(90) நடிகையின் தாய் கொடுத்த சாபம்!

"மந்திரிகுமாரி' படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற எஸ்.ஏ.நடராஜன் அவர்கள், தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் "கோகிலவாணி' படத்தை இயக்கி, நடித்து, தயாரித்தார். தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினாக தாம்பரம் லலிதாவையும், கன்னடத்தில் புதுமுக நடிகையான சரோஜாதேவியையும் நடிக்கவைத்த னர். இந்தப் படத்தின் இருமொழி பதிப்புகளிலும் நான் துணை நடிகனாக ஏழு வேடங்களில் நடித் தேன். படம் இரு மொழிகளிலும் படுதோல்வி. நான் மீண்டும் ஊருக்குச் சென்று, மதுரையில் கார் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பிய சமயம்... "கோகிலவாணி' படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் ராகவன் என்னை எஸ்.ஏ.நடராஜன் தங்கியிருந்த ஓல்டு உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்த ராகவன் ""உன்னை வெய்ட் பண்ணச் சொல்லீருக்கார். நான் வேற கம்பெனிக்கு வேலைக்குப் போகணும்'' எனச் சொல்லிவிட்டு கிளம்புகையில்...

சரோஜாதேவியும், அவரின் அம்மாவும் அங்கே வந்தார்கள். ராகவனைப் பார்த்ததும் ஒரு வணக்கம் போட்டார்கள்.

""எஸ்.ஏ.நடராஜனும், அவரோட பார்ட்னர் ஜே.ஜி.விஜயனும் இங்கதான் தங்கீருக்காங்கனு கேள்விப்பட்டேன். அவங்களைப் பார்க்கணும்'' என்றார் சரோஜாதேவியின் தாயார்.

Advertisment

""உள்ள ஏதோ முக்கியமான விஷ யமா பேசிக்கிட்டிருக்காங்க... ஏதாவது சொல்லணுமா?'' என ராகவன் கேட்டார்.

""நீங்களே சொல்லுங்க... இது நியாயமா? எம் பொண்ணுக்கு "கோகில வாணி' படத்துல நடிக்க ஆயிரம் ரூபா சம்பளம் பேசி, நூத்தியோரு ரூபாதான் அட்வான்ஸா கொடுத்தாங்க. அதுக்கப்புறம் ஒரு பைசாக்கூட குடுக்கல. எம்பொண்ணு ராப்பகலா கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு....'' என சரோஜா தேவியின் தாயார் சொல்லிக் கொண்டிருக் கும்போதே...

""இல்லம்மா... அவங்க பெரிய நஷ்டத்துல இருக்காங்க. இதுலருந்து எப்படி மீள்றதுனு பேசிக்கிட்டிருக்காங்க...'' என்றார் ராகவன்.

Advertisment

""எங்களுக்கும் அது தெரியாமலில்லை. அவங்க லட்சக்கணக்குல வாங்குவாங்க... கொடுப் பாங்க. நாங்க சாதாரணம். ஏதோ இருநூறு, முந்நூறு கொடுத்தா எங்களுக்கு உதவியா இருக்கும்....'' எனச் சொல்லும்போதே... கண்ணீர் கசிந்தது. அதைத் துடைத்துக்கொண்டே... “""அவரை நம்பித்தான் வந்திருக்கோம்'' என்றார்.

""சரிம்மா நீங்க இங்கயே இருங்க... நான் சமயம் பார்த்து சொல்றேன்'' எனச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றார் ராகவன்.

dast

சரோஜாதேவியும், அவரின் தாயாரும், அறையை நோக்கி கொஞ்சம் முன்னே வர... எனக்கு பதட்டமானது. அங்கேயே ஓரிடத்தில் தலைமறைவாக நின்றுகொண்டேன். அவர் களைப் பார்த்து நான் பயந்ததற்குக் காரணம்...

மைசூரில் "கோகிலவாணி' படப்பிடிப்பு நடந்தபோது...

கதைப்படி... ஒரு காதல் காட்சியில்... சரோஜாதேவி குப்புறப்படுத்துக்கொண்டு, காதல னுடன் பேசிக்கொண்டிருப்பார். அது எஸ்.ஏ. நடராஜனுக்குப் பிடிக்காது. அந்தக் காட்சியில் நான் அவருக்கு கையாளாக நடித்தேன். என் கையில் பிரம்பைக் கொடுத்த நடராஜன்... ""சரோஜாதேவி முதுகில் ஓங்கி அடி'' என்றார்.

நான் மெதுவாக அடித்தேன்.

""மடையா... கொண்டா பிரம்பை'' என வாங்கி... ஓங்கி என் முதுகில் ஒரு அடி போட்டார். எனக்கு முதுகில் தீப்பிடித்ததுபோல இருந்தது.

""இப்படி அடிக்கணும்'' என்றார்.

பிரம்பை வாங்கிக்கொண்டேன். ஆனாலும் வலியால் உடலை நெளித்து நெளித்து... ஒரு வழியாக சமாளித்து.... அடிக்கத் தயாரானேன்.

""நான் சொன்னதுபோல அடிக்கலேன்னா... உன்னை அடிச்சு, உதைச்சு... மைசூர்லருந்தே விரட்டிவிட்ருவேன்'' என்றார்.

என்பாடு பெரும்பாடாகிவிட்டது.

""நடராஜன் நல்ல மனுஷன்தான். சோறாவது போட்டு நம்மை தங்கவைக்கிறாரே. அவர் சொன்னபடி நடந்துக்கலேன்னா... சோறும் போடமாட்டார், ஊருக்குப் போக துட்டும் தரமாட்டார். முந்நூறு மைல் தூரத்துல இருக்க மெட்ராஸுக்கு நடந்து போக முடியுமா?’ என்கிற நினைப்பிலும், ‘பாவம்... சரோஜாதேவியை அப்படி அடிக்கணுமா?'' என்கிற குழப்பத் திலும் நான் தயங்கியபோது...

""அடிடா...'' என்று ஓங்கி குரல் கொடுத்தார் நடராஜன்.

ஓங்கி முதுகில் அடித்தேன்.

""ஐய்யோ...'' என அல றியபடி எழுந்தார் சரோஜா தேவி.

அவ்வளவுதான்.... சரோ ஜாதேவியின் கண்பார்வையில் படாமல் அன்றிலிருந்து... இன்று வரை... மறைந்துகொண்டேயிருக் கிறேன்.

அறைக்கு வெளியே மறைந்திருந்தபடி சரோஜாதேவியையும், அவரின் தாயாரையும் பார்த்தேன். இவர்கள் கண்ணில்பட்டால்... "இந்த சண்டாளன்தான் என்னை அப்படி அடித்தான்'’எனப் பாய்ந்து என்னை அடித்து நொறுக்கிவிடுவாரோ... என்ற பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாவம்... சரோஜாதேவியும், அவரின் அம்மாவும் வெகுநேரம் கால்கடுக்க அங்கேயே நின்றுகொண்டிருந் தார்கள். அறையிலிருந்து நடராஜனும், விஜயனும் வெளியே வந்தார்கள்.

""என்னம்மா.. எங்க... இப்படி?'' என நடராஜன் கேட்டார்.

""நூத்தியோறு ரூபாய்க்கு அப்புறம் பணமே கொடுக்கல... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்...''

""உங்களுக்கு புத்தி இருக்கா? படங்கள் ரெண்டும் ஓடாம... நாங்க நஷ்டத்துல இருக்கிறது தெரியாதா? தெரிஞ்சும் பணம்கேட்டு வந்திருக்கீங்களே... நீங்கள்லாம் ஒரு ஜென்மமா?'' என கனலை வாரி இறைப்பதுபோல கடுமையாக பேசிவிட்டார்.

அப்போதும் சரோஜாதேவியின் தாயார் மிக தணிந்த குரலில்... ""உங்க கஷ்டம் தெரிஞ்சதாலதான் என் மகளுக்கு பேசின சம்பளம் முழுவதையும் கேட்காம... ஏதாவது கொஞ்சம் குடுங்கனு கேட்கிறேன்'' என்றார்.

sss

""கொஞ்சமாவது நஞ்சமாவது... உங்க மகளை ஹீரோயினா போட்டதுனாலதான் படம் ஓடல...'' என நடராஜன் சொல்ல...

மகளைக் குறை சொன்னதால்... பொறுமை யிழந்துவிட்டார்... தயவு தாட்சண்யம் என்பதை யெல்லாம் தாண்டிவிட்டார் சரோஜாதேவியின் தாயார்...

""உங்கள மாதிரி ஆளுங்க படம் எடுத்தா எப்படி ஓடும்? இப்பச் சொல்றேன்... இனிமே உங்க ஜென்மத்துலயும் நீங்க படம் எடுக்க மாட்டீங்க... நடிக்கவும் மாட்டீங்க'' என நடராஜனுக்கு சாபமே விட்டுவிட்டு... மகளை அழைத்துக்கொண்டு சென்றார்.

அவர்கள் போனதும் மறைவி லிருந்து மெல்ல விடுபட்டு... நடராஜன் முன்பாக கைகட்டி நின்றேன்.

என்னை கனல் கண்களோடு மேலும், கீழும் பார்த்தார். அறைக்கு உள்ளே சென்றார். போன வேகத்திலேயே திரும்பி வந்தார். ராகவனைப் பார்த்தார்.

""ராகவா... சாப்பாடு மட்டும்தான்... சம்பளம் எதுவும் எதிர்பார்க்கக் கூடாதுனு பாலகிருஷ்ணன் கிட்ட சொன்னியா?'' என நடராஜன் கேட்டு முடிக்கும் முன்...

""எனக்கு சம்பளம் வேண்டாம்'' என்றேன்.

வெளியே வந்தார்.

""கார்ல பின்பக்கம் ஏறிக்கோ...'' என்றார்.

பின் ஸீட்டில் உட்கார்ந்தேன். அவரே காரை ஓட்டினார். கோடம்பாக்கத்தில்... அவரின் வீட்டுக்கு கார் பறந்து சென்றது.

சில நேரங்களில் நடராஜன் கார் ஓட்டுவதும், சில நேரங்களில் நான் கார் ஓட்டுவதும் உண்டு. நான் கார் ஓட்டும்போது அடிக்கடி தடுமாறுவேன். புது டிரைவராச்சே.

""மடையா... இப்படியா கார் ஓட்டுவது?'' என்பாரே தவிர... வேலையைவிட்டு என்னை நீக்கவில்லை. நான் சம்பளமில்லாத டிரைவராச்சே.

நடராஜன் வீட்டுக்கு டிரைவரானபோது... அங்கே ஒரு தாயைக் கண்டேன்.... அன்புச் சகோ தரியைப் பார்த்தேன். அவர்... எஸ்.ஏ.நடராஜனின் இல்லத்தரசி. என்னைப் பார்த்த முதலே என் மீது அளவுகடந்த அன்பையும், பாசத்தையும் காட்டினார்.

""பாலகிருஷ்ணா... பாலகிருஷ்ணா...'' என என் பெயரைச் சொல்லி அழைத்த வண்ணம் இருப்பார். நானும் அவர்கள் மீது "அக்கா அக்கா' என அதீத பாசம் வைத்து அழைப்பேன்.

அக்காவின் பெயர் அபரஞ்சி. கோவை மாவட்டம் படியூரில் பிறந்தவர். அவரின் குடும்பம் பெரிது. அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் அந்தக் குடும்பத்திலிருந்துதான் தெரியும். அபரஞ்சி அக்காவின் தாயார், தங்கை மணி, தம்பி சகாதேவன், இன்னொரு தங்கை... (இந்தச் சகோதரியின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. காரணம்... இந்த சகோதரி அபரஞ்சி அக்காவைப் பார்க்க அடிக்கடி வர நேரம் இருப்பதில்லை)... இப்படி எல்லோரையுமே எனக்குத் தெரியும்.

அபரஞ்சி அக்கா எனக்கு சோறுபோடும்போது... பக்கத்தில் இருந்தே... ""இன்னும் கொஞ்சம் சோறு வாங்கிக்க பால கிருஷ்ணா...'' என்று உபசரிப்பார்கள்.

அந்த உபசரிப்பான ஒரு வார்த்தையை... பஞ்சப்பயலான என்னால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கமுடியுமா?

"சும்மாவே இருந்தால் திரையுலகம் நம்மை மறந்துவிடும்' என எண்ணிய நடராஜன், ஈரோடு பாலகுரு எழுதிய "உயிர் காப்பாள் உத்தமி'’என்ற கதையை 1957-ஆம் ஆண்டுவாக்கில் வாங்கி படமெடுக்க ஆரம்பித்தார். கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்கும் பொறுப்பையும் நடராஜனே செய்தார். சகாதேவன் என்பவர் வில்லன். நடிகைகள் ராஜசுலோச்சனா, மாதுரிதேவி மற்றும் சிலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசை ஜி.ராமநாதன். புரொடக்ஷன் வேலைகளையெல் லாம் நானே பார்த்தேன்.

எஸ்.ஏ.நடராஜனுக்கு சரோஜாதேவியின் தாயார்விட்ட சாபம் பலித்தது