மிழ் சமூகத்தில் இலக்கியவாதிகளுக்கான அங்கீகாரமும் கௌரவமும் அவர்கள் வாழும் காலத்தில் அரிதாகவே தரப்படுகிறது. ஆளுமைமிக்க எழுத்தாளர்கள் மறைந்த பிறகுதான் இந்த சமூகம் அவர்களின் புகழைக் கொண்டாடுகிறது.

"விதியென்று ஒன்றி ருந்தால் விதிவிலக்கும் இருக்கும்' என்பதற்கேற்ப, சிறுகதைகள், குறுநாவல்கள், மொழிபெயர்ப்புகள் என படைத்து எழுத்தாளுமையாக தன்னுடைய 80 வயதிலும் படைப்பைத் தொடரும் கரிசல் இலக்கியவாதியான பொன்னீலனுக்கு, அவர் வாழும் காலத்திலேயே ஒருநாள் முழுக்க விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறது நாஞ்சில் நாட்டு இலக்கிய வட்டாரம்.

pp

பொன்னீலனின் 80-வது பிறந்தநாள், எழுத்துலகில் தொடரும் 55 அகவை இரண்டுக்குமாக நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பாராட்டுவிழா நடந்தது. துணைவியார் கனியம்மாளுடன் மேடை யில் அமர்ந்திருந்த பொன் னீலனை பாராட்டி விழாவினைத் தொடக்கி வைத்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, “""புதுக் கோட்டையிலுள்ளது அத்தாணி கிராமம். கடற்கரையையொட் டிய இந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை. கைவிளக்குதான் உண்டு. அந்த கைவிளக்கு வெளிச்சத்தில் 24 ஆண்டுகளாக எழுதிய நாவல்தான் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற "புதிய ppதரிசனம்' நாவல். "மறுபக்கம்' நாவலில் மண்டைக்காடு சம்பவத்தின் உண்மைத் தன்மையைச் சொல்லவேண்டும் என்பதற்காக சிரத்தையெடுத்துக்கொண்டு உழைத்தார். ஒடுக்கப் பட்ட மக்கள், ஏழைகள், உழைக்கிற மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என எல்லாரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர்'' என அவரின் பெருமைகளை அறிமுகம் செய்தார்.

Advertisment

சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் பேசும்போது ""பொன்னீலனின் அனைத்து எழுத்துகளையும் வாசித்திருக்கிறேன். ஒரு எழுத்தாளன் வாழுகிற காலத்தில் இப்படியொரு விழா எடுப்பது மரபு. ஆனால் தமிழில் இது அபூர்வம். எழுத்தாளுமை யைக் கொண்டாடுவது முக்கியமான விசயம். இந்த நூற்றாண்டை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டுசெல்ல ஒரு எழுத்தாளனால்தான் முடியும். பொன்னீலனின் எழுத்துக்கள் எல்லாம் நூற்றாண்டுகளையெல்லாம் கடந்து நிற்கக்கூடியவை'' என்றார்.

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை ஸ்டாலின் குணசேகரன், ""வரலாறைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்றால் இளைய சமூகம் பொன்னீலன் போன்ற எழுத்தாளுமை கொண்டவர்களின் எழுத்துக்களைப் படிக்கவேண்டும். பொன்னீலனின் படைப்புகள் ஜாதி மதக் கோட்பாடுகளை தகர்த்தெறிந்து அன்பை மட்டும் போதிக்கும் படைப்புகளாக உள்ளன'' என்றார்

கலை இலைக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் பேராசிரியர் காமராஜ், ""பொன்னீலன் தனது படைப்புகளில் மக்களை, அவர்களின் நிறங்களை, உணர்ச்சிகளை, கோபத்தை, அவை எதற்காக ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறார். ரஷ்யாவில் மக்சீம் கார்க்கி எழுதிய "தாய்' நாவல் எப்படி ஒரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தியதோ அதேபோல் பொன்னீலனின் படைப்புகள் மக்கள் சுதந்திரத்தைப்பற்றி பேசவைத்தது'' என அவரின் படைப்பின் அடிநாதத்தைத் தொட்டுக்காட்டினார்.

Advertisment

pp

இறுதியாக அரங்கத்தின் கரவொலிக்கு மத்தியில் ஏற்புரை நிகழ்த்திய பொன்னீலன், ""எனது குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். என் அப்பா அறத்தின் திருவுருவம். அதை என்னிடம் கொடுத்திருக்கிறார். அம்மா அழகியநாயகி அறிவின் உச்சம். அவர் அறிவை எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த இரண்டையும் வைத்துக்கொண்டுதான் நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன்.

அமைப்பு, படைப்பு, பணி இந்த மூன்று அம்சங்களையும் நான் தொடர்ந்து செய்துவருகிறேன். இதில் என்னை படைப்பாளியாக உருவாக்கியது கரிசல்காட்டு மண். அந்த மக்கள் அற்புதமான மக்கள். அவர்களுடைய நேசம், அவர்கள் என்னை தேடிவந்து சொல்லும் கதைகள்தான் என்னை இலக்கிய வழிக்கு மாற்றியது.

80 வயதென்பது ஒரு மைல்கல். இன்னும் கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் இன்னும் சாதித்திருக்க முடியும். நேரத்தை சரியான முறையில் செலவிட பழகிக்கொள்வது வளர்ச்சியின் முதல் படிகல். நான் 20 வயதிலிருந்தே அட்டவணை போட்டுதான் நேரத்தைச் செலவு செய்தேன். ஆனால் திட்டமிடுதலை இன்னும் சிறப்பாகச் செய்திருந்திருக்கலாம் என இப்போது உணர்கிறேன்'' என்றார் அடக்கத்துடனும் எழுத்தின் மீதான ஆர்வத்துடனும்.

-மணிகண்டன்