(114) தி.நகர் முதல் திருவல்லிக்கேணி வரை

புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியரும், நடிகரும், எனது ஒன்றுவிட்ட சகோதரருமான கவி கே.பி.காமாட்சிசுந்தரம் அண்ணனின் தி.நகர் வீட்டில், நான் 1954-55-ஆம் ஆண்டுகளில் தங்கியிருந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்ததையும், எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த வீட்டின் குளியலறையும், எங்கள் வீட்டு குளியலறையும் அருகருகே இருந்ததையும், நான் குளிக்கச் செல்லும்போதெல்லாம் அந்த வீட்டின் அழகிய இளம்பெண் என்னைப் பார்த்து சிரிப்பதையும், பதிலுக்கு நான் சிரிப்பதையும், அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டதையும் கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

அவளின் அழகு, கவர்ச்சி, டான்ஸ் ஆடிய விதத்தை வைத்து அவள் வளரும் நடிகையாக இருக்கவேண்டும் என தீர்மானித்தேன்.

kk

Advertisment

’நாம அன்றாடம் வறுமையில போராடி வாழ்க்கைய ஓட்றதவிட... இந்த சிரிப்பழகியை எப்படியாவது காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளோட அழகுக்கு சீக்கிரமே சாவித்திரி போல பெரிய நடிகையாகிடுவா... காரு, பங்களானு வசதியோட வாழலாம். நமக்கும் நடிக்கிறதுக்கு ஈஸியா சான்ஸ் வாங்கித் தந்திடுவா... அதுக்காகத்தானே நாம மெட்ராஸுக்கு வந்திருக்கோம்’ என்கிற ஆசையில் என் தரித்திர புத்தி தாண்டவமாடியது. அவளை தனிமையில் சந்தித்து பேசிவிட முடிவுசெய்தேன். இரவெல்லாம் ஒரு ஆர்வத்தில் சரிவர தூக்கம் வரவில்லை.

விடிந்தது.

வழக்கமான நேரத்திற்கு அவள் குளிக்க வந்தாள். நானும் குளிக்கச் சென்றேன். வழக்கமாக இருவரும் புன்னகைத்துக் கொண்டோம். அவளை தனிமையில் சந்தித்துப் பேச முடிவு செய்திருந்ததால், வழக்கத்துக்கு மாறாக எனக்கு ஒருவித பதட்டமாக இருந்தது.

Advertisment

காலை பத்து மணிக்கெல்லாம் தன்னை அலங்கரித்துக்கொண்டு தி.நகர். பஸ் நிலையத்திற்கு விரைந்தாள். நானும் பின்தொடர்ந்தேன். 12-ஆம் நம்பர் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

"நடிகை மாதிரி இருக்கு... ஆனா பஸ்ல போறாளே. ம்... சின்ன கம்பெனி படத்துல நடிக்கப் போறா போலருக்கு' என நான் நினைத்துக்கொண்டிருக்க... பஸ் உடனே கிளம்பிவிட்டது.

மறுநாள். அதே நேரம், அதே நம்பர் பஸ்ஸில் ஏறினாள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பஸ்ஸில் நல்ல கூட்டம். சென்னைவாசிகள் பெரும்பாலும் அன்று மெரினா பீச்சுக்கு போவார்கள். கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் நானும் ஏறினேன். அவள் இறங்குமிடத்தில் இறங்கி... அவளுடன் பேசிவிட திட்டமிட்டேன். அவ்வப்போது அவளை பார்த்துக்கொண்டேதான் வந்தேன். ஆனால்... கூட்டத்தில் நசுங்கியதில் அவள் இறங்கின இடம் தெரியவில்லை. திருவல்லிக்கேணியில் இறங்கினேன்.

அடுத்தநாள், மளிகைக்கடை நண்பரிடம் பஸ் டிக்கெட்டுக்கு காசு கடன் வாங்கிக்கொண்டு முன்னதாகவே பஸ் ஸ்டாண்ட் சென்றுவிட்டேன். அவள் பஸ் ஏற வந்தாள். கூடவே அவளின் தாயாரும் வந்ததால்... வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். ‘நாளை வாங்கிக் கொள்ளலாம்’ என மளிகைக்கடை நண்பரிடம் வாங்கிய கடனைக் கொடுத்தேன்.

தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தேன்.

"பஸ்ஸுக்குக்கூட கடன் வாங்கிட்டு வர்ற நிலைமைல... அவகிட்ட எப்படி காதலைச் சொல்றது? அப்படியே சொன்னாலும், "என்ன வேலை பார்க்கிறீங்க?'னு கேட்டா... ‘நடிக்க சான்ஸ் தேடுறேன்... துணை நடிகரா இருக்கேன்னு சொல்றதா?'’ என குழப்பமாக இருந்தது. ஆனாலும் ‘நம்மமேல பிரியமில்லாமலா பார்க்கிறபோதெல்லாம் அவ சிரிக்கிறா? அவ சிரிப்பையே காரணம் காட்டி... காதலைச் சொல்லீரவேண்டியதுதான்'’ என சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அன்று... அவளைச் சந்திக்க முடியவில்லை. ஆனால் காய்கறி மார்க்கெட்டில் அவளின் தாயாரை தற்செயலாகப் பார்த்தேன்.

""நமஸ்காரம்மா''

""“நமஸ்காரம்''

""எங்கவீடு உங்க வீட்டுப் பக்கம்தான் இருக்கு. அடிக்கடி உங்களையும், உங்க மகளையும் பார்த்துட்டுத்தான் இருக் கேன்''

""உங்களைப் பார்த்திருக்கேன் தம்பி... நான் உங்கள சந்திச்சு பேசணும்னுதான் இருந்தேன்'' என்றார்.

"ஆஹா... அந்தப் பொண்ணும் நம்மள காதலிக்குது. அத தாயார்கிட்ட சொல்லீருக்கு, அதப்பத்திதான் பேசப் போறாங்க'’ என எனக்குள் பொங்கிய ஆர்வத்தை அடக்கிக்கொண்டு... “""என்னம்மா விஷயம்?'' என்றேன்.

""பராசக்தி படத்துல பூசாரியா நடிச்சவரு உங்க சொந் தக்காரர்தானே...''

""ஆமாங்க...''

""படம் பார்த்தோம்... பிரமாதமா நடிச்சிருந்தார். அவர்தான் ‘"ஓ ரசிக்கும் சீமானே'’ பாட்டை எழுதினார்னும் சொன் னாங்க''

""ஆமாங்க... "பராசக்தி' படத்துல நாலு பாட்டு, காமாட்சி அண்ணன் எழுதியிருக்கார். ஏவி.எம். ஸ்டுடியோக்காரங்க எடுக்குற படத்துலயெல்லாம்... அண்ணன்தான் பாட்டு எழுது வார்''

""அதெல்லாம் தெரிஞ்சுதான் உங்ககிட்ட எம் பொண்ணு விஷயமா சொல்லணும்னு இருந்தேன். "பராசக்தி'யில ‘"ஓ ரசிக்கும் சீமானே'’ பாட்டுக்கு குமாரி கமலா ஆடியிருந்துச்சு. அந்தப் பொண்ணவிட என் பொண்ணு நல்லா ஆடுவா, நடிப்பா. உங்க சொந்தக்காரர் கிட்டச் சொல்லி, என் பொண் ணுக்கு ஏவி.எம். படத்துல ஒரு சான்ஸ் வாங்கித்தர முடியுமா?''

""சமயம் பார்த்து சொல்றேங்க... உங்க மக பெரிய நடிகையா வரும்...''

kk

""எப்படிச் சொல்றீங்க?''

""ஒருநா... நீங்க இந்திப் பாட்டுப் பாடினதையும், உங்க மக கவர்ச்சி நடிகை ஹெலன்போல... கவர்ச்சியா ஆடினதையும் தற்செயலா பார்த்தேன். அப்பவே ‘இந்தப் பொண்ணு பெரிய சினிமா நடிகையா வரும்னு மனசுக்கு தோணுச்சு...'' என்றேன்.

""உங்க நம்பிக்கையும், வாக்கும் பலிக்கட்டும் தம்பி...'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பி னார்.

எனக்கும் குழப்பமாக இருந்தது.

அவள் என்னைப் பார்த்து சிரிப்பது... ஏவி.எம்.மில் சான்ஸ் வாங்கவா? இல்ல... காதல் சிரிப்பா? ஒண்ணும் தெரி யலையே. ஆனா வெட்கப்பட்டு சிரிக்கிறாளே.... பிடிச் சிருந்தாத்தானே வெட்கச் சிரிப்பு வரும். ம்... அவளையே தனியா சந்திச்சு கேட்டாத்தான் சரியா இருக்கும்’ என எண்ணினேன்.

மளிகைக்கடை நண்பரிடம் பஸ்ஸுக்கு கடன் வாங்கிக்கொண்டு.... பஸ் ஸ்டாண்ட்டில் காத்திருந்தேன்.

வந்தாளே... வடிவழகி. அதே சிரித்த முகம்... என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்.

"பார்வை ஒன்றே போதுமே...' இதுதானே காதல் சிரிப்பு. "நல்ல நேரம் ஆரம்பிச்சிருச்சு' என எண்ணிக்கொண்டு மின்னல் வேகத்தில் தாவி பஸ்ஸில் ஏறினேன்.

தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தாள். நான் அவளின் பாவனையை மெய்மறந்து ரசித்தபடியே வந்தேன்.

பஸ் மவுண்ட்ரோட்டிற்கு வந்துவிட்டது. முதுகில் யாரோ தட்ட... திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் முறைத்தார். திடுக்கிட்டு... இரண்டு அணாவை நீட்டினேன். வாங்கிக்கொண்டு, “""ஏன் பிரதர் நீ டி.நகர்ல ஏறின... ஆறேழு பஸ் ஸ்டாப்பைக் கடந்துருச்சு பஸ். இன்னமும் நீ டிக்கெட் வாங்கல. கண்டக்டர் கேட்டா டிக்கெட் எடுப்போம் இல்லேன்னா... அபேஸ் பண்ணிடலாம்னு இருக்க உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா எப்படி நாடு முன்னேறும்?'' என பேச்சை அடுக்கிக்கொண்டே போனார் கண்டக்டர்.

பஸ்ஸில் இருந்தவர்கள் பார்வையெல்லாம் என் மீது. அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது.

""கண்டக்டர், நீங்க நினைக்கிற மாதிரியான ஆளு அவர் இல்லை'' என்றாள் அவள்.

""அது உனக்கு எப்படிம்மா தெரியும்?'' என கண்டக்டர் கேட்க...

""எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்லதான் இருக்காரு, ரொம்ப நல்லவர். அவரு சினிமா பாட்டெழுதுற கவிஞர் காமாட்சி சாரோட தம்பி'' என்று அவள் சொல்ல...

கண்டக்டர் என்னை ஒரு பார்வை பார்த்து... அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு... “"கதை இப்படிப் போகுதோ...' எனச் சொல்லியபடியே நகர்ந்தார், பாக்கி சில்லறை தராமலே.

திருவல்லிக்கேணியில் பஸ் நின்றது.

அவள் இறங்கி ஒரு சந்துக்குள் நுழைந்தாள். நானும் வேகமாக பின்தொடர்ந்தேன். ஆனால்... மாயமாய் மறைந்து போனாள். நாலா பக்கமும் பார்த்து, திகைத்து அப்படியே நின்று விட்டேன்.

தெருமுனை லாண்டரி கடைக்காரர் என்னையே பார்த்து குறும்புச் சிரிப்பை வெளிப் படுத்தினார். நான் அவரிடம் போனேன்.

""என்ன ஒருமாதிரி சிரிக்கிறீங்க என்னைப் பார்த்து...?''

""இல்ல, நீங்க புதுசு மாதிரி தெரியுது. அதனாலதான் அந்தப் பொண்ணு பின்னால வேகவேகமா வந்தீங்க. இப்ப காணாம்னு தேடுறீங்க...''

""ஏன்... தேடுறது தப்பா?''

""தாராளமா... தேடியும் வரலாம், ஓடியும் வரலாம்... ஆயிரம்பேர்ல நீங்களும் ஒருத்தர்...''

""என்ன சொல்றீங்க?''

""என்ன சொல்லணும்?''

""அந்தப் பொண்ணப்பத்தி....''

""நீங்க யாரு?''

""நான்... நான்...''

""அதவிடுங்க... அவ யாருனு தெரியுமா?''

""சினிமாவுல நடிக்கிறவங்க...''

""அடப்பாவி... ஒரு மாதிரி... காலைல லாட்ஜ்ல வந்து தங்கி, மாலைல வீட்டுக்குப் போயிருவா. அதுதான் அவ பிழைப்பு...''

லாண்டரிக்காரர் இப்படிச் சொன்னதும்... என் தலை ஃபேன் போல கிர்ரென்று சுற்றியது.

திருவல்லிக்கேணியிலிருந்து... நடந்தே தி.நகர் வந்து சேர்ந்தேன்.

காமாட்சி அண்ணனின் மனைவி பாமா அவர்கள் என்னை எதிர்பார்த்து... நின்றிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும்... ஆர்வமாகக் கேட்டார்...

""என்னாச்சு... ஏதோ சினிமா கம்பெனிக்கு ’சான்ஸ் கிடைச்சிருக்கதாச் சொல்லிப் போனீங்களே... என்னாச்சு?''

""ஏமாற்றந்தான் கிடைச்சது''

""இது நீங்க அடிக்கடி சொல்ற வசனம்தானே. அதுகிடக்கட்டும்... பத்து நாளைக்கி முன்னாடி... சிவாஜி-பானுமதி நடிக்கிற படத்துல வேஷம் கிடைச்சிருக்கதா போனீங்களே... அதுக்கு சம்பளம் குடுத்திருப்பாங்களே'' என கேட்டார்.

"நடிகர்திலகம் சிவாஜியை நான் டென்ஷனாக்கியது முதல்... அவர் என்மீது கோபப்பட்டது வரை...' அங்கு நடந்ததை விலாவாரியாகச் சொல்லத் தொடங்கினேன்...

வரும் இதழில் "கேரக்டர்" தொடர் நிறைவுறும்...