தனது தாய்நாட்டை விட்டு எப்படியாவது தப்பியாக வேண்டுமென்று, விமான நிலையத்தின் ஓடு பாதையையும் நிறைத்தபடி பதைபதைப்போடு குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்...… சாரைசாரையாக விமான நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்காக விமான நிலையத்தின் கதவடைத்த பின்னும் சுவரேறிக் குதிக்கும் மக்கள்மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு...… நின்றுகொண்டிருக்கும் விமானத்தின் கதவடைக்கப்பட்ட பின்னரும், விபரீதம் புரியாமல் அதன் மேற்கூரையில் ஏறி அமர்ந்திருக்கும் மக்கள்... அமெரிக்காவுக்குக் கிளம்பிய விமானத்தின் சக்கரப் பகுதியில் தொற்றிக் கொண்டு விமானத்தோடு மேலேறி, பறக்கும் விமானத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த 3 பேர், காபூலிலிருந்து கத்தாருக்குச் செல்லவிருந்த சி-17 ரக அமெரிக்க விமானத்தில் முண்டியடித்தபடி ஏறியமர்ந்த ஆப்கன் நாட்டு பெண்கள், ஆண்கள், குழந்தைகள் 640 பேர் என ஆப்கானிஸ்தான் பொதுமக்களின் துயரமான சூழல் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது.
பெரிய எண்ணெய் வளமோ, தொழில் வளமோ இல்லாத கரடுமுரடான தேசமான ஆப்கானிஸ்தான் மக்களை மட்டும், இரவும் பகலும்போல இருள் சூழ்வதும், பின் வெளிச்சம் பாய்வதுமாக உலக அரசியலும், உள்ளூர் தீவிரவாதக் குழுக்களின் அரசியலும் வாட்டி வதைக்கிறது. உலகமே வாழ்க்கைத்தரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இவர்களுக்கு மட்டும் ஏனிந்த கொடுமையான வாழ்க்கை? கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ் தானிலுள்ள தீவிரவாதக் குழுக்களை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்கா, இப்போது ஏன் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இங்கி ருந்து பாதியிலேயே விடைபெற்றுச் செல்கிறது? இந்த கேள்விகளுக்கான விடை தேட, சற்றே ஆப்கானிஸ்தானத்தின் அரசியலை அலசுவோம்.
தாலிபான்களை அடக்கிய அமெரிக்கா!
வரும் செப்டம்பர் 11-ம் தேதியோடு அமெரிக் காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்கு தலின் 20-வது ஆண்டு நினைவு தினம் வருகிறது. ஒரு காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வின் மறைமுக ஆதரவால் வளர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக உருவெடுத் தார். 2001 செப்டம்பர் 11-ம் தேதி, அமெரிக்காவின் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா அமைப் பினர், அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், ராணு வத் தலைமையகமான பென்டகன்மீத
தனது தாய்நாட்டை விட்டு எப்படியாவது தப்பியாக வேண்டுமென்று, விமான நிலையத்தின் ஓடு பாதையையும் நிறைத்தபடி பதைபதைப்போடு குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்...… சாரைசாரையாக விமான நிலையத்தில் குவியும் மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்காக விமான நிலையத்தின் கதவடைத்த பின்னும் சுவரேறிக் குதிக்கும் மக்கள்மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு...… நின்றுகொண்டிருக்கும் விமானத்தின் கதவடைக்கப்பட்ட பின்னரும், விபரீதம் புரியாமல் அதன் மேற்கூரையில் ஏறி அமர்ந்திருக்கும் மக்கள்... அமெரிக்காவுக்குக் கிளம்பிய விமானத்தின் சக்கரப் பகுதியில் தொற்றிக் கொண்டு விமானத்தோடு மேலேறி, பறக்கும் விமானத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த 3 பேர், காபூலிலிருந்து கத்தாருக்குச் செல்லவிருந்த சி-17 ரக அமெரிக்க விமானத்தில் முண்டியடித்தபடி ஏறியமர்ந்த ஆப்கன் நாட்டு பெண்கள், ஆண்கள், குழந்தைகள் 640 பேர் என ஆப்கானிஸ்தான் பொதுமக்களின் துயரமான சூழல் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது.
பெரிய எண்ணெய் வளமோ, தொழில் வளமோ இல்லாத கரடுமுரடான தேசமான ஆப்கானிஸ்தான் மக்களை மட்டும், இரவும் பகலும்போல இருள் சூழ்வதும், பின் வெளிச்சம் பாய்வதுமாக உலக அரசியலும், உள்ளூர் தீவிரவாதக் குழுக்களின் அரசியலும் வாட்டி வதைக்கிறது. உலகமே வாழ்க்கைத்தரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இவர்களுக்கு மட்டும் ஏனிந்த கொடுமையான வாழ்க்கை? கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ் தானிலுள்ள தீவிரவாதக் குழுக்களை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்கா, இப்போது ஏன் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இங்கி ருந்து பாதியிலேயே விடைபெற்றுச் செல்கிறது? இந்த கேள்விகளுக்கான விடை தேட, சற்றே ஆப்கானிஸ்தானத்தின் அரசியலை அலசுவோம்.
தாலிபான்களை அடக்கிய அமெரிக்கா!
வரும் செப்டம்பர் 11-ம் தேதியோடு அமெரிக் காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்கு தலின் 20-வது ஆண்டு நினைவு தினம் வருகிறது. ஒரு காலத்தில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா வின் மறைமுக ஆதரவால் வளர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் குழுக்களில் ஒன்றான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன், அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக உருவெடுத் தார். 2001 செப்டம்பர் 11-ம் தேதி, அமெரிக்காவின் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா அமைப் பினர், அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், ராணு வத் தலைமையகமான பென்டகன்மீது விமானங் களை மோதவிட்டு அமெரிக்காவையே நிலைகுலை யச் செய்தனர். உடனடியாக, தீவிரவாதத் தாக்குத லுக்குப் பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்க விமானப்படை விமானங்கள், பின்லேடன் பதுங்கியிருப்பதாகச் சந்தேகப்படும் இடங்களின்மீது குண்டுமழை பொழிந்தன. இத்தாக்குதலில் பின்லேடன் தப்பினாலும், தாலிபான் தலைவர்கள் பலர் கொல்லப்பட, 2001, நவம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்களிடமிருந்து கைப்பற்றியது. தாலிபான்களின் வீழ்ச்சிக்குப்பின் அங்கே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஆப்கானிஸ்தான் படைகளுக்கு ராணுவப் பயிற்சியளித்து, அவர்களின் துணையோடு தாலிபான்கள் மீது தாக்குதல் நடத் தியது. அமெரிக்க ராணுவத்துடன் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நேட்டோ நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பைத் தந்தன.
பின்லேடனைத் தீர்த்துக்கட்டுவதில் அமெரிக்கா முனைப்புடன் இருந்ததால், ஆப்கனில் தனது ராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே சென்றது. 2011-ம் ஆண்டில் அதிக பட்சமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஆப்கனில் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது அமெரிக்க வீரர்களுக்காக ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவழித் தது. 2011-ம் ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டறிந்த அமெரிக்க ராணுவம், பாகிஸ்தானுக்கே தெரியப்படுத்தாமல் மிகவும் கச்சிதமாகச் சுற்றிவளைத்து பின்லேடனைத் தீர்த்துக்கட்டியது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தானத்தில் ஜனநாயக ஆட்சிக்குப் பக்கபலமாக இருந்துகொண்டு தீவிர வாதிகள் வேட்டையில் அமெரிக்கா ஈடுபட்ட போதும், தங்கள் படைபலத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கு மிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் இறங்கியது.
மாறிய நிலைமை!
கடந்த ஆண்டு தோஹாவில் தாலிபான் களோடு அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. தாலிபான்கள் தரப்பில், "இனிமேல் பெண்களின் உரிமைகளை நசுக்க மாட்டோம், தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபடமாட்டோம்' என்றெல்லாம் நல்லபிள்ளைகளைப் போல் உறுதியளிக்கப்பட்டது. அமெரிக்க தரப்பில், "இனி ஆப்கனில் அமெரிக்கா போரிடாதென்றும், 2021 செப்டம்பர் 11-ம் தேதிக் குள் அமெரிக்க படைகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படும்' என்றும் கையெழுத்திட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் விலக்கிக்கொள்ளப்படும் என்று சமீபத்தில் ஜோ பைடன் அறிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை வீரர்களைப் போரில் ஈடுபடுத் தியதற்காக சுமார் 820 பில்லியன் டாலர்வரை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இதுதவிர, ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு மற்றும் ராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக 200 பில்லியன் டாலர்களைச் செலவழித்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகும் அமெரிக்க வீரர் களை ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபடுத்துவதற் கும், பலி கொடுப்பதற்கும் அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதாலும், அமெரிக்க ராணுவத்துக் குச் செலவழிப்பதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழும்பியதாலும் ஆப்கானிஸ்தானத் திலிருந்து வெளியேறும் முடிவுக்கு அமெரிக்கா வந்தது. ஆப்கானிஸ்தானத்தின் மலைகளும், பள்ளத்தாக்குகளுமாக அமைந்துள்ள புவிப்பரப்பு, தாலிபான்களை எவராலும் முற்றாக அழிக்க முடியாதபடி அவர்களுக்குச் சாதகமாக அமைந்த தும் ஒரு காரணமாகும்.
மீண்டும் தாலிபான்!
ஆப்கானிஸ்தானத்திலிருந்து முற்றிலுமாக அமெரிக்கா விலகியதும் ஆப்கன் ராணுவம், தாலிபான்களைக் கட்டுப்படுத்துமென்று ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு மாறாக, தாலிபான்களின் கொடூரத் தாக்குதலில் ஆப்கன் ராணுவம் பின்னடைவைச் சந்தித்தது. அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற வெடிபொருட் களை தாலிபான்கள் கைப்பற்றி, அதன்மூலம் ஆப்கன் படையினர்மீது தாக்குதல் நடத்தினர். கடந்த மாதத்தில், தாலிபான்களிடம் சரணடைய வந்த ஆப்கன் ராணுவத்தின் 22 மேஜர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற சம்பவம் ஆப்கானிஸ்தான் மக்களிடம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. தாலிபான்களின் கொடூரத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஒவ்வொரு மாகாணமாக வீழ்ந்தநிலையில்... இறுதியாகத் தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, தங்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
தாலிபான்கள் காபூலை நெருங்கியதுமே தனது தோல்வியை ஒப்புக்கொண்ட ஆப்கானிஸ் தான் அதிபர் அஷ்ரப் கனி, பெரும் போரால் ரத்தக்களறி யாவதைத் தவிர்ப்பதற்காகத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு தலைமறைவானார். தற்போதுள்ள சூழலில் அவர், ஆப்கானிஸ் தானுக்கு அருகிலுள்ள தஜிகிஸ்தானில் தஞ்சம் புக நினைத்த தாகவும், ஆனால் தஜிகிஸ்தான் மறுத்த தால் ஓமனில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில், அமெரிக் காவில் சென்று குடியேறுவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"20 ஆண்டுகால போராட்டத்தின், தியாகத்தின் பலன்களை ஆப்கானிஸ்தான் மக்களும், முஜாஹிதீன்களும் தற் போது அனுபவிக்கிறார்கள். எங்கள் நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இறைவனுக்கு நன்றி. ஆப் கானிஸ்தானில் எங்களுடைய புதிய ஆட்சியின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்று தாலீபான்களின் செய்தித்தொடர்பாளர் முகமது நயீம் அறிவித்தார்.
வஞ்சித்த வல்லரசுகள்!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால், அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அமெரிக்க மக்கள் அனைவரையும் அங்கிருந்து அமெரிக்கா வுக்கு வரவழைக்க அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். அங்குள்ள அமெரிக்கர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்படுவதற்காக காபூல் விமான நிலையப் பாதுகாப்பில் 6,000 அமெரிக்க வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, ஆப்கானிஸ்தான் இந்தியத் தூதரகத்திலுள்ள பணியாளர்களையும், ஆப்கனில் பணியாற்றும் இந்தியர்களையும் பத்திரமாக மீட்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து ஆப்கன் சென்ற ஏர் இந்தியா விமானம் மூலமாக 129 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். தொடர்ச்சியாக இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தாலிபான்களின் வளர்ச்சியை, அமெரிக்கா தனது தலையில், தானே கொள்ளிக்கட்டையை வைத்துத் தேய்த்துக்கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பின், சபிக்கப்பட்ட பூமியான ஆப்கானிஸ்தான், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது ஆப்கனில் எண்ணிலடங்கா இஸ்லாமிய அடிப்படைவாதத் தீவிரவாதக் குழுக்கள் ரஷ்யாவுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தன. அவற்றில் முஜாஹிதீன்களும் தாலிபான்களும் சற்று பெரிய குழுக்களாக இருந்தார்கள். ரஷியாவுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களை வளர்த்துவிடும் செயலில் மறைமுகமாக அமெரிக்கா ஈடுபட்டது. அதன் காரணமாக, தாக்குப்பிடிக்க முடியாமல், 1992-ம் ஆண்டில் ஆப்கனைவிட்டு ரஷ்யா முற்றாக வெளியேறியது. அதன்பின் நான்காண்டு கால உள்நாட்டுப் போரில், மற்ற தீவிரவாதக் குழுக்களை வீழ்த்தி தாலிபான்கள் 1996-ல் ஆட்சியைப் பிடித்தனர்.
ஜனநாயகம் என்ன விலை?
1996 முதல் 2000 வரை ஆப்கனின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த தாலிபான்கள், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளின் மூலம் மனித உரிமைகள், குறிப்பாக பெண்களின் உரிமைகளை நசுக்கினர். பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் துணையோடுதான் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இசை, சினிமா, தொலைக்காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. சிறுமிகளின் கல்வி தடை செய்யப்பட்டது. குற்றவாளிகளுக்குத் தண்டனையாக பொதுவெளியில் தூக்கிலிடுவது, கல்லால் அடித்துக் கொல்வது, சவுக்கடி போன்ற மோசமான தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால் அமெரிக்காவின் தலையீட்டால், 2001-ல் தாலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த ஆப்கன் ஜனநாயக அரசில், அரசாங்கப் பதவிகளிலும், நீதித்துறை, ஊடகங்களிலும், ஆசிரியப் பணியிலும், பெண்கள் பங்கெடுத்தனர். ஆப்கன் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு இந்தியாவைவிட அதிகமாக இருந்தது. மொத்தத்தில், பெண்களின் உரிமைகளுக்கு அச்சமற்ற, சுதந்திரமான சூழல் நிலவியது.
தற்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், கண்களை தவிர வேறு எதுவும் தெரியாத வகையில் பெண்கள் பர்தா அணிய வேண்டும், பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, கணவனுடன் மட்டுமே பெண்கள் வரவேண்டும் என்றெல்லாம் பழைய கட்டுப்பாடுகளைத் திணிக்கத் தொடங்கியுள்ளனர். விதிகளை மீறுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. இதன் விளைவுதான், காபூல் விமான நிலையத்தில் மக்களின் முற்றுகை. அதுமட்டுமின்றி பாகிஸ் தானுக்குள் தஞ்சம் புகுவதற்காக, சாமன் நகரிலுள்ள ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் இருநாட்டு எல்லையில் நீண்ட வரிசையில் மூட்டை முடிச்சுக ளோடு மக்கள் காத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் புதிய ஆட்சியின் அதிபராக, தாலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல்கனி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆட்சிக்கு பாகிஸ் தானும், சீனாவும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆப்கன் நிலவரத்தைக் கவனித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரஸ், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலையை நினைத்துக் கவலைப் படுவதாகத் தெரிவித்துள்ளார். போர், பஞ்சம் போன்ற காரணங்களால் உலகெங்கும் சுமார் 8.24 கோடி பேர் நாடற்றவர்களாக இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.