Hoch adulteration

கள்ளச்சாராய மரணங்களின் ஓலம் இன்னும் ஓயாத நிலையில், கள்ளச் சாராயம் காய்ச்சினால் ஆயுள் சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் என மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்து விதிகளை கடுமையாக்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான சட்ட திருத்த மசோதா 29-ந் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

விதிகள் கடுமையாக்கப்பட்டாலும் கள்ளாச்சாராய சாவுகளுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகளின் குரல்கள் அதிகரித்துள்ளன. இந்த மரணங்கள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகமும் தனிக்கவனம் செலுத்திவருகிறது. இதுபற்றிய முழுமையான தனி ரிப்போர்ட் ஒன்றை தமிழக கவர்னர் ரவியிடமிருந்து பெற்றிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித்சா. தவிர, கள்ளச்சாராய பலிகள், அந்த பிஸ்னெஸின் பின்னணிகள் ஆகியவை குறித்து மத்திய உளவுத்துறையும் டெல்லிக்கு அறிக்கை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த நிலையில், கள்ளசாராய மரணங்களைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சம்பவத்தை தீவிர புலனாய்வு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், கள்ளச்சாராய பாக்கெட்டுகளின் சாம்பிள்களை சேகரித்து அதனை சென்னையிலுள்ள மாநில அரசின் தடய அறிவியல் துறைக்கு அனுப்பிவைத்தனர். அந்த சேம்பிள்கள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. அதன் ரிப்போர்ட்டும் தமிழக உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அதன் ரிசல்ட்டை அரசோ, போலீசோ இன்னும் வெளியிடவில்லை.

Advertisment

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, பலியானவர்களின் உடல்கள் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டதில், மெத்தனால் மற்றும் கெமிக்கலின் அறிகுறி இருந்துள்ளது. கெமிக்கலின் அறிகுறி இருப்பதை அறிந்து போலீஸ் அதிகாரிகளுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இதனையடுத்து பிடிபட்ட சாராய பாக்கெட்டுகள் ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக, வெவ்வேறு 6 விதமான சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த சாராய சாம்பிள் பாக்கெட்டுகளை பரிசோதித்த சம்மந்தப்பட்ட துறையினர், ஒரே ஒரு பாக்கெட்டில் மட்டும் மெத்தனால் இருந்துள்ளது. மற்ற 5 பாக்கெட்டுகளில் வெவ்வேறு வகையிலான கெமிக்கல்கள் இருந்துள்ளன. மருத்துவ ரசாயன கூடங்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் அவை. அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.

இந்த ரிப்போர்ட்தான் மாநில உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக, போதைக்காக மெத்தனால் கலப்பது முந்தைய சம்பவங்களில் நடந்துள்ளது. ஆனால், தற்போதைய கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலியானவர்கள் குடித்த கள்ளச்சாரயத்தில் கெமிக்கல்களும் கலந்திருந்ததால் தான் பலி எண்ணிக்கை ஜீரணிக்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்றே அரசும் அதிகாரிகளும் சொல்லி வந்ததால், வேறு விதமான கெமிக்கலும் கலந்திருப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் ஏனோ தவிர்த்துள்ளனர்''’என்கிற தகவல்கள் தடய அறிவியல் துறை வட்டாரங்களிலிருந்து கிடைக்கிறது.

இதற்கிடையே, மருத்துவத்துறை தரப்பில் விசாரித்தபோது, "மெத்தனால் மட்டுமே கலந்திருந்த கள்ளச் சாராயத்தை குடித்துவிட்டு மருத்துவமனையில் அட்மிட்டாகியிருந்தால், மெத்தனால் முறிவுக்கான மாற்று மருந்தை கொடுத்து டாக்டர்கள் காப்பாற்றி விடுவர். ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச்சாராயத்தில் கெமிக்கல் கலந்திருந்ததால், என்ன கெமிக்கல் கலந்திருக்கிறது? என தெரியாமல் டாக்டர்கள் தவித்திருக்கிறார்கள். என்ன கெமிக்கல் என தெரிந்தால்தான் அதற்கான மாற்று முறிவு மருந்து எது என்பதை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை தந்திருக்க முடியும். பலி எண்ணிக்கை அதிகமானதற்கு கெமிக்கல்தான் காரணம்''’என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

மெத்தனால் உட்பட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெவ்வேறு கெமிக்கல்கள் கலந்திருக்கும் விபரங்களை ஒன்றிய அரசும் சேகரித்துள்ளது. இத்தகைய கெமிக்கல்கள் தமிழகத்தில் உள்ள மருந்து நிறுவனங்களில் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு கள்ளச்சாராய வியாபாரிகள் வாங்கிச் சென்றுள்ளனர்.

அந்த கெமிக்கல்களை கொள்முதல் செய்ய எந்தெந்த நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன? வாங்கிய கெமிக்கல்களை எந்தளவுக்கு அந்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன? ஸ்டாக்கில் இன்னும் எவ்வளவு இருக்கிறது? என்கிற விபரங்களை ஒன்றிய அரசு ரகசியமாக விசாரித்து வருகிறதாம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்டு பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதில் அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கை குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, "கள்ளச்சாராய சாவுகள் நடந்திருக்கக்கூடாது. நடந்துள்ள துயரமான இந்த சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே கவலையடைந்திருக்கிறார். அதனால் கள்ளச்சாராய குற்றங்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிரமாக புலனாய்வு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் என்கிற பிரச்சனையே உருவாகாதபடிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசும் சி.பி.சி.ஐ.டி. போலீசும் சீரியசாகத்தான் இருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யலாம் என போலீசுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் முதல்வர். அப்படியிருக்க, சி.பி.ஐ. விசாரணை கேட்க என்ன முகாந்திரம் இருக்கிறது. சி.பி.சி.ஐ.டி.யால் கண்டுப்பிடிக்க முடியாததை சி.பி.ஐ. என்ன கண்டுபிடித்துவிடப்போகிறது? ஜெயலலிதா பாணியில் சொல்வதானால், சி.பி.ஐ. அதிகாரிகள் என்ன வானத்திலிருந்தா குதித்தார்கள்? சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள்? அதனால், இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும்'' என்கிறார்கள்.

ஒரு வழக்கினை சி.பி.ஐ. எடுக்க வேண்டுமானால் மாநில அரசு சி.பி.ஐ.க்கு பரிந்துரைக்க வேண்டும்; அல்லது நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படாது. அதனால்தான் கோர்ட்டுக்கு போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், சி.பி.ஐ.க்கு மாற்ற போதுமான ஆதாரங்களையும் சம்பவங்களையும் அ.தி.மு.க. தாக்கல் செய்ய வேண்டும். அதில் நீதிமன்றம் திருப்தியடைந்து அரசு தரப்பில் சொல்லப்படும் பதில்களில் அதிர்ப்தி அடைந்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் கோர்ட் கவனம் செலுத்தும் என்கிறார்கள் கிரிமினல் வழக்கறிஞர்கள்.

மத்திய அரசு வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் தரப்பினரோ, "கள்ளச்சாராய சாவுகளுக்கு மூல காரணமாக இருக்கும் ரசாயனங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்து அதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்தால் சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு எளிதாக மாறும். ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லையெனில் வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ. விசாரணை கேட்பது தவறு கிடையாது.

மாநில அரசுக்கு சிக்கலையும் கெட்ட பெயரையும் உருவாக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினால் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கும்; உண்மை வெளியாகாது என்கிற கண்ணோட்டத்தில்தான் சி.பி.ஐ. விசாரணை கோரப்படுகிறது. அதாவது, கள்ளச்சாராய பிசினஸ் பின்னணியில் அரசியல் தொடர்பு இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு நெருக்கடிகள் இருக்கும். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க மேலிடத்திலிருந்து பல ஒப்புதல்கள் பெறவேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால், சி.பி.ஐ. விசாரணை எனில், சம்பந்தப்பட்டவர்களை எளிதாக விசாரணைக்கு வரவழைக்க முடியும். இதுதான் இரண்டு அமைப்புகளின் விசாரணைக்கும் உள்ள வித்தியாசம்.

அதேசமயம், மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திறமையானவர்கள்தான். ஆனால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் தீர்க்கப்பட வில்லை. குறிப்பாக, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஸ்ரீமதியின் மர்ம மரணம், நர்சிங் கல்லூரி மாணவி சுதா தற்கொலை, சங்கரன்கோவில் வேன் ட்ரைவர் முருகனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் மரணம், நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் என நிறைய வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

ஆனால், அந்த வழக்குகளுக்கெல்லாம் சி.பி.சி.ஐ.டி. தீர்வு கண்டு விட்டதா? ஆக, பிரச்சனை பெரிதாகாமல் இருக்க சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் படுவதைக் கடந்து வேறு என்ன முன்னேற்றம் இருக்கிறது? அதனால், சில நேர்வுகளில் சி.பி.ஐ. விசாரணை அவசியம்தான். மாநில அரசின் தலையீடு இருக்கும் என சந்தேகப்படும் விவகாரங்களுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது''என்கிறார்கள்.