(95) வெளியே தெரியாத வள்ளல்!
கே.ஆர்.விஜயா அவர்களின் கணவர் வேலாயுதம் நாயர் அவர்களின் வியக்கத்தக்க மறுபக்கத்தைச் சொல்கிறேன்.
கே.ஆர்.விஜயாவை ஃபைனான்ஸியர் வேலாயுதம் நாயர் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற செய்தி வெளியானதும்... சில முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் "சிட் ஃபண்டு வைத்து நடத்துபவர் வேலாயுதம். எந்த நேரத்திலும் கம்பெனியை மூடிவிடுவார்... அதன்பிறகு உன்பாடு சிரமமாகிவிடும்' என விஜயாவிடம் சொன்னார்கள்.
""அவங்கள்லாம் அவரை மின்சார விளக்காகப் பார்த்தாங்க. ஆனா, நான் அவரை வாழ்க்கையின் ஒளிவிளக்காகப் பார்த்தேன். வேலாயுதம் நாயரின் அன்பும், அரவணைப்பும்தான் என்னோட வாழ்க்கையை உயர்த்தியது'' என புகழாரம் சூட்டினார் விஜயா.
யார், யாரெல்லாம் விஜயாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் களோ... அவர்களெல்லாம் பிறகு. வேலா யுதத்திடம் பணஉதவி கேட்டு வந்ததையும், சில திறமையுள்ள தயாரிப்பாளர்களுக்கு, எந்தவிதமான உத்திரவாதமும் வாங் காமலேயே பணத்தை வாரிக் கொடுத்ததையும் நானறிவேன்.
வேலாயுதம் மிகச்சிறந்த கலைஞானமுடையவர். விஜயாவுக்காக நான் கதை எழுதித் தரும்போதெல் லாம் என்மீது அளவு கடந்த பாசம் வைத்துப் பாராட்டுவார்.
ஒருநாள் அவர் நடத்திவந்த கலைக்கூடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே கல்லூரிப் படிப்பு படித்த ஆறு பெண்கள்... கலைக்கூடத்திலிருந்த பல நூல்களை எடுத்து படித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நூல்களில் இடம்பெற்றிருந்த கதையின் கருவையும், முக்கியமான சம்பவங்களையும் நோட்டில் குறித்துக் கொண்டிருந்தனர். ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம் மொழி நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. கூடத்தில் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள் இருந்தன.
""இவ்வளவு புத்தகங்கள் இருக்கே... இந்த புத்தகங் கள்லருந்து இந்தப் பெண்கள் என்ன எழுதுறாங்க? இதெல்லாம் எதுக்கு?'' என வேலாயுதத்திடம் கேட்டேன்.
""புத்தகங்களில் கிடைக்கிற நல்ல கதைக் கருக்களையும், நல்ல சம்பவங்களையும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கொடுத்திட்டிருக்கேன். இதன்மூலம் நல்ல படங்கள் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கு மல்லவா?'' என்றார்.
நான் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்.
ஒரு தனிமனிதன் தன் சொந்த செலவில் நூல்களை வாங்கி, பாதுகாத்து, படித்த பெண்கள் ஆறுபேர்களுக்கு சம்பளமும் கொடுத்து... தயாரிப்பாளர்களுக்கு சேவை மனப்பான்மையோடு உதவுகிறாரென்றால்... வேலாயுதம் தானே கலைஞானன்.
ஏழை -பணக்காரன் என்கிற பாகுபாடே அவரிடம் பார்க்க முடியாது. குழந்தைபோல அனைவரிடமும் பழகி மகிழ்வார். விஜயாவும் வீட்டில் இருக்கும்போது புகழ்பெற்ற நடிகை போல இருக்கமாட்டார். ஒரு வேலைக்காரப் பெண்மணிபோல இருப்பார். வீட்டு வேலைகளை விரும்பிச் செய்வார். கணவருக்கு விதவிதமாக தன் கையால் சமைத்துக் கொடுப்பார். கணவருடன் அவரின் நண்பர்கள் எத்தனை பேர்கள் அமர்ந்து சாப்பிட்டாலும்... அத்தனை பேர்களுக்கும் தன் கையால் பரிமாறுவார். தானும் உடனிருந்து சாப்பிடுவார். அப்படியொரு அன்பான... மனிதநேயமுள்ள குடும்பத்தலைவி விஜயா.
அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கிய சில மாதங்களி லேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்திக்க முடிவுசெய்தார் எம்.ஜி.ஆர். அந்தச் சமயத்தில் தேர்தல் செலவிற்கு போதுமான பணம் எம்.ஜி.ஆரின் கைவசம் இல்லை. வேலாயுதத்தைச் சந்தித்தார். கணக்குப் பார்க்காமல் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொடுத்த வேலாயுதம்... ""இது எம்.ஜி.ஆர். என்கிற நடிகருக்கு நான் செய்யும் உதவியல்ல... நல்ல மனிதருக்குச் செய்யும் உதவி'' எனச் சொன்னதுடன் ""மேலும் தேவைப்பட்டால் தெரிவியுங்கள் தருகிறேன்'' என்றும் சொல்லியனுப்பினார்.
அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர். பெரும் வெற்றிகண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்த எம்.ஜி.ஆர். அடுத்து வந்த பொதுத்தேர்த லில் வெற்றிவாகை சூடி... முதலமைச்சர் ஆனது உலகறிந்ததே.
வேலாயுதம் நாயர் என்னதான் திறமைமிக்க புத்திசாலியாக இருந்தாலும் நேரம் சரியில்லையென்றால் விதி விட்டுவைக்குமா?
அவர் நடத்திவந்த "சுதர்ஸன் சிட் ஃபண்ட்ஸ்' நிறுவனத்தால் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார். அந்த நேரம் வள்ளல் எம்.ஜி.ஆர் விரைந்து உதவினார்.
"காலத்தினால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'’
என்ற வள்ளுவனின் வாய்மையை என்றும் மறவாத வள்ளல் எம்.ஜி.ஆர்., வேலாயுதம் நாயருக்கு வேண்டிய பண உதவியைச் செய்தார் என்பதை நானறிவேன்.
(எம்.ஜி.ஆர். கட்சி துவங்கி திண்டுக் கல் இடைத்தேர்தலை சந்தித்த நேரத்தில் வேலா யுதம் உதவியதையும், சின்னப்ப தேவர் உதவி யதையும், இது குறித்து இன்னும் விபரமாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் நான் எழுதிய "சினிமா சீக்ரெட்' நூலை படிக்கலாம்)
ஒருநாள்... கே.ஆர்.விஜயாவும், வேலாயுதம் நாயரும் என்னிடம் ""டைரக்டர் "உதிரிப்பூக்கள்' மகேந்திரன் இப்போ கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கதா கேள்விப்பட்டோம். அவரைப் பத்தின முழுவிபரம் தெரிஞ்சா சொல்லுங்க'' என என்னிடம் கேட்டார்கள்.
நான் கதை எழுதிய "வெகுளிப் பெண்' படத்திற்கு, தான் வேலைபார்த்த "துக்ளக்' பத்திரிகையில் மிக நன்றாக விமர்சனம் எழுதியிருந்தார் மகேந்திரன். நேரில் வந்தும் எனக்கு வாழ்த்துச் சொன்னார். அன்று முதல் அவருடன் அன்புக்குரிய நண்பராக பழகிவந்தேன். ஒருநாள் நான் காரில் தேவர் ஃபிலிம்ஸ் அலுவலகத்திற்கு கதை விவாதத்திற்காக சென்று கொண்டி ருந்தபோது... சாலையோரம் நின்று, யாரையோ எதிர்பார்த்துக்கொண்டிருந் தார் மகேந்திரன். காரை நிறுத்தச்சொல்லி இறங்கி அவரிடம் போனேன்.
""என்ன மகேந்திரா? யாரை எதிர்பார்த்துக் கிட்டிருக்க?''
""அண்ணே... நான் கருத்துவேறுபாடு காரணமா "துக்ளக்' பத்திரிகைலருந்து விலகிட்டேன். வேற எங்கயும் வேலை கிடைக்கல. அதனால் எங்க ஊருக்கு குடும்பத்தோட இன்னைக்கி போறேன்ணே...'' என்றவரைத் தடுத்து தேவர் ஃபிலிம்ஸில் வேலை வாங்கிக் கொடுத்தேன். அந்த நேரம்தான்... "தங்கப் பதக்கம்' நாடகம் எழுத சிவாஜி ஃபிலிம்ஸிலிருந்து மகேந்திரனுக்கு அழைப்பு வந்தது. நாடகம் பெரும் வெற்றிபெற்று... அது படமாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து "முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்' என டைரக்டராகவும் பெரும் வெற்றிபெற்றார். அதன்பின் அவர் இயக்கிய ஐந்து படங்கள் வர்த்தக ரீதியாக தோல்வி. இதனால் வேதனையடைந்து குடிக்க ஆரம்பித்தார்... நிறுத்தவில்லை... குடி யால் குடும்பம் தள்ளா டியது.
""அண்ணே, ரொம்ப கஷ்டமா இருக்கு... ஒரு உதவி செய்யுங்க. நான் உங்க பேனர்லயே ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கப்போறதா ஒரு விளம்பரம் கொடுங்க. இதைப் பார்த்திட்டு டைரக்ஷன் வாய்ப்புகள் வரும்'' என்றார். அவர் சொன்னதுபோலவே என் செலவில் விளம்பரம் செய்தேன். ஆனால் வாய்ப்பு எதுவும் வராததாக மகேந்திரன் சொன்னார். இதை நான் விஜயாவிடமும், வேலாயுதத்திடமும் சொன்னபோது...
""இப்பவும், தன்னை அடையாளம் தெரியாம இருக்க தலையில உருமா கட்டிக்கிட்டு.. சாராயக் கடைப் பக்கம் அவர் போறதா கேள்விப்பட்டேன்'' என்ற வேலாயுதம்... ""இப்படித்தான் மதுரை திரு மாறனும் சதா குடியா இருக்காரேனு, அவரோட குடும்பத்துக்கு உதவுமேனு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தேன். விஜயாவையும் அந்தப் படத்துல நடிக்கவச்சேன். 5000 அடிவரைக்கும் படத்தை எடுத்தார். ஏகப்பட்ட செலவு எனக்கு. ஒருநாள்... ஓவரா குடிச்சு இறந்துட்டார்'' என்றார்.
""திருமாறனுக்கு அஞ்சலி செலுத்த நானும் போயிருந்தேன். விஜயா வந்து அஞ்சலி செலுத்தி னார். இதுல ஒரு கொடுமை என்னன்னா... திருமாறன் உடலை பாடையில் சுமக்க நாலு பேர்ல மூணுபேர் திருமாறனோட சகோதரர்கள்... ஒருத்தர் தேவைப்பட்டது. திருமாறன் டைரக்ஷன்ல "சூதாட் டம்', "வாயாடி', "திருடி' மற்றும் "தாய்வீட்டுச் சீதனம்' படங்களை தயாரிச்ச... ஜுபிடர் ஃபிலிம்ஸ் முதலாளி சோமு அவர்களோட மகன் எம்.எஸ்.காசி யும், நானும் தூரத்திலிருந்த ஒரு குடிசைவாசியை அணுகி உதவிசெய்யக் கேட்டோம். அந்த நல்ல உள்ளம் சம்மதிச்சது. தேவர் ஃபிலிம்ஸில் நாலு படங்களுக்கு வசனம் எழுதியவர் திருமாறன். ஆறு வெற்றிப்படங்களை இயக்கியவர். அவரோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே'' என்றேன் நான்.
சிறிது நேரம் எங்களிடையே மௌனம் நிலவியது.
""நான் ஒண்ணு சொல்றேன்... சரியா வரு மா?னு பாருங்க கலைஞானம்...'' என மௌனத்தை கலைத்த விஜயா, ""நான் மதுரை திருமாறன் டைரக்ஷன்ல ஏழு படங்கள்வரை நடிச்சிருக்கேன். இப்ப அவரை வச்சு எடுத்து பாதியில் நிக்கிற படத்தை மகேந்திரனை எடுக்கச் சொல்வோம். வர்ற லாபத்துல திரு மாறன் குடும்பத்துக்கும், மகேந்திரனுக்கும் பகிர்ந்து கொடுத்துடு வோம். எங்களுக்கு போட்ட முதல் வந்தாலும் சரி, வரலேன்னாலும் சரி...'' என்றார்.
மறுநாளே... மகேந்திரனை அழைத்து பாதி எடுத்த படத்தை போட்டுக் காட்டினேன். பல தடவை பார்த்தார் மகேந்திரன்... ""இந்தக் கதையை இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?'' என பத்து நாட்களாக குழம்பினார்.
""நீங்க எப்படி எடுத்தாலும் எங்களுக்குச் சம்மதம்'' என வேலாயுதம் சொன்னதும், நான்கு நாட்கள் டயம் கேட்டுச் சென்றார் மகேந்திரன்... சொன்னபடி வரவில்லை.
நட்பை வளர்ப்பவர், நஷ்டத்தைப் பற்றி கவலைப்படாதவர், நொடிந்து வீழ்ந்து கிடக்கும் படைப்பாளிகளை... தயாரிப்பாளர்களை அரவணைத்து உற்சாகமூட்டி படம் எடுக்க பண உதவி செய்த குணவள்ளலே வேலாயுதம். கஷ்டப்படுகிறவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லி வேலாயுதம் சொன்னால்... பதினைந்தாயிரமாக கொடுக்கக்கூடியவர் விஜயா என்பதை அறிந்தவன் நான். இருவருமே ஈகை உள்ளம் உள்ளவர்கள்.
அம்மன் வேடங்களில் புகழ்பெற்ற கே.ஆர்.விஜயாவின் குடும்பத்திற்கு...
அம்மன் வைத்த சோதனை!
"கேரக்டர்' தொடர் குறித்து என்னிடம் பேச விரும்புபவர்கள் மாலை 5 மணிக்கு மேல் 96770 61186 என்ற எண்ணில் பேசலாம்.
-கலைஞானம்