(98) அம்மன் படம் தந்த அனுபவம்!
அந்தக் காலத்தில் "தமிழ் சினிமா' என்று ஒரு பத்திரிகை இருந்தது. அதன் ஆசிரியர் கறீம் அவர்கள். அதனால் அவரை ‘"தமிழ் சினிமா கறீம்'’என்றே அழைப்பார்கள். ஒருசமயம்... எம்.ஜி.ஆரைத் தாக்கி எழுதிவிட்டார் கறீம். மதுரை சென்றிருந்த கறீமை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கிவிட்டார்கள். உடனடியாக விஷயம் எம்.ஜி.ஆரை எட்டியது. அப்போதைய மதுரை தி.மு.க. பிரபலமான மதுரை முத்துவுக்கு போன் செய்து "கறீமை பத்திரமாக மீட்டு என்னிடம் ஒப்படைக்கணும்' எனச் சொன்னார்.
கறீம் பத்திரமாக சென்னைக்கு அழைத்துவரப்பட்டு எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்றார்கள்.
""எதிர்பாராதபடி தவறு நடந்துவிட்டது. அதற்காக நான் உங்களிடம் வருத்தத்தைத் தெரிவிச்சுக்கிறேன்'' எனச் சொல்லியதுடன்... ""கறீமின் குடும்பம், வசதி வாய்ப்புகள் குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., "நீங்கள் ஒரு படம் ஆரம்பியுங்கள், நான் நடிச்சுத் தர்றேன். என்னோட சம்பளம்பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்'' எனச் சொல்லியனுப்பினார். நல்ல கதைகளைத் தேடி எழுத்தாளர்கள் சிலருக்கும், ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்யும் மீடியேட்டர்களுக்கும் கைவசம் இருந்த பணத்தைச் செலவுசெய்தார். கதைகள் கிடைத்தன.
ஆனால் கறீம் எவ்வளவோ முயற்சித்தும் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்ய முடியவில்லை. காலம் கடந்தது...
திரைப்பட மீடியேட்டரும், விநியோகஸ்தருமான உடந்தை மணாளனைச் சந்தித்து, ""எம்.ஜி.ஆர். கால்ஷீட் தர்றேன்னு சொன்னார். ஆனா ஃபைனான்ஸ் புரட்ட முடியல. அவரை வச்சு படம் எடுக்க முடியாமலே போச்சு. இப்போ, சின்ன பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன். அப்பத்தான் என்னோட கஷ்டங்கள் தீரும்'' எனச் சொல்லியிருக்கிறார் கறீம்.
(உடந்தை மணாளன் என்னுடைய நண்பர். என் முதல் தயாரிப்பான "பைரவி' படத்தின் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை விற்றுக் கொடுத்தவர். "பைரவி' படம் வெளியான பிறகு அவரிடம் நான் அம்மன் கதை ஒன்றைச் சொல்லியிருந்தேன்.)
""கலைஞானம் என்கிட்டச் சொன்ன அம்மன் கதை பிரமாதமான கதை. அந்தக் கதையை வாங்கிடுங்க... தாமதம் வேணாம். ஏன்னா, இன்னிக்கி காலைலதான் கலைப்புலி தாணுகிட்ட அந்தக் கதையை வாங்கச் சொல்லி யிருந்தேன். தாணு, கலைஞானத்த சந்திக்கிறதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கங்க'' என உடந்தை மணாளன் சொல்ல...
கறீம் என்னைச் சந்தித்து, ""கதையை நீங்க எனக்கு குடுக்கணும். நானும் ஒரு எழுத்தாளன். ஒரு எழுத்தாளனுக்குச் செய்ற உதவியா இதைச் செய்யணும்...'' எனச் சொல்லி 501 ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தார்.
கறீமை நான் அறிவேன். "எழுத்தாளரான அவரிடம் பேரம் பேச வேண்டாம்' என சம்மதித்து, ""இந்தக் கதையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன் செஞ்சா நல்லா இருக்கும். நீங்க விரும்பினா அவர்ட்ட பேசுறேன்'' எனச் சொன்னேன்.
"பேசிடுங்க'’ எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் கறீம்.
""கலைஞானம்... இந்தக் கதையை நீ இப்ப எந்த தயாரிப்பாளருக்குச் சொல்லியிருக்க?''’’
""தமிழ் சினிமா கறீமுக்கு''
""அப்படின்னா நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். படப்பைல ரெண்டு ஏக்கர்... அருமை யான நிலம். ரெண்டு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் சொல்றாங்க. இப்ப நாற்பதாயிரம் ரூபா அட் வான்ஸா கேட்குறாங்க. நீ கறீம்கிட்ட சொல்லி, நாற்பதாயிரம் ரூபா வாங்கிக்கொடு. என்னோட சம்பளத்த அப்புறம் பேசிக்கலாம்''’ என்றார் கோபாலகிருஷ்ணன்.
கறீமிடம் விஷயத்தைச் சொன்னேன்.
""அப்படின்னா... "கறீம் தயாரிக்கப்போற பக்திப் படத்தை நான் டைரக்ஷன் செய்யப்போறேன்'னு டைரக்டர்கிட்ட ஒப்புதல் கடிதம் வாங்கிட்டு வந்து குடுங்க. அந்த கடிதத்தை ஃபைனான்ஸியர்கிட்ட காட்டி பணம் வாங்கித் தர்றேன்'' என்றார். கறீம் சொன்னபடி... கோபாலகிருஷ்ணனிடம் கடிதம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். அதை ஃபைனான்ஸியரிடம் காட்டி பணம் வாங்கி... கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்தார் கறீம்.
"அம்மன்' என்ற தலைப்பில் நான் சொன்ன கதையை "ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி' என டைட்டில் வைத்து, கோபாலகிருஷ்ணனுக்குச் சொந்தமான கற்பகம் ஸ்டுடியோவில் பூஜை போட்டார் கறீம். கோபாலகிருஷ்ணன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதால்... அவரின் ரெகுலர் விநியோகஸ்தர்கள்... பூஜை யன்றே எல்லா ஏரியா விநியோக உரிமையையும் விலைபேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டனர். அட்வான்ஸ் பணமே ஏழு லட்ச ரூபாய் குவிந்துவிட்டது.
அந்தப் படக் கதையைச் சொல்கிறேன்...
ஜெயிலிலிருந்து தப்பித்து ஒற்றையடிப் பாதைவழியாக ஓடுகிறான் ஒரு திருடன். போலீஸ் துரத்துகிறது. கல்லில் கால் இடறி, அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து மறைந்து கொள்ள, போலீஸ் திசைமாறி ஓடுகிறது. திருடன் எழுந்து, சதுர வடிவ கல்லைத் தொட்டு "என் னைக் காப்பாற்றிய கடவுளே'’ என வணங்க... அந்த வழியாகச் சென்ற ஒருத்தி "இது என்ன சாமி?' எனக் கேட்க... "இது வனபத்ரகாளி... சக்தியான தெய்வம்'’என்கிறான். ‘"நான் வாராக்கடன் ஆயிரம் ரூபாயை வசூலிக்க போய்க்கிட்டிருக்கேன். வசூலானா 250 ரூபாய் சாமிக்கு காணிக்கை தர்றேன்' என சொல்லிவிட்டுப் போனாள். கடன் வசூலானது. திரும்பி வந்து 250 ரூபாயை திரு டனை, பூசாரி என நினைத்து காணிக்கை செலுத் தியவள்... "அம்மனோட சக்தியை ஊருக்குள்ள சொல்றேன். ஒரு கோவில் கட்ட ஏற்பாடு செய்ய லாம்' எனச் சொல்லிவிட்டுப் போனாள். "இப்படிப்பட்ட முட்டாள் ஜனங்க இருக்கிறவரை நாம வேற வேலைக்கு போகத் தேவையில்லை' என்றபடி அங்கேயே உட்கார்ந்துவிட்டான். நொந்து நொடித்த மக்கள் வனபத்ரகாளியை தேடிவந்து வணங்கியதுடன், "அம்மன் ஏன் சதுரக்கல்லா இருக்கு?' எனக் கேட்க... "சில கோவில்கள்ல சாமிக்கு உருவம் இருக்காது. பீடம் மட்டும்தான்...' என திருடன் சமாளித்தான். வசூல் வரவர... சிறிதாக ஒரு கோவில் கட்டினான். அம்மன் புகழ் பரவி பெரிய கோவிலானது. அங்கேயே ஒரு ஊரும் உருவானது. கோவில் தர்மகர்த்தாவானான் திருடன்.
ஒரு சிற்பி, அழகான அம்மன் சிலையை செதுக்கினான். ஜமீன்தார்களிடம் "இந்த அம்மனுக்கு கோவில் கட்டுங்கள்' எனக் கேட்டான். "இருக்கிற கோவில்களையே பராமரிக்க முடியல, இதுல நீ வேற...' என அலட்சியப்படுத்தினர். கோபமான சிற்பி, மாட்டுவண்டியில் சிலையை ஏற்றிக் கொண்டுவந்து, ஒரு காட்டுக்குள் இருந்த பள்ளத்தில் தள்ளிவிட்டு மண்ணைப் போட்டு மூடினான். உருவம் மண்ணுக்குள்ளும், பீடம் வெளியேவும் இருந்தது. அதுதான் உருவமற்ற கோவிலாக புகழடைந்திருக்கிறது.
கோவில் உண்டியலில் மக்கள் காணிக்கையை கொட்டினார்கள். உண்டியலுக்கு மூன்று பூட்டுகள். மூன்று சாவிகளில் ஒன்று திருட்டு தர்மகர்த்தாவிட மும், மற்ற இரண்டும் ஊர்ப் பெரியவர்களிடமும் இருக்கும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி இரவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை வங்கியில் செலுத்தப்படும். ஆனால்... ஊராரிடம் இருக்கும் இரண்டு சாவிகளுக்கும் டூப்ளிகேட் சாவி தயாரித்து வைத்திருக்கும் தர்மகர்த்தா, உண்டியல் திறக்கப்படும் நாளின் முந்தைய இரவில், தனது நண்பனுடன் வந்து, பாதி நகை-பணத்தை எடுத்து தன் வீட்டில் ஒளித்து வைப்பான்.
தர்மகர்த்தாவால் இந்த கோவில் பிரபலமானதால் அவனுடைய ஆன்மிக சேவையை மெச்சி... ஊர் மக்களே சேர்ந்து ஒரு அம்மன் பக்தை யை திருமணம் செய்துவைத்தார்கள். உண்டியல் திறக்கும் முந்தைய நாள் இரவில் தன் கணவன் ஒரு தோல்பையை எடுத்துக்கொண்டு பதட்டமாக போவதை கவனித்தாள். வீடு திரும்பிய கணவன் பீரோவில் நகை, பணம் அடுக்குவதைப் பார்த்தாள். திருட்டை கண்டுபிடித்தாள்.’"நீங்கள் என் கணவர். அதனால் நான் உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன். ஆனா... அந்த அம்மன் உங்களை வாழ விடமாட்டாள்' என மனைவி கண்டித்தாள். "அம்மனையே நான்தான் வாழ வைக்கிறேன்' என அலட்சியமாகச் சொன்னான்.
காலம் கடந்தது. தர்மகர்த்தா தம்பதிக்கு மகள் பிறந்தாள். குழந்தையின் முதுகில் சூலாயுதம்போல நரம்புகள் இருப்பதைக்கண்டு... "தர்மகர்த்தாவுக்கு அம்பாளே மகளா பிறந்திருக்கா' என்கிறார்கள் மக்கள். உள்ளூர அச்சம்கொண்ட தர்மகர்த்தா... தன் குழந்தையின் கையில் இருக்கும் நூல் பாம்பாக மாறுவதாக அலறுகிறான். இப்படி அவளின் ஒவ்வொரு செயலும் அவனை அச்சமூட்டுகிறது. "நீங்க எடுத்து வச்சிருக்க அம்மனோட நகை பணத்தை உண்டியல்லயே போட்டுடுங்க' என மனைவி சொல்ல... நண்பனிடம் விவாதிக்கிறான் தர்மகர்த்தா. "குழந்தையை காட்டுல கொண்டுபோய் விட்டுடுறேன்' எனச் சொல்லி அதன்படியே செய்கிறான் நண்பன். தற்செயலாக அந்தப்பக்கம் வந்த சிற்பி, குழந்தையின் அழுகுரல் கேட்டு... அவளை தூக்கிவந்து வளர்க்கிறான். அவள் பெரியவளானாள். தான் வேண்டிக்கொண்டபடி சிவலிங்கம் பொறித்த தன் சங்கிலியை உண்டியலில் போட்டுவிட்டு, அன்று அவ்வூரிலேயே தங்கி விரதம் இருக்கிறாள். மறுநாள் உண்டியல் பணம், நகை எண்ணப்படும்போது... தான் போட்ட செயின் இல்லாததைக் கண்டு ஊராரிடம் முறையிடுகிறாள். அவளுக்கு ஆதரவாகவும், தர்மகர்த்தாவுக்கு ஆதரவாகவும் ஊர் ரெண்டுபட்டு மோத... இதில் அவள் காயமடைகிறாள். சிற்பி வந்து மக்களிடம், தான் செய்த சிலையை அங்கே கவிழ்த்திய கதையைச் சொல்ல... ஊர்மக்கள் தோண்டிப் பார்க்க... அம்மன் சிலை வெளிப்படுகிறது. தர்மகர்த்தாவின் திருட்டுத்தனம் வெளியே தெரிகிறது. மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறான்.
தர்மகர்த்தாவாக தேங்காய் சீனிவாசன், அவனின் மனைவியாக கே.ஆர்.விஜயா, மகளாக சுஜாதா, நண்பனாக எம்.ஆர்.ஆர்.வாசு நடிக்க ஏற்பாடாகி "ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி' படப்பிடிப்பு தொடங்கியது. ஆறாம் நாள் ஷூட்டிங் நடத்த பணமில்லை. விநியோகஸ் தர்களிடம் மீண்டும் பணம் கேட்டார் கறீம். "அட்வான்ஸா வசூலான ஏழு லட்சத்துல பாதி படம் முடிக்கலாமே?' என விநியோகஸ்தர்கள் கேட்க... ""கறீம் பணத்தை ஒதுக்கிவிட்டார்'' என கோபாலகிருஷ்ணன் சொல்ல... ""கோபாலகிருஷ் ணன் நிலம் வாங்க அட்வான்ஸா 40 ஆயிரம் குடுத்தேன். இதுக்கு கலைஞானம் சாட்சி. அப்புறம் ஏதோ அவசரம்னு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கேட்டார் டைரக்டர், கொடுத்தேன்'' என்றார் கறீம். "என்னோட ஸ்டுடியோவுக்கான வாடகைதான் வாங்கினேன்' என கோபாலகிருஷ்ணன் சொன்னார். மாறி மாறி குற்றம் சாட்டி படம் எடுப்பதை நிறுத்திவிட்டனர். எனக்கு கிடைத்தது... ஆரம்பத்தில் தரப்பட்ட 501-தான். இது எனக்கு பழகிப்போன விஷயம். இந்தப் பிரச்சினையை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியிடமே விட்டுவிட்டேன்.
(நல்லதங்காள் சொன்ன பாடம்)