(27) காக்கும் கரங்கள்!
கதாசிரியர் கலைமணி தயாரித்த சில படங்கள் பெரும்வெற்றி பெற்றது போலவே, சில படங்கள் பெரும்தோல்வியடைந்தன. அதனால் நஷ்டத்திற்கு ஆளானார். கதாசிரியர் தொழிலும் சரிவர அமையவில்லை. இது போதாதென்று ஒரு வீடு வாங்கியதில் வில்லங்கம் ஏற்பட்டு... சதா கோர்ட், கேஸ் என பணம் செலவுசெய்ய வேண்டியிருந்தது.
கலைமணியின் கஷ்டம் அறிந்து கவலைப்பட்டேன் நான்.
அப்போது... எனக்கு வேண்டிய நண்பரான மகாபலிபுரம் "ஐடியல் ஹோட்டல்' அதிபர் ஒரு படம் தயாரிக்க விரும்பி என்னைச் சந்தித்தார். எனது "சங்கீதா'’கதை படமாக ஏற்பாடானது. படத்தயாரிப்பு வேலைகளையும் நானே ஏற்றுச் செய்துகொடுத்தேன். படத்திற்கு டைரக்டராக ஆர்.வி.உதயகுமார் அவர்களையும், இசையமைப்பாளராக தேவா அவர்களையும் ஒப்பந்தம் செய்து, பாடல் பதிவு நடந்துகொண்டிருந்த சமயம்... கலைமணி அங்கே வந்தார். உடனே அவரை கதைக்கு உதவியாளராக பணியாற்ற வைத்து ஐம்பதாயிரம் ரூபாய்வரை சம்பளமாக வாங்கிக் கொடுத்தேன். ("சங்கீதா' படம் வெளியாகவில்லை. அது வேறு சமாச்சாரம்)
ஒருநாள்...
""கலைஞானண்ணே... உங்களோட "மாமியார் எல்லாம் கொடுமைக்காரர் இல்லை'’கதையை ஒரு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். அவர் எனக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். ஆனா... அது உங்க கதைனு புரொடியூஸர்கிட்ட சொல்லல'’என்று என்னைப் பார்த்து சிரித்தார்.
அந்த வஞ்சகம் சூது இல்லாத உள்ளத்தைப் பார்த்து ""அந்தக் கதையை நீங்களே எடுத்துக்கங்க. எனக்கு பணம் வேண்டாம்''’எனச் சொல்லி அனுப்பினேன்.
அந்தக் கதைதான் 1987-ஆம் ஆண்டு கார்த்திக், எஸ்.வீ.சேகர், இளவரசி நடிப்பில் ‘"எங்க வீட்டு ராமாயணம்'’என்ற பெயரில் வெளியாகி நன்றாக ஓடியது. ஆனாலும் கலைமணி கஷ்டத்திற்கு அதெல்லாம் எள்ளளவு உதவியாகவும் அமையவில்லை. அவர்தான் செலவாளியாச்சே!
சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள்...
என் வீட்டுக்கு வந்த கலைமணி “""அண்ணே... ஒரு தெலுங்குப் பட கம்பெனி என்கிட்ட ஒரு கதை வாங்கியிருக்குது. அதுக்கு நீங்க திரைக்கதை எழுதிக் குடுங்க''’என்றார்.
உடனே அவருடன் புறப்பட்டுச் சென்றேன்.
டைரக்டர் "பசி'’துரை வீட்டின் ஒரு அறையில் உட்கார்ந்து திரைக்கதை எழுதும் வேலையை ஆரம்பித்தோம்.
அப்போது... புலிக்குட்டி மாதிரி சுறுசுறுப்பான ஒரு சின்னப்பையனை எனக்கு உதவிக்கு ஏற்பாடு செய்த கலைமணி... ""டேய் பையா... கலைஞானண்ணே எது கேட்டாலும் உடனே வாங்கிக் குடுக்கணும்''’எனச் சொல்லிவிட்டு, அந்தப் பையனிடம் பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார்.
""யார் இந்தப் பையன்?''’என கலைமணியிடம் கேட்டேன்.
""இவன்தாண்ணே இப்ப எனக்கு உதவியாளனா இருக்கான். இப்ப உங்களுக்கும் உதவியாளன்தான்''’என்றார்.
"என்னடா... இவன் சுறுசுறுப்பா இருந்தாலும் ரொம்ப சிறுவனா இருக்கானே?'’என நினைத்தேன்.
நான் அந்தப் பையனிடம் எது சொன்னாலும் உடனே செய்து முடிப்பான்.
நானும் டைரக்டர் துரையும் காரசாரமாக கதையை விவாதிக்கும்போது... அந்தப் பையன் எங்களையே கவனமாக பார்த்துக்கொண்டிருப்பான்.
கிட்டத்தட்ட மூன்று மாதமும் அந்தப் பையன் எனக்கு உதவியாளனாக இருந்தான்.
திரைக்கதையை முடித்துக் கொடுத்துவிட்டு... நான் வந்துவிட்டேன்.
ஆறு வருடங்களுக்குப் பின்...
ஒரு பேப்பரை படித்துக்கொண்டிருந்தபோது... டைரக்டர் ஒருவரின் பேட்டி வெளியாகியிருந்தது.
""நான் கலைமணியிடம் உதவியாளராக இருந்தபோது, என்னை அண்ணன் கலைஞானத்திடமும் உதவியாளராக பணியாற்றச் சொன்னார். அப்போது "பசி'’துரை அவர்களும், கலைஞானம் அவர்களும் கதை விவாதம் செய்வதையே கவனிப்பேன். அது ஒரு அனுபவமாக இருந்தது''’என அந்தப் பேட்டியில் சொல்லியிருந்தார் டைரக்டர்.
"அந்த புலிக்குட்டி சிறுவனா... ஏ.ஆர்.முருகதாஸ்'’ என வியந்துபோனேன்.
"என்னை நினைவில் வைத்து பேட்டியில் சொல்லியிருக்காரே'’என முருகதாஸுக்கு போன் செய்து பாராட்டினேன்.
ஒரு சமயம்... எனக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. ஆனால் என்னிடம் அந்த அளவு பணம் இல்லை. சினிமாவில் நான் யார் யாருடனெல்லாம் தொழில் செய்தேனோ... அவர்கள் அனைவரும் பணஉதவி செய்து என்னைக் காப்பாற்றினார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு நான் மனதார நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
அப்போது நடிகர் சிவக்குமாரும், முருகதாஸும் பேசிக்கொண்டிருந்தபோது... ""நான் கலைஞானம் அண்ணனை ஹாஸ்பிடல்ல போய்ப் பார்க்கப் போறேன். அவருக்கு அவசரமா பணம் கொடுக்கப் போறேன்''’என சிவக்குமார் சொல்ல... அவர் மூலம் நான் உடல்நலமில்லாமல் இருப்பதை தெரிந்துகொண்ட முருகதாஸ்... தன் தம்பியிடம் ஐம்பதாயிரம் ரூபாயை எனக்குக் கொடுக்கச் சொல்லி கொடுத்தனுப்பினார்.
‘என்கிட்ட கொஞ்ச நாட்கள் உதவியாளராக இருந்த முருகதாஸ் என்கிட்டருந்து என்ன கத்துக்கிட்டார்ங்கிறது எனக்கே புரியல. ஆனாலும் "இப்படி ஒரு தம்பி இருக்காரே'’ என மனதார வாழ்த்தினேன்.
பாரதிராஜா அவர்களின் படம் ஒன்றில் நான் பணியாற்றியபோது...
""கலைஞானம் உங்களுக்கு விஷயம் தெரியுமா? கலைமணிக்கு கேன்ஸர். அவரப் பார்த்திட்டு... கைல இருந்த ஒரு தொகையை குடுத்திட்டு வந்தேன்''’எனச் சொல்லி... கலைமணியை நினைத்து கண்கள் கலங்கினார் பாரதிராஜா.
"அன்னக்கிளி'’செல்வராஜும், கலைமணியும் பாரதிராஜாவுக்கு இரண்டு கண்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் எந்தப் படமும் எடுக்கமாட்டார். அப்படி ஒரு பாசப் பிணைப்பு.
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே கிளம்பி... கலைமணியைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொன்னேன்.
எனக்கு மிகவும் தெரிந்த... சீதக்காதி பரம்பரையில் வந்த அண்ணன் ஆல்ஃபா அப்துல்காதரிடம் கலைமணியை அழைத்துச் சென்றேன்.
“கேன்ஸரால் ரொம்பப் பணம் செலவாகுது. கலைமணியால தாக்குப்பிடிக்க முடியல’’ என்றேன்.
அந்தக் கருணை உள்ளம் உடனே கலைமணியிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து அண்ணன் உமர் என்பவரிடம் அழைத்துச் சென்றேன்.
அவர் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.
கலைமணியை அவரின் வீட்டில் விட்டுவிட்டு, நான் வீடு திரும்பினேன்.
கலைமணிக்காக வேற யார்கிட்ட உதவி கேட்கலாம்’ என நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது... அந்தச் சோகச்செய்தி வந்து சேர்ந்தது...
‘கலைமணி காலமானார்’
மனம் தளர்ந்துபோனேன். அந்த நல்ல உள்ளத்திற்காக இரண்டு சொட்டு கண்ணீர் விடுவதைத்தவிர என்னிடம் வேறு என்ன உள்ளது?
ஏ.ஆர்.முருகதாஸ், கலைமணியின் வீட்டுக்குச் சென்று கலைமணியின் துணைவியாரிடம் ஐந்து லட்சம் பணம் கொடுத்ததாக கேள்விப்பட்டேன்.
அந்த நல்ல மனம் வாழ்க.
இப்படி நல்ல உள்ளம் உள்ள தம்பி முருகதாஸிடம் திடீரென்று அரசியல் வாடை அடிக்கிறது. அது அவருடைய சுதந்திரம். அதில் யாரும் தலையிடக்கூடாது.
நான் பிரபல பாடலாசிரியராகவும், "பராசக்தி'’படத்தில் பூசாரியாகவும் நடித்து புகழ்பெற்றிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரர் கவி கே.பி.காமாட்சி சுந்தரம் அண்ணனின் வீட்டில் தங்கியிருந்து சினிமாவில் நடிகனாக முயற்சித்துக்கொண்டிருந்த நேரத்தில்...
எந்த சினிமா கம்பெனிக்குச் சென்றாலும் திண்டிவனத்தில் மக்களின் அமோக ஆதரவோடு நடைபெற்றுவந்த "நீதிபதி'’ மற்றும் "சந்திப்பு'’ நாடகங்களைப் பற்றியே பேசிப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த இரண்டு நாடகங்களின் கதைகளையும் வாங்கி சினிமாவாக எடுக்க தயாரிப்பாளர்கள் பலரும் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்.
மக்கள் திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்த இந்த நாடகங்களை நடத்திய நாடகக் கம்பெனி முதலாளிக்கு குடும்பத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை ஏற்படவே... சொந்த ஊருக்குச் சென்று அங்கேயே தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த மூன்று முக்கிய நட்சத்திரங்களை அழைத்த கம்பெனி முதலாளி... தன் நிலையைச் சொல்லி... "இனி நீங்களே தொடர்ந்து நாடகங்களையும், கம்பெனியையும் நடத்திக்கொள்ளுங்கள்'’எனச் சொல்லிவிட்டாராம்.
நாடகம் போட்டால்தான் பணம் கிடைக்கும். பணம் கிடைத்தால்தான் சம்பளம். சம்பளம் கிடைத்தால்தானே சோறு.
இதற்காக மூன்று நட்சத்திரங்களும் ஒரு முக்கிய முடிவை எடுத்தனர்.
அந்த முடிவு... அந்த நடிகையின் வாழ்வில் எதிர்பார்த்த... எதிர்பாராத நிகழ்வுகளை உண்டாக்கியதே...
மனதை நெகிழச் செய்யும் மனோரமாவின் கதை...
படம் உதவி: ஞானம்