சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகளால் தந்தை மகன் சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை நக்கீரன் துல்லியமாக பதிவிட்ட நிலையில், சாத்தான்குளம் சம்பவம் போல், அதே காவல் அதிகாரிகளால் பேய்க்குளத்திலும் சித்ரவதை மரணம் நிகழ்ந்திருக்கின்றது என்பதையும் முதன்முறையாகப் பதிவுசெய்தது.

case

இதில், தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஜெயக்குமார், 2020, மே மாதம் 18-ந்தேதி இரவில் தனது பெட்டிக்கடையின் அருகில் நின்றபோது, கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது பனைகுளத்தைச் சேர்ந்த ராஜமிக்கேல் குரூப் எனத் தெரியவர ராஜமிக்கேல் குரூப்பை வலை வீசித் தேடியுள்ளது எஸ்.ஐ-க்கள் டீம். இதில் 2020, மே 23 அன்று கொலைக்கு சம்பந்தமில்லாத ராஜமிக்கேலின் கூட்டாளியான தச்சுத்தொழிலாளி துரையைத் தேடி பாப்பாங்குளம் வந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட டீம், துரை இல்லாத காரணத்தினால் அங்கிருந்த துரையின் தம்பி மகேந்திரனை சாத்தான்குளம் ஸ்டேஷனிற்கு இழுத்துச் சென்று இரண்டு நாட்களாக அடித்துத் துவைத்து அனுப்பியிருந்த நிலையில், மகேந்திரன் உடல் நலம் குன்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக் காமல் நினைவு திரும்பாமலே 2020, ஜூன், 13-ம் தேதி இறந்துள்ளார். இதற்கு காரணம் எஸ்.ஐ. ரகுகணேஷே என்று மகேந்திரனின் தாயார் வடிவுவின் பேட்டியினைப் பதிவு செய்திருந்தோம்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2020 ஜூலை 8 அன்று மகேந்திரனின் தாயார் வடிவு வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கினை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கத் தொடங்கியது. முதலில் மகேந்திரனின் தாயார் வடிவு, அவரது சகோதரி சந்தனமாரி மற்றும் உறவினர்களை விசாரிக்கத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி., பின்னர் ஊர்க்காரர்கள், ஜெயக்குமார் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட நபர்களையும் விசாரித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை புதனன்று வர, நீதிபதி முன்பு ஆஜரான சி.பி.சி.ஐ.டி. போலீசார், "மகேந்திரன் வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. விரைவில் வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்'' என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். நீதிபதி அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்கின்றது சி.பி.சி.ஐ.டி. வட்டாரம்.

இதே போலீஸார் தான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகனைச் சித்ரவதை செய்து கொன்ற வழக்கிலும் குற்றவாளிகள் என்பதால், வழக்கு அடுத்த கட்டத்திற்குச் சென்று விஸ்வரூபமெடுத் துள்ளது.

Advertisment