டி.ஆர்.ராமண்ணாவின் அழைப்பின்பேரில் அவரைச் சந்தித்து ஒரு கிராமத்து கதையையும், ஒரு பக்தி கதையையும் சொன்னேன்.
இடையில் டீ பிரேக்கின்போது.... “""சார் நான் சிறுவயதிலிருந்தே டி.ஆர்.ராஜகுமாரியம்மாவின் தீவிர ரசிகன்''’என்றேன்.
ஒரு குறுபுன்னகையை வெளியிட்டார் ராமண்ணா.
""சார்... நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்கிறேன்... நீங்க தவறா எண்ணக்கூடாது. கொஞ்சகாலத்திற்கு முன்பு ராஜகுமாரியம்மா அவர்களைப் பற்றி ஒரு பேச்சு அடிபட்டது. அவர்கள் ஒருவரை காதலித்ததாகவும், அதை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததாகவும், ‘"என் விருப்பத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் வாழ்நாள் பூராவும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை'’என்று ராஜகுமாரியம்மா சொன்னதாகவும், அதனால்தான் கடைசிவரை அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையாமே...''’எனக் கேட்டேன்.
ராமண்ணாவிடமிருந்து சிறு புன்னகை மட்டுமே எனக்குப் பதிலாகக் கிடைத்தது.
சிலநிமிட நேரம் மௌனம் நீடித்தது.
"நாம ஏன் இதைக் கேட்டோம்?'’என நான்தான் சங்கடப்பட்டேன்.
""கதையைத் தொடர்ந்து சொல்லுங்க''’என்றார்.
கதையைச் சொல்லி முடித்தேன்.
ராமண்ணாவுக்கு நான் சொன்ன முருகப்பெருமான் பற்றிய பக்திக் கதை பிடித்துப்போனது. இருந்தாலும்.... ""ஒருவாரம் பொறுங்கள், எந்தக் கதையை எடுக்கலாம் என்று நான் முடிவுசெய்துவிட்டுச் சொல்கிறேன்''’என்றார் ராமண்ணா.
நான் அவரிடம் விடைபெற்றுத் திரும்பினேன்.
நான் சொன்ன பக்திக் கதையை ராமண்ணா தேர்வு செய்தபோதும்... படத்தின் இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் சினிமாவில் ராமண்ணாவின் மகன் கணேஷ் ராமண்ணா அறிமுகமாகவிருந்ததால்... கணேஷ் வேறொரு கதாசிரியரின் சமூகக் கதையைத் தேர்வுசெய்தார்.
"கிழக்கு மலை'’என்ற பெயரில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. ராமண்ணா தயாரித்தார். படம் வெளியானது. ஆனால் சரியாகப் போகவில்லை. பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
"தன் ஒரே மகனுக்கு சினிமாவில் தொடக்கம் சரியாக அமையவில்லையே'’என்கிற கவலை ராமண்ணாவை வாட்டியது. "கிழக்கு மலை'’படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக ராமண்ணாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது.
கோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் டைரக்டராகவும், தயாரிப்பாளராகவும் புகழ்க்கொடி நாட்டிய ராமண்ணா அவர்களை ஒருநாள் காலதேவன் அழைத்துக்கொண்டான்.
ராமண்ணாவின் திரைப்படங்களில், தயாரிப்பு நிறுவனங்களில் பல பிரபலங்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்களில் நான்குபேர்கள் பின்னாளில் முதலைச்சர்களாக ஆட்சி புரிந்தார்கள். அவர்கள்... கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா.
அப்படி ஒரு பெருமை ராமண்ணா அவர்களுக்கு உண்டு.
ராமண்ணாவின் மனைவி பி.எஸ்.சரோஜாவையும், ராமண்ணாவின் மகன் கணேஷையும் சந்திக்க அவர்களின் அனுமதியுடன்... கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன் ராமண்ணாவின் இல்லத்திற்குச் சென்றேன்.
சரோஜா அவர்களுக்கு 93 வயதாகிவிட்டது. ஆனாலும் அன்றுகண்ட அதே முகமாக... லட்சுமி களையோடு இருந்தார். புன்னகை பொங்க கணீரெனப் பேசினார். என்னை அன்போடு வரவேற்று ஆசிர்வாதம் செய்தார். (இப்படிப்பட்ட பெருந்தகைகளின் ஆசிர்வாதம்தானே எனக்கு நல்ல ஆரோக்கியம் தந்துகொண்டிருக்கிறது).
டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் குறித்தும், நான் ராமண்ணாவிடம் கதை சொன்ன அனுபவங்களையும் நினைவுகூர்ந்தோம்.
ராமண்ணாவின் மகன் கணேஷ், தன் அப்பா விட்டுச்சென்ற பேரையும், புகழையும் நிலைநிறுத்த பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
எல்லா வசதிகளையும் கொண்ட ‘"டிஜி ட்ராக்'’என்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோவை வீட்டிலேயே அமைத்திருக்கும் கணேஷ், ஸ்டுடியோவின் சிறப்புகளைச் சொன்னதோடு, தான் அங்கு பதிவுசெய்த பாடல்களையும் போட்டுக் காட்டினார். "மிகக்குறைந்த கட்டணத்தில் புதிய தொழில்நுட்ப வசதியை தனது ஸ்டுடியோவில் பெற்றுக்கொள்ள முடியும்' என்றும் தெரிவித்தார்.
"காதல் செய்ய விரும்பு', "நினைக்காத நேரமில்லை', "நெல்லை சீமையிலே'’படங்களுக்கு இசையமைத்துள்ளதாக தெரிவித்த கணேஷ்... ""சார்... இப்போ நான் "ஐ ஆம் ஸாரி கல்கத்தா'’என்கிற ஆங்கிலப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் படம் இயக்க ஒரு ஸ்கிரிப்ட்டும் எழுதி வைத்துள்ளேன்''’என்றார்.
""கலைஞானம் சார்... என் மகன் கணேஷை ஆசிர்வதிங்க''’என்றார் பி.எஸ்.சரோஜா அவர்கள். மனப்பூர்வமாக கணேஷை வாழ்த்தி விடைபெற்றேன்.
டி.ஆர்.ராமண்ணாவின் மூன்று மனைவியரின் குடும்பத்தினர்களும் நலமும், வளமும் பெற்று தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.
நடிகை குசலகுமாரியின் தற்காலிக கார் டிரைவராக வேலை செய்துவந்த என் நண்பன் ராதாகிருஷ்ணனுக்கு, குசலகுமாரியைக் காதலித்து அவரின் சிபாரிசில் சினிமாவில் நடித்து பெரிய நடிகனாகிவிட வேண்டும் என திட்டம் இருந்ததையும், குசலகுமாரியின் உறவினர் ஒருவர் போலீஸில் புகார் சொன்னதால் பயந்துபோய் அவன் கல்கத்தாவுக்கு போய்விட்டதையும் ... ‘"ஃபோர் டிரைவர்ஸ் லவ் மீ' கதையில் சொல்லியிருந்தேன்.
குசலகுமாரியின் ஸ்டார் வேல்யூதான் என்ன?
டி.ஆர்.ராஜகுமாரி, டி.ஆர்.ராமண்ணா ஆகியோரின் பெரியம்மாவின் மகள்தான் குசலகுமாரி. நடிகைகள் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி ஆகிய இருவரும் குசலகுமாரியின் தாயாருடைய மாமாவின் மகள்கள். இப்படி குசலகுமாரியின் சொந்தங்கள் என்கிற பெரும் கலை வரிசை நீண்டுகொண்டே போகும்.
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரிப்பில் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த ‘"ஔவையார்'’ படத்தில் வயதான ஔவைப் பாட்டியாக கே.பி.சுந்தராம்பாள் அம்மா அவர்கள் நடித்திருப்பார்கள்.
கதைப்படி... அழகிய இளமங்கையான ஔவைக்கு திருமணம் செய்ய பெற்றோர் விரும்புவார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் வந்த நேரம்...
ஆன்மிக ஈடுபாடுகொண்ட ஔவைக்கு இல்லற வாழ்வில் நாட்டமில்லாததால்... தான் எப்போதும் வணங்கும் விநாயகர் முன் முறையிடுவாள் ஔவை. உடனே விநாயகர் அழகிய இளம் ஔவையை வயது முதிர்ந்த ஔவைப் பாட்டியாக மாற்றிவிடுவார்.
ஔவைப் பாட்டியாக கே.பி.எஸ்.அம்மாள் காட்டப்படுவதற்கு முன்.. பேரழகு மிளிரும் குமாரி ஔவையாக நடித்திருப்பார் குசலகுமாரி.
"போன மச்சான் திரும்பி வந்தான்', "கூண்டுக்கிளி', "நீதிபதி', "மாங்கல்ய பாக்கியம்'’உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் குசலகுமாரி. "கொஞ்சும் சலங்கை'’ படத்தில் குமாரி கமலாவும், குசலகுமாரியும் ஆடிய டான்ஸ் மறக்க முடியாதது.
படங்களில் நடிப்பதைவிட டான்ஸ் ஆடுவதையே பெரிதும் விரும்பினார் குசலகுமாரி.
ஆட்டத்தை விரும்பிய அவரின் வாழ்வில் விதி ஆடிப் பார்த்தது....
படம்: எஸ்.பி.சுந்தர்
___________
நட்பின் சிகரம்!
மதிப்பிற்குரிய அண்ணன் கலைஞானம் அவர்களுக்கு...
""நக்கீரன்’ பத்திரிகையில் நீங்கள் எழுதிவரும் "கேரக்டர்'’தொடரில் எங்களின் (டைரக்டர் டி.என்.பாலு-ஆசிரியை பிரேமா) காதல் கல்யாணம் பற்றி எழுதியதைப் படித்தேன். உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். நீங்கள் நண்பர்கள் மீதும், நட்பின் மீதும் வைத்திருக்கும் அளவில்லா அன்பை உணர்ந்தேன். எத்தனை வருடங்கள் போனாலும் அன்பு என்பது மாறாதது. இது உண்மை.
கண்களிலே கண்ணீர் வந்தபிறகு அதை துடைப்பதற்கு வருபவர்கள்தான் சொந்தபந்தங்கள்... அதுவும் போலி சிந்தனையோடும் -கரிசனத்தோடும் -கேலியுடனும்.
ஆனால்... அதேகண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்பவர்கள் உண்மையான நண்பர்கள். இவர்கள்தான் நட்பின் சிகரங்கள். இப்படி ஒரு சிகரமாக கலைஞானம் அண்ணன் அவர்களே... உங்களைப் பார்க்கிறேன்.''
மதிப்பிற்குரிய நக்கீரன்கோபால் அவர்களுக்கு...
""இப்போது பிரபலமாக இருக்கும் பெரிய ஜாம்பவான்கள் பற்றியே உயர்த்தி எழுதுபவர்களுக்கு மத்தியில்.. என் கணவரைப் பற்றி கலைஞானம் அவர்கள் எழுதியதை நக்கீரன் பத்திரிகையில் வெளியிட்ட உங்களுக்கு நன்றி... நன்றி...''
-பிரேமா