(77) வலதுகரமாக விளங்கிய நட்பு!

விஜய வாஹினி ஸ்டுடியோவின் அதிபரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.நாகி ரெட்டியாரின் உயிர் நண்பர்... சக்ரபாணி எனும் அறிவுஜீவி. நாகிரெட்டியார் தயாரித்த படம் ஒன்றிற்கு வசனம் எழுதினார் சக்ரபாணி.

அவரின் வசன எழுத்து நாகிரெட்டியாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. சுருக்கமாகவும்... அதேசமயம் காரணகாரியங்களோடு... கதையோட் டத்திற்கு வசனங்களை அவர் பயன்படுத்தியிருந்த விதமும் அவரை ஈர்த்தது. அதனால் தொடர்ந்து நாகிரெட்டியார் தயாரித்த திரைப்படங்களில் வசனகர்த்தாவாக... டைரக்டராக பலதுறைகளில் வல்லவரானார். சக்ரபாணி எழுதிய "சௌகார்' கதையை படமாக எடுத்தார் நாகி ரெட்டியார். ஒரு கட்டத்தில் அவரை தனது பங்குதாரராக சேர்த்துக்கொண்டார்.

நட்பும், நம்பிக்கையும் பெருகப்பெருக... சக்ரபாணியின் நிர்வாகத் திறமையும், மதியூகமும் நாகிரெட்டியாருக்கு மனநிறைவைத் தந்ததால்.... ஸ்டுடியோ நிர்வாகம், படத்தயாரிப்பு உள்ளிட்ட எல்லாப் பணிகளையும் சக்ரபாணியிடமே ஒப்படைத்துவிட்டு... திரைப்பட விநியோக வியாபாரப் பொறுப்பை மட்டுமே நாகிரெட்டியார் பார்த்துக்கொண்டார்.

Advertisment

படவேலைகள் மட்டுமல்லாது... "பொம்மை' மற்றும் "அம்புலிமாமா'’பத்திரிகைகளின் நிர் வாகத்தையும் சக்ரபாணியிடம் ஒப்படைத்தார். அதை சிறப்புடன் செய்துவந்தார் சக்ரபாணி.

திரைப்படங்களில்... ‘"தயாரிப்பு: நாகி ரெட்டியார்-சக்ரபாணி'’என டைட்டிலில் வரும். இதைப் பார்த்துவிட்டு இருவரையும் அண்ணன்- தம்பி என்றுதான் பலரும் எண்ணினார்கள்.

பெற்ற தந்தையிடம்கூட அவ்வளவு பயபக்தி வைத்திருப்பாரா தெரியவில்லை. ஆனால் சக்ர பாணியிடம் அப்படி பயபக்தி நாகிரெட்டியாருக்கு. காரணம் சக்ரபாணி நீதி தவறாதவர். யாராக இருந்தாலும் "குற்றம் குற்றமே' என்கிற கொள்கையுடையவராக இருந்தார்.

Advertisment

ஆந்திராவில் சக்ரபாணியின் குடும்பம் இருந்தது. அவருடைய மனைவி இறந்துவிட்டார். இரண்டு மகன்கள். இருவரையும் சென்னையில் படிக்க வைப்பதற்காக அழைத்து வந்துவிட்டார். படிப்பதற்கு பள்ளியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனால் பிள்ளைகள் தங்குவதற்கு சரியான ஹாஸ்டல் கிடைக்கவில்லையாம்.

இதையறிந்த பெண்குலத்தின் பொன்விளக்கு, நாகிரெட்டியாரின் மனைவி சேஷம்மா... தன் கண வரிடம்... ""என்னங்க... சக்ரபாணி அவர்கள் உங்க ளுடன் உயிருக்கு உயிரா பழகி, வாழ்ந்துவருகிறார். அவருடைய குழந்தைகளுக்கு ஹாஸ்டல் எதுக்கு? நான் ஒருத்தி இருப்பதை மறந்துவிட்டீர்களா? நம் குழந்தைகள் வேறு... அவர் குழந்தைகள் வேறு என்ற எண்ணமா? பாவம் தாயில்லாத அந்தக் குழந்தை களை வளர்க்கும் பாக்கியம் எனக்கில்லையா? குழந்தைகள் சோறில்லையேனு கவலை வந்தா... எங்கேயாவது வாங்கி சாப்பிட்டுவிடும். தாயில்லை யேனு கவலை வந்தா வாங்கவா முடியும்?'' எனக் கேட்க... நாகிரெட்டியார் கண்ணீர் சிந்தியதுடன்... தன் அன்பு மனைவியின் அக்கறைக்கு பதில்சொல்ல முடியாமல் திக்குமுக்காடி திகைத்துப் போனார்.

""உனக்கிருக்கும் அக்கறை ஏன் எனக்குத் தோணாமப் போச்சு? என் நண்பனின் பிள்ளைகள் மீது நான் அன்புகாட்ட தவறிவிட்டேனா?'' என திகைத்தவர்... தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கிளம்பிச் சென்று... சக்ரபாணியின் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு... "உங்க பிள்ளைகளோட தாயின் ஆத்மா இன்னமும் உங்களைவிட்டுப் போகலை. வாங்க காட்டுறேன்' என சக்ரபாணி யையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.

cc

தன் மனைவியிடம் நாகிரெட்டியார், இரு குழந்தைகளையும் ஒப்படைத்ததும்... தாய்மை பொங்க... குழந்தைகளை வாரியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட... எதைக்கண்டும் கலங்காத சக்ரபாணியின் கண்கள் நீர்கட்டிக்கொண்டன.

அன்றுமுதல் சேஷம்மா தங்கள் குழந்தைகளைவிட... சக்ரபாணியின் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்திருக்கிறார்.

தற்செயலாக ஒருநாள்... சக்ரபாணியின் குழந்தைகளை சேஷம்மா தூங்க வைப்பதைப் பார்த்து நெகிழ்ந்து... தன் கடமை முடிந்துவிட்ட தாகவே... அப்போதிலிருந்தே நினைத்தார் சக்ரபாணி.

காலம் ஒருநாள் சக்ரபாணி யை அழைத்துக்கொண்டது. நாகிரெட்டியாருக்கு தனது வலதுகை... இல்லை... இல்லை... உயிரில் சரிபாதி போய்விட்டதே... என்ற துக்கம் கடைசிவரை அவரைவிட்டுப் போகவே இல்லை. "நண்பர்களான சக்ரபாணியை யும், என்னையும் சக்ரபாணியின் மரணத்தால் மட்டுமே பிரிக்கமுடிந்தது. உடலளவில்தான் அவர் என்னை பிரிந்திருக்கிறார்' என நாகிரெட்டியார் அடிக்கடி சொல்வதுண்டு. ஒருநாள்... நண்பன் சக்ரபாணி சென்ற இடம்தேடி... நாகிரெட்டியாரும் போய்விட்டார்.

ஆந்திர மாநிலத்தில் ரெட்டி மற்றும் கம்மா என்கிற இரு பிரிவினர்தான் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். இந்த இருபிரிவினருக்கும் இடையே எப்போதும் ஒரு உரசல் இருந்துகொண்டே இருக் கும். ஆனால்... ரெட்டி இனத்தைச் சேர்ந்த நாகி ரெட்டியாரும், கம்மா இனத்தைச் சேர்ந்த சக்ர பாணியும் உயிருக்குயிரான நண்பர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த இருபிரிவினரும் தங்களைப் போல ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிற சிந்தனை இருவருக்கும் இடையே இருந்தது. அத னால் இன ஒற்றுமையை வலியுறுத்தி திரைப்படம் ஒன்றை எடுக்கவிரும்பினர் இருவரும். அன்றைய பெரிய ஹீரோக்களான என்.டி.ராமாராவ் அவர் களை ரெட்டி இனத்தவராகவும், ஏ.நாகேஸ்வரராவ் அவர்களை கம்மா இனத்தவராகவும் நடிக்கவைக்க திட்டமிட்டனர். "மனிஷிலு மாராலி'’என படத் திற்கு டைட்டிலும் வைக்கப்பட்டது. (இந்த டைட் டிலுக்கு அர்த்தம்... ‘"மனிதர்கள் மாற வேண்டும்'’ என்பதாகும்) ஆனால்... பட வேலைகளை தொடங் குவதற்கு முன்பாகவே... சக்ரபாணி இயற்கை எய்திவிட்டார்.

"சக்ரபாணி இல்லாமல் அந்தப் படத்தை எடுப்பது சரியாக வராது' எனச் சொல்லி... அந்தப் படத் திட்டத்தையே கைவிட்டார் நாகிரெட்டியார்.

நாகிரெட்டியார் சக்ரபாணி நண்பர்களின் நட்பு... சாதி பேதங்களைக் கடந்ததாக திகழ்ந் திருப்பதற்கு இதுவே உதாரணம்.

மராட்டியரான கிருஷ்ணன் அவர்களும், பிராமணரான பஞ்சு அவர்களும் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர்கள். இவர்களின் நட்பின் கதையை ‘இரு நண்பர்கள்’ வரிசையில் பார்க்கலாம்.

படப்பிடிப்பின்போது தன்னோடு வேலை செய்யும் தொழிலாளர்களை மிரட்டியும், விரட்டியும் பரபரப்பாக வேலை வாங்குவார் பஞ்சு. வேலை முடிந்ததும்... அவர்களிடம் அன்புடனும், அரவணைப்புடனும் நடந்துகொள்வார். இதை நான் பலமுறை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

"பெரியவர்'’என்று சொல்லப்படும் கிருஷ்ணன் நிறைகுடமாக அமர்ந்திருந்து... எல்லாம் சரியாக நடக்கிறதா? என கண்காணித்தபடி இருப்பார். ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக பஞ்சுவை அழைத்து குறைகளைச் சுட்டிக்காட்டி... செம்மை செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.

எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் அதை சரிசெய்து கொடுப்பதில் வல்லவர் கிருஷ்ணன். திரைவடிவத்தில் அதை சரியாக எடுப்பதில் வல்லவர் பஞ்சு. இப்படி... வல்லவனும், வல்லவனும் நண்பர்களாக இருந்து சாதித்தார்கள்.

சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்ற பெரும் செல்வந்தர் வாழ்ந்துவந்தார். குழந்தைபாக்கி யம் இல்லாமல் கபாலீஸ்வரர் சந்நிதியில் அன் றாடம் தவமிருந்து வேண்டினார். ஒரு பெண் குழந்தை பிறந்தது. "பூம்பாவை' என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். பூம்பாவை பூப்பெய்தினாள். திருஞான சம்பந்தரின் ஆன்மிகப் பணிகளையும், அவர் நிகழ்த்தும் அற்புதங்களையும் கேள்விப்பட்டிருந்த சிவநேசன், சம்பந்தரின்பால் ஈர்க்கப்பட்டு... "என் மகளை சம்பந்தருக்கே மணம் செய்துகொடுப்பேன். என் செல் வங்களையெல்லாம் அவருக்கே தானம் செய்வேன்...' என மகிழ்ச் சிப் பெருக்கில் வாழ்ந்துவந்தார். ஒருநாள் பூப்பறிக்கும்போது பூம்பாவையை பாம்பு தீண்டி யதில் இறந்துவிட்டாள். எத் தனையோ ராஜவைத்தியங்கள் செய்தும் பலனில்லை. “"நான் ஏன் கவலைப்பட்டுக்கொண்டி ருக்க வேண்டும்? திருஞானசம் பந்தருக்கு உரியவள்தானே என் மகள். அவர் கண்டிப்பாக மயிலாப்பூர் வருவார். அவர் வரும்வரை... எரியூட்டப்பட்ட என் மகளின் உடற்சாம்பலையும், எலும்புகளையும் ஒரு குடத்தில் இட்டு, பொன்னும், மணியும், முத்தும் அதில் போட்டுவைத்து பாதுகாப்பேன். அவர் வந்ததும் அவரிடம் ஒப்ப டைப்பேன்' என முடிவெடுத்து... மகளின் அஸ்தியை பாதுகாத்துவந்தார். ஒருநாள் திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்தார். அவரிடம் இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உடனே... ‘"பூம்பாவாய்'’ எனப் பாடினார். குடத்திலிருந்து குமரியாய்த் தோன்றி சம்பந்தரை வணங்கி நின்றாள்.

""சுவாமிகளே... என் மகள் உங்களையே திருமணம் செய்ய விரதம் இருந்தவள். ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார் சிவநேசன்.

""உங்கள் மகள் மாண்டு... சாம்பலானாள். சிவனருளால் இப்போது நாம் அவளை தோற்றுவித்துள்ளோம். அதனால்... அவள் எனக்கு மகளாவாள்'' என ஆசிர்வாதம் செய்துவிட்டு சம்பந்தர் புறப்பட்டுவிட்டார்.

சம்பந்தரின் நியாயத்தை உணர்ந்த சிவநேசன் அதை ஏற்றுக்கொண்டாலும், வேறொருவருக்கு மகளை மணம் முடித்துத்தர ஒப்பாமல்... கன்னிமாடத்திலேயே மகளை இருக்கச் செய்தார். பூம்பாவை அங்கே தவமிருந்து சிவனடி சேர்ந்தாள்.

1944-ல் "பூம்பாவை'’என்ற பெயரில் வந்த இந்தப் படத்தை நான் என் 14 வயதில் பார்த்துள் ளேன். சம்பந்தராக கே.ஆர்.ராமசாமியும், பூம் பாவையாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்த இந்தப் படம்தான் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய முதல்படம்.

பஞ்சுவுக்கு திருமணம் செய்துவைத்தார் கிருஷ்ணன். இதனால் பஞ்சு வீட்டில் புயல்...

__________

பிறந்தநாள் பரிசு!

ccc

நான் எழுதிவரும் "கேரக்டர்' தொடரை தொடர்ந்து பாராட்டிவரும் வாசகர்களில் ஒருவரான சேலம் வக்கீல் எல்.லட்சுமணன் அவர்கள்... ஜூலை 15 எனது 90-வது பிறந்தநாளன்று... என் இல்லத்திற்கு தன் துணைவியாருடன் வந்து வாழ்த்தினார். அன்புப்பரிசாக எனக்கு மோதிரம் அணிவித்து... மகிழ்வித்து மகிழ்ந்தார் லட்சுமணன்.