(88) குசேலர்களுக்கு உதவும் கிருஷ்ணர்கள்!

புராணக்கதையை வைத்து, பாடலாசிரியர் பாபநாசம் சிவன் குசேலராகவும், எஸ்.டி.சுப்பு லட்சுமி இருவேடங்களில்... கிருஷ்ணராகவும், குசேலரின் மனைவியாகவும் நடித்து 1936-ஆம் ஆண்டு வெளியான "குசேலா' படம் பெரும் வெற்றிபெற்றது.

எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து குசேலர் கதையை படமாக்க ஒரு பேச்சு நடந்தது என் நினைவுக்கு வருகிறது.

பாகவதர் சிறை மீண்டு வெளிவந்த பின்... சில படங்களில் நடித்தார். ஆனால் முன்புபோல அந்தப் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்தச் சமயத்தில் பாகவதர் கஷ்டத்தில் இருப்பதாக அறிந்த "சம்பூர்ண ராமாயணம்' படத்தை தயாரித்த எம்.ஏ.வேணு, பாகவதர் மீது தனக்கிருந்த பற்றால்... அவருக்கு உதவிசெய்யும் நோக்கத்தோடு... "சிவகாமி' என்கிற படத்தை பாகவதரை வைத்து தயாரித்தார். அப்போது பாகவதரிடம்... ""இப்போது நீங்கள் ரொம்பவும் மெலிந்து, குசேலர்போல இருக்கிறீர் கள்... "குசேலர்' கதையை மீண்டும் படமாக எடுப்போம். நீங்கள் குசேலராக நடியுங்கள். சிவாஜி கணேசன் அவர்களை கிருஷ்ணராக நடிக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றாராம்.

Advertisment

""இது நல்ல யோசனைதான்... நான் பெருமதிப்பு வைத்திருக்கும் பாபநாசம் சிவன் நடித்த "குசேலர்' படம் பார்த்தேன். ரொம்பவும் அருமையாக நடித்திருந்தார். இனிமேல் அவரைத்தவிர வேறு யார் குசேலராக நடித்தாலும் படம் ஓடாது'' எனச் சொன்ன பாகவதர்... ""சிவாஜிக்கு தந்தையாக "அம்பிகாபதி' படத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டேன். அதேபோல சிவாஜி படத்தில் நாரதராக நடிக்க கேட்டபோதும் மறுத்துவிட்டேன். இப்போது சிவாஜி கிருஷ்ணராகவும், நான் குசேலராகவும் நடிக்க நான் ஒப்புக்கொண்டால்... ‘"பாகவதருக்கு ரொம்ப கஷ்டகாலம். அதனால் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார்' என தாழ்வாகப் பேசுவார்கள். இப்போது நான் முழு நம்பிக்கையை "சிவகாமி' படத்தின் மீது வைத்திருக்கிறேன்''’ என ‘குசேலர்’ வாய்ப்பை மறுத்துவிட்டார் பாகவதர்.

நான் எம்.ஏ.வேணு அவர்களுடன் நெருங்கிப் பழகிவந்த காலத்தில் வேணு என்னிடம் இதைத் தெரிவித்தார்.

""குசேலராக பாகவதரும், கிருஷ்ணராக சிவாஜியும் நடித்து, படம் எடுக்கப்பட்டிருந்தால்... அந்தப் படம் நன்றாகவே ஓடியிருக்கும்... பாகவதரின் கஷ்டமும் தீர்ந்திருக்கும்'' என்றேன்.

Advertisment

""என்ன செய்றது கலைஞானம்... விதி வலியது... அது பாகவதர் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்டது'' என்றார் வேணு.

புராணக்கதையான குசேலர்- கிருஷ்ணர் நட்புக் கதையின் நட்பு வலிமையை மட்டும் எடுத்துக்கொண்டு, சமூக கதை மாந்தர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் "கதா பறையும்போல்' என்கிற மலையாளப் படம். வறுமையில் வாடியவராக... பாலன் என்கிற கேரக்டரில் ஸ்ரீனிவாசன் நடித்தார். புகழ்பெற்ற சினிமா நடிகர் அசோக்ராஜ் கேரக்டரில் மம்முட்டி நடித்தார்.

2007-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் ஹிட்டடித்தது.

புராணக் கதையை சமூகக் கதையாக மாற்றி திரைக்கதை அமைத்தவர்... ஏழை நண்பன் பாலனாக நடித்த ஸ்ரீனிவாசன். அவரின் தோற்றம் அந்தக் கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக இருந்தது... படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது.

இந்த மலையாளப் படத்தை கே.பாலசந்தரின் நிறுவன தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில்... ரஜினிகாந்த்தை வைத்து எடுக்க முடிவானதும்... பி.வாசு அவர்கள் என்னை அழைத்து, மலையாளப் படத்தைப் போட்டுக் காட்டினார். பார்த்துவிட்டு என் கருத்தைச் சொன்னேன்...

""நான் சிறுவயதில் பாபநாசம் சிவன் நடித்த "குசேலா' புராணப் படத்தைப் பார்த்திருக்கிறேன். சிவன் பிரமாதமாக நடித்திருந்தார். படமும் வெற்றி. அதே கதையை இந்தக் காலத்திற்குத் தகுந்தபடி, மம்முட்டி- ஸ்ரீனிவாசனை வைத்து எடுத்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. மம்முட்டி நடித்த வேடத்தில் தம்பி ரஜினிகாந்த் அவர்களை வைத்து தமிழில் எடுக்க முடிவு செய்திருப்பது சரியானதே..'' என நான் பி.வாசுவிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே... ரஜினிகாந்ந் அங்கே வந்துவிட்டார்.

kalai

""கலைஞானம் சார்... மலை யாளத்தில் இந்தப் படம் நல்லா போயிருக்கு. தமிழ்ல்ல நான் நடிச்சா ஓடுமா?''’ என திரும்பத் திரும்ப கேட்டார். நானும்... "நல்லா போகும்' என திரும்பத் திரும்பச் சொன்னேன்.

கதை இதுதான்...

அசோக்குமாரும் (ரஜினி), பாலுவும் (பசுபதி) பால்ய சிநேகிதர்கள். சிறுவயதிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். அசோக்குமார் நடிகராகி விட்டார். பாலு, ஸ்ரீதேவியை (மீனா) காதலித்து திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட பிரச் சினையில், ஊரையே காலிசெய்துவிட்டு, வேறு ஊரில் மனைவி, இரு குழந்தைகளுடன் குடியிருந்துவருகிறார். தந்தை செய்துவந்த சலூன் கடை தொழிலையே பாலுவும் செய்துவருகிறார். சில நண்பர்களுக்கு மட்டும் சூப்பர்ஸ்டார் அசோக்குமார், பாலுவின் தோழன் என்பது தெரியும். சொந்த ஊரிலிருந்து பாலு இடம் பெயர்ந்துவிட்டது அசோக்குமாருக்கு தெரிந்தாலும் இப்போது பாலு இருக்குமிடம் தெரியாது. இந்தநிலை யில் பாலு வசிக்கும் அதே பகுதியில் அசோக்குமார் நடிக்கும் படப்பிடிப்பு நடக்க ஏற்பாடாகிறது.

அசோக்குமார் இப்போ கோடீஸ்வரர்... அவரை நம்ம பாலு சந்திக்க முடியாது. அப்படியே சந்தித்தாலும் பழைய அன்பு கிடைக்காது, அவமானம்தான் கிடைக்கும்’ என சிலர் கேலி செய்கிறார்கள். பாலுவும் அதை ஆமோதிக்கிறார். வேறுசில நண்பர்களோ... ""நீ அவசியம் அசோக்குமாரை சந்தித்துத்தான் ஆகவேண் டும். இது உனக்குப் பெருமையோ... இல்லையோ... நம்ம ஊருக்குப் பெருமை'' என பாலுவின் வீடு தேடிவந்து பெருமையாகச் சொல்கிறார்கள். பாலுவின் மனைவியும், குழந்தைகளும்... ""நாம எல்லாருமா போய் சூப்பர் ஸ்டாரை பார்ப்போம்'' எனச் சொல்லியும், பாலு தாழ்வு மனப்பான்மையால் தயக்கம் காட்டுகிறார். இரண்டு முறை அசோக்குமாரை சந்திக்க முயற்சித்தும், காவலர்கள் துரத்திவிட்டனர். பாலுவின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவிற்கு சூப்பர்ஸ்டார் வரவிருப்பது அறிந்து... ""அப்பா எங்க ஸ்கூலுக்கு சூப்பர்ஸ்டார் வர்றார். இப்ப வாவது நாம அவரை சந்திக்கலாம்'' என்று வம்பு செய்த போதும், ""நீங்க மட்டும் போய்ட்டு வாங்க'' என அனுப்பி விட்டார்.

விழா இடத்தில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து பாலு பார்க்கிறார். சூப்பர்ஸ்டார் மேடையில் பேசினார்...

""மாணவர்களே... பள்ளிப்பருவம் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. எனக்கு ஒரு பால்ய நண்பனிருந்தான். இப்போ எங்கே இருக்கிறான்னு தெரியலை. நாங்க இருவரும் கண்ணும், ஒளியும்போல பழகி வந்தோம். எனக்கு சொந்தபந்தம் யாருமில்லை. அவனுடைய தந்தை சலூன் கடை வைத்திருந் தார். எனக்கு முடிவெட்ட பணமில்லை. என்னை அவன் தந்தையிடம் அழைத்துச் சென்று முடிவெட்ட வைத்தான். ஒருநாள்... "சினிமாவுக்கு போகலாம் வா'ன்னு சொல்லி, முதன்முதலா அவன்தான் என்னை சினிமா பார்க்க வைத்தான். பள்ளிக்குச் செல்லும்போது மழை பெய்தது... ஒரு வாழை இலையை எடுத்து வந்து குடையாக்கி, அவன் நனைந்தபடி என்னை நனையாமல் பார்த்துக்கொண்டான். வேகாத வெயிலில் தன்னோட செருப்பை எனக்கு மாட்டிவிட்டு, அவன் வெயிலில் நடந்தான். எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தபோது... அவன் தான் பணம் கொடுத்து அனுப்பினான். இப்படி எனக்காக பல துன்பங்களை அனுபவித்தவனை... இப்போ நான், என் இதயத்துல இருக்கைபோட்டு உட்காரவச்சு... அழகுபார்க்க பேராசைப்படுறேன். ஆனால் அவன் எங்கே இருக்கான்னு தெரியல. இந்த ஜென்மத்துல அவனை சந்திக்கலேன்னா... என் சாவிலும் நிம்மதி கிடைக்காது...'' என சூப்பர் ஸ்டார் கண்ணீர் விட்டபோது... ஸ்கூலே அழுதது. பாலுவின் மனைவி, மக்களும் அழுதனர். மறைந்துநின்ற பாலுவும் அழுதபடியே அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பின்... பாலுவின் வீடு இருக்குமிடமறிந்து, திடீரென வந்தார் சூப்பர்ஸ்டார். நண்பர்கள் கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர்.

""இனிமே நீ இங்க இருக்கவேண்டாம். சென்னைக்கு வந்துடு. நாமெல்லாம் ஒன்றாக வாழ்வோம்'' என உத்திரவாதம் கொடுத்துவிட்டு புறப்பட்டார் சூப்பர் ஸ்டார்.

இந்த "குசேலன்' கதை சினிமாவுக்காக சொல்லப்பட்ட நண்பர்களின் கதை. நிஜ வாழ்க்கையில், இறையருளால் ரஜினிகாந்த்தை சினிமாவில் ஹீரோவாக்கி புதிய சினிமா வாழ்க்கையைத் தந்த படைப்பாளி... இந்தக் கலைஞானம்.

""இந்தக் கலைஞானமும் ஒரு குசேலனாக வாழ்ந்து வருகிறான்... என்பதை ரஜினிகாந்த் அறியும்நாள் வராமலா போய்விடும்...'' என்று ஏங்கியிருந்த எனக்கு... நல்ல காலம் பிறந்தது 14-08-2019 அன்று எனக்கு நடந்த பாராட்டுவிழாவில்.

பிரபல நடிகருக்கு சரோஜாதேவியின் தாயார் விட்ட சாபம்... எனது நேரடி அனுபவம்