மீண்டும் வருவேன்!

னது ஒன்றுவிட்ட சகோதரரும், பிரபல சினிமா பாடலாசிரியருமான கவி கே.பி. காமாட்சி சுந்தரம் அவர்களின் தி.நகர். வீட்டில் தங்கியிருந்து நான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பைத் தேடிவந்தபோது, பின்வீட்டில் இருந்த ஒரு அழகான பெண் மீது காதல் வயப்பட்டு அவளிடம் காதலைச் சொல்ல... பின்தொடர்ந்து பஸ்ஸில் சென்றேன். அவள் கஷ்டத்திற்காக பாலியல் தொழில் செய்வதை அறிந்து ஏமாற்றத்துடனும், அதிர்ச்சியுடனும் திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே வீடு வந்தேன். அண்ணனின் மனைவி பாமா அவர்கள்... அரிசி வாங்க, காசிற்காக என்னை எதிர்பார்த்திருந்தார்.

""என்னாச்சு... ஏதோ சினிமா கம்பெனிக்கு ’சான்ஸ் கிடைச்சிருக்கதா சொல்லிப் போனீங்களே... என்னாச்சு?''

""ஏமாற்றந்தான் கிடைச்சது...''

Advertisment

""இது நீங்க அடிக்கடி சொல்ற வசனம் தானே. அதுகிடக்கட்டும்... பத்து நாளைக்கி முன்னாடி சிவாஜி-பானுமதி நடிக்கிற படத்துல வேஷம் கிடைச்சிருக்கதா போனீங்களே... அதுக்கு சம்பளம் குடுத்திருப்பாங்களே'' எனக் கேட்டார்.

நடிகர்திலகம் சிவாஜியை, நான் டென்ஷ னாக்கியது முதல் அவர் என்மீது கோபப்பட்டது வரை அங்கு நடந்ததை விலாவாரியாகச் சொல்லத் தொடங்கினேன்...

அழகேசன் என்ற துணை நடிகர்களுக் கான ஏஜெண்ட், என்னை "தெனாலிராமன்'’ படத்தில் துணை நடிகராக நடிக்க அழைத்துச் சென்றார். அந்தப் படத்தை தயாரித்த கம்பெனி யில் இருந்த அச்சுதன் என்கிற துணை நடிகர் களுக்கான ஏஜெண்ட்டிடம் என்னை ஒப்ப டைத்தார். பத்து துணை நடிகர்களில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

Advertisment

கதைப்படி... ஒரு போட்டி நிகழ்ச்சி.

நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மிருதங் கம் வாசிக்க... ஒரு பெண் தலமையில் நடனப்பெண் கள் குழுவாக நடனம் ஆட... பக்கவாத்தியங்களாக பத்துபேர்கள். அதில் நான் புல்லாங்குழல் வாசிப்பவன். ’"ஆடும் கலையெல்லாம்'’ என்கிற பாடல் காட்சி அது.

உதவி இயக்குநர் பாலு என்பவர்... நான் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

""வாயில் புல்லாங்குழலை வைத்து வாசிப்பதுபோல்... அதே சமயம் அசையாமல் இருக்கணும். சிவாஜி சார் மிருதங்கம் அடிப் பதுபோல் நடிக்கிறபோது.... எந்தக் காரணம் கொண்டும் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்துவிடக்கூடாது. சிவாஜி சாருக்கு பின்னாடி நீங்கதான் இருக்கீங்க. சிவாஜி சாரை கேமரா ஃபோகஸ் செய்யும் போது... நீங்க புல்லாங்குழலை எடுத்திட்டாலோ, உடம்பை அசைச்சாலோ நல்லா இருக்காது... கவனமா செய்'' எனச் சொல்லிக் கொடுத்தார்.

சிவாஜி வந்து உட்கார்ந் தார். கேமரா ஓடத் தொடங் கியது. மிருதங்கம் வாசிக்க ஆரம் பித்தார். நடனம் ஆரம்பமானது. நான் புல்லாங்குழல் வாசித்தபடி... சிலைபோல உட்கார்ந்திருந்தேன். இந்தக் காட்சி... மூன்று நாட்கள் எடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக புல்லாங்குழலை வாயில் வைத்து வாசிப்பதுபோல நடித்ததால், எனக்கு உதடு கடுக்க ஆரம்பித்தது. கைகளிலும் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் என்னையுமறியாமல் காட்சி படமாகிக்கொண்டிருக்கும்போதே... வாயிலிருந்து புல்லாங்குழலை எடுத்துவிட்டேன். இதுபோல இரண்டுமுறை செய்துவிட்டேன்.

""கட்'' என்றார் டைரக்டர் பி.எஸ். ரெங்கா.

""எங்கடா பாலு...?'' என கத்தினார். பாலு ஓடிவந்தார்.

""இடியட்... சிவாஜிக்குப் பின்னால உட்கார்ந்திருக்கவன், புல்லாங்குழலை எடுத்திட்டான். இது ரெண்டாவது முறை. பழக்க மில்லாதவனை துணை நடிகனா ஏன் செலக்ட் பண்ணினீங்க? கம்பெனிச் சோறு திங்கிறதுக்காக வர்றவனை யெல்லாம் நடிக்கவைக்கலாமா?'' என கடுப்பாக பேசிவிட்டார் டைரக்டர்.

என் கண்களின் கண்ணீரை அடக்க முடியவில்லை. சிறிதுநேரம் படப்பிடிப்பு தடைப்பட்டது.

kk

சிவாஜி எழுந்து நின்று, சற்று கோபத்துடன் என்னைப் பார்த்து... ""ஐயா, புல்லாங்குழலே... சொல்றதை நல்லா புரிஞ்சிக்கிட்டு நடிங்க...'' என்றார்.

(பின்னாளில் சிவாஜி அவர்களின் படங் களுக்கு கதை எழுதுவேன் என்றோ... "மிருதங்க சக்கரவர்த்தி', "ராஜரிஷி'’என இரண்டு படங்களை நடிகர் திலகத்தை வைத்து தயாரிப்பேன் என்றோ... நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இறைவன் மட்டுமே அறிந்திருந்தார்..)

மீண்டும் கேமரா ஓடத்தொடங் கியதும்... அவர்கள் சொல்லித் தந்தபடி நடித்தேன்.

மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டதற்கு... நாளுக்கு இரண்டு ரூபாய் வீதம் ஆறு ரூபாய் சம்பளமாகக் கொடுத்தது கம்பெனி.

என்னைத் தேர்வு செய்த கம்பெனியின் ஏஜெண்ட் அச்சுதன், இரண்டு ரூபாயை எடுத்துக்கொண் டார். என்னை அச்சுதனிடம் கொண்டு விட்ட ஏஜெண்ட் அழகேசன் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டார்.

எனக்குக் கிடைத்த இரண்டு ரூபாயை பஸ்ஸுக்கு போகவர... மளிகைக்கடை ஊழியரிடம் வாங்கிய கடனுக்கு கொடுத்துவிட்டேன்.

இதை நான் பாமா அவர்களிடம் தெரிவித்ததும்...

""நீங்க கொஞ்சமாவது நம்ம வீட்டு நிலமையை உணர்ந்ததா தெரி யல. ஒரு ரூபாய கடனுக்குக் கொடுத் திட்டு, மீதம் ஒரு ரூபாய்ல அரிசி வாங்கிக் கொடுத்திருந்தா... எல்லாருக் கும் சமைச்சுப் போடுவேனில்ல. சொன்னதப் புரிஞ்சுக்காம நடந்த உங்க ளை டைரக்டர் திட்டினதும் சரியாத் தான் இருக்கு. இன்னைக்கி இன்னும் அடுப்பு பத்த வைக்கல. நீங்க கடன் வாங்குற மளிகைக் கடையிலயே... கடனுக்கு அரிசி, பருப்பு வாங்கிட்டு வந்து குடுங்க'' என்று சொன்னார்.

எனக்கோ காலையிலிருந்து சாப்பிடாததால் வயிற்றை வாயு நிரப்பிக் கிள்ளியது.

நான் மளிகைக் கடைக்கும் போனேன். மதியவேளை என்பதால் பூட்டியிருந்தது. சாயங்காலம்தான் கடை திறப்பார்கள்.

கடை வாசலிலேயே உட்கார்ந்து... கஷ்டத்தில் வந்த காதலை நினைத்துப் பார்த்தேன்.

"சோத்துக்கு வழியில்லாத நமக்கு காதல் எதுக்கு? இதெல்லாம் வயசுக் கோளாறு'’என பலவாறு சிந்தித்ததில் நேரம் ஓடிப்போனது. பசியும் கூடிப்போனது.

dd

மளிகைக் கடை திறக்கப்பட்டது.

நான் அரிசி பருப்பு கடனாக கேட்க தயங்கியபடி நிற்க... என்னைப் பார்த்ததுமே, "என்ன கடனா? நான் முதலாளிக்குத் தெரி யாமத்தான் கொடுக் குறேன். என்னை மாட்டிவிட்டுடா தீங்க'“ என்றார் கடை ஊழியர்.

அவரை ரொம் பவும் தொல்லைப் படுத்த வேண்டா மென்று... அரிசி மட் டும் கடன் கேட்டேன். கொடுத்தார். வீட்டுக்குச் சென்று கொடுத்தேன்.

சாதம் பொங்கியது...

கஷ்டங்களை ஏதோவொரு சாமர்த்தியத் தோடு தாண்டித், தாண்டி வந்ததில்... வாழ்க்கை படுத்தியபாட்டை மன தைரியத்துடன் எதிர்கொண்டதில் "காதல் படுத்தும்பாடு'’ திரைப்படத்தின் கதாசிரியராக என் கலைப்பயணம் தொடங்கி... வெற்றி பொங்கத் தொடங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி, இந்த ஆண்டு டிசம்பர் வரை சுமார் ஒண்ணே கால் வருடங்களாக நான் எழுதிவந்த "கேரக் டர்'’தொடரை தொடர்ந்து வாசித்து... ரசித்து... விமர்சித்து... ஆதரவு காட்டி வந்த ‘"நக்கீரன்'’ வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஏற்கனவே "சினிமா சீக்ரெட்'’தொடரை எழுதியபோது எனக்கு ஆதரவளித்த "நக்கீரன்' வாசகர்கள், "கேரக்டர்'’தொடருக்கும் அதே ஆதரவைத் தந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.

"கேரக்டர்' தொடரை எழுத வாய்ப் பளித்த நக்கீரன் ஆசிரியர் அன்புத் தம்பி நக்கீரன்கோபால் அவர்களுக்கும், சிறந்த முறையில் தொகுத்தெழுதிய முதன்மை துணையாசிரியர் இரா.த.சக்திவேல் அவர் களுக்கும், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஈர்ப்பான தலைப்பைச் சூடிய பொறுப்பாசிரியர் கோவி.லெனின் அவர்களுக்கும், தலைமை புகைப்படக் கலைஞர் எஸ்.பி.சுந்தர் அவர்களுக் கும், அழகுற வடிவமைப்பு செய்த முதன்மை வடிவமைப்பாளர் குரு அவர்களுக்கும், தலைமை வடிவமைப் பாளர் துரை.கணே சன் அவர்களுக்கும், துணை வடிவமைப் பாளர்கள் எம்.தாணு மற்றும் ச.ராஜேந் திரன் அவர்களுக்கும், பொருத்தமான புகைப்படங்களை கொடுத்து உதவிய போட்டோ ஞானம் அவர்களுக்கும், எனது உதவியாளர் சுரேஷ் அவர்களுக் கும்... மேலும் ‘கேரக் டர்’ தொடர் சிறப்பாக அமைந்திட உதவிய அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி!

அளவிடமுடியாத ரகசியங்களையும், அனுபவங்களையும் கொண்டிருப்பதால்தான் சினிமாத் துறையை "சினிமா உலகம்' என்கிறார் கள். அந்த உலகில் இன்னும் சொல்லப்படாத, என் அனுபவத்திற்குட்பட்ட... பல கதைகள் இருக்கின்றன.

அந்தக் கதைகளோடு... நானும், அதைப் படிக்கும் ஆர்வத்துடன் நீங்களும்... பின்னொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்!

நன்றி!

அன்புடன்

கலைஞானம்