62 காதல் காவியம்
டைரக்டர் பி.மாதவன் அவர்களுக்கு நான் சொன்ன கதை செட்டாகாததால்... அவர் கதைக்காக எனக்கு கொடுத்த 2500 ரூபாய் அட்வான்ஸை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டேன்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு... தம்பி கே.பாக்யராஜ் எனக்காக ஒரு படம் செய்துதர விரும்பியதுடன்... "சிரமத்தில் இருக்கும் பி.மாதவன் சாரை டைரக்டராக போடுங்கள்' எனச் சொன்னதன் பேரில்... மாதவனுக்கு 25000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தேன். படத்திற்கு பூஜை போடப்பட்ட அன்றே... ""மாதவன் எனக்கு ரெண்டு லட்ச ரூபாய் தரவேண்டியிருக்கு'' என ஒருவர் புரோ நோட்டோடு வந்துவிட்டார்.
இதனால் அந்தப் படத்திட்டத்தை பூஜையன்றே கைவிடவேண்டியதாகிவிட்டது. அவருக்கு நான் கொடுத்த அட்வான்ஸையும் திரும்பக் கேட்கவில்லை.
ஒரு வருடத்திற்குப் பிறகு...
சினிமா தொழிலில் அவ்வப்போது சுக்கிரன் வருவான் போவான். கடன்காரன் மட்டும் போகவே மாட்டான்.
என்னை ஒரு கடன் நெருக்கியது. அப்போது... எனக்கு மாதவன் நினைவுக்கு வந்தார்.
"ஒருகாலத்தில் அவர் நமக்குக் கொடுத்த அட்வான்ஸை... ‘படம் எடுக்கவில்லை' என்றதும் உடனே திருப்பிக் கொடுத்துவிட்டோம். அவருக்கு நாம கொடுத்த அட்வான்ஸ் 25 ஆயிரத்தை நினைவில் வைத்திருப்பார். "அவரிடம் கேட்டுப் பார்ப்போம்...' என்று ஆழ்வார்பேட்டையில்... அவரின் வீட்டுக்குச் சென்று சந்தித்தேன்.
சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார். சற்றும் தயங்காமல் என் நிலையைச் சொன்னேன். அவரின் முகத்தில் சோகம் படர்ந்துவிட்டது.
""கலைஞானம்... நான் உங்களிடம் வாங்கிய அட்வான்ஸையும், அதை திருப்பித்தரணும்கிறதையும் மறக்கல. எதையெடுத்தாலும் நஷ்டமாகுது... என்ன செய்றது? "மாதவன் நமக்கொரு படம் செஞ்சுதர மாட்டாரா?'னு யார் யாரெல்லாமோ நினைச்சது ஒருகாலம். நான் இயக்கிய வெற்றிப்படங்கள் மூலம் சம்பாதிச்சவங்கள்லாம்... என்னைப் பார்த்ததுமே... ஆமை தலையை ஓட்டுக்குள்ள இழுத்துக்கிறமாதிரி... வேற பக்கம் தலையை திருப்பிக்கிட்டு போறாங்க.... "சரி... நமக்கு என்ன கொடுப்பினையோ... அதுதான் நடக்கும்'னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிறேன். என்ன... என் வீட்டுல நடந்திருக்க வேண்டிய ஒரு நல்ல காரியம் இன்னும் நடக்காம இருக்கு'' என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.
அப்போது... அவரின் மனைவியும், வயதுவந்த மகளும் வந்ததை கவனித்தேன்.
""ஒருவேளை... மகளின் கல்யாணத்தைப்பற்றிய கவலையா இருக்குமோ...'' என நானும் அவரின் கவலையில் பங்குபெற்றேன்... என்னையறியாமலே...
""சார்... எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையை விடுங்க'' என அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு... என் மகள் ஒருத்தி கல்யாண வயதில் காத்திருக்கும் கவலையில் வீடுவந்து சேர்ந்தேன்.
நானும், பாரதிராஜா அவர்களும் சந்தித்துக்கொள்கிறபோது... நேரம் கிடைத்தால் காதல் கதைகளைப்பற்றி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருப்போம்.
""உலகளவில் "ரோமியோ-ஜூலியட்', "லைலா-மஜ்னு' புகழ்பெற்ற கதைகள்தான். அதையெல்லாம் விட... "தேவதாஸ்',‘"கல்யாணப் பரிசு' ஆங்கிலப்படமான "சன்ஃபிளவர்' ஆகியவை மிகச் சிறந்த படங்கள்'' என சிலாகித்துச் சொல்வார் பாரதிராஜா.
"கல்யாணப் பரிசு' படக் கதையின் க்ளைமாக்ஸ்... உலகில் எந்த எழுத்தாளனுக்கும் எட்டாத கற்பனை. அது ஸ்ரீதர் அவர்களுக்கு எட்டியது.
அக்கா கீதா (விஜயகுமாரி), தங்கை வசந்தி (சரோஜாதேவி) இவர்களது சொந்த வீட்டில் இளைஞன் பாஸ்கர் (ஜெமினி கணேசன்) வாடகைக்கு குடியிருக்கிறான்.
தையல் வேலைசெய்து வசந்தியை படிக்கவைக்கிறாள் கீதா.
வசந்தியும், பாஸ்கரும் காதலிக்கிறார்கள். தங்கள் வீட்டில் குடியிருந்தாலும்கூட பாஸ்கரை கீதா பார்த்ததேயில்லை.
ஒருநாள்... தையல்வேலை செய்துகொண்டிருந்தபோது தற்செயலாக நிமிர்ந்தபோது அவனைப் பார்த்து, அவனின் அழகில் மெய்மறந்துவிடுகிறாள்.
வசந்தியிடம்... ""நம்ம வீட்டில் இவர்தான் குடியிருக்காரா? நான் அவரை இன்னைக்குத்தான் பார்த்தேன்'' என முகமும், அகமும் மலரச் சொன்னாள் கீதா.
வசந்திக்கு வியப்பாக இருந்தது.
""அக்கா... அவரை உனக்குப் பிடிச்சிருக்கா?'' என்று கேட்க... "அடிப் போடி'’ என்று கீதா சொன்னபோது... ஒட்டுமொத்த நாணத்தின் அறிகுறி அக்காவின் முகத்தில் வெளிப்பட்டதைப் பார்த்தாள்.
தனிமையில் யோசித்தாள் வசந்தி...
""இதுவரை நம் வாழ்வுக்காகவே இரவு-பகலாய் குனிந்த தலை நிமிராமல் தையல் வேலைசெய்து... அந்த வருமானத்தில் நம்மை படிக்க வைத்தாள். ஒருநாள்கூட தனக்கென்று அக்கா ஆசைப்பட்டதில்லை... கேட்டதுமில்லை. அவள் வாழ்வில் இன்றுதான் ஒரு புதிய ஆசையும், உணர்ச்சியும் ஏற்பட்டிருக்கு. அக்காவின் ஆசையை நிறைவேற்றுவதுதான் நம் கடமை...'' என முடிவெடுத்தாள்.
தன் காதலன் பாஸ்கரைச் சந்தித்து... தனது எண்ணத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினாள் வசந்தி. பாஸ்கர் மறுத்தான்.
""நீங்க என் அக்காவை கல்யாணம் செய்துக்கிறதுதான் நல்லது. அவ ஆசைப்பட்ட உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியுமா? அது ஒரு துரோகச் செயல்தானே?'' எனக் கேட்டாள்.
""நீ என்ன சொன்னாலும் உன் அக்காவை கல்யாணம் செய்துக்க மாட்டேன்'' என்றான் பாஸ்கர்.
அவனைச் சம்மதிக்கவைப்பதுதான் கதையின் ட்விஸ்ட். இதற்கு சாதாரணமான வசனத்தைத்தான் வைத்தார் ஸ்ரீதர். ஆனால்... கதைக்கு அதுதான் வலுவாக அமைந்தது. அந்த டயலாக்கிற்காக கிட்டத்தட்ட ஒருவாரம் போராடியிருக்கிறார் ஸ்ரீதர்.
கதையில் திருப்பத்தை உண்டாக்கும் அந்த வசனம் என்னவென்று பார்க்கலாமா?
""நீ என்ன சொன்னாலும் உன் அக்காவை கல்யாணம் செய்துக்க மாட்டேன்'' என்றான் பாஸ்கர்.
""அப்படியானால் நானும் உங்களை கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். அதுக்கப்புறம் நீங்க வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்கத்தான் போறீங்க. அந்த யாரோ ஒருத்தி... ஏன் என் அக்காவா இருக்கக்கூடாது?'' என வசந்தி கேட்டாள்.
இதற்கு பதில்சொல்ல முடியாத பாஸ்கர் வசந்தியின் கைகளைப்பற்றி... சம்மதம் தெரிவித்தான்.
ஒரு சாதாரண கேள்வியை... அசாதாரணமாக்கியது ஸ்ரீதரின் படைப்பு உத்தி.
பாஸ்கருக்கும், கீதாவுக்கும் திருமணம் நடந்தது. வெளியூர் புறப்பட்ட புதுமண தம்பதியை... ரயில் நிலையத்தில் வழியனுப்பிவைத்தாள் வசந்தி.
"காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி....
கலங்கி நின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி...' என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாட்டு... ஏ.எம்.ராஜாவின் இசையிலும், குரலிலும் மனதை உருக்கியது.
கீதா ஒரு குழந்தையை பிரசவித்துவிட்டு இறந்துபோனாள். பாஸ்கர் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு படாதபாடுபடுகிறான்.
வசந்திக்கு திருமணம். பாஸ்கருக்கு தகவல் வந்தது.
குழந்தையை தூக்கிக்கொண்டு கல்யாணம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற பாஸ்கர்... தூரத்தில் இருந்தபடியே ஒரு கடிதம் எழுதி... அதை தன் குழந்தையின் கையில் கொடுத்து... குழந்தையிடம் மணப்பெண் வசந்தியைக் காட்டி... ""அவங்க கைல இதைக் கொடு'' என்றான்.
குழந்தை தத்தித்தத்தி வந்து வசந்தியின் கையில் கடிதத்தை கொடுத்தது.
அதை பிரித்துப் பார்த்தாள்.
"கல்யாணப் பரிசு' என எழுதப்பட்டிருந்தது.
வசந்தியின் கல்யாணத்திற்குப் பரிசு... அந்தக் குழந்தை.
வசந்தி நிமிர்ந்து பார்த்தாள்.
பாஸ்கர் போய்க்கொண்டேயிருந்தான்.
இப்படி ஒரு கதை முடிவை... நான் எந்தக் கதையிலும் பார்த்ததே இல்லை. பாரதிராஜாவிடம் "கல்யாணப் பரிசு' கதையின் சிறப்பை நான் மேலும் நுணுக்கமாகப் பேசப்பேச...
""இனியும் இப்படி ஒரு படம் ஸ்ரீதரைத் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது... காதல் கதைகளின் காவியம் "கல்யாணப் பரிசு' படம்'' என பாராட்டினார்.
"தேவதாஸ்' கதையைக் கொஞ்சம் பார்ப்போம்.