(60) மங்கையர் திலகம்
பெருமதிப்பிற்குரிய ஏவி.எம்.சரவணன் அவர்கள் "நானும் சினிமாவும்'’என்ற தலைப்பில் ‘"தினத்தந்தி'யில் எழுதினார். அதில் ஐயா ஏவி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் சாதனைகளையெல்லாம் எழுதியிருந்தார்.
உழைத்தவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை... உயர்வு தானாக வரும் என்பதை இதன் மூலம் அறியமுடிந்தது.
அதைத்தான் வள்ளுவன் வாய்மையும் உறுதிப்படுத்துகிறது.
ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை (594)
அதாவது... தளர்ச்சி இல்லாமல் எவனொருவன் உழைக்கிறானோ... அவன் எங்கே இருந்தாலும் செல்வம் அவனைத் தேடி வந்துவிடுமாம்.
இதற்கு உதாரணபுருஷன் ஐயா ஏவி.மெய்யப்பச் செட்டியார்தான் என்பதை நம்மால் படித்து உணரமுடிகிறது.
இப்படி பல நல்ல விஷயங்களை எழுதி வரும்போது... ஏவி.எம்.சரவணன் தம் இல்லத்தரசியைப் பற்றியும் சொல்லியிருந்தார்.
சரவணனுக்கு பெண் பார்க்கச் சென்றிருந்தார்கள். பெண்ணின் போட்டோவைப் பார்த்து... நேரிலும் ஜாடையாக பெண்ணைப் பார்த்துவிட்டு ‘"பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது'’ என்று சொல்லிவிட்டார்.
பெண் குனிந்த தலை நிமிராமல் வந்து... பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே போய்விட்டார். மாப்பிள்ளை உட்பட யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
சரவணன் தனது போட்டோவை ஒரு கவரில் வைத்து, தன் உறவுக்காரப் பெண்மணியிடம் கொடுத்து.... ‘"பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?'’என கேட்டுவரச் சொன்னார்.
அந்தப் பெண்மணியும் உள்ளே சென்று... “"என்னம்மா... மாப்பிள்ளையைக்கூட பார்க்காம குனிஞ்சதலை நிமிராம வந்துட்ட. சரி...சரி... இதுல மாப்பிள்ளையோட போட்டோ இருக்கு. பார்த்திட்டு... மாப்பிள்ளையை பிடிச்சிருக்கானு சொல்லு...'’என போட்டோ கவரை நீட்டினார். அதை வாங்கி பீரோவில் வைத்துவிட்டார் பெண்.
"போட்டோவ பார்த்தியா? மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?'’என அந்தப் பெண்மணி கேட்க... ‘சம்மதமாக’ பெண் தலையாட்ட... வெளியே வந்த அந்த பெண்மணி... “"பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சுப்போச்சு'’எனச் சொல்ல... தேதி குறிக்கப்பட்டு... திருமணமும் நடந்தது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு...
ஒரு பெரிய மனுஷி, சரவணனின் மனைவியை பார்க்க வந்தவர், தான் கொண்டுவந்த பொருளை ஒரு பழைய பீரோவில் வைத்தபோது... ஒரு கவரிலிருந்து ஒரு போட்டோ நீட்டிக்கொண்டிருந்தது.
அந்த கவரை எடுத்து உள்ளிருந்த போட்டோவைப் பார்த்தார்.
வாலிப வயதில் சரவணனின் போட்டோ.
"வாலிப வயசில் உன் கணவர் எவ்வளவு அழகா இருக்கார்? இந்தப் போட்டோவப் பார்த்துத்தான் மயங்கி... சரவணனை கட்டிக்க சம்மதிச்சியோ...'’என அந்த பெரிய மனுஷி கேட்க...
அந்த போட்டோவை வாங்கிப் பார்த்த சரவணனின் மனைவி... "இப்படி ஒரு போட்டோவ நான் பார்க்கவேயில்லையே. ஒருவேளை... என்னைப் பெண்பார்க்க வந்தப்ப... ஒரு அம்மா மூலம் இந்த போட்டோவ கொடுத்து அனுப்பினாங்க. நான் போட்டோவ பார்க்காமலே பீரோவுல வச்சிட்டேன். அந்த போட்டோவாத்தான் இருக்கும்'’எனச் சொல்ல...
"ஏம்மா... அப்டின்னா... உனக்கு இஷ்டமில்லாமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?'’’
"அப்படி இல்ல பாட்டி... என்னைப் பெத்தவங்க பார்த்து... "மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை'னு தேர்ந்தெடுத்த பிறகு... நான் எதுக்காக மாப்பிள்ளை போட்டோவ பார்க்கணும். பெத்தவங்களுக்கு பிடிச்சா போதுமே. அதனாலதான் மாப்பிள்ளை போட்டோவ பார்க்கல...'’என்று சொல்லியிருக்கிறார்.
பெற்றவர்களுக்கு பெருமை கொடுக்கும் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் நாட்டில் தக்கசமயத்தில் தாராளமாக மழை பெய்கிறது.
மங்கையர்திலகம் என்றால்... அது ஏவி.எம்.சரவணனின் மனைவி முத்துலட்சுமிக்கு மிகவும் பொருத்தமானதுதான்.
"எங்க ஊர் ராஜா', "பட்டிக்காடா பட்டணமா'’போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கியதோடு, "தங்கப்பதக்கம்'’படத்தை இயக்கி ஹிமாலய ஹிட் கொடுத்தவர் டைரக்டர் பி.மாதவன் அவர்கள்.
1974-75 காலகட்டத்தில் ஓரிரு படங்களை சொந்தமாக எடுத்து... மாதவன் பெரும் நஷ்டத்தில் இருந்தநேரம்... எனக்கு அழைப்புவிடுத்தார். நானும் அவருடன் சேர்ந்து தொழில்செய்ய காத்திருந்தேன். அதனால் உடனே தேனாம்பேட்டையிலுள்ள அவரின் அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தேன்.
மிக அன்போடு குனிந்து வணங்கி வரவேற்றார்.
எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது.
"அவர் எங்கே... நான் எங்கே? இப்படி வரவேற்கிறாரே?...'’என எண்ணி, தட்டுத்தடுமாறி என் பணிவை அவருக்குத் தெரியப்படுத்திக்கொண்டேன்.
""கலைஞானம்... நீங்க எழுதிய "குறத்திமகன்', "வெகுளிப்பெண்', "காதல் படுத்தும்பாடு', ‘"வாயாடி'’ஆகிய நான்கு படங்களையும் பார்த்துவிட்டேன். நானும் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்தபோதிலிருந்தே நெருக்கமான நண்பர்களாகிட்டோம். . இப்போதும் அடிக்கடி நாங்கள் சந்தித்து பேசிக்கிறோம். உங்களைப்பற்றி நிறையவே புகழ்ந்து சொல்லியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன்...''’எனச் சொன்னார்.
உடனே நான் என்னுடைய பெருமையை கொஞ்சம் அள்ளிவிட்டேன்.
"ஆதிபராசக்தி'’ படத்தின் திரைக்கதையில் கோபாலகிருஷ்ணன் அவர்களுடன் நானும் பங்குபெற்றதையும், "குறத்திமகன்'’அனுபவங்களையும் நகைச்சுவையாகச் சொல்லி... அவரைச் சிரிக்கவைத்தேன்.
பாட்டுக்கச்சேரியில் பாடும் பாடகர்கள் முதலில் ‘"ததரின...ன..ன...'’ என்று கொஞ்சநேரம் ஆலாபனை பாடிவிட்டுத்தான் பாட்டுப்பாட ஆரம்பிப்பார்கள். அதுபோல... எனது கதைக் கடையை உடனே திறந்துவைக்காமல்... கொஞ்சநேரம் சகஜமாக பேசிவிட்டு... கதையைச் சொல்லும்போது அச்சமில்லாமல் இருக்கும். அதற்காகத்தான் இந்த ஆலாபனை.
கதை சொல்ல நானும், கேட்க அவரும் மனரீதியாக தயாராகிவிட்டோம்.
டீ வந்தது. குடித்துவிட்டு ரெடியானேன்.
""கலைஞானம்... முழுக்க முழுக்க... புதுமையும், வித்தியாசமும் இருக்க கதை இருந்தா சொல்லுங்க''’’
""சார்... ஒரு இங்கிலீஷ் படத்தின் கதை இருக்கிறது. சொல்லட்டுமா?''’’
""ஓ... நீங்க இங்கிலீஷ் பட கதைகள்கூட சொல்வீர்களா?''’என வியப்பாக கேட்டார்.
அவரின் வியப்பிற்கு காரணமிருக்கிறது. நான்தான் பாமரத்தனமாக... கிராமத்து பாணியில்தானே பேசுவேன். அதனால் அவர் அப்படிக் கேட்டார்.
நான் "ஆமாம்'’என்பதுபோல தலையாட்டினேன்.
""எங்க... அந்த இங்கிலீஷ் கதையைச் சொல்லுங்க பார்ப்போம்''’என்றார்.
சொன்னேன்!
கதையைக் கேட்டதும் மாதவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உடனே 2,500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்.
""இந்தக் கதையையே எடுக்கலாம். நாளைலருந்து நீங்க எழுதுற வேலையை ஆரம்பிங்க. இந்தக் கதையோட ரைட்ஸ் எங்க இருந்தாலும் வாங்கிடுறேன்''’என்றார்.
மாதவனின் கைகளை தொட்டு வணங்கிவிட்டு... விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன்.
""நிஜமாவா சொல்றீங்க? "பட்டிக்காடா பட்டணமா'’படத்தோட டைரக்டர்கிட்டயா கதையை வித்தீங்க? இனிமே உங்களுக்கு நல்ல காலம்தான்...''’என என் மனைவி மகிழ்ச்சியடைந்தாள்.
மறுநாள் காலையில்... மாதவனின் ஆபீஸிலிருந்து வந்த ஒருவர்... "சார்... டைரக்டர் உங்களை உடனே வரச்சொன்னார்...'’என்றார்.
நானும் அவருடனேயே கிளம்பி மாதவனைச் சந்தித்தேன்.
""கலைஞானம்... நீங்க சொன்ன கதையை என் மனைவியிடம் சொன்னேன். அவளுடைய ரியாக்ஷன் சரியில்லை. ‘"இந்த மாதிரி கதையெல்லாம் வேணாம். உங்களுக்கு ராசியானவர் கதாசிரியர் பாலமுருகன்தான். அவரிடமே கதை வாங்கி படம் எடுக்குறதுதான் நல்லதுனு தோணுது'’எனச் சொல்லிவிட்டாள்''’என்றார்.
""சார்... உங்க மனைவிக்கு இந்தக் கதை பிடிக்கலைனும்போது... விட்டுடுங்க. உங்களோட ‘"பட்டிக்காடா பட்டணமா', "எங்க ஊர் ராஜா'’படங்களுக்கு கதை எழுதிய பாலமுருகன் சிறந்த எழுத்தாளர். அவரையே கதை எழுதச் சொல்றதுதான் நல்லது. எனக்காக கொஞ்சநேரம் பொறுக்க முடியுமா? நான் இதோ... போய்ட்டு உடனே வந்துடுறேன்''’எனச் சொல்லிவிட்டு... வீட்டுக்கு வந்து... மாதவன் எனக்கு நேற்று கொடுத்த அட்வான்ஸ் தொகை 2,500 ரூபாயை எடுத்துக் கொண்டுவந்து... மாதவனிடம் கொடுத்துவிட்டு... ""சார்... அடுத்து ஒரு வாய்ப்பு எனக்குக் கொடுங்க சார்''’எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
பத்து வருடங்களுக்குப் பிறகு... டைரக்டர் பி.மாதவனுக்கு நான் கொடுத்த அட்வான்ஸ்...