(93) நெகிழ வைத்த கர்னல்!
புனே ஸ்ரீ பாலாஜி யுனிவர்ஸிடியின் வேந்தர் ஐயா திரு கர்னல் டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்கள், என்னிடம் ஒரு கதைக் கருவைச் சொன்னார்.
கல்விக்கூட கட்டுப்பாடுகளையும், மாணவ மாணவிகளின் மாசறு செயல்களையும், அவர்களின் உன்னத நோக்கங்களையும் விவரித்து ""இதன் அடிப்படையில் ஒரு படம் எடுக்கவேண்டும்'' என நோக்கத்தைச் சொல்லி, அந்த கதைக் கருவைச் சொன்னார். அந்தக் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதித்தரும்படிக் கூறி அதற்காக முன்பணமும் கொடுத்தார்.
அவரின் அன்பான வேண்டுதலை ஏற்று, சில நண்பர்களுடன் விவாதித்து "வந்தாளே தேவதை' என்ற தலைப்பில் திரைக்கதையை உருவாக்கினேன்.
23-08-2019 அன்று விமானம்மூலம் புனே சென்று பாலசுப்பிரமணியன் அவர்களைச் சந்தித்து, கதையைச் சொன்னேன்.
பாராட்டி மகிழ்ந்ததோடு, ""இன்னும் சில கருத்துக் களைச் சொல்கிறேன்... அதையும் இந்தக் கதையில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்றார். அதன்பிறகு...
""யுனிவர்ஸிடியில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது... நீங்களும் என்னுடன் வாருங்கள்'' எனச் சொல்லி அழைத்துச் சென்றார். வீல்சேரில் அவர் செல்ல... நானும் அவருடன் சென்றேன். எனக்கு மிகுந்த சஸ்பென்ஸாக இருந்தது.
இருபுறங்களிலும் கல்லூரி அதிகாரிகள் நின்று ராணுவ அணிவகுப்புபோல மரியாதை செய்தார்கள்.
மிகப்பெரிய மேடையில் நான்கு இருக்கைகள் மட்டும் போடப்பட்டிருந்தன. மேடையின் எதிர்புறங் கள் மிகப்பெரும் திரைச்சீலைகளால் மறைக்கப்பட்டி ருந்தது. ஐயா அவர்கள் மேடையில் அமர்ந்ததும் என்னையும் ஒரு இருக்கையில் உட்காரச் செய்தார்.
திரை விலகியபோது.... என்னால் தாளமுடி யாத வியப்பு. சுமார் நான்காயிரம் மாணவர்கள் ஐயாவுக்கு மரியாதை செய்து கரவொலி எழுப்பி னார்கள். அங்கே அமர்ந்திருந்த மாணவர்கள் நம் நாட்டுக்காரர்களா? இல்லை... அமெரிக்கா, இங்கிலாந்து மாணவர்களா?
என்ன அற்புதம்... இருபது வயதிற்குட்பட்ட மாணவச் செல்வங்கள் ஒரே மாதிரியான உடையுடன் அமர்ந்திருந்தனர். பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஐயா அவர்கள் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார்கள்...
""என் அன்புக்குரிய மாணவர்களே... இப்போது என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மரியாதைக்குரிய வரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்... இவர் பெயர் கலைஞானம். தமிழ்த் திரைப்படங்கள் பல தயாரித்தவர். கதை வசனகர்த்தா, இயக்குநர், நடிகர். இவர் தயாரித்த முதல் படம் "பைரவி'. அந்தப் படத்தில் வளரும் நடிகராக இருந்த ஒரு புதுமுகத்தை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...'' என ஐயா சொன்ன தும்... நான்காயிரம் மாணவர்களும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். அந்தக் கரவொலி ஓயவே இல்லை. நான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டேன்.
ஐயா தொடர்ந்து பேசினார்....
""இவர் ரஜினிகாந்த்தை மட்டும் அறிமுகம் செய்ய வில்லை... குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் ஹாசன் இளமைப் பருவம் வந்ததும்... தான் கதை எழுதிய "குறத்தி மகன்' என்ற படத்தில் அறிமுகம் செய்தார். இப்படி பல புதுமுகங்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் அறிமுகம் செய்தவர். அத்துடன் இந்தியில் "லவ் 86'’படத்தில் கோவிந்தாவை அறிமுகம் செய்தவர்...'' என்று ஐயா சொன்னதும்...
மாணவர்களின் கரவொலி வானைப் பிளந்தது.
ஐயா தொடர்ந்தார்...
""தர்மேந்திராவும், ஹேமாமாலினியும் நடித்த "மா' படத்தின் கதையை எழுதியவர் இவர்தான்'' எனச் சொல்ல...
கரவொலி நிற்கவே இல்லை.
நான் காண்கிற காட்சி உண்மைதானா? என்று மலைத்துப் போனேன்.
ஐயாவின் பேச்சு தொடர்ந்தது...
""இவர் படித்தது இரண்டாம் கிளாஸ் வரைதான்...'' என்றதும்... மேலும் மேலும் கரவொலி அதிர்ந்தது. அடுத்த விநாடியே இரு சகோதரிகள் என் மீது மலர் தூவினார்கள். மற்றொருவர் பொன்னாடை போர்த்தி எனக்கு மலர்க் கிரீடம் சூட்டினார். பரிசாக சரஸ்வதி சிலை ஒன்றும் வழங்கினார்கள். இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பாராட்டுவிழா.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்... மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. சினிமா ஸ்டார்களைப் போலவே அழகாக இருந்த அத்தனை மாணவச் செல்வங்களும் ஆடல் பாடல் என அசத்திவிட்டார்கள்.
அரங்கமும், அலங்காரமும், மாணவர்களின் நடனமும்... ""இது என்ன தேவலோகமா? இல்லை நம்ம காலமா?'' என பிரமித்துப் போனேன்.
மூன்று மணிநேர விழா... மூன்று நிமிடமாக உணரவைத்தது. என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருந்து... இப்படி ஒரு விழாவை ஐயா எடுக்கக் காரணம்...
""நக்கீரன்’ இதழில் நான் மூன்று வருடங்களாக தொடர்ந்து எழுதிவந்த "சினிமா சீக்ரெட்' மற்றும் எழுதிக்கொண்டிருக்கும் ‘"கேரக்டர்' தொடர்களை தொடர்ந்து படித்துவிட்டு... "யார் இந்த கலைஞானம்?' என நக்கீரன் கோபால் அவர்களிடம் விசாரித்து... ""நான் அவரை பார்க்கவேண்டும்'' என்று சொல்ல... நக்கீரன் கோபால் அவர்களும் என்மீது அன்புகொண்டு... ஐயா சென்னை வந்த சமயத்தில் என்னை ஐயாவிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
ஐயா அவர்கள் என் இரு கரங்களையும் பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டார். பொன்னாடை போர்த்தி பொற்கிழியும் வழங்கி நெஞ்சார வாழ்த்தியதோடு.... ""இன்று முதல் எனக்கு நீங்கள் உடன்பிறந்த அண்ணன்'' என்று சொல்லி, அன்பையும் பாசத்தையும், அகமும் முகமும் மலர பாராட்டி மகிழ்ந்தார் பச்சைத் தமிழன் பாலசுப்பிரமணியன். இது பூர்வஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்தான்.
பாரதிராஜா எனக்கு எடுத்த பாராட்டுவிழாவில் கலந்துகொள்ள... விரும்பிய ஐயாவுக்கு... உடல்நலக்குறை வால்... முடியாமல் போனதால்... விழாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், விழாவுக்காக ஒரு அன்புத் தொகையையும் வழங்கினார்கள்.... என்பதை நான் என் வாழ்நாளில் மறக்கத்தான் முடியுமா?
மிகவிரைவில்....
ஐயா எழுதிய கதைக்கு நான் முழுமையாக திரைக்கதை வசனம் எழுதியதும்... பட வேலைகள் நடக்கும். அதனால் பலருக்கு வாழ்வு கிடைக்கும்.
வள்ளல் குணம் படைத்த ஸ்ரீ பாலாஜி யுனிவர்ஸிடி வேந்தர் ஐயா பாலசுப்பிரமணியன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்த அன்புத்தம்பி நக்கீரன் கோபால் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புன்னகை அரசி நடிகை கே.ஆர்.விஜயாவின் கதையை எழுதுகிறேன்...