(87) கடவுளின் தோழன்!
புராணத்தில் சொல்லப்பட்ட "குசேலா'’திரைப்படம் 1936-ஆம் ஆண்டில் வெளியானது. அந்த புராணக் கதையை சமகால நவீன வடிவமாக்கி "கதா பறையும்போல்' என்கிற மலையாளப் படம் 2007-ஆம் ஆண்டு வெளியானது. இந்த மலையாளப் படத்தின் ரீ-மேக்கான "குசேலன்' படம் 2008-ஆம் ஆண்டு வெளியானது.
இந்த ‘குசேல’ கதைகளுக்கும் போகும் முன்... ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன்.
"ஏழிசை மன்னர்' எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் உடன்பிறந்த இளைய சகோதரர்கள் கோவிந்தராஜ் மற்றும் சண்முகம்.
1962-ஆம் ஆண்டுவாக்கில்... நடிகர் "காகா' ராதகிருஷ்ணனின் வீட்டிற்கு பாகவதரின் தம்பி சண்முகம் அடிக்கடி வருவார். அப்போதெல்லாம்... பாகவதர் சிறை சென்றதையும், பாகவதரின் சுய வாழ்க்கையையும் பற்றி பேசுவார்கள். நானும் அங்கே இருந்து, அவர்களின் உரையாடலை கவனிப்பது வழக்கம்.
அப்படி நான் கவனித்துக் கேட்ட விஷயங்களில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.
பாகவதரின் "ஹரிதாஸ்' படம் தொடர்ச்சியாக மூன்று தீபாவளிகள் ஓடி சாதனை படைத்தது எல்லோரும் அறிந்ததே. அந்தச் சமயம் பத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஒரே நேரத்தில் பாகவதரைச் சந்தித்து, கால்ஷீட் கேட்டு கணிசமான அட்வான்ஸ் தொகைகளையும் கொடுத்தார்கள்.
விதிவசத்தால் பாகவதர் ஒரு வழக்கில் சிக்கி, ஆயுள் தண்டனை பெற்று, சிறை சென்றபோது... பத்து தயாரிப்பாளர்களும் மொத்தமாக வந்து, பாகவதரின் தம்பிகளிடம்... கொடுத்த அட் வான்ஸை திருப்பிக் கேட்டார்கள்.
சிறையில் தன்னைச் சந்தித்து விபரம் சொன்ன தம்பிகளிடம்... ""அவங்க கொடுத்த அட்வான்ஸ் பணமெல்லாம் வழக்கு நடத்தியதில் செலவாகிப்போச்சு. அதனால் நம்ம சொத்துக்களை வித்து, வாங்கின அட்வான்ஸை திருப்பிக் கொடுத் திடுங்க'' எனச் சொல்லியனுப்பினார் பாகவதர். அதன்படி... அட்வான்ஸ் திருப்பித் தரப்பட்டது. ஒருவர் மட்டும் அட்வான்ஸை திரும்பப்பெற வரவில்லை. அட்வான்ஸை வாங்கிக்கொள்ளச் சொல்லி... பாகவதரின் தம்பிகள் சொன்னபோதும்.. ""பாகவதர் எப்போது விடுதலையாகி வருகிறாரோ... அப்போது அவர் எனக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்தால் போதும்'' எனச் சொல்லி அட்வான் ஸை மறுத்துவிட்டார். அப்படிச் சொன்ன வள்ளல் மனம் கொண்டவர்... கிருஷ்ணா ஃபிலிம்ஸ் அதிபர் லேனா செட்டியார். (பின்னாளில் ஏழை மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு புகழ் கூட்டிய "மதுரை வீரன்' படத்தை தயாரித்தவர்.)
லேனா செட்டியார் அட்வான்ஸை திரும்ப வாங்க மறுத்ததை கேள்விப்பட்ட பாகவதர்... "புற்களுக்கு இடையே... மணக்கும் பூச்செடிகளும் இருக்கத்தானே செய்கிறது' என்று கண்கலங்கினார்.
வழக்கறிஞர் எத்திராஜ் அவர்களின் வாதத் திறமையால் உண்மை கண்டறியப்பட்டு... குற்ற மற்றவராக பாகவதர் விடுதலையானார்.
சிறை மீண்டதும் சொந்தமாக "ராஜமுக்தி' படத்தைத் தொடங்கினார். பானுமதி அவர்களை தமிழில் கதாநாயகியாக இந்தப் படம் மூலம் அறிமுகப்படுத்தினார் பாகவதர். தன்னு டன் "அசோக்குமார்' படத்தில் நடித்த எம்.ஜி.ஆர். அவர்களை யும், வி.என்.ஜானகி அவர்களையும் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவைத்தார். இந்தச் சமயத்தில் எம்.ஜி. ஆர்.- ஜானகி இடையே காதல் மலர்ந்திருந்தது. இருவரும் பாகவதரைச் சந்தித்து, தங்களின் காதலைத் தெரிவித்தனர். அதை மனமார வரவேற்ற பாகவதர்... உடனடியாக இரண்டு மாலைகள் வாங்கிவரச் செய்து, இருவரையும் மாலை மாற்றிக் கொள்ளச் சொல்லி, திருமணம் நடத்தி வைத்து, ஆசிர்வதித்தார்.
(பின்னாளில் சின்னப்ப தேவர் முன்பாக எம்.ஜி.ஆரும், ஜானகியம்மாவும் மாலை மாற்றி திருமணப் பதிவு செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது) எம்.ஜி.ஆர்.-ஜானகி காதல் ஜோடியை தம்பதியாக்க பாகவதர் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டதில் காரணம் இருக்கிறது.
எம்.ஜி.ஆரை நண்பனாகவும், தனது தம்பியாகவும் பாவித்தார் பாகவதர். அன்றைய புகழ்பெற்ற பாடலாசிரியர் பாபநாசம் சிவன் அவர்களின் அண்ணன் மகள் வி.என். ஜானகி. பாகவதர் படங்களின் பெரும்பாலான பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன்தான். பாகவதர் படங்களின் வெற்றிக்கு அவரின் பாடல்கள் பெரும்பங்கு வகித்தது. அப்படிப் பட்ட பாபநாசம் சிவனின் அண்ணன் மகள் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைப்பது தன் கடமை என்பதை உணர்ந்தே எம்.ஜி.ஆர்.- ஜானகி திருமணத்தை நடத்திவைத்தார் பாகவதர்.
பாபநாசம் சிவ னின் "குசேலா' கதைக்கு வருவோம்.
தமிழ் சினிமாவின் தொடக்ககாலப் படங் களில் கதை -வசனம் -பாடல்கள் -நடிப்பு என பல துறைகளிலும் முத்திரை பதித்தார். 1936-ஆம் ஆண்டில் தமிழ் சினிமா பிதாமகன் கே.சுப்பிரமணியன் இயக் கத்தில் வந்த "குசேலா' படம் பெரும் வெற்றி பெற்றது. குசேலராக பாபநாசம் சிவனும், குசேலரின் மனைவி சுசீலை மற்றும் கிருஷ்ணர் ஆகிய இரு வேடங்களில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அறிவுஜீவியான பாபநாசம் சிவன் இயல்பிலேயே மெல்லிய தேகத்துடன், எளிமையான தோற்றம் கொண்டவர். வறுமையில் வாடிய குசேலர் கேரக்டருக்கு சிவன் பொருத்தமாக இருந்தார். ஸ்டார் காஸ்டிங் எனப் படும் கேரக்டருக்கான நட்சத்திர தேர்வு பொருத்த மாக அமைந்ததால் "குசேலா' பெரும் வெற்றிபெற்றது.
குசேலர் கதை என்ன?
சிறுவயதில் கிருஷ்ணரும், குசேலரும் உயி ருக்குயிரான நண்பர்கள். ஒரே குருகுலத்தில் படித்த வர்கள். கிருஷ்ணர் பெரியவனானதும் யாதவகுல மன்னனாகிவிட்டார். குசேலரோ இருந்த இடத்தி லேயே மாவு அரைக்கும் கல்திரிகை போல... கிரா மத்திலேயே தேய்ந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எலும்பும், தோலுமாக உள்ள குசேலர்... தாராள மனப்பான்மையில் 27 பிள்ளைகளைப் பெற்றெடுத் தார். வறுமையிலும் செம்மையாக கணவரை யும், குழந்தைகளையும் கட்டிக்காத்துவந்தாள் சுசீலை. வறுமை உச்ச கட்டம் அடைந்த போது... குசேலரிடம் மனைவி சுசீலை... ""உங்க பால்ய நண்பர் இப்போ குபேரனாக, யாதவ மன்னனாக வாழ்ந்து வருகிறார். நீங்கள் அவரைச் சந்தித்து நம்மளோட தரித்திர வாழ்க்கையைச் சொன்னால் நிச்சயம் உதவி செய்வார்""’ என ஆலோசனை சொன்னாள்.
""பிறர் அண்ணாந்து பார்க்கும் அபூர்வ அந்தஸ்தில் கிருஷ்ணன் வாழ்ந்து வருகிறார். நானோ அதலபாதாளத்தில் உருண்டு கிடக்கிறேன்... இந்த நிலையில் அவரை எப்படிப் பார்க்கப் போவது?''
""நம் பிள்ளைகளும் வறுமையில் வாடிக் கிடப் பது உங்க அறிவுக்குப் புரியவில்லையா? அவர் களுக்காகவாவது நீங்க போய்த்தான் ஆகணும்''
""நீ சொல்வதை உணராதவனல்ல. விஷ்ணு அவதாரமான அவரை வெறுங்கையோட எப்படி பார்ப்பது என்றுதான் யோசிக்கிறேன்.''’
""வயல்களில் நெல் அறுவடை முடிந்து நெல் மணிகள் உதிர்ந்துகிடக்குது. அதனை பொறுக்கி எடுத்துவந்து இடித்து அவல் ஆக்கிக் கொண்டு செல்லலாமே'' என்றாள். மனைவியின் யோசனைப் படி அவல் தயாரித்து, ஒரு பழைய துணியில் முடிந்து கொண்டு, துவாரகை அரண்மனைக்கு நடந்தே சென்றார் குசேலர். கோட்டைக் காவலர்களிடம் ""என் பெயர் குசேலன். நான் கிருஷ்ணரின் பால்ய சிநேகிதன். அவரைப் பார்க்க வேண்டும்'' என்றார்.
காவலர்கள் எக்காளச் சிரிப்போடு... ""உடுத் தக்கூட துணியில்ல. உச்சிக்குடுமிக்கு எண்ணெய் தேய்ச்சு எத்தனை நாளோ? ஏழையாய் பிறந்தா லும்... நாகரிகம் கருதி, இரவலாக வேட்டி வாங்கி உடுத்திக்கொண்டு இங்கு வரக்கூடாதா? முதல்ல நீ இங்கிருந்து போயிடு'' என்றனர்.
""நான் கிருஷ்ணனைப் பார்க்காமல் போகமாட்டேன்''’’
""பிடிவாதம் செய்யாதீர் போ'' என பிடித்துத் தள்ள... கீழே விழுந்த குசேலர் எழுப்பிய "கிருஷ்ணா' என்கிற அபயக்குரல் விண்ணுக்கும், மண்ணுக்கும் பேரொலி காட்டியது.
மனக்கண்ணால் இதையெல்லாம் பார்த்திருந்த கிருஷ்ணர் ஓடோடிவந்து குசேலரை அணைத்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு... காவலர்களுக்கு புத்தி சொல்லிவிட்டு, குசேலரை அழைத்துச் சென்று, தன் சிம்மா சனம் அருகே அமர வைத்தார்.
""குசேலா, உன் தோற்றமே உன் வாழ்க்கையைச் சொல்கிறது... "இனி நீ கவலைப்படாதே... எதுவும் விதிப்படிதான் நடக்கும்..' என்று நாம் குருகுலத்தில் படித்ததை மறந்துவிடக்கூடாது. அதெல்லாம் போகட்டும்... எனக்கு நீ எதுவும் கொண்டுவரவில்லையா?'' என்றார் கிருஷ்ணர்.
அழுக்கான பழைய துணியில் முடியப்பட்டி ருந்த அவலை அஞ்சி அஞ்சி அவிழ்க்க... ஆவலு டன் கிருஷ்ணர் ஒரு கைப்பிடி அவலை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார். ’""அருமை... அமிர் தமே இதற்கு ஈடாகுமோ?'' என்றபடி இன்னொரு கைப்பிடி அவலை அள்ளி தின்ன முயற்சிக்கும்போது... லட்சுமி தன் மலர்க்கரத்தால் தடுத்து... ""சுவாமி... நீங்கள் சாப்பிட்ட ஒருபிடி அவல் மூலம் குசேலர் வீட்டில் குபேர சம்பத்து நிறைவாகிவிட்டது, அதோ பாருங்கள்''’ என்றாள்.
மனக்கண்ணால் உணர்ந்த கிருஷ்ணர், ""ஆமாம்... குசேலன் இன்று குபேரன் ஆகிவிட்டான்'' என்று குசேலருக்கு முத்தமழை பொழிந்தார்.
"குசேலர்' -பாகவதர், "கிருஷ்ணர்' -சிவாஜி... இப்படியொரு படத்திட்டத்தை ஏற்க மறுத்தார் பாகவதர். ஏன்?
___________________________
"கேரக்டர்' தொடர் குறித்து என்னிடம் பேச விரும்புபவர்கள் மாலை 5 மணிக்கு மேல் 96770 61186 என்ற எண்ணில் பேசலாம்.
-கலைஞானம்