(34) முதல் சூப்பர் ஸ்டாரின் மவுசு!

"ஏழிசை மன்னன்' எம்.கே.தியாகராஜ பாகவதரின் நல்லநேரம், கெட்டநேரம் பற்றிப் பார்ப்போம்.

1934-ல் "பவளக்கொடி' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பாகவதர். அடுத்து "சத்தியசீலன்', "நவீன சாரங்கதாரா' வந்தது. 1937-ல் வெளியான "சிந்தாமணி' படம்தான் பாகவதருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது. இதற்குக் காரணமான அந்தப் படத்தின் கதையமைப்பு என்ன?

செல்வச் செழிப்பான பாகவதர் கிருஷ்ண பக்தர். சதா நேரமும் கிருஷ்ணரின் நாமத்தையே போற்றி வாழ்ந்து வருகிறார். இவருக்கு அன்பே உருவான மனைவி. ஆனால்... அழகே உருவான தாசி சிந்தாமணியை ஒருநாள் கண்டு, மதி மயங்கி, அவளின் வீட்டுக்குச் சென்றார் பாகவதர். தாசியாக இருந்தாலும் அவள் நேர்மையானவள்.

Advertisment

"நீங்கள் இல்லறத்தில் நல் அறம் கண்டு வாழ்ந்துவருபவர். மனைவி இருக்கும்போது நீங்கள் என்னை விரும்புவது அபச்சாரம். உடனே இங்கிருந்து போய் விடுங்கள்'’என தாசி உபதேசம் செய்கிறாள். ‘"நீ என்னை வெறுத்தால்... நான் இங்கேயே உயிரைவிடுவேன்'’ என பாகவதர் பிதற்ற... தாசிக்கோ தர்மசங்கடம்.

"இவர் சொன்னமாதிரி உயிரை விட்டுவிட்டால்... என்ன செய்வது?'’என யோசித்த தாசி... ‘"மெல்ல மெல்ல இவரை திருத்தி, மனைவியுடன் வாழச்செய்யலாம்'’ என எண்ணி, பாகவதருடன் உறவு ஏற்படுத்திக்கொண்டு, வாழ்ந்துவருகிறாள். ஆனால் பாகவதரோ தாசியின் மீதான மையல் குறையாமல் இருக்கிறார்.

ஒருநாள்... கணவனையும், தாசியையும் கடுமையாக கண்டித்தாள் பாகவதரின் மனைவி.

Advertisment

"உரிமையுள்ளவள் அவள். அவள் கண்டிப் பதும் நியாயம்தானே'’ என எண்ணிய தாசி... ‘"நீங்கள் உங்களின் இல்லம் சென்று... உங்கள் மனைவியுடன் கொஞ்சநாள் வாழத்தான் வேண்டும்'’ என வற்புறுத்தி அனுப்பிவைக்கிறாள்.

பாகவதர் வீட்டிற்கு வந்தார். அப்போது... தூரத்தில் இடி, மின்னல், பெரும்மழை உண்டாக... ‘"அய்யோ... இடி மின்னல், மழை சிந்தாமணியின் வீட்டுப்பக்கம் கேட்கிறதே... அவள் என்ன ஆனாளோ?'’என மீண்டும் தாசியின் வீட்டுக்குப் புறப்பட... மனைவி தடுத்து நிறுத்திப் போராடி னாள். அவளின் பிடியிலிருந்து விடுபட்டு, தாசியின் வீட்டுக்கு புறப்பட்டார் பாகவதர்.

பேய்மழையால் ஆற்றில் பெருவெள்ளம். எங்கும் கும்மிருட்டு. ஆற்றைக் கடந்துதான் தாசியின் வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆற்றில்... கட்டைபோல ஏதோ ஒன்று மிதந்துவர... இருட்டில் அந்த கட்டையைப் பிடித்துக்கொண்டு... ஆற்றின் மறுகரையில் ஏறி... தாசியின் வீட்டிற்குச் சென்றார். வீடு பூட்டியிருந்தது. வீட்டின் பின்பக்கச் சுவரேறி... ஒரு மர விழுதைப் பிடித்து... உள்ளே குதித்தார். பாகவதர் மழையில் துவண்டிருப்ப தோடு.... அவரின் சட்டையில் ரத்தக்கறை இருப்ப தையும் கண்டு... அதிர்ச்சியாகி... விசாரிக்க... ஒரு விழுதைப் பிடித்து உள்ளே குதித்ததாக பாகவதர் சொல்ல... இருவரும் அந்த விழுதை பார்க்கிறார்கள். அது விழுது அல்ல... மலைப்பாம்பின் வால்.

அதிர்ச்சியான தாசி... ‘"ஆற்றை எப்படிக் கடந்தீர்கள்?'’எனக் கேட்க... அவளை அங்கே அழைத்துச் செல்கிறார் பாகவதர். தான் கரையேறக் காரணமான கட்டை யை காண்பிக்க... மின்னல் வெளிச்சத்தில்... அது கட்டையல்ல... பாகவதரின் மனைவியின் உயிரற்ற உடல்.

"காமத்திற்கு கண் இல்லை என் பார்கள். நான் அறிவையும் இழந்துவிட்டேன்'’என கதறினார் பாகவதர். ‘எந்தக் கண்கள் நான் காம வயப்பட காரணமாக இருந்ததோ... அந்தக் கண்கள் தேவையில்லை என தன் கண்களை குத்தி குருடாக்கிக்கொள்கிறார் பாகவதர். கால் போன போக்கில் நடக்கிறார்.

பாகவதர் அனுதினமும் வணங்கிய பரந் தாமன் ஒரு பாமர வடிவில் தோன்றி... ‘"அன்பா... கண்களை பறிகொடுத்துவிட்டு எங்கே போகிறீர் கள்?' எனக் கேட்க... ‘"என் பரந்தாமன் இருக்கும் இடத்திற்கு'’என பாகவதர் சொல்ல... ‘"முகத்தில் உள்ள ஊனக் கண்களை இழந்தபின்... பரந்தாமனை எப்படி பார்க்க முடியும்?'’ என பரந்தாமன் கேட்க...

"ஞானக்கண் இன்று இருந்திடும் போதினிலே... ஊனக்கண் இழந்ததால் உலகத்தில் குறையுமுண்டோ?'’என பாகவதர் உருகிப்பாட... கண்ணபிரான் காட்சி கொடுப்பார்.

இந்தப் பாடலும், "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி'’என்கிற பாடலும் பட்டிதொட்டியெல் லாம் பாடாத வாய்களே இல்லை... என்கிற அளவிற்கு இந்தப் படமும், பாடல்களும், பாகவதரின் நடிப்பும் பிரபலமாக இருந்தது.

character

பாகவதரின் புகழ் உச்சம் தொட்டது.

அடுத்து "அசோக்குமார்', "சிவகவி'’படங்கள் வெளியாகி பாகவதருக்கு புகழைக் கூட்டியது. ‘"ஹரிதாஸ்'’படம் வெளியாகி... தொடர்ந்து மூன்று தீபாவளிகளுக்கு ஓடி... பாகவதரை முதல் "சூப்பர்ஸ்டார்' அந்தஸ்திற்கு உயர்த்தியது.

"பாகவதரைத் தவிர வேறு யாரும் நடிகரே அல்ல... பாகவதர் ஒரு தெய்வப்பிறவி'’என மக்கள் பேசிக்கொண்டார்கள். ஒரு இடத்திற்கு பாகவதர் வருகிறாரென்றால்... அதற்கு முன்... ஒரு நல்வாசனை வரும். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சென்ட்டை பாகவதர் பூசிக்கொள்வது வழக்கம்.

தங்க நிற பாகவதர், அதற்கேற்ப... தங்க நிற சட்டை, வேஷ்டி அணிவார். தங்கத் தட்டில்தான் சாப்பிடுவார். தங்க தம்ளரில்தான் நீர் அருந்துவார்.

ஒருசமயம்...

பாகவதர் தன் சொந்த ஊரான திருச்சியி லிருந்து சென்னைக்கு முதல்வகுப்பு பெட்டியில் வந்துகொண்டிருக்கிற தகவல் கிடைக்க... அரசாங்க ஊழியர்கள் விடுப்பு போட்டுவிட்டு பாகவதரைப் பார்க்க... எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் கூடிவிட்டனர். பொதுமக்களும் கூடிவிட்டனர். அன்றைய காலத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் அரையணா. அன்று மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றிருக்கிறது. கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல்... ஸ்டேஷன் மாஸ்டர், போலீஸ் கமிஷனருக்கு போன் செய்துவிட... ரிசர்வ் போலீஸ் படை வந்து... ஒரு கிளிக்குஞ்சை பாதுகாப்பது போல... பெரும் கூட்டத்திலிருந்து பாகவதரை மீட்டு, அவரின் வீட்டில் போய்விட்டுவிட்டு வந்திருக்கிறது.

இதுதான்... பாகவத ரின் உச்சகட்ட... உச்சம் தொட்ட நல்லநேரம்.

லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் செய்யாத கொலைக் குற்றத்திற்காக சிறை சென்றார் பாகவதர். ஒருவருடம் கழிந்த நிலையில்... ‘நிரபராதி’ என விடுவிக்கப்பட்டார்.

1948-ல் "ராஜமுக்தி'’படத்தை எடுத்து, நடித்தார். படம் தோல்வி.

அடுத்தடுத்து அவரின் "அமரகவி', "சியாமளா', "புதுவாழ்வு'’படங்கள் தோல்வியைச் சந்தித்தன.

மனம் ஒடிந்துபோனார் பாகவதர். இதை யறிந்த ‘"சம்பூர்ண ராமாயணம்'’ படத் தயாரிப் பாளர் எம்.ஏ.வேணு, தான் தயாரித்த சில படங் களால் கடன்பட்டிருந்தபோதும்... பாகவதர் மீது கொண்ட மதிப்பாலும், இரக்கத்தாலும், பாகவதரை வைத்து "சிவகாமி'’படத்தை தயாரித்தார். ஆனால் படத்தை வெளியிட வேணுவிடம் பணம் இல்லை.

பாகவதர் திருச்சி சென்று, தனக்கு வேண்டிய வர்களைச் சந்தித்து பண உதவி பெற்று வருவதாகத் தெரிவித்துவிட்டுச் சென்றார். ஆனால்... உதவி கிடைக்கவில்லை.

மனம் நொந்த நிலையில்... திருச்சி ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டண டிக்கெட் எடுத்து, சென்னை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தார். தன்னைப் பார்த்து மற்றவர்கள் பரிதாபப்படக்கூடாது... என்பதால்... தலையில் பெரிய துண்டால் உருமா கட்டிக் கொண்டதோடு, கண்களில் கருப்புக் கண்ணாடியும் அணிந்துகொண்டார். கைக்குட்டையால் வாய்ப் பகுதியையும் மறைத்துக்கொண்டார்.

ரயில் நிலையத்தில் சோடா, கலர் விற்கும் சிறுவன் ஒருவன்... பாகவதரை உற்றுப்பார்த்து அடையாளம் கண்டுகொண்டான்.

"டேய்... கிருஷ்ணா...' என தன்னுடன் சோடா விற்கும் சக சிறுவனை அழைத்து... “"இவர்தாண்டா... நம்ம ஊரு தியாகராஜ பாகவதரு... பெரிய சினிமா நடிகரு'’என்றான். அந்தச் சிறுவனும் பாகவதரை உற்றுப் பார்த்துவிட்டு... ’’"இவரா?'’ என முகம் சுளித்து விட்டு... “"சரி வாடா... வியாபாரத்த பார்ப் போம்' எனச் சொல்ல... இருவரும்... “"சோடா... கலரு...'’’ என கூவிக்கொண்டே... போனார்கள்.

"ஹரிதாஸ்'’ படம் வெளியாகியிருந்த சமயத் தில்... எழும்பூர் ரயில் நிலையத்தில் பாகவதரைப் பார்க்கத் திரண்ட ஜனக் கூட்டத்தையும், இன்று... ஒரு சோடா விற்கும் பையனின் அலட்சியமான பார் வைக்கும் ஆளானதை யும் பாகவதரின் மனம் நினைத்து துன்பப் படத்தானே செய்திருக்கும்...

சென்னை திரும்பிய பாகவதர்... சினிமாப் படங்களுக்கு ஃபைனான்ஸ் வாங்கித்தரும் ராமசாமி என்கிற மீடியேட்டரை தொலைபேசியில் தொடர்புகொண்டு... "சிவகாமி'’படத்தை வெளியிட ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதரும்படி கேட்டார்.

"நாளை காலை பத்துமணிக்கு உங்க வீட்டுக்கு வறேன். தயாரா இருங்க...'’என்றார் ராமசாமி.

நான் எனது சக கார் டிரைவர்கள் நண்பர் களுடன் தி.நகர். பாண்டிபஜார் கீதா கபே வாசலில் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தேன். ராமசாமியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.

""நீங்க நாளைக்கு என் காரை ஓட்டுறதுக்கு வரமுடியுமா?''’எனக் கேட்டார்.

ராமசாமி எனக்கு நன்கு பரிட்சயமானவர் என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை.

""எங்க சார் போகணும்?''’’

""எம்.கே.தியாகராஜ பாகவதரை பார்க்கப் போகணும்...''’’

"பாகவதரை பார்க்கிற வாய்ப்பா?' என எனக்கு மகிழ்ச்சியில் கால்கள் தரையில் நிற்கவில்லை.

"கேரக்டர்' தொடர் குறித்து என்னிடம் பேச விரும்புபவர்கள் மாலை 5 மணிக்கு மேல் 96770 61186 என்ற எண்ணில் பேசலாம்.

-கலைஞானம்