முதல் கொரோனா தாக்குதல் வந்தபோது "இரண்டே நாட்களில் கொரோனாவை விரட்டியடிப்போம்' என சட்டமன்றத்தில் பேசியவர்தான் முதல்வர் எடப்பாடி. ஆனால் கொரோனாவின் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை நாடு முழுவதும் தாண்டிய நிலையில்... தமிழ்நாட்டில் கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை பதிமூன்றாயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலைக்குக் காரணம், தமிழக அரசு, தற்பொழுது அரசு அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. முதல் கொரோனா தாக்குதல் வந்தபோது தமிழக அரசு, அரசியல்வாதிகளான முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சரால் நிர்வகிக்கப்பட்டது. "முதல் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது' என அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். அந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், "கொரோனா தடுப்பூசி மருந்தை வீணடிப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. கன்னியாகுமரி, திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களில் தடுப்பூசி போட வந்தவர்களுக்குத் "தடுப்பூசி இல்லை' என திருப்பி அனுப்பப்பட்டார்கள். தமிழகத்திற்கு வந்த 56 லட்சம் தடுப்பூசிகளில், 3 லட்சத்து 69,000 தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 100-க்கு 12 தடுப்பூசிகள் போடப்படாமல் வீணாக்கப் பட்டுள்ளன. "மொத்தம் எத்தனை தடுப்பூசிகள் வந்தது, எவ்வளவு உபயோகப்படுத்தப்பட்டது என்பதில் அமைச்சர் விஜயபாஸ்கரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்து தெரிவிக்கிறார்கள் என்கிறார்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள்.
தடுப்பூசியால் மட்டுமல்ல... ஆக்சிஜன் விவகாரத்திலும் இந்த மோதல்களும் முரண்பாடுகளும் நீடிக்கின்றன. வட இந்திய மாநிலங்கள் முழுவதும் இரண்டாவது முறையாக தாக்கும் கொரோனா வைரசின் சிறப்புக் குணமான மூச்சுத்திணறலைச் சமாளிக்க ஆக்சிஜன் சிலிண்டரைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் சுகாதாரத்துறையின் இணைச்செயலாளரான நுபுன் விநாயகர் ஐ.ஏ.எஸ். என்பவர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உட்பட மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், டெல்லி, ஹரியானா உட்பட 15 கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குக் கடிதம் ஒன்றை ஏப்ரல் மாதம் 18-ந் தேதி எழுதுகிறார்...
கோவிட் நோய் தாக்குதலால் இந்தியாவில் 12 மாநிலங்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை சப்ளை செய்வதற்கு மத்திய அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதுபோல தெலுங்கானா, ஆந்திரா, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என இந்த மாநிலங்களுக்கும், "தமிழ்நாடு உட்பட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்களி லிருந்து ஆக்சிஜன் லோடுகளை அனுப்பவேண்டும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (கடிதம் காண்க:)
அதன்படி, ஒரு மெட்ரிக் டன் திரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் சென்னைக்குப் பக்கத்தில் உள்ள திருப்பெரும்புதூரில் உள்ள ஒரேயொரு ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஆந்திராவுக்கும், தெலுங்கானாவிற்கும் லாரிகளில் ஆக்சிஜன் நிரப்பி, அதை ரயில்களில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை விட தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். ஆந்திராவில் 54,000 நோயாளிகள்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கானாவில் 43,000 பேர்தான் நோயாளிகள். ஆனால் தமிழகத்தில் 80,000 பேர் இரண்டாவது அலையாக வந்து தாக்கிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுகிறார்கள்.
தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை ஆந்திரா, தெலுங்கானா வைவிட இரு மடங்கு அதிகம் உள்ள சூழலில்... மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டு, சென்னையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அப்படியே வாரிக்கொண்டு சென்றுவிட்டது. மாநில அரசைக் கேட்காமல் மத்திய அரசு ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். "2020-ஆம் ஆண்டும் மத்திய அரசு இதுபோலவே செய்தது. நாங்கள் இதை மத்திய அரசிடம் கேள்விகேட்கப் போகிறோம்' என விஜயபாஸ்கர் கொந்தளிக்கிறார்.
அதற்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ""மத்திய அரசு ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்ததில் தவறு ஒன்றுமில்லை... கொரோனா தாக்குதல் சமயத்தில் இதெல்லாம் சகஜம். தமிழகத்தில் ரெம்டெசிவிர் என்கிற உயிர்காக்கும் மருந்துக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. புதியவகை கொரோனா கிருமியை எதிர் கொள்ள, இந்த மருந்து உயிர்காக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. அந்த மருந்தை மற்ற மாநிலங்கள்தான் தமிழகத்திற்கு அளிக்கின்றன. ஒரே நாட்டில் இப்படிப் பண்டமாற்று முறைகள் சகஜம்'' என்கிறார்.
ஆனால் திடீரென அமைச்சர் விஜய பாஸ்கர், "ஆக்சிஜனை மத்திய அரசு, மாநில அரசின் அனுமதியில்லாமல் எடுத்துக்கொண்டு சென்றது' என பேட்டியளிப்பதன் காரணம் மட்டும் யாருக்கும் புரியவில்லை. "மாநில நிர்வாகம், அவரது கட்டுப்பாட்டில் இயங்காமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு செக் வைக்க நினைக்கிறாரா விஜயபாஸ்கர்? அதற்காக இதுவரை வெளியே தெரியாத இந்த ஆக்சிஜன் மேட்டரை அவரே ஊதிப் பெருக்குகிறாரா' என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகள், விஜயபாஸ்கரிடம் பேசினார்கள். உடனே பல்டியடித்த விஜயபாஸ்கர், "அதிகாரிகளால் தமிழக சுகாதாரத்துறை நன்றாகவே நிர்வாகம் செய்யப்படுகிறது. தடுப்பூசிகள் 12 சதவிகிதம் வீணடிக்கப்பட்டதைப் பற்றி கவலை வேண்டாம். மேலும் பத்து லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது' என பேட்டியளித்து "மத்திய அரசுடனும் மாநில அதிகாரிகளுடனும் மோதவில்லை என காட்டிக்காண்டார்' என்கிறார்கள் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்கள். விஜயபாஸ்கரின் இந்த திடீர் போர்க்கோலத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது.
முதல் கொரோனா தாக்குதல் வந்தபோது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற வந்த பணக்கார நோயாளிகளை தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற நாள் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என கட்டணமும் நிர்ணயித்தது. அதுபோலவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரத்துறையின் முன்கள பணியாளர்களான நர்ஸ்களையும் டாக்டர்களையும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைத்தது.
தனியார் மருத்துவமனைகளுக்கு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த வகையில், அந்த மருத்துவமனைகளுக்கு அரசு தரவேண் டிய பணமும், நட்சத்திர விடுதிகளில் சுகாதார முன்களப் பணியாளர்களை தங்க வைத்ததால், அந்த விடுதிகளுக்கு அரசு தரவேண்டிய பணமும், இன்னமும் சென்று சேர வில்லை. தனியார் மருத்துவமனைகளுக்குக் கொடுக்க வேண்டிய பணம் மட்டுமே சுமார் பதினோராயிரம் கோடி ரூபாய். இதுதவிர, நட்சத்திர விடுதிகளுக்கு கொடுக்க வேண்டிய பணமும் கொடுக்கப்படவில்லை.
இந்த மருத்துவமனைகளுக்கும் தனியார் விடுதிகளுக்கும் கொடுக்கவேண்டிய பணத்தில் இருபது சதவிகிதம் கமிஷன் என விஜயபாஸ்கர் பேசி முடிவு செய்து வைத்திருக்கிறார். அதை நேரடியாக அதிகாரிகளே பட்டுவாடா செய்யும் முயற்சியில் இறங்கியது விஜயபாஸ்கருக்குப் பிடிக்கவில்லை. அதனால் "சுகாதார முன்களப் பணியாளர்களைத் தங்க இடமளிக்காதீர்கள்' என விடுதி உரிமையாளர்களைக் கூப்பிட்டு அமைச்சரின் ஆட்கள் சொல்லிவிட... இப்பொழுது "முன்கள பணியாளர் களுக்கு ஓய்வு எடுக்கக்கூட இடம் கிடைப்பதில்லை' என வருத்தப்படுகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள். "இந்தப் பஞ்சாயத்து முற்றிப்போனதால்தான் விஜயபாஸ்கர் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார்' என்கிறார்கள், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.
கொரோனா காலத்திலும் மத்திய அரசு, மாநில அரசை வஞ்சிக்கிறது. மாநிலத்தின் காபந்து சர்க்காராக இருக்கும் அ.தி.மு.கவின் அமைச்சரோ லாபக் கணக்கு போடுகிறார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், தடுப்பூசி கோல்மால்களாலும், கொரோனா நோயாளிகளுக்குப் போட வேண்டிய ஊசி போதிய அளவில் இல்லாததாலும், நோய்ப் பரவலும் உயிரிழப்பும் கூடிக்கொண்டிருக்கிறது. மத்திய-மாநில ஆட்சியாளர்கள் கோலாட்டம் ஆடி, கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-தாமோதரன் பிரகாஷ்