(7) தேடி வந்த வாய்ப்பு... ஆனால்?

"ஔவையார்'’படத்தில் "குமாரி ஔவை'யாக நடித்த அழகிய குசலகுமாரியின்... பல படங்களில் நடனத்தின் மூலம் ரசிக உள்ளங்களை கொள்ளையடித்த குசலகுமாரியின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் என்னவென்றால்...

அளவான உருவம்... அழகான பருவம்... ஆசைப்படாதவர்கள் பாவம். அப்படியான சிற்பி செதுக்காத பொற்சிலை... முத்துக்கள் போன்ற பல்வரிசை... பார்ப்பவர்களின் கண்களால் திருஷ்டி பட்டுவிடக்கூடாதே.. என நாசியின் பக்கம் இயற்கையே உண்டாக்கிய... திருஷ்டி போக்குவதுபோல ஒரு சிறிய பரு. சொல்லும் செயலும் பச்சைக்குழந்தை. அதனால்தான் வாழ்க்கையை மறந்தார்... வசதியை இழந்தார்.

எதை இழந்தாலும் இளமை அழகை இழக்கவேயில்லை குசலகுமாரி.

Advertisment

எம்.ஜி.ஆர். அவர்களின் கலைக்கண்களில் குசலகுமாரியின் நடன அழகும், நளினமும் நினைவுக்கு வந்தது.

உடனே அழைப்பு விடுத்தார் எம்.ஜி.ஆர்.

குசலகுமாரியும் வந்து சந்தித்தார்.

Advertisment

""நீ என்னோட படங்கள்ல தொடர்ந்து நடிக்கலாம்''’என்றார் எம்.ஜி.ஆர்.

குசலகுமாரி ஏனோ சற்று குழப்பமானார்.

முகத்தில் வியர்வை அரும்புவிட்டது. பதில் சொல்ல வாயைத் திறந்தார். ஆனால் வார்த்தை வரவில்லை.

"கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக இருப்பாரோ'’என எண்ணிய எம்.ஜி.ஆர்., “""நல்லா யோசிச்சு உன் பதிலைச் சொன்னால் போதும்''’எனச் சொல்லியனுப்பினார்.

kannanamma

எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் பணியாற்றக் கிடைக்கிற சான்ஸ் என்பது... லேசுப்பட்டதில்லை. பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய ஐஸ்வர்ய சான்ஸ். அதிலும் அவரே அழைத்து சான்ஸ் தருவதாகச் சொல்வது எப்படிப்பட்ட சான்ஸ்.

ஆனால் தேடிவந்த சான்ஸை குசலகுமாரி கொஞ்சம் அஜாக்ரதையாக விட்டுவிட்டார்.

நடிப்பைவிட நாட்டியத்தில் பேரார்வம் கொண்ட குசலகுமாரி... எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசிய அந்தச் சமயத்தில் இந்தி நடன புரோக்ராமிற்காக மும்பை சென்றுவிட்டார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆரின் அழைப்பையும் மறந்துபோனார்.

அடுத்தடுத்து குசலகுமாரிக்கு சோதனை.

தன் வீட்டு நிர்வாகப் பொறுப்பை தன் உறவினரை நம்பி ஒப்படைத்திருந்தார். அந்த சொத்துபத்தையெல்லாம் இழந்தார்.

வசீகரமான அந்தப் பெண் வறுமையில் வாடினார்.

இந்த விஷயம் எம்.ஜி.ஆரின் கவனத்திற்குப் போனது.

""நான் அந்தப் பெண்ணுக்கு கொடுக்க நினைத்தேன். ஆனால்... அந்தப் பெண் அலட்சியம் செய்துவிட்டார்''’எனச் சொல்லி வருத்தப்பட்டார் எம்.ஜி.ஆர்.

இந்த இடத்தில் நான் சொல்லப்போகும் ஒரு செவிவழிக் கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் சொல்கிறேன்.

சிவபெருமானின் தீவிர பக்தன் ஒருவன், வறுமை தாங்காமல் ஊரைவிட்டே புறப்பட்டு... கால்போன போக்கில் போய்க்கொண்டிருந்தான்.

""சுவாமி... உங்கள் பக்தன் ஒருவன் வறுமையால் ஊரைவிட்டே போகிறான். நீங்கள் அவனுக்கு கருணை காட்டுங்கள்''’என்றார் ஈஸ்வரி.

""அவன் செய்த தவறே... இப்படி ஒரு நிலைக்கு ஆளாகக் காரணம். இது அவன் விதி.''’’

""தவறு எதுவாக இருந்தாலும் மன்னித்து, தாங்கள் அவனுக்கு வாழ்வளிக்க வேண்டும்''’’

""உனக்காக நான் ஒரு காரியம் செய்கிறேன்''’எனச் சொன்ன சிவன்... ஒரு பை நிறைய பொற்காசுகளை நிரப்பி, அந்த பக்தன் நடந்து வரும் பாதையில் போட்டார்.

அந்த நேரம் பார்த்து அந்த பக்தனுக்கு ஒரு விபரீத புத்தி வந்தது.

kannamma"கண் பார்வையற்றவர்கள் எப்படி நடந்து போகிறார்கள்? என்பதை உணர்ந்து பார்க்கலாம்'’ என நினைத்து, கண்களை மூடிக்கொண்டு நடந்தான்.

சிவன் சிரித்தார். ஈஸ்வரி பதைபதைப்பானார்.

சிறிது தூரம் கண்களை மூடிநடந்த பக்தன்... "அப்பாடா... ரொம்ப கஷ்டம்தான்'’என்றபடி கண்களைத் திறந்து நடக்கத் தொடங்கினான். ஆனால் சிவன் போட்ட பொற்காசுகள் பை இருந்த இடத்தை தாண்டித்தான் கண்களைத் திறந்து போய்க்கொண்டிருந்தான்.

""இவனுக்கு இரக்கப்பட்டு பொற்காசுகளைக் கொடுத்தாலும், அந்த இடத்தில் இவனுக்கு குருட்டு புத்தி வந்ததே... அதற்குப் பெயர்தான் விதி. எடுத்து வைத்தாலும்... கொடுத்து வைக்க வேண்டும்''’என்றார் சிவன்.

இதுதான் குசலகுமாரியின் கதையும்.

நான் சமீபத்தில் குசலகுமாரியை சந்தித்தபோது.

.. ""எம்.ஜி.ஆர். என்கிற வள்ளல் கொடுத்த நல்ல வாய்ப்பை இழந்துட்டேன். அவர் பேச்சைக் கேட்டிருந்தா... லட்சலட்சமா சம்பாதிச்சிருப்பேன். இன்னைக்கு அது கோடிகோடியா உயர்ந்திருக்கும். எம்.ஜி.ஆரைப்போல ஏழைகளுக்கு உதவும் பாக்கியமும் எனக்கு கிடைத்திருக்கும்''’என கண்ணீர் சிந்தியபடி சொன்னார் குசலகுமாரி.

அரசு ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் வசித்துவரும் குசலகுமாரியின் வீட்டுச் சுவற்றில் ஒருபுறம்... கலைஞர் கருணாநிதி அவர்களுடன் குசலகுமாரி இருக்கும் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

அதைச் சுட்டிக்காட்டி... ""நான் இப்போ இருக்கிற இந்த ஹவுஸிங் போர்டு வீட்டை எனக்கு வாடகைக்கு ஏற்பாடு செய்துகொடுத்த கலைஞர்... "நீ சாகுற வரைக்கும் இந்த வீட்டுலதான் இருக்கணும்'’என அன்புக்கட்டளையும் போட்டார்''’என்று சொன்னார்.

இன்னொருபுறம்... ஜெயலலிதா அவர்களுடன் குசலகுமாரி இருக்கும் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி... ""ஜெயலலிதா அம்மா அவர்கள் என் கஷ்டத்தை அறிந்து, என் பெயரில் ஐந்துலட்ச ரூபாயை டெபாஸிட் செஞ்சு, அதில் கிடைக்கும் வட்டி மூலம் இந்த வயதான காலத்தில் நான் தினமும் ஒருவேளையாவது வயிறார சாப்பிட வைத்திருக்கிறார்''“என்று சொன்னார் குசலகுமாரி.

நாட்டியக் கலையை வளர்ப்பதற்காக... திருமணமே செய்துகொள்ளாமல் சேவையாற்றிக்கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற பத்மா சுப்பிரமணியம் போல... கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்பவர்களில் குசலகுமாரியும் ஒருவர்.

1977-ஆம் ஆண்டு...

கோயம்புத்தூரிலிருந்து என்.எஸ்.திருமால் என்கிற நண்பர் தனது நண்பர் திருஞானம் என்பவர் மூலம் திரைப்படம் தயாரிப்பதற்காக வந்தார். டைரக்டர் முக்தா சீனிவாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தவரும், நடிகர் குமரிமுத்துவின் அண்ணனுமான எனது நண்பர் கே.எம்.பாலகிருஷ்ணனை இயக்குநராக அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தார். பாலகிருஷ்ணனும், திருஞானமும் கதை சொல்வதற்காக திருமாலிடம் என்னை அழைத்துச் சென்றனர்.

""அண்ணா... நீங்க கதை எழுதிய "குறத்தி மகன்', "வெகுளிப் பெண்'’படங்களைப் பார்த்தேன். ரொம்பவும் நல்லா இருந்தது. உங்களை கதை எழுதவச்சு ஒரு படம் எடுக்கணும்னு நான் நினைச்சிட்டிருந்தேன். டைரக்டரும், திருமாலும் உங்களையே அழைச்சிட்டு வந்திட்டாங்க. மகிழ்ச்சி அண்ணா''’என்றார் திருமால்.

டீ, பிஸ்கட் வந்தது. சாப்பிடும்போதே... “""ஒரு குடும்பக் கதையா சொல்லுங்க''’என்றார் திருமால். அதன்படி "ஆறு புஷ்பங்கள்'’என்கிற கதையைச் சொன்னேன்.

""அண்ணா... இது மாதிரி கதையைத்தான் நான் எதிர்பார்த்தேன். நீங்க கதை சொன்ன மாதிரியே படத்தை எடுத்திடலாம்''’எனச் சொல்லியபடி புத்தம் புது ரூபாய் நோட்டுகள் அடங்கிய கட்டு ஒன்றை அட்வான்ஸாக எனக்குக் கொடுத்துவிட்டு... ""அண்ணா... ஒரு ரிக்வெஸ்ட்... இந்தப் படத்தை எடுத்து முடிக்கிறவரை நீங்களும் கூடவே இருக்கணும். ஏன்னா... டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு இது முதல் படம். எனக்கும் சினிமாவில் முன்அனுபவம் கிடையாது. படம் எடுத்து முடியிறவரை நீங்க எங்க கூடவே இருக்கிறதுக்கு சம்மதிச்சாத்தான் படமே எடுப்பேன்''’என்றார் திருமால்.

நான் அப்போது பிஸியான கதாசிரியராக இருந்தபோதும்... திருமாலின் விருப்பத்திற்கு சம்மதித்தேன்.

திருமால் நல்ல அழகன். கம்பீரமான தோற்றம். கவர்ந்திழுக்கிற முகம், சிவந்த நிறம்... அம்சமாக இருப்பார். (பிற்காலத்தில் ரஜினிகாந்த் பெரும்பாலும் திருமாலின் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து... ஏதோ ஒன்று... தனக்கு பிரியப்பட்டதை வாங்கிவரச் சொல்லி, சாப்பிடுவது வழக்கம்.)

"ஆறு புஷ்பங்கள்'’படத்திற்கு ஹீரோவாக விஜயகுமாரும், செகண்ட் ஹீரோவாக ரஜினிகாந்த்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கதாநாயகியாக ஸ்ரீவித்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

("ஆறு புஷ்பங்கள்'’ படப்பிடிப்பு அனுபவங்களையும், அப்போது ரஜினிக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட நட்பையும், நான் ஏற்கனவே ‘"சினிமா சீக்ரெட்'’ தொடரில் சொல்லியிருப்பதால்... அதை விட்டுவிடுகிறேன்.)

கதை சொல்வதற்காக ஸ்ரீவித்யாவை சந்தித்தபோது... எனக்கு பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

ஸ்ரீவித்யாவின் தாயாருக்கு என்னை திருமணம் செய்துவைக்க கல்யாண புரோக்கர் ஏற்பாடு செய்ததைச் சொல்கிறேன்...