Skip to main content

கேரக்டர்! -கலைஞானம் (57)

(57) மனதைப் பாதித்த கதை!

ன்னார்குடியிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து, யதேச்சையாக ராணுவத்தில் சேர்ந்து கர்னலாக பணியாற்றிவிட்டு... புனேவில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டாக்டர் கர்னல் பாலசுப்பிரமணியன், "நக்கீரன்'’இதழில் நான் எழுதிய "சினிமா சீக்ரெட்' மற்றும் இப்போது எழுதிவரும் "கேரக்டர்' தொடர்களைப் படித்துவிட்டு, சமீபத்தில் சென்னை வந்தபோது... என்னைச் சந்திக்க விரும்பியதன் பேரில் அவரைச் சந்தித்தேன்.

""நான் ஒரு யோசனை சொல்றேன்... மறுக்கமாட்டீங்களே?'' எனக் கேட்டார் கல்வியாளர் டாக்டர் கர்னல் பாலசுப்பிரமணியன்.

""சொல்லுங்கய்யா'' என்றேன்.

char


""சினிமாவுல எவ்வளவோ பேர்களை நட்சத்திரங்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் அறிமுகப்படுத்துன நீங்க... வாடகை வீட்டுல வசிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. நீங்க சொந்த வீட்டுல வசிக்கணும். அதுக்காகத்தான் இந்த யோசனையைச் சொல்றேன்... ரஜினி உட்பட நீங்க அறிமுகப்படுத்துன கலைஞர்களையெல்லாம் வச்சு ஒரு கலை நிகழ்ச்சி நடத்தலாம். அதுல வசூல் ஆகுற தொகையை வச்சு... உங்களுக்கு வீடு வாங்கலாம். கலைநிகழ்ச்சி நடத்துறதுக்கான ஏற்பாடுகளுக்காக நான் இந்த நிமிஷமே பத்துலட்ச ரூபாய் தர்றேன்'' எனச் சொல்லியபடியே... செக் புக்கை எடுத்து நிரப்பப்போனார் பாலசுப்பிரமணியன்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது.

""நம்ம வாழ்க்கை நல்லாருக்கணும்னு நினைக்கிறது நம்மள பெத்தவங்களும், குடும்பத்தாரும்தான். ஆனா, முன்பின் அறிமுகமில்லாத நிலையிலும், முதல் சந்திப்பிலேயே இவ்வளவு தொகையைத் தர முன்வர்றாரே...'' என கண் கசிந்துபோனேன்.

நான் மிகவும் நெகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து பாலசுப்பிரமணியன் என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

""இல்லய்யா செக் போடாதீங்கய்யா... எனக்காக செய்யவேண்டியவங்கள்லாம் மௌனமா இருக்காங்க... ஆனாலும் ‘செய்றேன்னு சொல்றாங்க. ஆனா உடனடியா எனக்கு உதவத் துடிக்கிற உங்க நல்ல உள்ளத்த நான் வாழ்த்துறேன்...'' என்றேன்.

""என்னை ஆசிர்வதிங்க'' என்றார்.

மனசார ஆசிர்வதித்துவிட்டு... ""அய்யா... எனக்குத் தரவிரும்புற அந்தத் தொகையை உங்ககிட்டவே வச்சுக்கங்க. எங்க சினிமா உலகத்துல எல்லாரையும் கூப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்துறது... இப்ப சாத்தியமா தெரியல. கடினமான காலமா இருக்கு. இந்த நிகழ்ச்சி நடத்துறத கொஞ்சநாள் கழிச்சு முயற்சிக்கலாம்'' என்றேன்.

பாலசுப்பிரமணியன் சில விநாடிகள் என்னையே உன்னிப்பாக பார்த்தார்.

""அப்படின்னா ஒண்ணு செய்ங்க. நான் சின்ன வயசுலருந்தே சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு... சென்னைக்கு வந்து சினிமா கம்பெனிகள்ல வாய்ப்புத் தேடினவன். இப்ப நான் நடிக்க விரும்பினாலும் அதுக்கு நேரமில்ல. ஆனா... ஒரு படத்தை நான் தயாரிக்கலாமே. அந்தப் படத்துல ‘"உழைப்பை நம்பினா... சாதனை செய்யலாம்'’ என்கிற கருத்தை வலியுறுத்தி... என்னோட உழைப்பையும், உயர்வையும் உதாரணமா வச்சு... கதை எழுதுங்க. அந்தக் கதைக்குள்ள உங்க பாணியை வச்சு திரைக்கதை பண்ணுங்க. படம் பார்க்கிறவனுக்கு அலுப்புத் தட்டாம இருக்கிறதுக்குத் தேவையான கலகலப்பான அம்சங்களை சேர்த்துக்கங்க... செய்றீங்களா?''

ch


""கதை எழுதுறதுதானே எனக்கு பிடிச்சமான வேலை. கண்டிப்பா செய்றேன்.''’’

""நீங்க கதையை தயார் செய்றதுக்கு நான் என்ன பணம் தரணும்?''

""நாலஞ்சுபேரை சேர்த்து கதை இலாகா ஏற்படுத்தணும். ஒரு இடத்தை வாடகைக்குப் பிடிச்சு... அங்க உட்கார்ந்து டிஸ்கஷன் பண்ணி, ஸ்கிரிப்ட்டை உருவாக்கணும். அதிகபட்சம் ரெண்டு மாசத்துல ஸ்கிரிப்ட்டை உருவாக்கித் தந்திடுறேன்...''

""அதுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?''

""நீங்க குடுக்கிறதை குடுங்க...''

""எனக்காக சலுகையெல்லாம் வேண்டாம். என்ன செலவாகுமோ... அதை நான் குடுத்திடுறேன். இப்போதைக்கி ஒரு தொகை தர்றேன். ஆபீஸ் போட்டு, உதவியாளர்களை வச்சுக்கிட்டு உடனே கதை எழுத ஆரம்பிங்க. கதை அமைப்போட ஃபர்ஸ்ட் வெர்ஷன் தயாரானதும்... அடுத்த மாசமே உங்க கதைக் குழுவோட புனேவுக்கு வந்து என்கிட்ட படிச்சுக் காட்டுங்க. அடுத்து என்ன பண்ணலாம்கிறத அங்கவச்சு பேசிக்குவோம். ஆகமொத்தம் நான் உங்களை வச்சு ஒரு படம் தயாரிச்சே ஆகணும்'' எனச்சொன்ன பாலசுப்பிரமணியன்... ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் எழுதி செக் கொடுத்தார்.

பாலசுப்பிரமணியனுடனான சந்திப்பு... இனிய சந்திப்பாக அமைந்தது.

உயர்ந்த லட்சியங்களை வகுத்துக்கொண்டு... அதை அடைய கடுமையாக உழைத்து முன்னேறியிருக்கும் பாலசுப்பிரமணியன் வாழ்க்கை அனுபவங்கள்... இளம்தலைமுறைக்கு வாழ்க்கையில் முன்னேற உந்துசக்தியாக நிச்சயம் இருக்கும்.

அந்த உழைப்பின் மேன்மையை உள்ளடக்கிய கதையாகவும், அதேசமயம்... ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்த இளமை பொங்கும் கல்லூரி கதையாகவும்... உருவாக்கும் எண்ணத்தோடு... அலுவலகம் அமைத்து, உதவியாளர்களுடன் கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

பாலசுப்பிரமணியனின் அன்போடும், ஆசியோடும் கதை சிறப்பாக அமைந்துகொண்டிருக்கிறது.

விரைவில்... முழு கதையோடு அவரை புனே சென்று சந்திக்கவிருக்கிறேன்.

ca

சில நூறு ஆண்டுகளுக்கு முன்... எங்கள் ஊர் மலைப்பகுதியில் நடந்ததாகச் சொல்லப்பட்ட "முத்தம்மாவின் கதையை’"கேரக்டர்' தொடரில் எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு பாராட்டிய நடிகர் ராஜேஷ்... இதுபோல தெலுங்கில் 1973-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு படத்தினைக் குறிப்பிட்டு, மேலும் சில தகவல்களைச் சொன்னார்.

எம்.ஜி.ஆர். பட டைரக்டர் என புகழ்பெற்ற ப.நீலகண்டன் அவர்கள், அந்த தெலுங்குப் படத்தைப் பார்த்துவிட்டு... அந்தக் கதையை இன்னும் அழுத்தமாகச் சொல்ல விரும்பி... அந்தப் படத்தின் கதைக்கு, புதிதாக திரைக்கதையும் எழுதி வைத்திருந்திருக்கிறார். அந்த அளவுக்கு மனசைப் பாதித்த கதை அது.

ராஜேஷ் சொன்னதன்பேரில் நானும் அந்த தெலுங்குப் படத்தை பார்த்தேன். அதிலிருந்து மீளமுடியாத ஒரு கனம் என் மனதில் ஏற்பட்டுவிட்டது.

அருமையான உண்மைச் சம்பவ கதையாக இருந்தபோதும்... வெற்றியைப் பெற்றிருந்தபோதும்... இன்னும்கூட அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ என என் மனதில் சில காரணங்கள் தோன்றியது. இந்தக் கதையின் உரிமை கிடைத்தால் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு தமிழில் எடுக்கலாம்.

கதைகளில் எப்போதும் சென்ட்டிமெண்ட்டையும், நகைச்சுவையையும் ஆடியன்ஸுக்கு வெளிப்படையாக தெரிவித்துவிட வேண்டும். கதையில் வரும் கேரக்டர்களுக்கு வேண்டுமானால் அதை சஸ்பென்ஸாக வைக்கலாம். ஆடியன்ஸுக்கு சென்ட்டிமெண்ட் சம்பவங்களை வெளிப்படையாகச் சொன்னால்தான்... "அச்சோ...' என்கிற பரிதவிப்புடன் கதையோடு பயணிப்பார்கள்.

உதாரணத்திற்கு....

சாலையில் ஒருவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கிறான்.

வழியில் போகிறவன் "ஏம்ப்பா அழுகுற?'’ என்று கேட்டால்...

""எங்க அம்மா செத்துப்போய்ட்டாங்க'' என அவன் சொன்னால்... கேட்டவனும், அழுதவனுக்காக பரிதாபப்படுவான்.

பதிலே சொல்லாமல் அழுதுகொண்டேயிருந்தால்... "பைத்தியக்காரன்போல...' என கேட்டவன் உதாசீனப்படுத்திவிட்டுச் சென்றுவிடுவான்.

அதனால் சென்ட்டிமெண்ட்டை ஆடியன்ஸுக்கு ஓபன் செய்துவிடவேண்டும்.

டைரக்டர் ப.நீலகண்டன், நடிகர் ராஜேஷ் ஆகியோரிடம் ஏற்படுத்திய தாக்கத்தை என்னிடமும் ஏற்படுத்திய அந்தப் படம் "நிமஜனம்'.

1973-ஆம் ஆண்டில் வெளியான அந்தப் படம் 1953-ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. கதையை எழுதியவர் மலையாளியான மஞ்சரி எஸ்.ஈஸ்வரன். கதை என்பதைவிட உயிரோவியம் என்றுதான் சொல்லவேண்டும். சாரதாவும், சக்ரபாணியும் நடித்திருந்தனர். பி.எஸ்.நாராயணா இயக்கியிருந்தார். பல விருதுகளைப் பெற்ற படம் இது. வெளிநாட்டு படவிழாக்களிலும் கலந்துகொண்ட சிறப்புடையது.

அந்த தெலுங்குக் கதையின் முழுமை கெடாமல் எனது கைச்சரக்கையும் சேர்த்துச் சொல்கிறேன்...


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்