ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஏ2-வான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் அளித்த நிபந்தனை ஜாமீனில் 12-ஆம் தேதி வெளிவந்த நிலையில், அதே வழக்கில் தலைமறைவாக இருந்த ஏ1-ஆன அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி, 15-ஆம் தேதி நள்ளிரவு, கோவில்பட்டி அருகிலுள்ள புளியங்குளத் தில் பிடிபட்டு, விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டார். விஜயநல்லதம்பி கைதானாரா? இல்லையா? என்பதை காவல்துறை புதிராக்கிவிட, கைது செய்யப்பட்டதாக மீடியாக்களில் ‘பிரேக்கிங் நியூஸ்’ பரபரத்தது.

rr

Advertisment

"நான் பணம் கொடுத்தது விஜய நல்லதம்பியிடம் தான்; ராஜேந்திரபாலாஜியிடம் அல்ல. நான் ராஜேந்திர பாலாஜியை நேரில் பார்க்கவேயில்லை''’என புகார்தாரரான ரவீந்திரனே, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டதால், விஜயநல்லதம்பியின் புகாரோ, வாக்குமூலமோ, எதுவுமே உண்மையல்ல... இது முற்றிலும் பொய்யான வழக்கு... என ராஜேந்திரபாலாஜி தரப்பு தெம்பாக இருக்கிறது. அதேநேரத்தில், விஜயநல்லதம்பி அளித்த ரூ.3 கோடி மோசடி வழக்கை கையிலெடுத்து, அடுத்த ஆட்டத்தை காவல்துறை மீண்டும் தொடங்கிவிட்டதோ என்ற கிலியும் முன்னாள் அமைச்சர் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

சத்துணவு, ஆவின், கூட்டுறவு, ரேசன் கடை, பஞ்சாயத்து கிளார்க் போன்ற அரசு வேலைகளை வாங்கித் தருவதாக பலரிடமும் பணம் பெற்றதாகவும், அந்தப் பணம் முழுவதையும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர்களிடம் கொடுத்ததாகவும், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனைக் கொலை செய்வதற்கு, ராஜேந்திரபாலாஜி கூறிய பிரகாரம் கூலிப்படையினரைத் தயார்செய்து மதுரை ஹோட்டலில் தங்க வைத்திருந்ததாகவும், விஜய நல்லதம்பி புகாரளித்து ராஜேந்திர பாலாஜி ஏ1-ஆக உள்ள வழக்கில், வில்லங்க விவகாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

ஜாமீன் வழங்கியபோது, ராஜேந்திர பாலாஜி கைதில் அவசரம் காட்டியதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில், அதுபோன்ற ஒரு அதிரடியை மீண்டும் செய்துவிடக்கூடாது என்பதில் காவல் துறை தெளிவாக இருக்கிறது. காரணம் - தலைமறைவாகி ஓடிஒளிந்தபோது ‘இமேஜ்-டேமேஜ்’ ஆன ராஜேந்திர பாலாஜி, சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அய்யோ பாவம்’ என அனுதாபத்தைப் பெற்றிருப்பதுதான். பல தரப்பினரும் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்த நிலையில், விருதுநகர் மாவட்ட தி.மு.க. பிரமுகரான பயில்வான்’ கிருஷ்ணசாமி தேவரும், பகைமையை மறந்து முன்னாள் எம்.பி. ராதா கிருஷ்ணனும் போய்ச் சந்தித்தது, அரசியலுக்கு அப்பாற்பட்டு இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. திருச்சி சிறையில் இருந்தபோது, கைதிகளுக்கு உள்ள பொதுவான உரிமையான பணம் கொடுத்து கேன்டீனில் உணவு வாங்கிச் சாப்பிடுவதுகூட, ராஜேந்திரபாலாஜிக்கு மறுக்கப்பட்டதை அறிந்த விஸ்வகர்மா சமுதாயப் பிரமுகர்கள், சிறுபான்மை சமுதாயம்னுதான ராஜேந்திரபாலாஜி மீது கை வச்சாங்க. ஏற்கனவே, பிராமின்ஸ் ஓட்டு திமுகவுக்கு விழறதில்ல. இனி நாமளும் போடப்போறதில்ல... என்று பேசி முடிவெடுத்திருப்பதாக தகவல் கசிய, உளவுத்துறையும் ‘நோட்’போட்டுள்ளது.

Advertisment

rr

‘தி.மு.க. தலைவர்களை நாகரிகம் இல்லாமல் ராஜேந்திரபாலாஜி திட்டியது சொந்தப் பகையினாலா? கட்சிக்காகத்தானே? அப்படி பார்த்தால், பொய் வழக்கில் கட்சிக்காக சிறைசென்ற ராஜேந்திரபாலாஜி, மற்றவர்களைக் காட்டிலும் மேலாகத்தானே தெரிகிறார். சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு ஜாமீன் கிடைத்ததே ஒரு சாதனைதானே? மேல்மட்டத் தலைவர்கள் கட்சிக்காக என்ன செய்தார்கள்? அவர்கள் பண்ணுவதெல்லாம் சுயநல அரசியல்''’என்று அக்கட்சியினர் போட்டுத் தாக்குவதையும் விருதுநகர் மாவட்டத்தில் கேட்க முடிகிறது.

ராஜேந்திரபாலாஜி சம்பந்தப்பட்ட வழக்குகளில் சட்ட ரீதியான ஆலோசனைகள், மேலிடத்திலிருந்து உத்தரவாகவே காவல்துறை யினருக்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ரவீந்திரன் புகாரில் விஜயநல்லதம்பி கைதாகி ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டால், அவர் மோசடிப் பேர்வழி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இது நடந்தால், ‘இப்பேர்ப்பட்ட’ விஜய நல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் எப்படி உண்மையாக இருக்கும் என்ற கேள்வி எழும். ராஜேந்திரபாலாஜி மீதான வழக்குகளும் ஆட்டம் கண்டுவிடும். அதனாலேயே, ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான ஆதாரங்களை, விசாரணை யின்போது விஜய நல்லதம்பியிடமிருந்து பெற்று, வழக்குக்கு வலுவூட்டும் வேலையை, காவல்துறை கச்சிதமாகப் பார்க்கிறது. இதன்மூலம், ராஜேந்திர பாலாஜி மீதான அனுதாபத்தை உடைத்து, அரசியலில் அடுத்தகட்ட வளர்ச்சியை நினைத்தும் பார்க்கவிடாமல் செய்துவிட முடியும். அதே காவல்துறை வட்டாரத்தில், நீதித்துறையின் கண்டனத்துக்கு மீண்டும் ஆளாகிவிடக்கூடா தென்று, விஜய நல்லதம்பி மீது கைது நடவடிக்கை பாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதுவும் நடக்கலாம் என மாற்றியும் பேசுகிறார்கள்.

ராஜேந்திரபாலாஜியோ, "எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்'’என வழக்கறிஞர்கள் மூலம் காவல்துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு, யாரிடமும்... குறிப்பாக மீடியாக்களிடம் வாய் திறக்கவே கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.