(64) பனியில் பூத்த "சன்ஃப்ளவர்'!
பேரழகி ஜோவானாவும் ராணுவவீரன் ஆன்ட்டனியோவும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் உங்க ஊர்... எங்க ஊர் காதலல்ல. கற்பனைக்கும் எட்டாத அற்புதமான காதல். இதழோடு இதழ் முத்த மிட்டார்களென்றால்... தேனெடுக்காமல் விடமாட் டார்கள். இரு மனமும், ஒரு மனதாகி உல்லாசபுரியில் உலாவரும்போது... "‘உடனே புறப்படு யுத்தத்திற்கு'’ என அழைப்புவர புறப்பட்டான். அவனின் பிரிவைத் தாங்கமுடியாமலும், பீறிட்டுவரும் கண்ணீரை அடக்க முடியாமலும், போலித்தனமான முத்தத்தையிட்டு "போய் வாருங் கள்'’என்று கையசைத்தாள். இறுதிச்சங்கு போல ஊளையிட்டு கிளம் பியது ரயில். கண்களிலிருந்து ரயில் மறையும்வரை கையசைத்து நின்றாள்.
எதிரி நாட்டின்மீது போர் தொடுத்ததில் ஆயிரக்கணக்கான வீரர் கள் இறந்துவிட்டதாகவும்.. மற்றவர்கள் ரயிலில் திரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் வானொலி செய்தி வாசித்தது. தன் அன்புக் காதலனும் திரும்பி வருகிறானா?’ என விடை தேடி பரபரத்தாள் ஜோவானா. ஆனால் மௌனம்தான் பதிலாக கிடைத்தது. அடுத்த செய்தியாக... "நாளைய தினம் சரியாக இரவு 12 மணிக்கு நமது வீரர்கள் ரயில்நிலையம் வந்தடைகிறார்கள்'’எனச் சொன்னது வானொலி.
ரயில் நிலையத்தை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து வந்தது. கூட்ட இடிபாடுகளைத் தகர்த்துக்கொண்டு ஜோவானா வந்து நின்றாள். ரயில் வந்துநின்றது. இறங்கிய வீரர்களை அவர வரின் உறவினர்கள் அழைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீரைச் சிந்தியபடி... முத்த மழை பொழிந்தபடி சென்றார்கள். காதலனைக் காணாத ஜோவானா, ரயிலின் ஒவ் வொரு பெட்டியாக துருவித் துருவிப் பார்த்தாள். அவன் இல்லை. தெரிந்த ஒருவரிடம் "ஆன்ட்டனியோவைப் பார்த் தீர்களா?'’எனக் கேட்டாள். "நோ'’என பதில் வந்தது. மீண்டும் ரயில் பெட்டிகளைத் துழாவினாள். அவன் இல்லை. வெகுநேரம் ஆகிவிட்டது. வீட் டுக்குப் போகப் பிடிக்காமல் பிரிட்ஜ் மேல் ஏறி... இறங்கி நடந்தாள். ரயில் நிலைய பெஞ்ச்சில் ஒருநபர் மட்டும் உட்கார்ந்திருந்தார். அவரிடம் "ஆன்ட்டனியோவைப் பார்த்தீர்களா?'’எனக் கேட்க... "நோ' என்றார் அந்த நபர்.
தனிமையில் உட்கார்ந்திருந்த அந்த நபரை யே பார்த்துக்கொண்டு... அதே பெஞ்ச்சில் அமர்ந் தாள். அந்த நபர் எச்சிலை விழுங்கி விட்டு தட்டுத்தடுமாறி... "ஜோவானா'’எனக் கூப்பிட்டார்.
எங்கு பார்த்தாலும் பனியும், பனிப்புயலும். எஞ்சிய வீரர்கள் ஆங்காங்கே... இடுப்பளவு பனிக்கட்டிகளுக்குள் தவழ்ந்தும், தட்டுத்தடு மாறியும் ஆங்காங்கே கண்ணுக்கு எட்டிய தூரத்திலும்... எட்டாத தூரத்திலும் வந்துகொண்டிருக் கிறார்கள். அவர்களில் கால் முறிந்து படுகாயமடைந்த ஒரு வீரனை, இன்னொரு வீரன் தன் தோள்கொடுத்து தாங்கி அழைத்து வருகிறான். மற்றவர்கள் முன்னேறிச் சென்றுவிட... இவர்கள் இருவரும் தனித்து போராடி வந்துகொண்டிருக்க... காயம் பட்டவன் சரிந்துகொண்டே வந்தான். பேசும் தன்மையையும் இழந்து விட்டான். உதவிக்கும் யாரையும் அழைக்க முடியாத நிலை. காயம்பட்டவனின் காலில் இருந்து வழிந்த ரத்தம் பனிக்கட்டியில் பட்டுச் சிவக்கிறது. அவன் உடம்பு பனிக் கட்டிக்குள் உள்ளிறங்குகிறது. தலைமட் டுமே தெரிகிறது. அவனை மீட்க முடியாத தோழன்... வேறுவழியே இல்லாமல் அவ னை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறான்.
""நான் ஆன்ட்டனியோவைக் காப்பாற்ற எவ்வளவோ போராடியும் முடியவில்லை ஜோவானா''’ எனச் சொல்லிவிட்டு... ""அவன் இந்நேரம் இறைவனடி சேர்ந்திருப்பான்''’என்றான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜோவானாவால் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. ஆனாலும்... "அந்த இடம் எங்கே இருக்கிறது?'’எனக் கேட்டாள். ""உன்னால் அங்கே செல்ல முடியாது. அது ஒரு பாழாய்ப் போன பனிப்பிரதேசம்''’என அவன் சொல்ல... ‘""எப்படியாவது நான் அங்கு செல்வேன். ப்ளீஸ்... ப்ளீஸ்... இடத்தைச் சொல்லுங் கள்''’என கதறினாள். அவளின் கண்ணீ ரைத் துடைத்து விட்டவன்... அந்த இடத் தைச் சொன்னான்.
பல ஊர்கள், பல பிரதேசங்கள் நடக்கிறாள்... நடக்கிறாள். பெருங்காற்று பிசாசு உருவெடுத்து கல்லையும், மண்ணையும் வாரியிறைக்கிறது. அதனுள் சிக்கிப் போராடி... தப்பி... தொடர்ந்து நடக்கிறாள். சன் ஃப்ளவர் பூத்த காடுகளைக் கடக்கிறாள். தன் காதலனின் நண்பர் சொன்ன இடத்தை கண்டுபிடிக்கிறாள். தற்போது காலநிலை மாறி... அந்தப் பனிப்பிர தேசம் காய்ந்து கிடக்கிறது. வழிப் போக்கர் ஒருவரிடம் விசாரிக்கிறாள். ""ஆமாம்... நீங்கள் கேட்கும் நிலப்பரப்பு இதுதான். பனிக் காலத்தில் இந்த வழியே வந்தவர்கள் பலர் பலியாகிவிட்டார்கள். இறந்தவர்களைஅங்கே சமாதி வைத்து... அதன்மேல் இறந்தவர்களின் பெயர்களையும் எழுதியிருக்கிறார்கள்''’ எனச் சொல்லிவிட்டுப் போனார்.
அந்த இடத்திற்கு ஓடிவந் தாள். வரிசை வரிசையாக ஆயிரம் சமாதிகள் இருந்தது. அவளின் காதலனின் பெயரும் ஒரு சமாதி யில் இருந்தன. ஆனால் இனிஷியல் வேறாக இருந்தது. காதலனின் பெயரை உரக்கக் கூப்பிட்டு அழு தாள். மயங்கினாள். பின் அங் கிருந்து புறப்பட்டாள். பக்கத்தில் சில குக்கிராமங்கள் இருந்தன. ஊருக்குள் சென்று தன் காதலனின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தாள்.
பதில் கிடைக்கவில்லை. ஆளே உருமாறி... உடை கிழிந்து... நடக்க சக்தியற்றவளாய்... ஒரு திண்ணையில் உட்கார்ந்தாள். ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் போட்டோவைக் காட்டி விசாரித்தாள். ""அதோ அங்கே ரெண்டு சிறுவர் கள் விளையாடிக்கிட்டிருக்காங்க. அவர்களிடம் கேள்''’எனச் சொல்ல... சிறுவர்களிடம் போய் போட்டோவைக் காட்டினாள்.
""அதோ... அந்த வீட்டில் இருக்கிறார்''’ எனச் சொன்னதும்... புதுப்பிறவி எடுத்தவளாக காற்றாய்ப் பறந்து... ரயில்வே குடியிருப்பில் இருந்த அந்த வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தினாள்.
கதவு திறந்த அழகிய பெண்ணிடம் ""இங்கே ஆன்ட்டனியோ...''’எனக் கேட்கும் போதே... ஜோவானாவை உள்ளே அழைத்து அமர வைத்து... "அவர் வேலைக்குச் சென்றிருக்கிறார்... நீங்கள் யார்?'’ எனக் கேட்க... ""அவரின் ஊரைச் சேர்ந்தவள்.. இங்கே ஒரு வேலையாக வந்தேன். நீங்க?''’
""நான் அவரோட மனைவி. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... காபி கொண்டு வர் றேன்...''’என உள்ளே சென்றாள். கண்கள் நிலை குத்தியிருந்த ஜோவானா தன் காதலனும், அந்தப் பெண்ணும் ஜோடியாக இருந்த போட் டோவைப் பார்த்தாள். அருகே தொட்டிலில் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. காபி வந்தது. வாங்கிக் கொண்டு... மீண்டும் கேட்டாள்... ""நீங்க அவரோட மனைவியா?''’
""ஆமாம்''’
""நீங்க இதே ஊரா? எப்படி அவரோட...?''’
""அதையேன் கேட்குறீங்க...''’என்றபடி சொல்லத் தொடங்கினாள்.
பனியின் ஆதிக்கம் பாதிக்கும்மேல் குறைந்திருந்த நிலையில்... தலையில் விறகுச் சுமையுடன் வந்தபோது... பனிக்குள் தலைமுடி தெரிய... இழுத்தாள். தலை வெளியே வந்தது. விறகுக்கட்டை கீழே வைத்துவிட்டு... தலையைப் பிடித்து தூக்கினாள்.
ஒரு உருவம் வந்தது. மூச்சு இருந்தது. போராடி இழுத்து அவனை தரைக்கு கொண்டுவந்தாள். வைத்தியர் வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிர் பிழைத்தான். ஆனால் ஒரு கால்மட்டும் நடக்க முடியாத நிலை. ""நீ இவருக்கு மறுவாழ்வு கொடுத்திட்ட. நீயே இவருக்கு நடைப்பயிற்சி கொடு''’ என வைத்தியர் சொன்னார்.
அவன் பூரண குணமான பிறகு வைத்தியரே... ""இவள் பெயர் ஜூலி. என் பாதுகாப்பில் வளரும் பெண். உன்னைக் காப்பாற்றிய இவளுக்கு இனி நீயே துணை''’என்கிறார். அதை அவன் நன்றிக்கடனாக ஏற்கிறான். இருவருக்கும் திருமணம் செய்துவைக் கிறார் வைத்தியர். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது.
""நீங்கள் என் கணவரின் ஊர்க்காரர். நீங்களே நீதிபதியாக இருந்து சொல்லுங்கள். எனக்கு குழந்தை பிறந்த பிறகு, என்னிடம்... தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும், அவளை ஏமாற்றிவிட்ட தாகவும் சொல்லிச் சொல்லி வருந்துகிறார். இப்படி ஒரு மோசத்தை அவர் செய்யலாமா? அந்தப் பெண் யார் என்று தெரிந்தால் என் கணவரை நானே அவளிடம் சேர்த்துவிடுவேன். பெண்பாவம் பொல்லாதது என்பதை நான் அறியாதவளா?''’என ஜூலி சொல்ல... ஜோவானா வெலவெலத்துப் போனாள். ‘"இப்படியும் ஒரு தூய உள்ளம் கொண்டவள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கிறாள்...'’ என எண்ணினாள்.
ரயில் வரும் சத்தம் கேட்டதும்... "அவர் வந்து விட்டார். வாங்க... அவருக்கு ரயில்வேயிலதான் வேலை, போய்ப் பார்க்கலாம்'’எனச் சொல்லி குழந்தையையும் தூக்கிக்கொண்டு... ஜோவானாவை அழைத்துச் சென்றாள்.
பிளாட்பாரத்தில் ரயில் வந்து நின்றது. அவன் கீழே இறங்கி, ஒரு காலை இழுத்து நடந்து... ரயில் சக்கர நட்டுகளை அடித்து சரிபார்த்துக்கொண்டே வந்தான். ஜோவானா அவனைப் பார்த்து அளவற்று மகிழ்ந்தாள். அவன் அவளைக் கவனிக்கவில்லை. வேலை முடிந்து குழந்தையை தூக்கிக் கொஞ்ச... ""உங்கள் ஊர்க்காரர், உங்களைப் பார்க்க வந்திருக் கிறார்... இதோ...''’ என்றாள் ஜூலி. ஜோவானாவைக் காண வில்லை. ரயில் கிளம்பியது. கடைசிப் பெட்டியில் நின்ற வாறு... காதலனையும், அவன் மனைவியையும் பார்த்து சிரித்தபடி கையசைத்தாள் ஜோவானா. ரயிலில் அவள் போய்க்கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தான் அவன்.
இதுதான் பாரதிராஜா எடுக்க விரும்பும் லட்சியப் படமான "சன்ஃபிளவர்'’ படத்தின் கதை. ஜோவானாவாக சோஃபியா லாரன் வாழ்ந்திருப்பார் வாழ்ந்து. இந்தக் கதையின் உரிமை பெற்று... பாரதிராஜா அவர்களுடன் இணைந்து படம் எடுக்கலாம் என்றிருக்கிறேன்.
அம்மா நடிகை நடித்து புகழ்பெற்ற ஒரு படக் கதையை, மகள் நடிகையை வைத்து எடுக்க டைரக்டர் சங்கரும், நானும் முயற்சி எடுத்த கதையைச் சொல்கிறேன்...