Skip to main content

கேரக்டர்! -கலைஞானம் (55)

(55) குருவுக்கு முதல் மரியாதை!

சினிமாக் கதைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்வதற்காக என்னை சினிமாக் கம்பெனிகள் அழைப்பது வழக்கம். அதுபோல... கதையில் குறை இருந்தால் கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லி... ஒரு கம்பெனியில் என்னை அழைத்தார்கள். என் உதவியாளர் பனசை மணியனுடன் சென்றேன்.

முழுக்கதையையும் கேட்டு... பதில் சொல்வதற்குள்..

"இந்தக் கதையில் மூணு கண்டிஷன். முதல் கண்டிஷன்... இந்தக் கதையில் எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள்? ரெண்டாவது கண்டிஷன்... இப்போ எவ்வளவு அட்வான்ஸ் கொடுப்பீர்கள்?. மூணாவது கண்டிஷன்... மீதத் தொகையை எப்போது கொடுப்பீர்கள்? அதைச் சொல்லிவிட்டால்... இந்தக் கதை ஓ.கே.'’என்றார்.

cஎல்லாருமே வெடிச்சிரிப்பு சிரித்தார்கள். நாளாவட்டத்தில்... இந்த மூன்று கண்டிஷன் டயலாக் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகிவிட்டது.

"கதை திரைக்கதை வசனம் இயக்கம்'’ என்ற தலைப்பில் படம் எடுத்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு... பனசை மணியனின் இந்த ‘மூன்று கண்டி ஷன் காமெடி’ நினைவுக்கு வர... அதை அந்தப் படத்தில் சேர்க்க விரும்பினார்.

"பனசை மணியன் காலமாகிவிட்டார். அதனால்... ‘கலைஞானம் சாரை இந்தக் கேரக்டரில் நடிக்க வைப்போம். அவருக்குத்தான் அது தெரியும். அவர் அந்த டயலாக்கை பேசி நடிப்பது பொருத்தமாகவும் இருக்கும்'’ என முடிவெடுத்த தம்பி பார்த்திபன், தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னார்.

அந்த நேரம் எனக்கு வயிற்றில் ஆபரே ஷன் செய்யப்பட்டு மிகவும் பலஹீனமாக இருந் தேன். இருந்தாலும் பார்த்திபனின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். கார் அனுப்பி... என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

பார்த்திபனும், தம்பிராமையாவும் என்னை அன்போடு வரவேற்று... படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.

படத்தில் இடம்பெறும் ஒரு கேரக்டர் என்னைப் பார்த்து “"இந்தக் கதை சரியா வருமா?'’’ எனக் கேட்க... நான் அந்த மூன்று கண்டி ஷன் டயலாக்கைச் சொல்ல... ஷூட்டிங் ஸ்பாட்டே கரகோஷித்தது. காட்சி சிறப்பாக வந்தது.

ஷூட்டிங் முடிந்ததும் பார்த்திபன் எனக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கௌரவித்து அனுப்பிவைத்தார்.

"கதை திரைக்கதை வசனம் இயக்கம்'’படம் வெளியாகி வெற்றி பெற்றது.

நான் நடித்த அந்த ஸீன் தனித்துப் பேசப் பட்டது. சினிமாத்துறை நண்பர்களிடமிருந்து எனக்கு பாராட்டு வந்தவண்ணம் இருந்தது.

தன் குருநாதர் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுவை சிறந்த நடிகனாக்க ஆசைப் பட்டே ‘"கோடிட்ட இடங்களை நிரப்புக'’ என்கிற படத்தை எடுத்தார் பார்த்திபன்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை... தன் குருநாதருக்கு நன்றி செலுத்தி, கௌரவிக்கும் விழாவாகவே நடத்தினார் பார்த்திபன். இந்த விழாவுக்கு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். நானும் கலந்துகொண்டேன்.

ராஜாவைப் போல... பாக்யராஜை கௌர வித்து... இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வந்து மேடையேற்றி... பொன்னாடை போர்த்தி, பொற்கிழி தந்து மகிழ்ந்தார். முன்னதாக, தன் குருவின் குருவான பாரதிராஜா அவர்களை கௌரவித்துவிட்டு... பின் பாரதிராஜா தலைமை யில் பாக்யராஜை கௌரவிக்கும் விழாவை நடத்தினார். அந்த விழா... கண்கொள்ளாக் காட்சி யாகவே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு விழாவை யும் நான் அன்றுதான் பார்த்தேன். பூரித்துப் போனேன். இப்படியெல்லாம் குருநாதரை கொண்டாடும் நன்றியுணர்ச்சி சினிமா உலகில் எத்தனை பேர்களுக்கு இருக்கிறது?

ஒரு முக்கியமான செய்தி..

நான் கதை எழுதிய படம் ஒன்றில்... குற்ற வாளியை விரட்டிச்செல்லும் போலீஸ்காரராக... ஒரே ஒரு காட்சியில்... அதிலும் வசனமில்லாத காட்சியில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

இந்த காட்சியில் நடிப்பதற்கு முதல்நாள் பார்த்திபன் தன் தந்தையிடம்... “"நாளைக்கி நான் ஒரே ஒரு ஸீன்ல நடிக்கப் போறேன்'’என்று சொன்னாராம்.

"கவலைப்படாதே... எம்.ஜி.ஆர்.கூட ஆரம்பத் தில் ஒரு ஸீன்லதான் நடிச்சார்'’என நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்ததாக கேள்விப்பட்டேன். எப்படியோ... என் கதையில் ஒரு காட்சியில் நடித்ததற்காகவும், அவர் கதையில் ஒரு காட்சியில் என்னை நடிக்க வைத்ததற்காகவும் பார்த்திபனுக்கு நன்றி... நன்றி... நன்றி!

நகைச்சுவையாக பேசுவதிலும், நகைச் சுவை வசனங்கள் எழுதுவதிலும் திறமை யானவர் எனது உதவியாளர் பனசை மணியன். 1965 முதல் 1981-வரை என்னிடம் பணியாற்றினார். நான் கதைகளை டேப் ரெக்கார்டரில் பதிவுசெய்துவிடுவேன். ஒருவரிகூட விடாமல் கார்பன் காப்பிபோல அதை எழுதிவிடுவது பனசையின் சிறப்பு. அவர் தன் உறவுக்காரப்பெண் இந்திராவை காதலித்தார். ஆனால் ‘"சினிமாக்காரனுக்கு என் பொண்ணை கட்டித்தரமாட்டேன். சினிமா வேலை நிரந்தரமில்லாதது, ஏதாவது ஒரு படத்துல அவர் பேர் டைட்டில்ல வரணும். அவரு வேலை செய்றத உறுதிப்படுத்துற மாதிரி படத்துல பேர் வந்தா பொண்ண கட்டித் தர்றேன்'’ என இந்திராவின் அம்மா சொல்லிவிட்டார். இதனால் நான் கதை எழுதிய "குறத்தி மகன்'’ படத்தில்... டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணனிடம் சொல்லி ‘"உதவி-பனசை மணியன்'’என டைட்டிலில் போடுமாறு கேட்டுக்கொண்டேன். "இயக்குநர் திலகம்' கே.எஸ்.ஜி. என் கோரிக்கையை ஏற்று அப்படியே டைட்டிலில் போட்டார்.

திருமண ஏற்பாடு நடந்தது. சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்தார். தாலி வாங்க காசில்லை. நான் தாலி வாங்கிக் கொடுத்து, திருமணத்தை நடத்திவைத்தேன். அதனால் தான் அந்த நன்றியை இன்றளவும் மறக்காமல் இருக்கிறார் இந்திரா. சிலநேரங்களில் நான் சொல்வதை பனசை கேட்கமாட்டார். ஒரு முறை எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற் பட்டுவிட்டது. "நீங்க ரெண்டாவதுகூட படிக் காதவர். நான் பத்தாவது படித்தவன். உங்களை விட நான் புத்திசாலி'’என்று சொல்லிவிட்டார்.

""நீங்கள் புத்திசாலி என்பதை நான் மனதார ஒப்புக்கொள்கிறேன். எனக்கு வாலாக இருந்து நீங்கள் தொழில் செய்துகொண்டி ருந்தால் உங்கள் முன்னேற்றம் தடைப்படும். அதனால் தனித்து தொழில் செய்ய முயற்சிசெய்யுங்கள்''’எனச் சொன்னேன்.

குட்பை’ சொல்லிவிட்டுப் போனார்.

அப்போது மந்திரியாக இருந்த நடிகர் ஐசரிவேலன் அவர்களுக்கும், பனசைக்கும் நீண்டநாள் பழக்கம். ஐசரிவேலனுடன் சேர்ந்து 1966-72 காலகட்டங்களில் நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். பனசை மூலம்தான் ஐசரிவேலன் எனக்கும் ஆத்ம நண்பரானார்.

ஐசரிவேலனை சந்தித்த பனசை... என்னுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதைச் சொல்லி... "நான் சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு நீங்க உதவி செய்யணும்'’எனக் கேட்க... அவரும் கருணை உள்ளத்தோடு ஏற்பாடு செய்தார்.

ஒருநாள் என்னை அழைத்த ஐசரிவேலன்... "பனசை இயக்குநராக வேண்டும்' என்கிற விருப்பத்தை என்கிட்ட சொன்னார். "என் நண்பர் ஒருவரை அவருக்கு அறிமுகம் செய்து, படவாய்ப்பு கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். அது விரைவில் நல்லபடியாக நடக்கும்'’என்றார்.

""ரொம்ப நல்ல காரியம் செய்தீர்கள்... பனசைக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்''’எனச் சொல்லிவிட்டு வந்தேன். பனசையின் கதை -வசனம் -இயக்கத்தில் வந்த அந்தப் படம் வெளியாகி சுமார் ரகமாக அமைந்தது. மீண்டும் பனசையை நான் உதவியாளராக சேர்த்துக்கொண்டேன்.

திறமையான பனசை மணியன் திடீரென ஒருநாள் மாரடைப்பால் காலமாகி... எங்களை கண்ணீரில் ஆழ்த்தினார்.

நடிகனாகும் ஆசையுடன் வந்தவர்... நாட்டைக் காக்கும் ராணுவ வீரனாக ஆனார்.

உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட அவர்... இன்று கல்வியாளராகவும், சமூக சிந்தனையாள ராகவும் திகழ்கிறார். அவர் கடந்து வந்த பாதை... வாழ்க்கையில் உயரத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவரின் விருப்பத்தின் பேரில் சினிமாவாக உருவாக்க... திரைக்கதையாக எழுதத் துவங்கியிருக்கிறேன்.

அவர்...

மன்னார்குடி தாலுகா, கண்டிதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏ.பாலசுப்பிரமணியன்.

பாலசுப்பிரமணியன் குறித்தும், சமீபத்தில் அவரை சந்தித்த அனுபவங்கள் குறித்தும் சொல்கிறேன்...


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...