(73) உயிர்த்தோழன்!
அலெக்ஸாண்டர் -ஹெபாஸ்டியோன் நட்பின் கதை இது.
"பியூஸி பேலஸ்' என்கிற கம்பீரமான குதிரையை அடக்கமுடியாமல் வீரர்களே குப்புறவிழுந்த நிலையில்... குதிரை உரிமையாளரின் சவாலை ஏற்று களத்தில் இறங்கினான் எட்டுவயது சிறுவனான அலெக்ஸாண்டர்.
மைதானத்தில் கம்பீரமாக நின்றிருந்த குதிரையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்... சிந்தித்தான்.
அப்போது சூரியன் கிழக்கே உதயமாகி... ஒன்பது மணி என்கிற அளவில் இருந்தது. குதிரை மேற்கே திரும்பி நின்றிருந்தது. குதிரை ஓடும்போது அதன் நிழல் பூதம் போல அதற்கு முன்னால் ஓடியது. அதனால் குதிரை மிரண்டு... நாலாபுறமும் திமிறி ஓடி... தன் மீது அமர்ந்த வீரர்களை கீழே தள்ளிவிட்டது... என்பதை கண்டுபிடித்தான். இதனால் குதிரையின் நிழல் குதிரையின் பார்வையில் படாதபடி... பக்கவாட்டில் நிறுத்தினான். தட்டிக்கொடுத்தான்... முத்தமிட்டான். ஜம்ப் பண்ணி குதிரையின் மீது ஏறி உட்கார்ந்தான். குதிரையின் நிழல் குதிரைக்கு தெரியாதவாறு டெக்னிக்காக சவாரி செய்து.. வெற்றிகரமாக குதிரையை தன்வசப்படுத்தி... மைதானத்திற்குள் நிறுத்தினான் அலெக்ஸாண்டர்.
அலெக்ஸாண்டரின் பெற்றோர்களான மன்னரும், மகாராணியும், மக்களும் மகிழ்ச்சியில் திளைத்து ஆரவாரம் செய்தனர்.
பியூசி பேலஸ் என்கிற அந்தக் குதிரையை விலைகொடுத்து வாங்கி மகனுக்கு பரிசாக அளித்தான் மன்னன்.
அடுத்து மல்யுத்தப் போட்டி.
சிறுவன் அலெக்ஸாண்டரும், இன்னொரு சிறுவனான ஹெபாஸ்டியோன் ஆகிய இருவரும் மல்யுத்தம் செய்தார்கள். மன்னனின் மகன் என்பதால் அலெக்ஸாண்டருக்கு விட்டுக்கொடுத்து... ஜெயிக்கவைத்தான் ஹெபாஸ்டியோன். இந்த உண்மையை அறிந்த அலெக்ஸாண்டர்... அன்று முதல்... அவனை உயிர் நண்பனாக ஏற்றுக்கொண்டான்.
கிரேக்க தேசத்தில் பிறந்த ஞானப்பேரொளி சாக்ரடீஸ். உலகில் பாமர மனிதனையும் முதன்முதலில் சிந்திக்கத்தூண்டியவர் சாக்ரடீஸ். அவரின் மாணவர் சிந்தனையாளர் பிளாட்டோ. பிளாட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், தத்துவம், இலக்கணம், இலக்கியம் மற்றும் தேகப் பயிற்சிகள் அறிந்த அரிஸ்டாட்டிலிடம் மாணவனாகச் சேர்க்கப்பட்டான் அலெக்ஸாண்டர். குருவிடமிருந்து சகலமும் கற்றுக்கொண்டான் அலெக்ஸாண்டர்.
தந்தையான மன்னன் பிலீப் இறந்ததும் ஆட்சிக்கு வந்தான் அலெக்ஸாண்டர். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததுமே தந்தை முன்பு சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ""எனது லட்சியம் இந்தியாவைக் கொள்ளையடிப்பது. அங்குதான் உலகத்தின் பஞ்சத்தையே போக்கும் பொன்னும், மணியும், முத்தும், பவளமும்... இன்னும் சகல செல்வங்களும் இருக்கிறது'' எனச் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.
வீரர்களை பலப்படுத்தினான். சகல படைகளையும் சரிபார்த்தான். கூடவே மருத்துவர்கள், சாஸ்திர வல்லுநர்கள் ஆகியோரையும் ஏற்பாடு செய்துகொண்டு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டான். வழியில் இருந்த அனைத்து நாடுகளையும் வென்றான். தட்சசீலம் நகருக்குள் நுழைந்தது அலெக்ஸின் மாசிடோனியப் படை. "தட்சசீலம்' (இன்றைய ஆப்கானிஸ்தான்) செழிப்பான பூமி. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தருகிற பெரிய பல்கலைக்கழகம் அங்கே இருந்தது. அந்த தேசத்தின் மன்னன் பெயர் அம்பி. இதையெல்லாம் அறிந்திருந்தான் அலெக்ஸ். அலெக்ஸின் படை வருவதையும், அதன் பலம் என்ன என்பதையும் அறிந்திருந்த அம்பி, அலெக்ஸிடம் சரணாகதியடைந்தான். இருவரும் நட்பு பாராட்டினார்கள்.
தட்சசீலம் கடந்ததும் ஒரு பெரிய மலைப்பிரதேசம். மலைசாதி மக்கள் நிறைந்து வாழ்ந்துவந்தனர். அவர்களைக் காக்க வில், அம்பு பயிற்சிபெற்ற கணக்கற்ற வீரர்கள் இருந்தனர். இந்தியாவின் மறுபக்கத்து பகுதி இது. இந்தியாவுக்குள் நுழைய இந்தப் பகுதியை கடந்தாகவேண்டும். வில் அம்பு ஆயுத தாக்குதலை சமாளிக்க முடியாது என்பதால்... ராஜதந்திரத்தை கையாண்டான் அலெக்ஸ். மலை சாதியைச் சேர்ந்த ராக்சேனா என்கிற அழகிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு... அந்த மக்களை தனது உறவினர்களாக்கிக் கொண்டான். ராக்சேனாவையும் அழைத்துக்கொண்டுவந்து இந்திய எல்லையில் தன் படையை நிலைநிறுத்தினான் அலெக்ஸ்.
புருஷோத்தம மன்னனுடன் போர்புரிந்தான். இருதரப்பிற்கும் வெற்றியும், தோல்வியும் மாறிமாறி ஏற்பட்டது. முடிவில்... மன்னன் புருஷோத்தமன் ஒற்றை ஆளாக தனது படையுடன் போர்புரிவதைப் பார்த்து, அவனின் வீரத்தை பாராட்டி... தான் கைப்பற்றியிருந்த இந்திய நாட்டை... புருஷோத்தமனிடமே கொடுத்துவிட்டு... தன் நாட்டிற்கு திரும்பிச்செல்ல முடிவெடுத்தான் அலெக்ஸ். தனது படைவீரர்கள் பலர் மாண்டுவிட்டனர். எஞ்சியிருந்தவர்களும் சோர்ந்துவிட்டனர். அலெக்ஸாண்டரின் பிரியத்திற்குரிய பியூஸி பேலஸ் குதிரையும் இறந்துவிட்டது. வீரர்களும் தங்கள் மனைவி, மக்களைப் பிரிந்து வெகுநாட்களாகிவிட்டதால் நாடு திரும்ப வற்புறுத்தியதால்... அதன்படி நாடு திரும்பிக்கொண்டிருந்தான் அலெக்ஸ்.
வழியில் ஓரிடத்தில் இரவு தன் உயிர் நண்பன் ஹெபாஸ்டியோனுடன், அலெக்ஸ் தங்கியிருந்தபோது... அலெக்ஸின் தாயார் அனுப்பிய தூதுவன் ஒருவன்... தாயாரின் கடிதத்துடன் வந்து சேர்ந்தான்.
கடிதத்தை வாங்கிப் படித்தான் ஹெபாஸ்டியோன்.
""மகனே நீ யாரையும் நம்பாதே. உயிருடன் உன்னைக் காண ஆவலுடன் இருக்கின்றேன்'' என்கிற சங்கதி இருந்தது.
""அலெக்ஸாண்டருக்கு ஏதோ ஆபத்து வரலாம் போலிருக்கிறது. எந்த ஆபத்தும் நெருங்காமல் என் நண்பனைக் காப்பாற்றி அவனின் தாயிடம் ஒப்படைப்பதே நம் கடமை'' என முடிவுசெய்த ஹெபாஸ்டியோன்... அலெக்ஸுக்கான காவலை மேலும் பலப்படுத்தினான்.
அப்போது அலெக்ஸைப் பார்க்க அவனது மனைவி ராக்சேனா வந்தாள்.
""அவரைப் பார்க்க வேண்டும்''’’
""இப்போது முடியாது''’’
""நான் அவரின் மனைவி''’’
""யாராக இருந்தாலும் இந்த அகால இரவில் அவரைப் பார்க்க அனுமதிக்க முடியாது'' என்றான்.
ராக்சேனா மிகுந்த கோபத்துடன் அவனை எச்சரித்துவிட்டுச் சென்றாள்.
மறுநாள் இரவு... விஷம்கொடுத்து கொலைசெய்யப்பட்டான் ஹெபாஸ்டியோன்.
அலெக்ஸ் நண்பன் மீது புரண்டு அழுதான். "இப்படிச் செய்தது யார்?' என்று கதறினான்.
"நேற்று இரவு உங்களைக் காண... உங்களின் மனைவியார் வந்தார். ஹெபாஸ்டியோன் அனுமதிக்கவில்லை. அதனால் ஹெபாஸ்டியோனை எச்சரித்துவிட்டுச் சென்றார்' என்கிற தகவல் கிடைத்தது.
வெகுண்டு எழுந்த அலெக்ஸ், வாளுடன் மனைவியிடம் வந்தான்.
""அடி சண்டாளி... என் உயிர் நண்பனை விஷம்கொடுத்தா கொன்றாய்?''’ என்றபடி அவளின் கழுத்தை நோக்கி வாளை ஓங்கினான்.
""கொஞ்சம் பொறுங்கள். நான் கொலை செய்யவில்லை. நான் கொலைசெய்ததாக நீங்கள் முடிவுசெய்தால்... இப்போது நான் கருத்தரித்திருக்கிறேன். உங்கள் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது... பிள்ளையைப் பெற்றுக்கொடுத்தபின் நீங்கள் என்னை கொலைசெய்துவிடுங்கள்'' என்றபடி... தன் ஆடையை விலக்கி வயிற்றைக் காண்பித்தாள்.
அவளின் வயிற்றையே பார்த்தவன்... வாளை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினான்.
பிள்ளைப் பாசம் அலெக்ஸை தடுத்துவிட்டது. ஆனாலும்... தன்னை காத்துவந்த உயிர்நண்பன் கொலையான கவலை அவனை நோயாளியாக்கியது.
நாளுக்கு நாள் நலிந்து படுத்தபடுக்கையாகிவிட்டான்.
ஒருநாள்... தளபதியை அழைத்தவன்... ""நான் பல நாடுகளை வென்றேன். கோடிக்கணக்கான செல்வங்களை எனதாக்கினேன். ஆனால் அவையெல்லாம் சாவில் என்கூட வருமா? நான் இறந்ததும்.. சவப்பெட்டியில் எனது கைகள் இரண்டும் உள்ளங்கைகள் வெளியே தெரியும்படி எடுத்துச் செல்லுங்கள். ‘"உலகத்தின் பாதியை வென்ற அலெக்ஸாண்டர்... போகும்போது எதையும் எடுத்துச் செல்லாமல் வெறுங்கையோடுதான் போகிறான்'’ என்பதை உலகம் புரிந்துகொள்ளட்டும்''’ என்றான் மாவீரன் அலெக்ஸாண்டர்.
இந்து-முஸ்லிம் நட்புக்கு இலக்கணமான... இரு நண்பர்கள் பற்றிய ஒரு திரைப்படக் கதையைச் சொல்கிறேன்....
(தொடரும்)