(56) கருணை உள்ளம் கொண்ட கர்னல்!

சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்தது.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில்... சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தார் அந்த இளைஞன்.

சில சினிமா கம்பெனிகளைப் பார்த்துவிட்டு திரும்புகையில்... ஓரிடத்தில் பெரிய கூட்டம். அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க... ""மிலிட்ரிக்கி ஆள் எடுக்குறாங்க. நீதான் வாட்டசாட்டமா... ஜம்முனு இருக்கியே... வாய்யா...'' என ஒருவர் உள்ளே இழுத்துக்கொண்டு போனார்.

Advertisment

""உன் பேரென்ன?''

ba

""பாலசுப்பிரமணியன்''

Advertisment

""அப்பா பேரு?''

""அய்யாச்சாமி தேவர்''

""எந்த ஊரு?''

""மன்னார்குடி தாலுகா கண்டிதம்பேட்டை கிராமம்''

""நீ செலக்ட் ஆயிட்ட...''

அந்தப் பையனால் நம்ப முடியவில்லை... ஆச்சரியத்தில்.

""நாட்டு மக்களுக்கு பொழுதுபோக்குற துறையான சினிமாவுல சேர வந்தோம். இப்ப... நாட்டைக் காக்கிற ராணுவத்துறையில வேலை கிடைச்சிருச்சு. நினைச்ச வேலை கிடைக்கலேன்னா... என்ன? கிடைச்ச வேலையை விரும்பிச் செய்யலாம்'' என முடிவெடுத்து... சந்தோஷமாக கிளம்பினார் பாலசுப்பிரமணியன்.

ராணுவத்தில் அதிகாரிகளுடனும், சக வீரர்களுடனும் மதிப்போடும், நட்போடும் பழகினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றார். இதனால்... சக வீரர்கள் தங்களுக்கு பணியிடத்தில் இருக்கும் அசௌகர்யங்களை பாலசுப்பிரமணியனிடம் சொன்னார்கள். அதை உயரதிகாரிகளிடம் வேண்டுகோளாக வைத்தார்.

இந்த விவேகமான அணுகுமுறை அதிகாரிகளுக்குப் பிடித்துப்போனது.

உடனடியாக வீரர்களின் குறைகளை நிறைவேற்ற ஆவன செய்தார்கள் அதிகாரிகள்.

ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே... படிக்கவும் செய்தார். பல பட்டங்களைப் பெற்றார்.

ராணுவத்திலும் கடைநிலை வீரனாகத் தொடங்கி... படிப்படியாக பதவி உயர்வு பெற்று... கர்னல் ஆனார்.

ஒருநாள்... ராணுவத்திலிருந்து பணி ஓய்வுபெற்றார்.

பெரும்பாலும் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் கிடைக்கிற பென்ஷன் தொகையை வைத்துக்கொண்டு... திருப்தியாக வாழ்வார்கள். சிலர்... பெரிய நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் சேர்வார்கள். இன்னும் சிலர் சூழலுக்கேற்ப முடிவெடுப்பார்கள். சிலர் தங்களால் இயன்ற சமூகப்பணியை ஆற்றுவார்கள்.

ஆனால்... பாலசுப்பிரமணியனின் லட்சியம் வேறாக இருந்தது.

அந்த லட்சியம்...?

ஒவ்வொரு இனத்துக்காரர்களும் தங்களுக்கென்று ஒரு கல்லூரியை நிறுவி... தங்கள் இனத்துப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். பொதுவாக கல்வி நிறுவனங்களில்... ராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு சில சீட்டுகளையே ஒதுக்கீடு செய்வார்கள்.

"ராணுவத்தினரின் குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பதற்கென்றே ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்க வேண்டும்' என்பதுதான் பாலசுப்பிரமணியனின் உயர்ந்த லட்சியமாக இருந்தது.

பெரிய, பெரிய ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ‘தனது கல்வி நிறுவன’லட்சியத்தைச் சொன்னார்.

எல்லோருமே ஒரே மாதிரியாக மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். அதேபோல... எல்லோருமே "இது சாத்தியப்படாது பாலா' என்றார்கள்.

ஆனால்... ஆக்கப்பூர்வமான விடாமுயற்சி... வெற்றியை பரிசளித்தே தீருமே.

ஆமாம்... பெரும் வெற்றியை பாலசுப்பிரமணியத்துக்கு தந்தது... அவரின் விடா முயற்சி.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில்... ராணுவ வீரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கென்றே... இந்தியாவிலேயே முதன்முதலாக கல்லூரி ஒன்றை நிறுவினார்.

இன்று...

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மாடர்ன் மேனேஜ்மெண்ட்

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெலிகாம் அண்ட் மேனேஜ்மெண்ட்

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் பிசினஸ்

பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெச்.ஆர்.டி.

பாலாஜி லா காலேஜ்

dd

பாலாஜி காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ், காமர்ஸ் அண்ட் சயின்ஸ்

பாலாஜி ஜூனியர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ், காமர்ஸ் அண்ட் சயின்ஸ்

என பாலசுப்பிரமணியனின் கல்வி நிறுவனம் மிகப்பெரும் கல்வி விருட்சமாக வளர்ந்திருக்கிறது.

இந்தக் கல்வி நிறுவனங்களின் பிரஸிடெண்ட், எக்ஸ்க்யூடிவ் டைரக்டர், டீன் என பல பொறுப்புகளை ஏற்று... ஓய்வறியா தன் உழைப்பால்... கல்வியாளராகவும் உயர்ந்திருக்கிறார் டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் அவர்கள்.

கல்வி மற்றும் சமுதாயச் சேவைகளைச் செய்துவரும் பாலசுப்பிரமணியனின் நல்ல மனதிற்கேற்ப... அன்பான மனைவி, இரண்டு மகன்கள் நல்ல குடும்பமும் அமைந்திருக்கிறது.

எல்லாவகைச் செல்வமும் இருந்தபோதும்... "சினிமாவுல நடிக்கணும்னு வந்தோமே... அது நடக்கலையே...' என்கிற ஆதங்கம் அவருக்குள் இருக்கத்தான் செய்கிறது.

நக்கீரன் இதழில் முன்பு நான் எழுதிவந்த "சினிமா சீக்ரெட்' தொடரை தவறாது படித்திருக்கிறார் பாலசுப்பிரமணியன். இப்போது நான் எழுதிவரும் "கேரக்டர்' தொடரையும் படித்துவருகிறார்.

இந்த தொடர்களை படித்ததன் மூலம்... படிப்பதன் மூலம்... எனது செயல்பாடுகளை ஊன்றிக் கவனித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து... பின் நடன உதவியாளராக பணியாற்றிவந்த வாலிபன் கமல்ஹாசனை நான் கதை எழுதிய "குறத்தி மகன்'’படம் மூலம் மறு அறிமுகம் செய்தது, ரஜினியை "பைரவி'’படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தது, "பைரவி'’படத்தில் நடிகை கீதாவை அறிமுகம் செய்தது, "குறத்தி மகன்'’படத்தில் ஜெயசித்ரா அறிமுகமானது, எனது முதல் சினிமாகதைப் படமான "காதல் படுத்தும்பாடு'’படத்தில் கதாநாயகியாக வாணிஸ்ரீயையும், நகைச்சுவை நடிகர்களாக சுருளிராஜனையும், எஸ்.எஸ்.சந்திரனையும் அறிமுகம் செய்தது, "புதிய தோரணங்கள்'’படம் மூலம் கதாநாயகியாக மாதவியை அறிமுகம் செய்தது, "நெல்லிக்கனி'’படம் மூலம் சொப்னா கதாநாயகியானது, "தாய்வீட்டு சீதனம்'’படம் மூலம் ‘"ராஜபார்ட்'’உடையப்பா அறிமுகமானது, "பைரவி'’படம் மூலம் எம்.பாஸ்கரை இயக்குநராக்கியது, நான் எழுதிய "வெகுளிப்பெண்' படம் மூலம் நடிகை தேவிகாவின் கணவன் தேவதாஸ் இயக்குநரானது... கவிஞர்கள் சிதம்பரநாதன் ("பைரவி'), அருப்புக்கோட்டை தவசுமணி ("இளஞ்ஜோடிகள்') இருவரையும் பாடலாசிரியராக அறிமுகம் செய்தது, சந்திரபோஸையும் (ஆறுபுஷ்பங்கள்), சீர்காழி சிவசிதம்பரத்தையும் ("மிருதங்க சக்கரவர்த்தி') பாடகர்களாக அறிமுகம் செய்தது... பல பெரிய இயக்குநர்களுக்கு கதையில் பங்களிப்பு செய்தது... இப்படி எனது கதைகளிலும், எனது தயாரிப்பிலும் பல நட்சத்திரங்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகம் செய்திருப்பதை அறிந்த பாலசுப்பிரமணியன்... "கலைஞானம் அறிமுகப்படுத்தியவர்களில் பலரும் கோடீஸ்வரர்களாக இருக்கும்போது... கலைஞானம் மட்டும் வாடகை வீட்டில் வசிக்கிறாரே...'’என எண்ணியிருக்கிறார்.

வேலை நிமித்தமாக புனேயிலிருந்து சென்னை வந்த பாலசுப்பிரமணியன், உடனடியாக தம்பி நக்கீரன் கோபால் அவர்களைத் தொடர்புகொண்டு... "கலைஞானம் அவர்களை நான் சந்திக்கணும்' எனக் கேட்டிருக்கிறார். உடனே என்னை அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகம் செய்துவைத்தார் நக்கீரன்கோபால்.

அவ்வளவு பெரிய கல்வியாளர்... கோடீஸ்வரர்... என்னை கட்டித்தழுவி பொன்னாடை அணிவித்ததுடன்... ஒரு கவரில் ஒரு நல்லதொகை நிரப்பப்பட்ட காசோலையையும் கொடுத்து என்னை கௌரவித்தார்.

எனக்கு இன்ப அதிர்ச்சி. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.

""இந்தநாள்... என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ஒரு மகானைப் பார்த்த மகிழ்ச்சி'' எனவும் சொன்னார்.

அவரைப் பார்த்து நான் சொல்லவேண்டிய வார்த்தைகளை... என்னைப் பார்த்து அவர் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தார்.

""இப்ப நான் உங்ககிட்ட ஒரு யோசனை சொல்றேன்... மறுக்க மாட்டீங்களே...?'' என சஸ்பென்ஸ் வைத்தார் பாலசுப்பிரமணியன்.

""சொல்லுங்கய்யா'' என்றேன்.

""இத்தனை பேர்களை சினிமாவுல அறிமுகம் செஞ்ச நீங்க... வாடகை வீட்டுல வசிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. ரஜினி தன்னோட ரசிகர்கள்ட்ட அரசியல் பற்றி பேசினப்போ நடந்த நிகழ்ச்சியில... "கலைஞானத்துக்கு தனியாக ஒரு படம் செஞ்சு கொடுக்காதது என் தப்புதான்'னு பேசினதை நான் வாட்ஸ் ஆப்ல பார்த்தேன். அதைப் பார்த்திட்டுத்தான் எனக்கு இந்த யோசனை வந்துச்சு...''

""என்னய்யா அந்த யோசனை?''

அந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நொடியே பத்துலட்ச ரூபாய் தருவதாகச் சொல்லி... செக் புக்கை எடுத்தார் பாலசுப்பிரமணியன். நான் பதறிப்போய் மறுத்தேன்...