(30) மனோரமாவின் மனசாட்சி!

"பாகப்பிரிவினை', "பாவமன்னிப்பு' என வெற்றிமேல் வெற்றிபெற்ற பல சினிமா கதைகளை எழுதிய எம்.எஸ்.சோலைமலை அவர்கள் ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இன்றி ஓய்வாக இருந்தார்.

இதையறிந்த மனோரமா " "சோலை மலை அண்ணன் எழுதிய ‘"நீதிபதி', ‘"தீர்ப்பு'’ நாடகங்களின் கதையில் நடித்த பிறகுதானே வாழ்க்கையில் முன்னேறினோம்'’என சோலைமலையைச் சந்தித்து, "அண்ணே... நான் ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பிக்கிறேன். நீங்க கதை, வசனத்தை எழுதுங்க. உங்க மகன் ராஜேந் திரன் நாடகக் கம்பெனியை முழு மையா பார்த்துக்கட்டும். தொடர்ந்து நான் நடத்துறேன்' என்றார்.

manaroma

Advertisment

அதை ஏற்றுக்கொண்ட சோலைமலை... உடனடியாக "கோல்டன் சிட்டி' என்கிற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த ஒரு நாடகம்தான் நடந்தது. அதற்குள்... சொந்த ஊரான மதுரையில்... சோலைமலை இறந்துவிட்டார்.

தகவல் அறிந்ததும்... மனோரமா மதுரைக்கு விரைந்து சென்று... ஆக வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். சோலைமலையின் மனைவிக்கு ஆறுதல் சொன்ன மனோரமா... "அண்ணன் இல்லை யேனு கவலைப்படாதீங்க அண்ணி. அவரோட தங்கச்சி நான் இருக்கேன். அவர் எழுதின "நீதிபதி', "தீர்ப்பு'’ நாடகங்கள்தானே எனக்கு உயர்ந்த வாழ்க்கை கிடைக்க காரணம். அதை என் உயிர் இருக்கிறவரைக்கும் மறக்கவே மாட்டேன். நீங்க நாளைக்கே குடும்பத்தோட மெட்ராஸுக்கு வந்துருங்க. அண்ணன் எழுதிக் குடுத்த "கோல்டன் சிட்டி' நாடகத்தை நான் தொடர்ந்து நடத்துவேன்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

Advertisment

சோலைமலை குடும்பம் சென்னைக்கு வந்தது. தான் சொன்னதுபோலவே செயலில் காட்டினார் மனோரமா.

சோலைமலையின் மகன் "சோலைமலை' ராஜேந்திரனை நாடகத்திற்கு டைரக்டராக்கி... கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் ஆயிரம் நாடகங் களுக்குமேல் நடத்திக் கொடுத்து அந்தக் குடும்பத்திற்கு உதவினார் மனோரமா.

kalaiganam"ஒரு எழுத்தாளன் எழுதிய நாடகக் கதையில் நடித்ததால்தானே நமக்கு இந்த வாழ்வு கிடைத்தது' என்ற நன்றி விசுவாசத்துடன், அந்த எழுத்தாளனின் குடும்பத்தை ஆதரித்து, வாழவைத்த எந்த ஒரு நடிகையிடமும் காணாத நன்றியுணர்ச்சியை... மனசாட்சியுள்ள மனோரமாவிடம் நான் கண்டேன்.

மனோரமா என்னை எங்கே பார்த்தாலும்... நான் கவனக்குறைவாக அவரை கவனிக்காமல் போனாலும்.. இருக்கையிலிருந்து எழுந்து... "அண்ணே... கலைஞானண்ணே...'’ எனக் கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.

என்னிடம் தன் வாழ்க்கை பற்றிய தனிப்பட்ட விஷயங்களை சொல்கிற அளவிற்கு.. எங்களிடையே சகோதரத்துவமான தூய அன்பிருந்தது.

நான் கதை எழுதி, தயாரித்து, நடிகர்திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "மிருதங்க சக்கரவர்த்தி' படத்தில் மனோரமாவும் நடித்திருந்தார்.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம்... தனக்கு மறுமணம் செய்துவைக்க தனது தாயார் விரும்பியது குறித்து சில விஷயங்களை என்னிடம் சொன்னார் மனோரமா.

நாகேஷும், மனோரமாவும் திரைப்படங்களில் ஜோடியாக நடித்துவந்தார்கள். ஒருசமயம்... நாகேஷின் மைத்துனர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். போலீஸார் அது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டிருந்தனர். நாகேஷுடன் மனோரமா சேர்ந்து பல படங்களில் நடித்திருந்த வகையில்... ஒருமுறை மனோரமாவின் வீட்டிற்கு வந்து அவரிடமும் விசாரித்துவிட்டுச் சென்றது போலீஸ்.

இது மனோரமாவின் தாயாருக்கு சங்கடத் தைத் தந்தது.

ஒருநாள் இரவு... மனோரமாவிடம் நீண்டநேரம் விவாதித்திருக்கிறார் அவரின் தாயார்.

அதை மனோரமா வார்த்தைகளிலேயே இங்கே பதிவு செய்கிறேன்...

""அன்னிக்கி எங்கம்மா என் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டு... "மனோ... நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன். நீ மறுக்காத. "வாழ்ற பெண்ணை தாயார் கெடுத்ததுபோல...'னு ஒரு பழமொழி சொல் வாங்க. அதுபோல நான் உன் வாழ்க் கையை உன் விருப்பப் படி அமையவிடாம நானே கெடுத்திட்டே னோனு என் மன சாட்சி உறுத்திக் கிட்டே இருக்கு. இப்போ உனக்கு பொருளும், புகழும் நினைச்சதைவிட அதிகமாவே கிடைச் சிருக்கு. ஆனா, உனக்கு இந்த இளம் வயசுல கிடைக்கவேண்டிய குடும்ப வாழ்க்கை கிடைக்கலியே? நீ சினிமாவுல நடிக்க ராமநாதன் தடை போடக்கூடாதுங்கிற கண்டிஷன்லதான் நீ ராமநாதன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் சம்மதிச்சேன். அதை ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட ராமநாதன் அப்புறம் நீ சினிமாவுல kalaiganamநடிக்கிறத விரும்பல. உன்னை பெரிய சினிமா நடிகையாக்கிப் பார்க்கணும்கிற என்னோட லட்சியத்துல நீயும் உறுதியா இருந்த. இதனாலதான் ராமநாதன் உன்னைவிட்டு பிரிஞ்சாரு. ஒரு பொம்பள குழந்தைய வச்சுக்கிட்டு தனியா வாழ்றதுல இருக்குற கொடுமைய அனுபவிச்சவ நான். உனக்கும் அந்தக் கஷ்டம் வரக்கூடாது. மக அப்படியான கஷ்டத்த அனுபவிக்கக் கூடாதுனுதான் எல்லா தாயும் விரும்புவா. அதே விருப்பமும், நல்ல வாழ்க்கை அமையணும்கிற கவலையும் எனக்கும் இருக்கத் தானே செய்யும். எனக்கும் வயசாகிக்கிட்டே போகுது. நான் கண்ண மூடுறதுக்குள்ள... ஒரு நல்லவனாப் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடிவுசெஞ்சிருக்கேன்...'னு எங்கம்மா சொன்னாங்க.

ஒரு தாயோட மனச என்னால புரிஞ்சுக்க முடிஞ்சிச்சு... கலைஞானண்ணே... ஆனாலும் எங்கம்மா மனசு கோணாதபடி நான் என்னோட நிலைமையச் சொன்னேன்.

"அம்மா... "நான் சொல்லப்போறத நீ தப்பா எடுத்துக்காதம்மா. ஒரு பொண்ணு தன் கணவனோட கொஞ்சகாலமாவது சந்தோஷமா வாழ்ந்திட்டு, ஏதோ ஒரு காரணத்தால... பிரிஞ்சிட்டாலும், அவங்க வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவிச்ச மகிழ்ச்சியையும், ஒண்ணுபட்டிருந்த உள்ளங்களையும் அழிச்சிட முடியுமாம்மா? அப்படித்தானே நானும்...'னு நான் சொல்லிக்கிட்டிருக்கும்போதே... என் கண்ணுல பொலபொலனு கண்ணீர் சிந்த ஆரம்பிச்சிருச்சு. பேச வார்த்தை வரல. அதைப் பார்த்து எங்கம்மாவும் அழுதுட்டாங்க.

ஒருவழியா ரெண்டுபேரும் சமாதானம் ஆனோம்.

அழுததுல மனபாரம் குறைஞ்சதும்... ‘"அம்மா... எனக்கு புருஷனா வரக்கூடியவர் என்மேல பாசம் வைக்கிறமாதிரி... என் மகன்மேல பாசம் வைக்க முடியாது. என் வசதியப் பார்த்து கணவர் கிடைக்கலாம். ஆனா அந்த வாழ்க்கைல உண்மை இருக்காதும்மா. எப்பவாச்சும் ஒரு தடவை அவன் என்கிட்ட "உன் முதல் கணவன் ராமநாதன் உன்கிட்ட எப்படி பழகுவான்?'னு கேட்டுட்டா... அதைவிட நரகவாழ்க்கை வேறு இருக்க முடியுமாம்மா? இப்ப இருக்குற கொஞ்ச சந்தோஷமும் போயிரும்மா. "எனக்கு கடவுள்கொடுத்த செல்வம்... என் மகன் பூபதி. அது போதும்மா'னு நான் அம்மாகிட்ட நடைமுறை சிக்கலை எடுத்துச் சொன்னேன். நான் ஒரு தாயா என்புள்ளயோட நலத்தை நினைச்ச மாதிரி... அவங்க ஒரு தாயா தன்னோட பிள்ளையான என்னோட நலத்தை நினைச்சுத்தான் அப்படிச் சொன்னாங்க. இருந்தாலும் நான் சொன்ன விளக்கத்துல சமாதானமாகி... "எது உனக்கு சரினுபடுதோ... அதையே செய்ம்மா'னு சொல்லி சமாதானமானாங்க'' என என்னிடம் மனோரமா சொன்னார்.

ஒருமுறை மனோரமா என்னிடம்...

"கலைஞானண்ணே... என் மகன் வயசுக் கோளாறுல ஒரு பொண்ண காதலிச்சிட்டான். அது பெரிய பிரச்சினை ஆகி எம்.ஜி.ஆர்.அண்ணன் வரைக்கும் போயிருச்சு. அவர்தான் இந்தப் பிரச்சினையில தலையிட்டு சுமுகமா முடிச்சு வச்சார். நீங்க எனக்குச் செய்யவேண்டிய உதவி... "என் மகனுக்கு நம்ம சொந்த பந்தங்கள்ல ஒரு நல்ல பொண்ணா பாருங்கண்ணே' என்றார்.

உடனே நான் திருமண மையங்கள்ல பூபதி பேரை பதிவுசெய்து... பெண் தேடி அலைந்தேன்.

""அண்ணே... நீங்க என் மகனுக்கு பொண்ணு தேடி அலைஞ்சீங்க. நன்றிண்ணே... ஒரு நல்ல பொண்ணு... எங்க சொந்தத்துலயே கிடைச் சிருச்சுண்ணே...'' என மகிழ்ச்சியை தெரிவித்தார் மனோரமா.

கலைஞர் கருணாநிதியின் மனைவியார் தயாளு அம்மாவிடம்... கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை அடையாளம் காட்டி... உண்மையை உடைத்த மனோரமா.