சேலம் அருகிலுள்ள கிராமத்தில், நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழியாக, இரண்டு ஆண்டுகள் காத்திருந்து, 15 பேர் கொண்ட கூலிப்படை ரவுடிகளை வைத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக் குற்றங்களில் சர்வசாதாரணமாக ஈடுபடும் சிறார் குற்றவாளிகளால் மொத்த கிராமமும் பதற்றத்தில் உறைந்து போயிருக்கிறது.
சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பச்சியப்பன் என்பவரின் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (26). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா. திருமணத்திற்குப் பிறகு திருநாவுக்கரசு, சொந்த ஊரைவிட்டு அயோத்தியாபட்டணத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். ஐயப்ப பக்தரான ரம்யாவின் தந்தை செந்தில் குமார், டிசம்பர் 17-ம் தேதி சபரி மலைக்குச் செல்ல இருந்தார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக திருநாவுக்கரசு, தன் மனைவியுடன் நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார்.
அங்கு தனது நண்பர் சரவணன் (19) என்பவரைச் சந்தித்து ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை நோட்டம்விட்ட 15 பேர் கொண்ட கும்பல், திடீரென்று இருவரையும் சுற்றி வளைத்தது. வகையாகச் சிக்கிக் கொண்டதை உணர்ந்த இருவரும், அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். துரத்திச் சென்ற ரவுடிகள், இருவரையும் கல்லால் தாக்கியும், சரமாரியாகக் கத்தியால் குத்தி விட்டும் தப்பிச்சென்றனர். கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ரத்த வெள்ளத் தில் சரிந்த இருவரையும் உள்ளூர்க்காரர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட கொஞ்ச நேரத்தில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணன், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறார்.
நாழிக்கல்பட்டி கிராமச் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, இந்த கொலையே பழிக்குப்பழியாக நடந்தது என்ற உண்மை தெரிய வந்துள்ளது. நாழிக்கல்பட்டி கிராம மக்க ளிடம் நாம் நேரில் விசாரித்த போது, திருநாவுக்கரசு கொலைக்கு பரபரப்புப் பின்னணி இருப்பதைச் சொன்னார்கள்.
''கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இரவு, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் திலீப் குமாரை, ஒரு கும்பல் இரும்புக் கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. அந்த கொலையை முன்னின்று செய்தவர்தான் இப்போது கொல்லப்பட்ட திருநாவுக்கரசு. தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் சரவணன், சூர்யா என்கிற மற்றொரு சரவணன் ஆகியோரும் அப்போது திலீப் குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது வீரபாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த மனோன்மணி, பனமரத்துப் பட்டி ஒன்றிய அ.தி.மு.க. ஒ.செ. ஜெகநாதன் ஆகியோர் திருநாவுக்கரசுவை கூலிப்படை ரவுடியாகப் பயன்படுத்தி வந்தனர். திலீப் குமாரும் அப்போது திருநாவுக்கரசு வுடன்தான் இருந்தார். எல்லோருமே 'நண்பர்கள் குழு' என்ற பெயரில் அப்போது ஒன்றாகத்தான் இயங்கி வந்தனர். பின்னர் திடீரென்று ஒருநாள் திலீப் குமார், 50 நண்பர்களுடன் தி.மு.க.வில் இணைந்துவிட்டார். அப்போது முதல் திருநாவுக்கரசுவுக்கும் திலீப் குமாருக்கும் ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது.
இந்த நிலையில்தான், 2019 செப்டம்பர் 4-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, திருநாவுக்கரசுவை திலீப் குமார் கேலி செய்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மறுநாள் இரவு திருநாவுக்கரசுவும், அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து திலீப் குமாரை கொடூரமாகப் போட்டுத்தள்ளினர். திலீப் குமாரைக் கொன்றவர்களை அடுத்த ஆண்டு அதே நாளில் தீர்த்துக் கட்டவேண்டும் என்று அவருடைய நண்பர்கள் அப்போதே சமாதியில் சபதம் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு அந்த திட்டத்தை அவர் களால் நிறைவேற்ற முடியவில்லை. திருநாவுக்கரசுவும் பயந்துகொண்டு சொந்த ஊருக்குள் வராமல் வெளியூரில் தங்கியிருந்தார். இந்த நிலையில்தான், நாழிக்கல்பட்டிக்கு மீண்டும் திரும்பிய திருநாவுக்கரசுவை டிசம்பர் 17-ம் தேதியன்று இரவு திலீப் குமாரின் நண்பர்கள் போட்டுத்தள்ளி வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர்'' என்கிறார்கள்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல் நாயகி, மல்லூர் காவல் ஆய்வாளர் கலையரசி தலைமை யிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி, கவுதமன், பாலியான், பாலாஜி, தமிழன்பன், தங்கவேல், குமரேசன், அழகுமணிகண்டன் மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என 9 பேரை இதுவரை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர்கள்தான். கொலைக் கும்பல் சுற்றி வளைத்தபோது தப்பி ஓடிய திருநாவுக்கரசுவையும், சரவணனையும் பாய்ந்து சென்று சட்டையைப் பிடித்து இழுத்து குப்புறத் தள்ளியதே இந்த சிறுவர்கள் தானாம்.
பிடிபட்ட கும்பல், திலீப் குமார் கொலைக்குப் பழி தீர்ப்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாக வஞ்சம் வைத்துக் காத்திருந்து திருநாவுக்கரசுவைக் கொன்றதாக, கொஞ்சமும் குற்ற உணர்வே இல்லாமல் துணிச்சலாக வாக்குமூலம் அளித்துள்ளதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கொலையில் சிவா என்ற ரவுடிதான் மூளையாகச் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப்பில் இதற்கென தனிக் குழுவைத் தொடங்கி, திருநாவுக்கரசுவின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து அப்டேட் செய்து வந்துள்ளார். அவர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் சிவா, நீதிமன்றத்தில் சரண்டர் ஆகலாம் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது.
சம்பவம் நடந்த இடமான நாழிக்கல்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். இந்த சமூகத்து இளைஞர்கள் பலரை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூலிப்படையாகப் பயன்படுத்தி வருவது தொடர்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு திலீப் குமார் கொல்லப்பட்டபோதே, இதற்கு பழி தீர்க்கும் வகையில் மேலும் சில கொலைகள் நடக்கும் அபாயம் உள்ளதாக, கடந்த 08.09.2019-ம் தேதியன்று, "கல்லூரி மாணவர் கொலை... கூலிப்படை தலைவன் வெறிச்செயல்!' என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் எச்சரித்து இருந்தோம்.
ஆனால், கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய திருநாவுக்கரசு மீது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏனோ குண்டாஸ் வழக்கு கூடப் போடாமல் மென்மையாக நடந்து கொண்டனர். இதற்கிடையே, திலீப் குமார் கொலை வழக்கில் இன்னும் 15 நாளில் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பு சொல்கிறது.
இது தொடர்பாக மல்லூர் காவல் ஆய்வாளர் கலையரசியிடம் கேட்டபோது, ''நாழிக்கல்பட்டி கிராமம் கொஞ்சம் 'சென்சிடிவ்' ஏரியா என்பதால் இப்போது அந்தப் பகுதியில் இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம். திருநாவுக்கரசு கொலை, பழிக்குப்பழியாக நடந்தது என்பது எங்களுடைய விசாரணையிலும் தெரிய வந்திருக்கிறது. கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, கற்களை கைப்பற்றி இருக்கிறோம். இந்தக் கொலைக்கும் பழிக்குப்பழியாக மேலும் கொலைகள் நடக்கலாம் என்ற தகவலால் போலீஸ் கண்காணிப்பை உஷார்படுத்தி இருக்கிறோம். தலைமறைவான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
கடந்த 2019-ல் திலீப்குமார் கொலை... அதற்குக் கணக்கு தீர்க்கும் வகையில் இப்போது திருநாவுக்கரசு கொலை நடந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில தலைகள் உருளலாம் என்ற தகவலால் நாழிக்கல்பட்டி கிராமம் மொத்தமும் பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. அதேநேரம், திலீப் குமார் கொலையிலும் இரண்டு சிறுவர்களுக்குத் தொடர்பு இருந்தது. இப்போது திருநாவுக்கரசு கொலையிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கல்லூரி வயது இளைஞர்களும், கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். நாழிக்கல்பட்டி கிராமத்து இளைஞர்கள், சிறார்கள், தவறான பாதைக்குச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், விழிப்புணர்வுப் பரப்புரை செய்யும் பணிகளையும் சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வது அவசியம் என்கிறார்கள் கொலைக்களமான நாழிக்கல்பட்டி கிராமத்தினர்.