கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சவுக்கு சங்கரின் கஞ்சா நெட்வொர்க்கை தோண்டிய போலீஸ், ஒரு பெரிய கொக்கைன் நெட்வொர்க்கை கண்டுபிடித்து அதிர்ந்து போயிருக்கிறது. சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த கமலஹாசன், பணக்காரர்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் தங்கத்தாம்பாளத் தட்டுகளில் வைத்து கொக்கைன் பரிமாறப்படுவதாக பேட்டியளித்தார். அதிக பரபரப்புக்குள்ளான அந்த பேட்டியில் குறிப்பிடப்படும் கொக்கைன், சாதாரணமாக சென்னை நகரில் பணக்கார வட்டாரங்களில் புழங்குகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்படும் கொக்கைன் கஞ்சாபோல் அவ்வளவு சாதாரணமானதல்ல. கஞ்சா ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்றால் கொக்கைன் ஒரு கிலோ ஒன்றரைக் கோடி ரூபாய்.
பணத்தை தண்ணீர் போல் செலவிடும் பணக்காரர்கள் நேசிக்கும் போதைப் பொருளாக இருக்கும் கொக்கைன் தொடர்பாக சென்னை நகரில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் மணல் மாபியா கரிகாலனுக்கு சொந்தமான ‘செக் மேட்’ பாரில் ஒரு அடிதடி நடந்தது. அந்த அடிதடியில் சம்பந்தப்பட்டவர்களின் மீது சென்னை நகர போலீஸ் எஒத போட முதலில் தயங்கியது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சென்னை நகருக்குள் போதைப்பொருள் நடமாட்டம் எப்படி வந்தது என சென்னை மாநகர கமிஷனரை கேட்டார். அதன்பிறகு எஒத போட்ட போலீஸ் அதில் தொடர்புடையவர்களை கைது செய்தது. அவர்கள் ஜாமீனில் வந்துவிட்டார்கள்.
சென்னையில் ஒரு காவல்நிலையத்தில் ஐந்து கிலோ கொக்கைன் பிடிபட்டது. அது திடீரென காணாமல் போனது. அதை தீர விசாரித்த ஒரு உயரதிகாரி, ‘காணாமல்போன லிமிட் காவல்துறை அதிகாரிதான் அதற்குப் பொறுப்பு’ என ரிப்போர்ட் எழுதினார். கொக்கைனை கைப்பற்றிய அந்த லிமிட்டைச் சேர்ந்த அதிகாரி, கொக்கைன் விற்கும் நெட்வொர்க்கில் ஈடுபட்ட சையது, பரணி ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். இவர்கள் சவுக்கு சங்கரின் நண்பர்கள். இந்த டீம் வேளச்சேரியில் ஒரு அப்பார்ட்மெண்டில் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அங்கு நடக்கும் விருந்து மற்றும் கொண்டாட்டங்களில் டீமுடன் தமிழகத்தின் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் பணிபுரியும் சில கருப்பு ஆடுகள், இத்துடன் இந்திய வருவாய் துறையைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டார்கள்.
அங்கு உல்லாசப் பேர்வழிகளுக்கு நடத்தப்பட்ட விருந்துகளில் விபச்சார அழகிகளால் மது மற்றும் கொக்கைன் பரிமாறப்பட்டது. இது அரசல்புரசலாக ஒரு சமூக வலைத்தளத்தில் செய்தியாக வெளிவந்தது. உடனே அந்த செய்தியை எழுதியவரை கூப்பிட்டு போலீஸ் விசாரித்தது. சமீபத்தில் நடைபெற்ற பெரும்பாலான இன்கம்டாக்ஸ் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகள் எல்லாம் அந்த வேளச்சேரி பிளாட்டில் நடைபெறும் பார்ட்டிகளில்தான் முடிவு செய்யப்பட்டன. மணல் கரிகாலன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீது அமலாக்கத்துறை பாயப்போகிறது என்பதை சவுக்கு சங்கர் முன்கூட்டியே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தினார். அவர் சொல்லியது போல் அமலாக்கத்துறை பாயவே மற்றவர்கள் நடுங்கிப் போயினர். அவர்கள் சவுக்கு கேட்ட பணத்தை கொண்டுவந்து கொடுத்து அமலாக்கத்துறை நடவடிக்கையிலிருந்து தப்பினார்கள்.
சவுக்கு ஒரு பக்கம் என்றால், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பேரைச் சொல்லி அவருக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி அமலாக்கத்துறை ரெய்டு எனச் சொல்லி மிரட்டினார். இருவருக்கும் பணம் மழையாய் கொட்டியது. கட்சி நடத்தப் பணமில்லை. அமர் பிரசாத் ரெட்டிதான் பணம் கொடுக்கிறார் என பா.ஜ.க. மா.த. கட்சி மேலிடத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அமலாக்கத்துறை பேரைச் சொல்லி நடததப்படும் இந்த மிரட்டல்களை பா.ஜ.க. மேலிடம், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காக கண்டுகொள்ளாமல் விட்டது. சவுக்கு சங்கர் கடந்த ஒன்றரை வருடத்தில் கோடிக்கணக்கில் பணம் சேர்த்ததற்கு காரணம் இந்த கொக்கைன் நெட்வொர்க்தான் என்பதைக் கண்டுபிடித்த போலீசார் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
இந்த நெட்வொர்க்கில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி தி.மு.க.வின் தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர் மூலம் தி.மு.க.வைப் பற்றிய தகவல்களைத் திரட்டிய சவுக்கு சங்கர், பா.ஜ.க.வை திருப்திப்படுத்த தி.மு.க.வை கடுமையாக எதிர்த்திருக்கிறார். அத் துடன் தி.மு.க. தலைமை பற்றி அவர்களது தனிப் பட்ட தகவல்களை ஊடகங்களில் பேசி பா.ஜ.க. மேலிடத்தை குளிர வைத்துள்ளார். இந்த தகவல் களால் நெஞ்சம் குளிர்ந்துபோன பா.ஜ.க. மேலிடம், “சவுக்கு சங்கர் தரும் தகவல்கள் உண்மையானவை, அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வருமானவரித் துறையும் செயல்படலாம்”என பச்சைக்கொடி காட்ட, சவுக்கு சங்கரின் பிளாக் மெயிலுக்கு அடிபணியாதவர்களின் மீது ரெய்டுகள் நடத்தப்பட்டன. அந்த ரெய்டுகளை முன்கூட்டியே தனது இணையபக்கத்தில் சவுக்கு சங்கர் அறிவித்தார்.
சவுக்கின் போதை நெட்வொர்க்கை அவரைப் பின்தொடர்ந்து ஆராய்ந்த போலீஸ், அவர் தூத்துக்குடியிலிருந்து தேனி செல்வதற்கு முன்பு ராமநாதபுரம் கமுதிக்கு சென்று மகேந்திரன் என்பவரிடம் கஞ்சா வாங்கியதை கண்டுபிடித்தது. அந்த கஞ்சாவை தேனியில் அவரைக் கைது செய் யும்போது கைப்பற்றி, கஞ்சா வழக்கும் போட்டது. மது குடிப்பதை மருத்துவர்கள் அறிவுரைப்படி நிறுத்திய சவுக்கு அதன்பிறகு கஞ்சாவுக்கு மாறி னார். அவரது கைதுக்குப் பிறகு கால் ரெஜிஸ்டர் களை செக் செய்த போலீசார், அதில் சையது, பரணி மற்றும் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாக இருந்த ஒரு போலீஸ் அதிகாரி பெயர்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்த்து ஒவ்வொன்றாக தீவிரமாக விசாரித்தபோது, ‘சவுக்கு கஞ்சா மட்டும் அடிப்பவரல்ல... கொக்கைன் வளையத்திலும் இருக்கிறார்’ என கண்டுபிடித்தார்கள்.
சவுக்கின் உதவியாளர் பிரதீப் அளித்த நேர் காணலில் ‘சவுக்கு ஒரு போதை மருந்து உபயோகிப் பாளர்’ என அடித்துக் கூறிவருகிறார். சவுக்குக்கு மருத்துவப் பரிசோதனை செய்த போலீசார், அவரது ரத்தத்தில் கலந்துள்ள போதைப்பொருள் களைப் பற்றி தனி வரலாறே எடுத்து வைத்துள் ளார்கள்.