(112) உடன்கட்டை ஏறிய புலவர்!

வர்தான் சுந்தரம் மாஸ்டர்.

நானும் தயாரிப்பாளராகி என் படங்களில் சுந்தரத்தையே மாஸ்டராக்கினேன். சுந்தரம் மாஸ்டரை ஒரு உடன்பிறப்பாகவே நினைத்துப் பழகிவந்தேன். சுந்தரமும் நன்றி மறவாமல் என் படத்திற்கு கொடுத்த சம்பளத்தை சிரித்த முகத்தோடு பெற்றுக்கொள்வார்.

ஒருசமயத்தில் அவர் ஒரு பழைய வீடு வாங்கினார். அந்த நேரத்தில் நான் "ராஜரிஷி' படம் எடுத்து பெரும் நஷ்டப்பட்டிருந்த நேரம். என்னை சுந்தரம் மாஸ்டர் சந்தித்தார். ""சார், வீட்டின் பேரில் கடன் வாங்கித்தான் வீடு வாங்கியிருக்கிறேன். அந்த வீட்டின் முன்பகுதி அறை காலியாகவே இருக்கிறது. அதை உங்க புரொடக்ஷனுக்குப் பயன்படுத்திக் கொண்டு வாடகை தர முடியுமா?'' என் றார், வழக்கம்போல் சிரித்த முகத்தோடு.

Advertisment

அவரின் கஷ்டத்தை அறிந்து அவருக்கு உதவுவதற்காகவே அந்த அறையை வாடகைக்குப் பிடித்துக்கொண்டேன்.

"ராஜரிஷி' படத்தின் உடைகள் மற்றும் பீரோவை அங்கே வைத்துவிட் டேன். அப்போது நான் அவர் வீட்டிற்குச் சென்றபோது அவர் மனைவி, மகன்கள் ராஜுசுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் மூவரிடமும் ""நான் ஒரு காலத்தில் பசிக்குது ஒருவேளை சோறு போடுங்கள், உங்கள் நாடகத்தில் டான்ஸ் ஆடுகிறேன். என்றேன். கலைஞானம் சார் சோறு போட் டார். நான் நாடக இடைவேளையில் டான்ஸ் ஆடினேன். ஜனங்க ஒன்ஸ்மோர் கேட்டுக் கேட்டு ரசித்தார்கள். ஆனால் கலைஞானம் சாரின் நாடகம் வேண்டாம், டான்ஸே போதும் என்று போய்விட்டார் கள். இதனால் நாடகமே பாதியில் நின்று போய்விட்டது'' என்று சொல்லிச் சிரிக்கிறார். கூடவே அவரின் மனைவியும், மகன்களும் சிரிக் கிறார்கள். அன்று முதல் சுந்தரம் மனைவி என்னைப் பார்க்கும் போதெல்லாம் கைகூப்பி கும்பிடு வார்கள்.

kk

Advertisment

"ராஜரிஷி' படத்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பலவாறு கடன்களைத் தீர்த்துவரும் நேரத்தில் சுந்தரம் வீட்டில் வைத்திருந்த உயர்தரமான ராஜா ராணி உடைகளை விற்றால் அதனாலும் கொஞ்சம் கடன் அடையும் என்று பீரோக்கள் மூன்றையும் தூக்கிவந்து பார்த்தபோது... அதிலிருந்த எல்லா துணிகளும் மழையில் நனைந்து கெட்டுப்போய்விட்டன. அப்படியொரு பழைய வீடு அது. அதற்காக வருந்தாமல் நஷ்டத்தோடு நஷ்டமாய் சேர்த்துக்கொண்டேன். இப்படி ஒரு நஷ்டம் ஏற்பட்டதை நண்பர் சுந்தரத்திடம் சொல்லவே இல்லை.

காலம் மாறியது. சுந்தரம் மாஸ்டர் மகன் பிரபுதேவா பிரபல டான்ஸ் மாஸ்டராகவும், ஹீரோவாகவும் வலம் வந்துகொண்டிருந்தார். ஒரு கல்யாண வீட்டில் நானும் பிரபுதேவாவும் எதிர் எதிராக சந்தித்தபோது... ""ஸார் நலமா?'' என்றார் பிரபுதேவா.

""நல்லா இருக்கிறேன். நீ புது மாதிரி கதைகளை டைரக்ட் பண்ணி வருகிறாய். இப்ப உனக்கு கதை தேவைன்னு தேடிக்கிட்டிருப்பதாய் கேள்விப்பட்டேன். உனக்குப் பிடிப்பதுபோல் ஒரு கதை வைத்திருக்கிறேன்... கேட்டுத்தான் பாரேன்...'' என்றேன்.

""நிச்சயமாக கேக்கிறேன் ஸார்''

""எப்போ கேக்கிறே''

"""நீங்க எப்போ வேணும்னாலும் சொல்லுங்க கேட்கிறேன் ஸார்''

""நாளைக்கு காலையில சொல்றேன் -கார் அனுப்பு...''

""நிச்சயமா அனுப்புறேன் ஸார்''

மறுநாள் காலையில் அவரின் புதிய வீட்டிற்குப் போன் செய்தேன்.

""ஹலோ... நான் கலைஞானம்...''

""ஸார் பிரபுதேவா...''

""கார் அனுப்புகிறாயா?''

""அனுப்புறேன் ஸார்..''

சிறிது நேரமானதும் பிரபுதேவாவின் மேனேஜர் போன்பண்ணி... "சார் கார் ரெடிபண்ணி யதும் அனுப்புறேன்' என்றார். வெகுநேரமானது... மறுபடியும் போன் பண்ணினேன்.

""ஸார், கார் கிடைக்கல. உங்ககிட்ட கார் இருக்கா?'' என்று கேட்டார் மேனேஜர்.

""கார் இல்லப்பா... அதனாலதான் கார் அனுப்பச் சொன்னேன்...''

.... ....

போன் கட்...

நானே பலதடவை போன்பண்ணினேன்... போன் கட்டாகியே இருந்தது. ஒரு வேளை போன் ரிப்பேராகி யிருக்குமோ என்று மறு நாளும் போன்பண்ணினேன். போன் அடித்தும் எடுக்கவில் லை... நொந்துவிட்டேன்.

சொன்னதைக் காப் பாற்றும் சுந்தரம் மாஸ்டர் எங்கே?

சொன்னதை அலட் சியப்படுத்தும் பிரபுதேவா எங்கே?

1943-ஆம் ஆண்டில் வெளியான "சிவகவி'’படம் மிகப் பெரும் வெற்றி பெற் றது. எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மது ரம் மற்றும் செருகளத்தூர் சாமா உள்ளிட்டோர் நடிப்பில், எஸ்.எம்.ஸ்ரீராமுலு இயக்கம் மற்றும் தயாரிப்பில் இளங்கோவனின் வசனத்தில், ஜி.ராம நாதனின் இசையில், பாபநாசம் சிவனின் பாடல் களில்... ‘"சிவகவி'’ அற்புத சித்திரமாக ஆகியது.

தொண்டை நாட்டு செங்காட்டங் கோட் டத்து உறையூரில் பிறந்தவர் பொய்யாமொழிப் புலவர். இது பதினாறாம் நூற்றாண்டில் நடந்த கதை என "அபிதான சிந்தாமணி' எனும் அரிய ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது.

அம்பாளின் தீவிர பக்தனான பொய்யா மொழி அம்பாளின் ஆசியால் புலமை பெற்றார். தனது புலமைத் திறனால், அரண் மனைக் குதிரையின் உயிரைப் பறித்து... பின், தனது ஆசிரியரின் வேண்டுகோளால் குதிரை யை கவி பாடி உயிர்ப்பித்தார். கண் பார்வை யற்ற தாசியின் குடும்பத்தினருக்கு தன் கவித் திறனால் கண்ணொளி கிடைக்கச் செய்தார். ஒருமுறை தாசி வீட்டில் உணவு சாப்பிடச் சென்ற புலவருக்கு தாசி கதவு திறக்காமல் அலட்சியம் செய்ததால்... ‘"பழைய குருடி... கதவைத் திறடி'’ என்றார். தாசி மீண்டும் கண் பார்வை இழந்தாள். மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் அவளுக்கு கண்ணொளி தந்தார். சொன்ன சொல் பொய்க்காததால்... பொய்யா மொழிப் புலவரானவர். ‘"பெட்டையைப் பாடும் வாயால் முட்டையைப் பாடமாட்டேன்'’ என தன் மேல் கவி பாடச் சொன்ன முருகப் பெருமானின் கோரிக்கையையே... சக்தியைப் பாடும் வாயால் அவளின் பிள்ளையைப் பாடமாட்டேன்... , எனச் சொல்லி மறுத்து... பிறகு முருகனின் அருளையும் பெற்றவர் பொய்யாமொழி.

ஒருசமயம்... பாண்டிய மன்னன் பல சோத னைகளை புலவருக்கு வைத்தான். அனைத் திலும் வென்றபோதும்... அலட்சியப்படுத்தி னான் மன்னன். இதனால் கோபம் கொண்டு புலவர் வெளியேற... இதையெல்லாம் மறைந் திருந்து கவனித்த பாண்டிமாதேவி மாறு வேடம் பூண்டு... புலவர் உட்கார்ந்து சென்ற தண்டிலை சுமந்து சென்றாள். இதை உணர்ந்த புலவர்... ‘எனக்கு மன்னன் மீது வருத்தமில்லை’ எனச் சொல்லி... பாண்டிமாதேவியை அரண் மனைக்கு அழைத்துச் சென்றார். மனஸ்தாபம் இல்லை என்பதை மன்னனிடமும் சொன்னார். மன்னனும் தன் தவறை உணர்ந்தான்.

சோழநாடு சென்ற பொய்யாமொழிப் புலவர்... முதல் அமைச்சர் சீனக்கன் முதலியாரிடம் நட்புகொண் டார். நாளடைவில் பொய்யாமொழியின் புலமைக்கு சீனக்கன் அடிமையாகிவிட்டார். தன் வீட்டிலேயே புலவரை தங்கச் செய்து, எந்நேரமும் அவரைப் பாடச்சொல்லிக் கேட்டு... அதில் மயங்கிக் கிடந்தார். ஒரு நிமிடம்கூட புலவரைப் பிரிந்திருந்தாலும் தாங்கமுடியாத நிலைக்கு ஆளானார். அப்படியொரு நட்பு.

ஒருநாள்... முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் புலவருக்கு தூக்கம் வந்துவிடவே அவரை அரவணைத்து அழைத்துச் சென்று, தனது படுக்கையில் படுக்கவைத்து தனது போர்வையையும் புலவருக்கு போர்த்திவிட்டார் சீனக்கன். அதன்பின் ராஜாங்க வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

சீனக்கன் மனைவி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு... வழக்கம்போல படுக்கை யறைக்கு வந்தார். போர்வையால் மூடித் தூங்குவது தன் கணவர் என நினைத்து அருகே படுத்து தூங்கிவிட்டார். ராஜ காரியங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய சீனக்கன், இருவருக்கும் இடையில் படுத்து தூங்கிவிட்டார்.

உலகம் விடிந்தது... இவர்கள் வாழ்க்கை இருண்டது.

வேலைக்காரர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து... பார்த்து... சந்தேகத் தீயை மூட்டிவிட்டனர். விஷயம் மன்னர்வரை போனது. புலவரை அழைத்து கண்டித்து அனுப்பிவிட்டார் மன்னர். ‘இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதே என பொய்யாமொழி பொசுங்கிப் போனார். மன உளைச்சல் தாங்காமல் யாரிடமும் சொல்லாமல்... அங்கிருந்து சென்றுவிட்டார்.

பொய்யாமொழியைக் காணாது புலம்பித் தவித்த சீனக்கன், ‘"உண்மையை அறியாது... புலவர் மீது மக்கள் பழி போட்டு விட்டார்களே... தெய்வமே... என் நண்ப னைப் பிரிந்து என்னால் எப்படி வாழ முடியும்?'’ என மன வேதனையடைந்து... உண்ணாமல் உறங்காமல் படுத்த படுக்கையாகி உயிரை விட்டார்.

சீனக்கன் இறந்துவிட்ட செய்தி புலவ ருக்கு எட்டியது. ஓடோடி வந்தார். சுடுகாட் டில் சீனக்கன் உடல் எரிந்துகொண்டிருந்தது. சோழ மன்னனும் மற்றவர்களும் சூழ்ந்திருந் தனர். மன்னனிடம்... "அன்றைய இரவில் நடந்தது என்ன?' என்பதை அழுது கொண்டே பாட்டாகப் பாடினார் புலவர். உண்மையறிந்து அனைவரும் கண்ணீர் மழையில் நனைந்தனர்.

யாரும் எதிர்பாராத தருணத்தில்... "நண்பா நான் உன்னை விட்டுப் பிரியேன்' என்றபடி எரியும் சிதையில் இறங்கிவிட்டார் புலவர். அக்னிதேவன் அந்த இரு நண்பர்களையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

கணவன் இறந்ததும் மனைவி உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்த நம் நாட்டில்... நண்பன் இறந்ததால் உடன்கட்டை ஏறிய நண்பனின் கதை நாம் அறியாத ஒன்று.

காதல் கோட்டை.... நட்புக் கோட்டை