(92) கைச்செலவுக்காக காத்திருந்த கதாநாயகன்!

"மந்திரிகுமாரி' புகழ் எஸ்.ஏ.நடராஜன் "நல்லதங்கை' படத்தயாரிப்பில் சாண்டோ சின்னப்ப தேவரையும் ஒரு பார்ட்னராகச் சேர்த்திருந்தார். கம்பெனி காரில் துணை நடிகையை ஏற்றி அனுப்பிய விவகாரத்தில் கோபமான தேவர், நடராஜனிடம் விளக்கம் கேட்டதில் இருவருக்கும் சண்டை ஏற்பட... அலுவலகத்தில் இருந்த சேரை எடுத்து தேவரை தாக்கிவிட்டார். மறுநாள் அங்குவந்த ஏ.பி.நாகராஜன் அவர்கள்... தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்தார்.

தேவரை ஃபார்ட்னர்ஷிப்பிலிருந்து விலக்கிய ஏ.பி.நாக ராஜன், சின்னப்ப தேவருக்கு "தேவர் ஃபிலிம்ஸ்' என்கிற கம்பெனி யையும் ஆரம்பித்துவைத்தார். எம்.ஜி.ஆரை வைத்து "தாய்க்குப்பின் தாரம்' படத்தை முதன்முதலாக தயாரித்து... தொடர்ந்து பல படங்கள் தயாரித்து, வெற்றிக்கொடி கட்டி பறந்துகொண்டிருந்தார் தேவர்.

நொடித்துப் போயிருந்த நடராஜன், தேவரிடம் உதவியோ, படத்தில் நடிக்கும் வாய்ப்போ கேட்கத் தயங்கியதற்கு இந்தச் சண்டைதான் காரணமாக இருந்தது. இருப்பினும் தேவரைச் சந்தித்து தனக்கு பட வாய்ப்பு கேட்க தன் மனைவி அபரஞ்சியை அனுப்பிவைத்தார் நடராஜன்.

Advertisment

தேவர் ஃபிலிம்ஸ் அலுவலக மேனேஜரிடம் நிலைமையைச் சொல்லி... தேவரைச் சந்திக்க அனுமதி கேட்டார் அபரஞ்சி அக்கா.

ஆனால்... அபரஞ்சியை நேரில் சந்திக்க மனசு இடம்கொடுக்க வில்லை தேவருக்கு. நடராஜன் தன்னை சேரை எடுத்து அடித்த சம்பவம் நினைவில் நெருப்பைக் கக்கியது தேவருக்கு. ஏதோ... அன்றைக்குத்தான் அந்தச் சம்பவம் நடந்ததுபோல... வெறுத்தார். ""நடராஜனுக்கு சான்ஸ் கொடுத்தால் மீண்டும் சண்டை சச்சரவுதான் வரும்... அதைவிட அவர் மனைவியிடம் ஐந்தாயிரம் பணம் கொடுத்து அனுப்புங்க. சந்தர்ப்பம் வரும்போது... நானே நடராஜனுக்கு சொல்லி அனுப்புறதா... சொல்லிடுங்க அந்தம்மாகிட்ட...'' என தேவர் சொல்லியிருக்கிறார்.

தேவர் யோசித்து இந்த முடிவை எடுப்பதற்குள்...

Advertisment

கால்கள் கடுக்க வெகுநேரம் காத்திருந்த அபரஞ்சி அக்கா... தன்னை தேவர் பார்க்க மறுத்ததை புரிந்துகொண்டு... யாரிடமும் சொல்லாமல்... கண்ணீர்மல்க... புழுங்கிய மனதோடும், புலப்படாத வாழ்க்கையோடும்... தி.நகரிலிருந்து கோடம்பாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு அந்த தெய்வமகள் நடந்தே சென்றார்.

""தேவர் என்னை பார்க்கவே இல்லை'' என நடராஜனிடம் மனம் நொந்து அழுதிருக்கிறார் அபரஞ்சி அக்கா.

"மந்திரிகுமாரி' படம் வெளியான சமயத்தில்... பல பட நிறுவனங்கள் நடராஜனை நடிக்கவைக்க பணத்துடன் தேடி வந்தன. ஆனால் வீம்புக்கு அதிக சம்பளம் கேட்டு... வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஏவி.எம்.ஸ்டுடியோ நிறுவனம் தேடி வந்து தந்த வாய்ப்பையும் நிராகரித்தார்.

ffa

காரணம்...

""நமக்குத்தான் இப்ப சினிமாவுல எல்லாம் தெரியுமே... இனிமேலும் அடிமை வேலை செய்யணுமா?'' என நினைத்து வாய்ப்புகளை தட்டிக் கழித்துவிட்டு... மூன்று படங்களை சொந்தமாக தயாரித்து... அதலபாதாளத்தில் வீழ்ந்தார். மீளவே இல்லை.

இது எதைக் குறிக்கிறது?

இதோ... ஒரு தீர்க்கதரிசியின் பொன்மொழியைத் தான் குறிக்கிறது...

வெற்றியை தலைக்குக் கொண்டுபோகாதே...

(கேடு வரும் கூடவே)

தோல்வியை இதயத்திற்கு கொண்டுபோகாதே...

(நோகவைத்தே சாகடிக்கும்)

இந்தப் பொன்மொழி எஸ்.ஏ.நடராஜனுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் பொருந்தும்.

"தாய்வீட்டு சீதனம்' என்ற நான் எழுதிய கதை, திரைப்படமாகிக் கொண்டி ருந்தது. நானும் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்தேன்.

""பாலகிருஷ்ணா...'' என்று ஒரு குரல். திரும்பிப் பார்த்து திகைத்துப்போனேன். முன்பு பார்த்ததைவிட மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார் நடராஜன்.

""வாங்கண்ணே...'' என அவரை அழைத்து ஒரு இருக்கையில் உட்காரவைத் தேன்.

""பாலகிருஷ்ணா... கைச் செலவுக்கு பணம் கேட்க ஒருஆளைத் தேடிப்போனேன். அவர் இல்ல. அப்படியே உன் நினைவு வந்துச்சு... நடந்தே வந்துட்டேன். பசிக்குது... ஏதாவது கிடைக்குமா?'' எனக் கேட்டார்.

""எனக்கு வேதனையாக இருந்தது. “இருங்கண்ணே...'' எனச் சொல்லிவிட்டுப் போய்... ஒரு பிளேட்டில் கம்பெனி சாப்பாடு வைத்துக்கொண்டு வந்து கொடுத்தேன்.

ஆறுமாதம் பட்டினி கிடந்தவர்போல ஆவலாக அள்ளிச் சாப்பிட்டார். நடராஜனின் கம்பெனி படங்களின் ஷூட்டிங் நடக்கும்போது... ஒருவேளைக்கு நூறுபேர் சாப்பிடு வார்கள். அதை எண்ணிப்பார்த்து... ""அவருக்கா இந்த நிலமை... கடவுளே...'' என்று பெருமூச்சு விட்டேன்.

சாப்பிட்டு முடித்ததும்... ""பாலகிருஷ்ணா, "மெட்ராஸ்ல குடும்பம் நடத்த என்னால முடியலப்பா...'“ என்றவர் சில நொடிகள் மௌனம் காத்தார். பிறகு பெருமூச்சுவிட்டபடி... "இந்தப் படத்துல ஏதாவது சின்ன வேஷம் இருந்தா வாங்கிக்குடு... கைச்செலவுக்கு ஆகும்' என்றார்.

ஒரு விநாடி என் உயிர் நின்று இயங்கியது.

சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த டைரக்டர் மதுரை திரு மாறனிடம் ""சார்... எஸ்.ஏ. நடராஜனுக்கு...'' என நான் சொல்லிமுடிக்கும் முன்பே...

""எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். இவருக்கா கலைஞானம் இப்படி ஒரு கஷ்டம்? ம்... படத்துல எல்லா வேஷமும் முடிஞ்சு போச்சே என்ன செய்றது? வேணும்னா ஒண்ணு செய் வோம். கே.ஆர்.விஜயா ரயில்ல போற காட்சியில... அவருக்கு எதிர் ஸீட்ல ரெண்டு பேர் பயணம் பண்றாங்க... அதுல ஒருத் தர், "ரயில் மெட்ராஸுக்கு எப்பப் போகும்?'னு பக்கத்துல இருக்கிறவர்கிட்ட அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருப்பார். பக்கத்தில் இருப்பவர் எரிச்சலாகி... "அட ஏம்ப்பா... கிட்ட இருந்து சும்மா தொந்தரவு கொடுக்குற? போ...' அப்படின்னு சொல்லுவார். அப்படிச் சொல்ற பக்கத்து ஸீட்காரரா அவரை வசனம் சொல்ல வைப்போம். அவரை உட்கார வை...'' என்றார் மதுரை திருமாறன். நடராஜனிடம் வசனத்தைச் சொல்லி ஒத்திகையும் பார்க்கப்பட்டது.

""கேமரா ஸ்டார்ட்... ரன்னிங்... ஆக்ஷன்...'' என டைரக்டர் சொன்னதும்... தனக்குரிய டயலாக்கை நடராஜன் உரக்கச் சொன்னதும், அவர் மாட்டி யிருந்த பல் செட் எகிறி விழ... படப்பிடிப்பில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

அஸிஸ்டெண்ட் டைரக்டர், அந்த பல்செட்டை எடுத்து, நடராஜனிடம் கொடுத்தார்.

"தரித்திரம் நம்மை இங்கேயும் நடிக்கவிடாமல் தலைகுனிய வைக்குதே...'’ என்று மனதளவில் வெதும்பி... "மந்திரிகுமாரியில் பக்கம் பக்கமாக வசனம் பேசி புகழ்பெற்ற எஸ்.ஏ.நடராஜா... நீ செத்துவிட்டாயா?' என மனம் புழுங்கி... பொலபொலவென்று கண்ணீரை உகுத்தவர்... அதிலிருந்து சிறிதுநேரம் மீளவேயில்லை.

படப்பிடிப்பு இடத்தில் அமைதி நிலவியது.

மதுரை திருமாறன் என்னை அழைத்து, ""கலை ஞானம்... அவர் நடிச்சது போதும்,. அவருக்கு 250 ரூபாய் தரச்சொல்றேன்... அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைங்க'' என்றார்.

ஒரு கவரில் 250 ரூபாயை வைத்து என் னிடம் கொடுத்தார்கள். நான் நடராஜனை தனியே அழைத்துச் சென்று... ""அண்ணே... இன்னிக்கி நீங்க நடிச்சதே போதும்னு டைரக்டர் சொல்லீட் டார். அடுத்து எடுக்குற படங்கள்ல நல்ல வேஷம் கொடுக்கலாம்னு சொல்லீருக்கார் எனச் சொல்லி பணக்கவரை அவரின் கையில் கொடுத்தேன்.

கண்ணீர் மல்க அதைப் பெற்றுக்கொண்டார்.

நானும் கண்ணீர் சிந்திவிட்டேன்.

அடுத்த சில நாட்களில்... எஸ்.ஏ.நடராஜன் இயற்கை எய்தினார். அவருக்காக அரை நிமிஷமாவது அமைதி காக்கலாம்.

மகாபாரதத்து கர்ணன் அன்னதானம் செய்யாததால் "சொர்க்கத்தில் இடமில்லை' என்று மீண்டும் பூமிக்கே திருப்பியனுப்பிவிட்டார்களாம்.

எஸ்.ஏ.நடராஜன் சினிமா எடுக்கும்போது... பல நூறு பேர்களுக்கு சோறுபோட்டவராயிற்றே...

என்றென்றும் வாழ்க எஸ்.ஏ.நடராஜன் குடும்பத்தினர்.

புனேவில் நடந்த புல்லரிக்க வைத்த விழா

_______________

நான் அறிந்த நக்கீரன் இதழ் வாழ்க பல்லாண்டு!

அன்பு ஐயா கலைஞானம் அவர்களுக்கு...

""உங்கள் "கேரக்டர்' தொடரில் பெரும் ஆன்மா விஷயங்கள் தெரிகிறது. பாராட்டுக்கள்... வாழ்த்துகள். அன்பின் சுடர் அண்ணன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி அருமையான தகவல்களை கேரக்டர் தொடர்மூலம் எழுதி, சரித்திரம் படைத்திருக் கிறீர்கள். அண்ணன் விஸ்வநாதனுக்கு தக்க சமயத்தில் பண உதவிகூட செய்துள்ளீர்கள். உங்கள் கருணை உள்ளம் போற்றத்தக்கது. அண்ணன் விஸ்வநாதன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தும்கூட அவரிடம் ஒரு எளிமைதான் காணமுடிந்தது. அண்ணன் விஸ்வநாதனைப் பற்றி கேரக்டரில் வந்த தகவல்களுக்கு ஆயிரம் வாழ்த்துகள்.

பி.டி.வினாயகம் கவிஞர்,

பித்தளை பாலீஷ் நிபுணர், சென்னை 600 084.