பா.ஜ.க.வால் சொல்லப்பட்ட நாற்பதாயிரம் கோடி ஊழலை மறந்து அவரை துணை முதலமைச்சர் ஆக்கினார்கள். பா.ஜ.கவைப் போல் இந்துத்துவம் பேசிய சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத்ஷிண்டே என்பவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். அதுபோன்றே தமிழகத்திலும் பியூஷ்கோயல், பி.எல்.சந்தோஷ், பா.ஜ.க. முன்னாள் மா.த, டி.டி.வி. தினகரன், குருமூர்த்தி ஆகியோர் அடங்கிய ஐவர் அணி ஆர்.எஸ். எஸ்.ஸால் களமிறக்கப்பட்டது. இந்த அணிதான் முன்பு அ.தி.மு.கவைப் பிளக்க ஓ.பி.எஸ். மூலம் அரும்பாடுபட்டது. இந்த அணி சசிகலாவின் சகோதரர் திவாகரன் மூலம் அ.தி.மு.க. தலைவர்களை வளைத்தது. அவர்கள் சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோரை அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்பினார்கள். அ.தி.மு.க. பிரிந்து கிடக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு ஜானகி, ஜெயலலிதா பிரிவுகள் இணைந்ததுபோல் அ.தி.மு.க. இணைந்தால்தான் வெற்றிபெற முடியும் என கலகக்குரல் எழுப்பியது அந்தக் குழு. அந்தக் குரலை அ.தி.மு.க. தலைமை நிராகரித்தது.

ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது ‘சசிகலாவை ஆதரிப்பவர்கள் ஆண்மை யற்றவர்கள்’ என குருமூர்த்தி பேசினார். அதே ஓ.பி.எஸ்., இரட்டை இலைக்கு எதிராக ராமநாதபுரத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவையெல்லாம் அ.தி.மு.கவை எதிர்த்த நடவடிக்கைகள் இல்லையா? இன்று அதே குருமூர்த்தி, சசிகலாவையும் ஓ.பி.எஸ்.ஸையும் அ.தி.மு.கவில் இணைக்க வேண்டும் என குரல் கொடுப்பது முரண்பாடாக இல்லையா? என அ.தி.மு.க. தலைமை கேள்வி எழுப்பியது. இணைப்பு கோரிக்கைக்கு வலு சேர்க்க வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோரைத் திரட்டி எடப்பாடியுடன் ஒரு வார்த்தைப் போரில் ஈடுபட்டது இந்த கும்பல். அந்த வார்த்தைப் போர் பற்றிய செய்திகளை பச்சைப் பொய் என நிராகரித்தார் எடப்பாடி. அதை மறுபடியும் செங்கோட்டையன் மூலம் உண்மையென சொல்ல வைத்தார்கள். 

இந்த கும்பலின் சொல்படி எடப்பாடிக்கு அ.தி.மு.கவில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பத்து நாள் கெடு விதித்தார் செங்கோட்டையன். அந்த கெடுவைப் பயன்படுத்தி பா.ஜ.க. தலை மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் எடப்பாடி. கூட்டணியை முறித்துக்கொள்வேன் என்ற எடப்பாடியின் மிரட்டலைக் கேட்ட பா.ஜ.க. தலைமை, "கெடு விதிப்பது தவறானது. இது உங்கள் உட்கட்சி விவகாரம். நீங்கள் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'’ என ஒதுங்கிக்கொண்டது. செங்கோட்டையனின் பொறுப்புகளைப் பறித்தார் எடப்பாடி.    மேலும் பேசினால் கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் என செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஒருங்கிணைப்பு தொடர்பான கோரிக்கையில் ஓ.பி.எஸ்.ஸை மட்டும் கட்சிக்குள் இணைக்க எடப்பாடி சம்மதித்திருக்கிறார். 

அதேபோல் "சசிகலாவை இணைக்க முடியாது. ஆனால் சசி சொல்பவர்களுக்கு சீட் கொடுக்கப்படும்'’என எடப்பாடி சமரசம் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருங்கிணைப்பு முயற்சியை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் அல்லாமல், வேறு வகையில் நிறைவேற்ற எடப்பாடி ஒத்துக்கொண்டிருக்கிறார். பெரும் பொருட்செலவில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்த்திய "ஆபரேஷன் அ.தி.மு.க.' தோல்வியில் முடிந்திருக் கிறது. இதில் முக்கிய சூத்திரதாரிகளாக செயல்பட்ட முன்னாள் பா.ஜ.க. மா.த. மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக சசிகலா மீது 450 கோடி ரூபாய் கொடுத்து அவர் வாங்கிய ‘பத்மாவதி சுகர்ஸ்’ என்கிற கம்பெனி தொடர்பான வழக்கு ஒன்றை தூசு தட்டி ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த ஆபரேஷனில் தோல்வியடைந்த முன் னாள் பா.ஜ.க. மா.த. தனிக்கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் வேகமாக ஈடுபட்டுள்ளார். டி.டி.வி. தினகரனுக்கும் எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஆபரேஷன் தமிழகத்தைப் பொறுத்தவரை தோல்வியில் முடிந்துள்ளது.