(75) நட்பு தோற்பதில்லை!
இரு நண்பர்கள் கதையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் -மல்லியம் ராஜகோபால் நட்பின் கதையைப் பார்க்கலாம்.
"பணமா பாசமா', "கற்பகம்', "சித்தி', "கை கொடுத்த தெய்வம்', "குறத்தி மகன்', "ஆதி பராசக்தி' உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முதலில் நடிப்பின் மீதுதான் விருப்பமாக இருந்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போல சிறுவயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்துவந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் மிகவும் குள்ளமாக இருப்பார். இதனால் "குள்ளமான நம்மால் எதிர்காலத்தில் நடிகராக முடியாது' என்று முடிவெடுத்து தன் பாதையை மாற்றினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகக் கம்பெனியில் இருந்த லைப்ரரியில் இடம்பெற்றிருந்த புத்தகங்களைப் படிப்பதும் படித்த அனுபவங்களை வைத்து கதை எழுதுவது, பாடல் எழுதுவது என தனக்குத்தானே பயிற்சி பெற்றார். கூடவே இந்தியும் கற்றுத் தேர்ந்தார்.
நாடகக் கம்பெனியிலிருந்து வெளியே வந்தபின் அவரை ஆதரிக்க யாருமே இல்லை. சகோதரிகள் வீடு இருந்தாலும் அது சரிவராது என்று மாயவரம் பக்கத்தில் உள்ள மல்லியம் என்ற ஊரில் வைத்தியம் செய்துகொண்டிருந்த தனது அண்ணனுடன் தங்க முடிவு செய்தார். பிரம்மச்சாரியான அவரின் அண்ணன் தங்கியிருந்த இடம் ஓரளவு வசதியுள்ள ராஜகோபால் அவர்களுக்குச் சொந்தமான இடம். வைத்தியர் அண்ணனுடன் வந்து தங்கினார். வந்த இடத்தில் ராஜகோபாலின் நட்பு கிடைத்தது. கோபாலகிருஷ்ணன் தனது நாடகக் கம்பெனி அனுபவங்களையும், தனக்குத் தெரிந்த கதை மற்றும் கல்வி அறிவையும் ராஜகோபாலிடம் அடிக்கடி சொல்லுவார். அவரின் திறமையைக் கண்டு ராஜகோபால் அவரைப் பாராட்டுவார். நாளடைவில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.
சில காலத்திற்குப் பின் கோபாலகிருஷ்ணன் சென்னைக்கு வந்து உடுமலை நாராயணகவி அவர்களிடம் சிஷ்யனாக ஆனார். சில சினிமா கம்பெனிகளில் பாட்டும் எழுதிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் நட்பு கிடைத்தது. ஸ்ரீதர் எழுதும் கதைகளில் உதவியாளராகவும் இருந்தார். அவரின் படம் ஒன்றில் பாட்டும் எழுதினார் கோபாலகிருஷ்ணன். அவரின் கவித்திறனையும் உருவத்தையும் இணைத்து "குள்ளக்கவி' என்று நண்பர்களால் அழைக்கப்பட்டார்.
ஒருகட்டத்தில்... மல்லியம் ராஜகோபாலும் சென்னைக்கு வந்தார். ஒரு ரூம் எடுத்து தங்கினார். அவர் கொஞ்சம் பணவசதி உள்ளவர். கோபாலகிருஷ்ணனோ பற்றாக்குறையில் வாழ்ந்து வந்தவர். ராஜகோபால் சென்னை வந்ததை அறிந்த கோபாலகிருஷ்ணன், அவரின் ரூமிலேயே தங்கிக்கொண்டு சினிமாவில் கதை விற்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவந்தார். நண்பனுக்கு உதவியாக இருந்ததுடன், தானும் சினிமாவில் கதை எழுத வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார் ராஜகோபால். இருவரும் தங்கள் கதைகளை ஒருவரிடம் ஒருவர் சொல்லி சரிபார்த்துக் கொள்வது வழக்கமாக இருந்த நேரத்தில்... ஒரு பழைய பேப்பரில் ஒருபக்க கதை ஒன்று இருந்ததை இருவரும் படித்தனர். அந்தக் கதையை எழுதியவர் பெயர் இருந்த பகுதி கிழிந்துபோயிருந்தது. கதையின் கிழிந்த பகுதிகளை ஓரளவு யூகித்து கதையின் மையத்தைக் கண்டுபிடித்தனர். சமையல்காரனுக்கும் ஒரு குடும்பத் தலைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதே கதையின் மையம். இந்தக் கதையைப் படித்த இருவரும் சேர்ந்து ஒரு முழு கதையை எழுதிவிட்டார்கள்.
"கமால் பிரதர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தினர் டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் படமெடுக்க கதை கேட்டு வருகிறார்கள் என்பதை அறிந்த மல்லியம் ராஜகோபால், அந்த இரட்டை இயக்குநர்களைச் சந்தித்து... "மனைவியையும் வேலைக்காரனையும் சந்தேகிக்கும் கணவன் கதை'யைச் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு கதை பிடித்துப்போனது.
""இந்தக் கதையை விரிவாக எழுதிக்கொண்டு வந்து சொல்லுங்கள்'' என்று அனுப்பிவிட்டனர்.
கோபாலகிருஷ்ணனிடம் நடந்த விவரத்தைச் சொன்னார் ராஜகோபால்.
""கதை சொல்வதில் ஒரு பாங்கு இருக்கவேண்டும். கதை கேட்பவர்களை ஈர்க்க கொஞ்சம் நடிப்பும் தேவை. அதனால் இந்தக் கதையை நான் அவர்களிடம் சொல்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு மறுநாள் கிருஷ்ணன்-பஞ்சுவை சந்தித்து, ஒவ்வொரு ஸீனையும் உணர்ச்சிமயமாக உரக்கச் சொல்லி அசத்திவிட்டார் கோபாலகிருஷ்ணன்.
கிருஷ்ணன்-பஞ்சுவுக்கு திருப்தி. என்றாலும்... ""நேற்று ஒருத்தர் வந்தார், இதே கதையைத்தான் சொன்னார்'' என்றார்கள்.
""நாங்கள் இருவருமே நண்பர்கள்தான். நான்தான் இந்தக் கதையை எனது நாடகக் கம்பெனி அனுபவத்தை வைத்து முழுமையாக எழுதினேன்''
""எதற்கும் நீங்கள் அவரையும் அழைத்துக்கொண்டு நாளை வாருங்கள்'' என்று சொல்லி அனுப்பினர்.
மறுநாள் கோபாலகிருஷ்ணனும் ராஜகோபாலும் டைரக்டர்களைச் சந்தித்தனர். இருவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார்கள். என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. டைரக்டர்கள் ஒரு முக்கியமான ஸீனை தனித்தனியே எழுதச் சொல்லி இருவருக்கும் பரீட்சை வைத்தார்கள். ஆளுக்கொரு பக்கம் அங்கேயே அமர்ந்து எழுதினார்கள். இதில் கோபாலகிருஷ்ணன் எழுதியது பிரம்மாதமாக இருந்திருக்கிறது. உடனே ஓ.கே. பண்ணிவிட்டார்கள். ராஜகோபாலிடம், "விட்டுக்கொடுக்குமாறு' கேட்டுக்கொண்டு, அவருக்கு ஒரு தொகை தருவதாகவும் சொல்ல... ராஜகோபாலுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் "நண்பனுக்கு இந்த வாய்ப்பு அமையட்டும்' என்று சம்மதம் தெரிவித்து வெளியேறிவிட்டார். அந்தக் கதைதான் நடிகர்திலகம் சிவாஜி-பத்மினி நடித்து மிகப்பெரும் வெற்றிபெற்ற "தெய்வப் பிறவி' திரைப்படம்.
ராஜகோபால் தனது ஊரான மல்லியத்திற்கே சென்றுவிட்டார்... மனக்கசப்பை மாற்றுவதற்கு. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு அடித்தது யோகம், கொடுத்தது செல்வம்.
"தெய்வப் பிறவி' படத்தைத் தொடர்ந்து "படிக்காத மேதை', "அன்னை', "கற்பகம்', "சித்தி', "கை கொடுத்த தெய்வம்', "பேசும் தெய்வம்', "குல விளக்கு', "பணமா பாசமா'... என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன், என்னிடம் "குறத்தி மகன் ' என்ற கதையை வாங்கி, படமாக எடுத்து மேலும் புகழ்பெற்றார். "குறத்தி மகனை'த் தொடர்ந்து "ஆதிபராசக்தி', "நத்தையில் முத்து', "வாழையடி வாழை', "வந்தாளே மகராசி', "ரவுடி ராக்கம்மா', "தசாவதாரம்' ஆகிய படங்களில் நான் கோபாலகிருஷ்ணனோடு திரைக்கதை ஒத்துழைப்பு செய்துவந்தேன்.
மல்லியம் சென்ற ராஜகோபால் சும்மா இருந்துவிடவில்லை. மீண்டும் சென்னை வந்தார். "ஜீவனாம்சம்' என்ற கதையை எழுதி வெற்றிபெற்றார். அந்தக் கதையில்தான் நடிகை லட்சுமி அறிமுகமானார். அடுத்து சிவாஜிகணேசன்-ஜெயலலிதா நடிப்பில் "சவாலே சமாளி' படத்திற்கு கதை-வசனம் எழுதி இயக்கினார் மல்லியம் ராஜகோபால். இந்தப் படம் சூப்பர்ஹிட் ஆனது. உடனே கோபாலகிருஷ்ணன், "நண்பனும் தன்னைப் போலவே பேரும் புகழும் பெற்றுவிட்டான்' என்று மகிழ்ச்சியடைந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபாலகிருஷ்ணன்-ராஜகோபால் நட்பு மீண்டும் பூத்தது. தாங்கள் சந்தித்த பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டு... மனம்விட்டுச் சிரித்துக்கொண்டார்கள்.
ராஜகோபாலுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்துவைக்க முயற்சி மேற்கொண்டார் கோபாலகிருஷ்ணன். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் ராஜகோபாலுக்கு நல்ல பெண்மணி கிடைத்துவிட்டார். கல்யாணப் பத்திரிகை வைத்து கோபாலகிருஷ்ணனை அழைத்ததோடு, என்னையும்... பூவோடு சேர்ந்த நார் போல... மதித்து பத்திரிகை கொடுத்தார். நானும் கோபாலகிருஷ்ணனும் திருமண நிகழ்ச்சிக்கு முன்னதாகவே சென்று விழாவுக்கு வரும் நண்பர்களை வரவேற்று மகிழ்ந்தோம்.
நல்ல நட்புக்கு கோபாலகிருஷ்ணனும் ராஜகோபாலும் அழகு சேர்த்தார்கள்.
காலம் கடந்தது...
மல்லியம் ராஜகோபால் என்னைத் தேடிவந்தார். அந்த நேரம் நானும் சினிமாவில் பிரபலமாகியிருந்தேன்.
""நான் படமெடுக்கலாம் என்று வந்திருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?'' என்றார்.
""உங்கள் நண்பர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடமே கேட்பது நல்லது'' என்றேன்.
""அவரிடம் கேட்டேன். "இப்போ சினிமா வியாபாரம் சரியில்ல. கொஞ்சம் பொறுத்திரு' என்று சொல்கிறார்''
""அதுதான் உண்மை'' என்றேன்.
அதன்பிறகு சில நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போதெல்லாம், ""கலைஞானம் சௌக்கியமா?'' என குசலம் விசாரிப்பார். பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை.
மல்லியம் ராஜகோபால் கலைஞர்களை ஆதரிக்கும் நல்ல உள்ளம் உள்ளவர். அதன் அடிப்படையில்தான் கோபாலகிருஷ்ணனுக்கும் அவர் ஆதரவு கொடுத்தார்... ஆரம்ப காலம் முதல் கடைசி காலம்வரை என்பதை நான் அறிவேன்.
உண்மையான நண்பர்களுக்குள் ஏதோ ஒருவகையில் ஒரு பிரிவு ஏற்பட்டாலும் அது நிரந்தரமல்ல என்பதை மல்லியம் ராஜகோபாலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் எடுத்துக்காட்டி வாழ்ந்தார்களே...
நாகிரெட்டியார்-சக்கரபாணி நட்பின் கதை!