அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, இலங்கையில் ராணுவ ஆட்சியைக் கொண்டுவர ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருக் கிறார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. இதனைத் தடுத்து நிறுத்துவதில் இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறார்கள் இலங்கை அரசியல் தலைவர்கள்.
ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் மைத்ரி, நாடாளுமன்றத்தையும் கலைத்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், மைத்ரியின் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தார் தலைமை நீதிபதி. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை 14-ந்தேதி கூட்டினார் சபாநாயகர் கரு ஜெயசூர்யா.
காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார் ராஜபக்சே. அப்போது, ‘"பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு அந்த நாற்காலியில் உட்கார்'‘ என ரணிலின் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதனை எதிர்த்து ராஜபக்சே தரப்பினர் குரல் கொடுக்க... துவக்கமே அமளிதுமளியாக இருந்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரவும் அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத்தும் கொண்டுவந்த, ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார் ஜெயசூர்யா. வாக்கெடுப் பின் முடிவில், "பெரும்பான்மை பலத்துடன் தீர்மானம் நிறைவேறியுள்ளது' என அறிவித்தார் சபாநாயகர். இதனையடுத்து, ஒரு அறிக்கை வாசித்த அவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து 122 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உறுதிப்படுத்தி யுள்ள ஆவணம் தம்மிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறேன்'‘என தெளிவுபடுத்தி னார். ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
ராஜபக்சேவை பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என மைத்ரிக்கு நெருக்கடி அதிகரித்தாலும், சபாநாயகரின் தீர்ப்பையும் அவர் அனுப்பி வைத்த கடிதத்தையும் மைத்ரியும் ராஜபக்சேவும் ஏற்கவில்லை.
வாக்கெடுப்புக்கு மறுநாள் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்திலும் ராஜபக்சே கலந்து கொண்ட நிலையில், சபாநாயகருக்கு எதிராக குப்பைக்கூடைகளையும் தண்ணீர் பாட்டில்களையும் சபாநாயகரை நோக்கி வீசினர் அவரது கட்சி எம்.பிக்கள். இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
சபையிலிருந்து கோபமாக வெளியேறினார் சபாநாயகர் ஜெயசூர்யா. இதனை அடுத்து, ராஜபக்சேவும் வெளியேற... அவரைப் பார்த்து, "டம்மி பயல்; போலிப் பயல்' என தொடங்கி ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்தனர் ரணில் கட்சி எம்.பி.க்கள். இதனால் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசப்பட, 21-ந் தேதிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது சரிதான் என்பதை நிரூபிக்கவே சபையில் களேபரங்களை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
ராஜபக்சே கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விமலவீரவன்ச, ""நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்குப் பிறகே சபையை கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அதனால், சபாநாயகரின் முடிவை ஏற்க முடியாது''‘என்கிறார்.
இந்த நிலையில், தேசியப் பாதுகாப்பு சபையை அவசரமாகக் கூட்டி விவாதித்திருக்கிறார் மைத்ரிபால சிறிசேன. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் உயரதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். ‘’நாடாளுமன்றம் கூடுவதற்கு முதல் நாளும் (14-ந்தேதி) நாடாளு மன்றம் கூடிய மறுநாளும் இரு முறை ஆலோசனை நடந்தது. முதல்முறை நடந்த ஆலோசனையில், "நாடாளுமன்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்புகளை முழுமையாக உங்களிடம் ஒப்படைக்கிறேன். தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்' என ஒப்புதல் தந்திருக்கிறார் மைத்ரி.
பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலை... ராஜபக்சே முகத்தில் கரிபூசப்பட்ட நிலையில், மீண்டும் ரணில் பிரதமர் ஆகிவிடக்கூடாது என் பதில் உறுதியாக இருக்கிறது ஜனாதிபதி மாளிகை. தனது முடிவுக்கு சாதகமாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையும்பட்சத்தில் அமைதியாக இருப்பது; பாதகமாக அமைந்தால் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கலவரங்களை உருவாக்கி ராணுவ ஆட்சியை அமல்படுத்துவது என்கிற பலே திட்டத் தைப் போட்டு வைத்திருக்கிறார் மைத்ரி'' என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.
இதற்கிடையே, மைத்ரிக்கும் ரணிலுக்கும் இடையே சமாதானப் படலத்தை நடத்தி வருகிறார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இதில், "ரணிலுடன் கைக்குலுக்கத் தயார். ஆனால், அவர் பிரதமராக இருக்கக்கூடாது. அவரது கட்சியிலிருந்து வேறு யார் வேண்டு மானாலும் பிரதமராகட்டும்' என சம்பந்தனிடம் வெள்ளைக்கொடி உயர்த்தியிருக்கிறார் மைத்ரி. இதனால் ராணுவ ஆட்சியா? அல்லது இன்னொரு புதிய பிரதமரா? என்கிற கேள்விகள் இலங்கையில் எதிரொலிக்கின்றன.
-இரா.இளையசெல்வன்