(105) டி.ஏ. மதுரத்தின் துயர வாழ்க்கை!
1936-ல் "வசந்த சேனா' என்ற தமிழ்ப் படத்தை "திருப்பூர் டாக்கீஸ்' எடுத்து வெளியிட்டது. இந்தப் படத்தில்தான் டி.ஏ.மதுரம் அறிமுகம். இவர் பிறந்த ஊர் ஸ்ரீரங்கம். "வசந்த சேனா' படம் புனா நகரில் உருவானது. படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டனர், படக்குழுவினர் என்.எஸ். கிருஷ்ணன் தலைமையில். அப்போது புரொடக்ஷன் மேனேஜர் குறிப்பிட்ட நேரத்திற்கு ரயிலுக்கு வராமல் போனதால், பணம் அவரிடம் மாட்டிக்கொண்டது. செலவிற்கு என்ன செய்வது என்று நடிகர்கள் தவித்தபோது என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடம், ""கவலைப்படாதீர்கள்... உங்களையெல்லாம் புனா அழைத்துச் செல்வது என் பொறுப்பு'' என்று டி.ஏ.மதுரத்திடம் சென்று நிலைமையைச் சொல்லி பண உதவி கேட்டார்.
அன்றைய சூழ்நிலையில் அவர்தான் வசதியானவர். எந்தவித தயக்கமும் இன்றி, இருந்த பணத்தை அப்படியே கொடுத்துவிட்டார். புனே போய்ச் சேர்ந்த பிறகும் புரொடக்ஷன் மேனேஜர் வரவில்லை. எங்கே, எப்படிச் சாப்பிடுவது என்ற தர்மசங்கடம் ஏற்பட்டது என்.எஸ்.கிருஷ்ணனுக்கு. டி.ஏ.மதுரத்தைப் பார்த்தார். அவர் காதுகளில் கம்மல் மின்னியது. கழுத்தில் தங்கச்செயினும் சிரித்தது. என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூக்கில் வேர்த்தது. நிலைமையை மதுரத்திடம் சொன்னார். உடனே கழட்டிக் கொடுத்துவிட்டார்.
இதுவே டி.ஏ.மதுரத்தின் இரக்க சுபாவத்திற்கு தலைமை வகித்தது. இதனால் இருவர் உள்ளத்திலும் காதல் வளர்ந்தது. அன்றைய கால பிரபல டைரக்டர் ராஜா சாண்டோ தலைமையில் திருமணம் செய்துகொண்டனர்.
ராஜா சாண்டோவை யார் என்று தெரிந்துகொள்ளுங்கள். இவர் பிறந்த ஊர் புதுக்கோட்டை. ஊமைப்படம் வந்தபோதே மும்பையில் இயக்குநராகப் பயிற்சி பெற்றவர். தமிழ் சினிமாவின் பிதாமகன் டைரக்டர் கே.சுப்ரமணியம், ராஜா சாண்டோவிடம்தான் பயிற்சிபெற்றார் என்றால் ராஜா சாண்டோ எப்படிப்பட்ட திறமைசாலி என்பதை நாம் அறிந்துகொள்வோம்...
ஒருநாள் டி.ஏ.மதுரம் செவிகளுக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. மனைவியின் பெயர் நாகம்மாள். தற்போது நாகர்கோவிலில் வாழ்ந்துவருகிறார் என்று. என்.எஸ்.கிருஷ்ணனிடம் வந்து சட்டையைப் பிடித்து ""மோசக்காரா... முட்டாள் ஜென்மமே... என்னிடம் கல்யாணம் ஆகலைன்னு ஏன் பொய் சொன்னே?''
என்.எஸ்.கிருஷ்ணன் அவருக்கே உரிய நகைச்சுவையோடு ""கொஞ்சம் பொறு... முதல்ல ஒரு சின்ன விஷயத்தை உங்கிட்ட தெரிஞ்சுக்கிறேன். ஒரு கல்யாணம் நடக்குறதுக்கு எத்தனை பொய் சொல்லணும்?''
""இது கூடவா தெரியாது... ஆயிரம் பொய்...''
""நான் ஒரே பொய்தானே சொன்னேன். இதுக்குப் போயி இப்படி கோவிக்கலாமா? என் கண்ணு... மூக்கு'' என்று கட்டித் தழுவி கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டார்... அவ்வளவுதான்... இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இடையில் தடையேதும் இல்லை... இல்லற வாழ்க்கை இனிதே நடந்து வந்தது.
நகைச்சுவையில் இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள். இவர்கள் நடித்த படமெல்லாம் சூப்பர் ஹிட்.
சுமாரான படங்களில் இவர்கள் நடித்திருக் கிறார்கள் என்றால்கூட... மக்கள் தவறாமல் பார்த்துவிடுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதிலே மாபெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தனர்.
எம்.கே. தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, "இந்துநேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இவரைப் பற்றி -போலீஸ் கமிஷனரிடம் லட்சுமிகாந்தனின் தவறான போக்கைச் சுட்டிக்காட்டி பலர் புகார் கொடுத்திருந் தார்கள். அதேபோல் எம்.கே.தியாகராஜ பாகவத ரும், என்.எஸ்.கிருஷ்ணனும் புகார் கொடுத்திருந் தார்கள். அதனால் லட்சுமிகாந்தனை இவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று சாட்சிகளை வைத்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
தமிழ்நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. பலர் வாய்விட்டே அழுது புலம்பினர். இப்படி ஒரு நிலைமையில் டி.ஏ.மதுரத்தின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்... பைத்தியம் பிடித்தது போலாகி விட்டார். "ஐயோ...' என்று கதறி அழுது சுவரில் முட்டி முட்டி மயங்கி விழுந்தார். வந்தவரெல்லாம் ஆறுதல் சொல்லிச் சொல்லி, கடைசியில் அவர்களும் ஆறுதல் பெற முடியாமல் அழுதே தீர்த்தனர்.
எம்.கே.தியாகராஜ பாகவதரை மீட்க அவர்கள் குடும்பம் பாடுபட்டது வேறு சமாச்சாரம்.
ஆனால் கணவர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் டி.ஏ. மதுரம் சிறைசென்று, என்.எஸ்.கிருஷ்ண னைப் பார்த்தார். வாய் பேச முடியவில்லை. வழியும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
என்.எஸ்.கிருஷ்ணன்தான் எப்போதும், எதற்கும் நகைச்சுவையாகவே பேசும் சுபாவம் உள்ளவராயிற்றே! அப்போது...
""மதுரம்... இது எனக்கு ஏற்பட்ட தண்டனை இல்லை. நம் காதலுக்கு ஏற்பட்ட தண்டனை. கொஞ்சகாலம் உன்னைப் பிரிந்து நான் ஏங்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். அதில்தான் எல் லையற்ற சுகமிருக்கும் என்று பெரியவங்க சொல்லு வாங்க'' என்று தமாஷாகப் பேசி மதுரத்தை கொஞ் சம் சிரிக்கத்தான் வைத்தார் என்றாலும் மதுரத்தின் மனதிலே உள்ள துயரம் நீங்கவே இல்லை.
""மதுரம்... நான் சொல்வதை நன்றாகக் கவனி... வழக்கு அதுபாட்டுக்கு நடக்கட்டும். உன் கடமை, நம்மையே நம்பியிருக்கும் நாடக நடிகர்களைப் பட்டினி போட்டுவிடாதே. தொடர்ந்து நாடகத்தை நடத்து'' என்றார்.
கணவன் சொன்னதை ஏற்று நடிகர் சகஸ்ர நாமம் துணையோடு நாடகத்தை நடத்திவந்தார். அதனால் நஷ்டமே ஏற்பட்டது. ஏன்? என்.எஸ். கிருஷ்ணன் நடித்தால்தானே கூட்டம் வரும்.
இருந்த சொத்துக்களை விற்று விற்று மதுரம் வழக்கை நடத்திவந்தார். வழக்கில் திடீர் அதிர்ச்சி. செசன்சு கோர்ட்டில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் இருவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மதுரத்திற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கோர்ட்டிலிருந்து வீடுவரை பரிதாபமிக்கவராய் நடந்தே சென்றார்.
டி.ஏ.மதுரத்தைப் பார்த்த மக்களெல்லாம்... "அம்மா... உங்களுக்கா இந்த கதி...' என்று கதறி அழுதார்கள். நீதி மன்றத்தின் முன்பு கூடியிருந்த லட்சத்திற்கும் மேற்பட்டோர்... "போலீஸ் ஒழிக! பாகவதர் என்.எஸ்.கிருஷ்ணன் வாழ்க! என்று கோஷமிட்டது சென்னை நகரத்தை உலுக்கிவிட்டது.
ஐகோர்ட்டுக்கு அப்பீல் செய்யவேண்டும். நிச்சயம் அங்கே விடுதலை கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரி வித்துவிட்டார்கள். ஆனால் வழக்காட பணம்? எல்லாம் விற்றாகி விட்டதே... என்ற கவலையில் டி.ஏ.மதுரம் மூழ்கிவிட்டார்.
என்.எஸ்.கிருஷ்ணன் வள்ளல் குணம் மிக்கவர். சம்பாதித்ததில் பெரும்பகுதியை தர்மத்திற்கே செலவு செய்தவர் என்பது நாடறிந்த உண்மை. கணவர் தர்மம் செய்வதைக் கண்டு மதுரம் ரசித்தாரே தவிர, தர்மத்திற்குத் தடைவிதித்ததே இல்லையே! இப்போது பணத்துக்கு எங்கே போவது? என்ன செய்வது? என்று தவியாய் தவித்தார். கடன் வாங்கியே வாழ்க்கை நடத்தினார்.
வழக்கின் அப்பீல் மனு மீது ஐகோர்ட்டு 29-10-1945 அன்று தீர்ப்பு கூறியது. அப்பீலை தள்ளுபடி செய்வதாகவும் கீழ்கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
மதுரம் மனம் உடைந்து மரக்கட்டை போல் செயலற்றுப் போனார். நாள் முழுவதும் பிணம்போல் கிடந்தார். ஒரு வழியாக தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வழக்கறிஞர்களை சந்தித்தார். அவர்கள் கூறியபடி லண்டன் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்தார்.
அந்தக் காலத்தில் இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் இல்லை. அது லண்டனில்தான் இருந்தது. அதற்குப் பெயர் "ப்ரீவி கவுன்சில்'. லண்டனில் வழக்கு நடத்துவது, சரியான காரியமா? மதுரம் ஒரு முடிவுக்கு வந்தார். "எப்படியாவது கணவனை மீட்டே ஆகவேண்டும், இல்லை நான் சாகவேண்டும். அவரில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?' என போராட்டத்துடன் ஒரு தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றார். அந்த தயாரிப்பாளர் ஒருசமயம் ஒரு படம் எடுத்து விற்பனை ஆகவில்லை. என்.எஸ்.கிருஷ்ணனிடம் வந்து, தன் நிலையைச் சொல்லி அழுதார். "என் படத்தில் நீங்கள் இரண்டு காட்சிகள் நடித்தாலே போதும்... என் படம் விலையாகிவிடும்' என்றார்.
அவர் கேட்டதற்கிணங்க என்.எஸ்.கிருஷ்ணனும் டி.ஏ.மதுரமும் நடித்துக் கொடுத்தார்கள். படம் வெளியானது. வசூலை வாரிக் குவித்தது. அவர் இப்போது மாட மாளிகையில் பணக்காரனாக வாழ்ந்துவருகிறார். அவரிடம் உதவி கேட்கச் சென்றார் மதுரம். சந்தித்தார்... உதவி கேட்டார்.
உதவி கிடைத்ததா? ஊரார் என்ன பேசினார்கள்...