(3) ரசிகனை பைத்தியமாக்கிய ராஜகுமாரி!

டிகனாகும் ஆசையில் வந்த டி.என்.பாலு, "சிட்டாடல் ஸ்டுடியோ' டைரக்டர் ஜோஸப் தளியத்தால் "இரவும் பகலும்' படத்தின் கதாசிரியரானார். இந்த வெற்றியை எட்டிய கையோடு, தான் காதலித்து வந்த ஆங்கில டீச்சர் பிரேமாவை திருமணம் செய்துகொண்டார். கதிர் என்கிற மகனைப் பெற்றனர்.

தி.மு.க.வின் பிரச்சார நாடகங்களை எழுதி நடித்ததாலும், சத்யா மூவீஸில் பணியாற்றிய வகையிலும் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவே ஆனார் டி.என்.பாலு.

எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்திற்கு திரைக்கதையில் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு நல்ல புகழ் கிடைக்கும். அதனால் எம்.ஜி.ஆரே தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் டி.என்.பாலுவை தனது "ஆசைமுகம்', "காதல் வாகனம்' படங்களுக்கு கதை எழுத பரிந்துரைத்தார். அது என்னவோ... எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை எம்.ஜி.ஆருக்கு எழுதிய கதை எழுதிய இரண்டு படங்களும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால்... மற்றவர்களுக்கு டி.என். பாலு எழுதிய கதைகள் பெரும் வெற்றிபெற்றது.

Advertisment

"நான்', "அதே கண் கள்', "குமரிப்பெண்', "மூன்றெழுத்து' படங்களுக்கு கதை எழுதினார். சிவாஜி நடித்த "அஞ்சல்பெட்டி 520', கமல் நடித்த "சட்டம் என் கையில்', "சங்கர்லால்' "மனசாட்சி', "ஓடிவிளையாடு தாத்தா' உட்பட ஆறேழு படங்களை இயக்கினார், இதில் சில படங்களைத் தயாரித்தார்.

kalaignam

சினிமாவின் வெற்றியை சுவைக்க ஆரம்பித்த காலங்களிலேயே அந்த மகிழ்ச்சியில் சம்பாதித்த பணத்தையெல்லாம் தாறுமாறாக செலவழிக்க ஆரம்பித்தார் டி.என்.பாலு. வேண்டாத குடிப்பழக்கத்திலும் ஈடுபட்டார். அவரின் குடிப்பழக்கத்தை தடுக்க பிரேமா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆனால் தொடர்ந்து சினிமாவில் வெற்றிகரமாகவே இருந்தார் டி.என்.பாலு.

கமல்-ஸ்ரீதேவி நடித்த "சங்கர்லால்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இயக்கம் -டி.என்.பாலு. ஊட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது... மாரடைப்பால் காலமானார் டி.என்.பாலு.

எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாகவே இருந்த டி.என்.பாலு, எம்.ஜி.ஆர். -கலைஞர் இடையே கருத்து வேறுபாடு வந்து பிரிந்த போது... கலைஞரின் ஆதரவாளராகவே இருந்து விட்டார். ஆனாலும் அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஊட்டியிலிருந்து பாலுவின் உடலை சென்னைக்கு கொண்டுவர விரைந்து ஏற்பாடுகளைச் செய்ததோடு, தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார்.

பாலுவின் மரணச்சேதி என்னையும் மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கியது. கடந்த அத்தியாயத்தில் நான் சொல்லியிருந்த சம்பவங்களெல்லாம் என் கண்முன்னே காட்சியாக விரிந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு... இப்போதும் என் தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு சம்பவத்தை நினைக்கும்போது என் நண்பன் டி.என்.பாலுவின் நினைவும் வந்துவிடும்.

நான் சில மாதங்களுக்கு முன்... டி.என்.பாலு வின் மனைவி பிரேமாவைச் சந்தித்தேன்.

""கலைஞானம் சார்... நான் ஆங்கில டீச்சராக பள்ளியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த போது, இப்போ பெரிய டைரக்டரா இருக்க பி.வாசு என்னோட மாணவன். இப்போது பி.வாசு அவர்களிடம் உதவி இயக்குநராக... என் மாணவனின் மாணவனாக இருக்கிறான் எங்கள் மகன் கதிர். இதைவிட எனக்கு என்ன பாக்கியம் வேண்டும்...'' என என்னிடம் நெகிழ்ச்சியோடு மனம் மலர்ந்து சொன்னார் பிரேமா.

சினிமா நடிகன்’ ஆகும் கனவில் திளைத்திருந்த நான்கு கார் டிரைவர்களின் கதையில்... டி.ஆர்.ராஜகுமாரியின் கார் டிரைவரான ராகவன் டி.ஆர்.ராஜகுமாரியை காதலித்து, அதன் மூலம் அவரின் சிபாரிசில் நடிகனாக திட்டம்போட்டார். ஆனால், "டி.ஆர்.ராஜகுமாரியம்மா வீட்டுப்பக்கம் கூட நீ வரக்கூடாது' என அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகச் சொல்லி... சென்னையைவிட்டே வெளியேறினார். நடிகை குசலகுமாரியை காதலித்து அவரின் சிபாரிசின் மூலம் நடிகனாக ஆசைப்பட்ட குசலகுமாரி வீட்டு டிரைவர் ராதாகிருஷ்ணன்,‘போலீஸில் புகாரான தால் பயந்து ‘கல்கத்தாவுக்கு போவதாகச் சொல்லிவிட்டு’ கிளம்பினார். மூன்றாவது கார் டிரைவரான டி.என்.பாலு, சினிமாவிலும், காதலிலும் ஜெயித்த கதையைச் சொல்லிவிட்டேன்.

நான்காவது டிரைவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம் ஆகிய நான்... சினிமாவில் ஜெயித்த கதையை "சினிமா சீக்ரெட்'டில் விரிவாகச் சொல்லிவிட்டேன். இருந்தாலும் அந்தத் தொடரை படிக்காதவர்களுக்கும், புதிய வாசகர்களுக்கும் மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

அஞ்சலிதேவி வீட்டில் வேலை செய்தபடி, அவரின் நன்மதிப்பைப் பெற்று, அவரின் சிபாரிசின் மூலம் நடிகனாகும் ஆசையில் கடிதம் எழுதினேன். "உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது' என பதில் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே அலைந்தேன். அஞ்சலி வீட்டுக்கு நேரில் சென்றேன். கூர்கா விரட்டியடித்தார்.

நடிப்பாசை ஒருபுறமிருக்க... நாடகக் கதைகளை எழுத ஆரம்பித்தேன். "வெள்ளிக்கிழமை' என்கிற எனது நாடகம் சூப்பர் ஹிட் ஆனது. (இந்தக் கதைதான் முத்துராமன் நடிப்பில் "வெகுளிப்பெண்' என பின்னாளில் படமாக வந்தது) கதாசிரியராக வெற்றிபெற்றதால்... நடிப்பாசையை விட்டுவிட்டு, கதைகள் எழுதிக் குவித்தேன்.

ஆனாலும் வறுமை. சென்னை மைலாப்பூரில் பத்துரூபாய் வாடகையில் என் குடும்பம் சிரமப்பட்டது. என் அண்ணன் வந்து பத்து மாத வீட்டு வாடகை பாக்கியைக் கொடுத்து, வீட்டைக் காலிசெய்ய வைத்து, என் குடும்பத்தை ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில்... ரயில் புறப்படுகையில்... ""அண்ணே... பத்துமாச வாடகையைக் குடுத்துட்ட. அதுபடி பார்த்தா இன்னும் ரெண்டு வாரம் நான் அந்த வீட்டுல தங்கலாம். நான் இந்த ரெண்டு வாரம் முயற்சி செஞ்சு பார்க்கிறேன். சினிமா வாய்ப்பு சரியா அமையலேன்னா... ஊருக்கு வந்திடுறேன்'' எனச் சொல்லி அண்ணனுடன் என் குடும்பத்தை மட்டும் அனுப்பிவைத்தேன்.

இந்த நெருக்கடியான நேரத்தில்தான் "சிட்டாடல் ஸ்டுடியோ' டைரக்டர் ஜோஸப் தளியத்திடம் நண்பர் முத்து மூலம் ஒரு கதை சொன்னேன். அந்தக் கதையை "காதல் படுத்தும் பாடு' என்ற படமாக எடுத்தார் தளியத். இதில் வாணிஸ்ரீ, சுருளிராஜன் ஆகியோர் அறிமுகமானார்கள். படம் வெற்றி. தேவரின் கதை இலாகாவில் பணிபுரிந்து அவரின் அபிமானத்தைப் பெற்றேன். தொடர்ந்து "குறத்தி மகன்' உட்பட பல படங்கள் என் கதையில் வந்தன. நான் கதை எழுதி தயாரித்த "பைரவி' படத் தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகம் செய் தேன். அண்ணன் சிவாஜியை வைத்து "மிருதங்க சக்கரவர்த்தி', "ராஜரிஷி' படங்கள் உட்பட... 16 படங் களைத் தயாரித்தேன். "செல்லக்கிளி' படத்தை இயக்கி னேன். எனது பழுத்த, பலத்த அனுபவங்களை உங்களோடு இதோ... பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

டி.ஆர்.ராஜகுமாரி...

இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே... சினிமா ரசிகர்கள் வயது பாகுபாடின்றி, தங்களை ராஜ குமாரனாக உருவகப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்.

இந்திரலோகத்து ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகிய நால்வரையும் ஒருவேளை ஒரே உருவத்தில் காணநேர்ந்தால், அந்தப் பெண் எப்படி இருப்பாளோ... அப்பேர்ப்பட்ட அழகிதான் ராஜகுமாரி. அன்றைய நம் தமிழ் திரைப்படங் களுக்கு கவர்ச்சி காட்டி, உணர்ச்சியூட்டிய ஒப்பற்ற இளம் அழகி. வாலிபர்களையும், வயோதிகர் களையும் வசீகரத்தால் கொள்ளை கொண்டவர். நடையழகும், இடையழகும், சிறு முல்லைப்பூக்களையே பொறாமையால் முனக வைக்கும் பல்லழகும், குயிலே கூச்சத்தால் வெட்கித் தலைகுனியும் இனிய குரலழகும் கொண்டவர்.

ராஜகுமாரி நடித்த திரைப்படங்களைப் பார்க்கச் செல்வதென்றால் நாங்களெல்லாம் என்ன செய்வோம் தெரியுமா?

எப்போதும் போடுகிற அவசர குளியல் செய்யாமல், நிறுத்தி நிதானமாக, அழுக்குத் தீர குளித்து, ஒருதடவைக்கு இருதடவை சோப்புப் போட்டு குளித்து, வாசனைத் திரவியம் தடவிக் கொண்டு, சலவைச் சட்டை அணிந்துகொண்டுதான் தியேட்டருக்குப் போவோம். அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசை எங்களை ஆட்டிப்படைத்தது.

"சந்திரலேகா' படம் பார்க்கும்போது... படத்தில் சர்க்கஸில் ராஜகுமாரி பார் விளையாடும் போது... ரசிகர்களின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றுவிடும். வில்லனாக நடித்த ரஞ்சன், மயங்கியதுபோல் கிடக்கும் ராஜகுமாரியை, தன் இரு கரங்களால் இடையைப் பிடித்து தூக்கும்போது, நழுவி, நழுவிப்போவதும், ரஞ்சனின் கரங்கள் இறுகப்பிடித்து மார்பகம் வரை மிஞ்சிப்போவதுமான அந்த கண்கொள்ளாக் காட்சியை, கவர்ச்சி மிகுதியாக காட்டும்போது... கிழவனும் துள்ளுவான் உள்ளத்திற்கு உள்ளே.

"ஹரிதாஸ்' திரைப்படத்தில் எம்.கே.தியாக ராஜ பாகவதர் "மன்மத லீலையை வென்றார் உண்டோ' எனப் பாடுவதும், பாகவதருக்கு முத்தம் கொடுப்பதுபோல் ராஜகுமாரியின் "இச்'’ என ஒரு முத்தச் சத்தம் மட்டும் கேட்பதும்... ஆஹா... படம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். நானே வர்ணித்துக்கொண்டிருந்தால் வாசகர்கள் என்னை ‘பைத்தியம்’ என்றல்லவா நினைப்பீர்கள்.

"ஹரிதாஸ்' படம் 1944-ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியாகி... 1946-ஆம் ஆண்டு தீபாவளி வரை தொடர்ந்து மூன்று வருடங்கள் ஓடியது. இதற்கு காரணம் பாகவதரின் பாட்டும், ராஜகுமாரியின் வனப்பும்.

மன்னர் ஒருவர் மணமுடிக்க வந்தபோதும் மறுத்து, கல்யாணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் ராஜகுமாரி. அதைச் சொல்கிறேன்...