(101) பாரட்டியவர்களை எப்படிப் பாராட்டுவேன்!
பாரதிராஜா அவர்கள் சினிமா உலகிற்கு வரும்முன்பே நான் பிரபல சினிமா எழுத்தாளர் என்ற பெயர் பெற்றிருந்தேன். என் கதைகளையும், திரைப்படங்களையும் பார்த்து மனதாரப் பாராட்டிவந்தார். காலப்போக்கில் பாரதிராஜா மிகப்பெரிய இயக்குநர் ஆனார். அவரைப் பார்க்கிறபோதெல்லாம் அகம் மகிழ, முகம் மகிழ பாராட்டிவந்தேன். அவர் இயக்கிய படங்களில் கதைக்குத் தகுந்த காட்சிகளைச் சொல்ல எனக்கு வாய்ப்புக் கொடுத்துவந்தார்.
ஒருநாள் பாரதிராஜா என்னிடம் ஒரு ஓரங்க நாடகத்தைச் சொன்னார். அதை எழுதியவர், நெல்லைச் சீமையைச் சேர்ந்த கண்ணன். அவர் மிகவும் புத்திசாலி. அந்தக் கதை நான்கு ஸீன்கள் மட்டுமே கொண்டது என்றாலும், ஜாதிச் சண்டையை மையமாக வைத்து, "கருத்துள்ள கதையாக அமைக்கப் பட்டிருந்தது. அந்தக் கதையை படமாக்க தீவிர முயற்சிசெய்த பாரதிராஜா, தனது எழுத்துலக நண்பர்களிடம் திரைக்கதை அமைத்துத் தர கேட்டிருக்கிறார். ‘"நாலு ஸீனை வச்சு எப்படி முழு திரைப்படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதுறது?' எனச் சொல்லிவிட்டார்களாம் எழுத்தாள நண்பர்கள். பிறகு பாம்குரோவ் ஹோட்டலில் என்னிடம் அந்தக் கதையைச் சொன்னார்.
""இந்தக் கதைக்கு திரைக்கதை எழுதித் தர்றேன். எனக்கு 12 மணிநேரம் அவகாசம் கொடுங்கள்'' என்றேன். பாரதிராஜா ஒப்புக்கொண்டு, "நாளைக்கி காலைல பத்துமணிக்கு வர்றேன்' எனச் சொல்லிவிட்டு கிளம்பினார்.
இரவெல்லாம் கண்விழித்து சுமார் 40 ஸீன்களை எழுதிவிட்டேன்.
சொன்னபடி காலை பத்து மணிக்கு வந்து, புன்னகையோடு என் முன் உட்கார்ந்தார். நான் திரைக்கதையை விவரித்தேன். அப்படியே என்னைக் கட்டிப் பிடித்து, முத்தமிட்டு ""ஒரே நைட்ல ஸ்கிரிப்ட்ட இவ்வளவு நல்லா எழுத உம்மாலதான் முடியும் கலைஞானம். இந்த நம்பிக்கைலதான் உம்மிடம் கதையைச் சொன்னேன். என்னோட படங்களோட கதை விவாவதத்துல நீங்க ஸீன் சொல்லும்போதெல்லாம்... "படிக்காத இந்த மனுஷனுக்கு இறைவன் இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கானே'னு ஆச்சரியப்படுவேன். உம்மைப் பாராட்டி, நான் ஒரு விழாவை எடுத்தே ஆகணும்'' என மிகுதியாகப் பாராட்டினார்.
நான்கு ஸீன் கதையை 40 ஸீன் திரைக்கதையாக எழுதியதுதான்... "வேதம் புதிது' திரைப்படம். இந்தப் படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்கு பாரதிராஜாவே முழு முதற் காரணம். அதன்பின் பல சந்தர்ப்பங்களில் அவருடைய படங்களுக்கு நான் ஸீன் சொல்லும்போதெல்லாம் "உமக்கு ஒரு பாராட்டுவிழா எடுப்பேன்' என்பார்.
காலங்கள் ஓடியது... ஒருநாள், பாரதிராஜாவுக்கு போன் செய்து ""டைரக்டரே... இன்னைக்கு எனக்கு 90-ஆவது வயசு பிறந்திருக்கு'' என்றேன்.
""என்னாது... 90 வயசு பொறந்திருச்சா?! இந்த வயசுல நான் உமக்கு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். ஒண்ணு செய்ங்க, "உம்மால ஹீரோவா அறிமுகமான ரஜினிகாந்த்தை விழாவில் கலந்துகொள்ளும்படி கேளுங்க' என்றார்.
நான் ரஜினிகாந்த் அவர்களுக்கு போன் செய்து, ""பாரதிராஜா எனக்கு விழா எடுக்கிறார். நீங்களும் கலந்துக்கிட்டா நல்லாருக்கும்னு சொன்னார்'' என தெரிவித்தேன்.
""நிச்சயமா நான் கலந்துக்கிறேன். இப்பவே அவருக்கு போன் செய்றேன்'' என்றவர் உடனே பாரதிராஜாவுக்கும் போன் செய்திருக்கிறார்.
""கலைஞானம் சாருக்கு விழா எடுப்பதில் எனக்கும் பங்கு இருக்கு. மும்பைல ஷூட்டிங் இருக்கிறதால 14-ந் தேதியில விழாவை வச்சுக்கங்க'' எனச் சொல்லியிருக்கிறார்.
விழா நடந்த 14-08-2019-ஆம் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் தனது வருகையை உறுதிசெய்தார் ரஜினிகாந்த்.
தான் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு, தன் சிஷ்யர்களிடம் விழா விஷயத்தைச் சொல்லி... இரவுபகலாக ஏற்பாடுகளைச் செய்துவந்தார் பாரதிராஜா.
கலைவாணர் அரங்கத்தை புக் செய்து, நகரம் முழுக்க போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்து, விழா அரங்கில் திரும்பிய பக்கமெல்லாம் என் புகைப்படம் தெரியும்படி செய்து... அழைப்பிதழ் அடித்து, பணத்தை பணம் என்று பார்க்காமல் லட்சக்கணக்கில் செலவுசெய்தார் பாரதிராஜா. விழாவில் பங்கேற்க அமைச்சர்கள் மாண்புமிகு கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோரை நேரில் சந்தித்து ஒப்புதல் பெற்றார். சிறப்புரையாற்ற ரஜினிகாந்த், பாராட்டு வழங்க நக்கீரன்கோபால், புனே ஸ்ரீ பாலாஜி யுனிவர்ஸிடி டாக்டர் கர்னல் பாலசுப்பிரமணியம், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்களிடமும் பேசினார்.
திட்டமிட்டபடி விழாவை மிகச்சிறப்பாக நடத்தினார்.
விழாவில் நடிகர் எனது சகோதரர் சிவகுமார் அவர்கள் பேசும் போது... ""நான் அண்ணன் என்று மதிப்பது சின்னப்ப தேவர் அவர் களையும், கலைஞானம் அவர்களையும்தான். கலைஞானம் பல கதைகள் எழுதிவிட்டார்... எழுதிக்கொண்டும் இருக்கிறார். 200 திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். ‘"இது நம்ம ஆளு'’ படத்தில் ‘கிருஷ்ணய்யர்’ கேரக்டரில் நடித்து பிச்சு வாங்கிட்டார். பலரையும் சினிமாவில் அறிமுகம் செய் திருக்கிறார். அவர்கள் எல்லோருமே ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கலைஞானம் அண்ணன் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்...'' என அவர் சொன்னபோது... அரங்கம் அமைதியானது. தொடர்ந்து பேசிய சிவகுமார், ""அமைச்சர்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசாங்கம் கலைஞானத்திற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு “உடனே, ""அவருக்கு அரசு வீடு ஒதுக்கும்'' எனச் சொன்னார்.
அதற்கு ரஜினிகாந்த், ""அரசுக்கு அந்த வாய்ப்பை நான் தரமாட்டேன். நான் அவருக்கு ஒரு வீடு வாங்கித் தருகிறேன்'' என்றதும் கரவொலி ஓய வெகுநேரம் ஆனது. மேலும் தன் பேச்சில் என்னைப் பற்றியும், எனது குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டினார்.
தம்பி நக்கீரன்கோபால் அவர்கள் பேசும்போது... ""ஞாபகசக்தியில் கலைஞருக்கு அடுத்தபடியாக, அய்யா கலைஞானம்தான்'' என்று பாராட்டி னார். கவிப்பேரரசு வைரமுத்து அவர் கள் என்னை வானளாவப் புகழ்ந்தார். பாரதிராஜா பேசும்போது மகிழ்ச்சி யில் அவரின் தொண்டை அடைத்து விட்டது. அவரின் ஆனந்தக் கண்ணீரே அவரின் பாராட்டுதலை காட்டிக்கொண்டி ருந்தது.
எனக்கு பாராட்டுவிழா நடத்துவதாகச் சொன்ன வாக்கை, பல சிரமத்திற்கிடையில், லட்சக் கணக்கில் செலவுசெய்து நடத்திக் காட்டி, என் குடும்பத்திற்குப் பெருமைதேடித் தந்ததை எப்படிப் பாராட்டுவது... என்னவென்று பாராட்டுவது...
ஒரு படம் எடுப்பதில் என்ன வெல்லாம் லாப நஷ்டங்கள் இருக்கிறது என்பதை அறிந்துகொள் ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
1955-ஆம் ஆண்டில் "கோகிலவாணி'’என்ற படத்தில் துணை நடிகனாக நடித்துக்கொண்டே புரொடக்ஷன் வேலைகளையும் செய்துவந்தேன். அடுத்து "தங்கத்திலே வைரம்', ‘"வெகுளிப் பெண்', "ஆறு புஷ்பங்கள்' ஆகிய படங்களுக்கு கதை எழுதிக்கொண்டே புரொடக்ஷன் வேலையும் பார்த்தேன். இந்த அனுபவம்தான் 1978-ஆம் ஆண் டில் "பைரவி'’படத்தை தயாரிக்கும் துணிச்சலை எனக்குத் தந்தது. அதேநேரம் "பைரவி'’படம் எடுப்பதில் ஏற்பட்ட சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என் குடும்பத்திற்கு நல்லது செய்யும் நோக்கில் ""ஒரு படம் எடு... உனக்கு பணம் தருகிறேன்'' என்றார் தேவர்.
""ரஜினிகாந்த்தை ஹீரோவாக நடிக்க வைக்கவிருக்கிறேன்'' என்றேன்.
"புதுமுக ஹீரோ வேண்டாம்' என தேவர் சொன்னதை நான் ஏற்காததால்... பணம்தர மறுத்துவிட்டார்.
"எடுத்த காரியத்தை முடித்தே தீருவது'’ என்கிற வைராக்கியத்துடன்... ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்து கதையைச் சொன்னேன்.
""யார் ஹீரோ?''
“""நீங்கதான். சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய். நாளைக்கு வர்றேன்'' எனச் சொல்லிவிட்டு வந்தேன்.
ரஜினிக்கு ஹீரோவாக நடிப்பதில் இஷ்ட மில்லை. ‘"சம்பளத்தை ஜாஸ்தியா கேட்டா... நம்மள ஹீரோவாக்குற ஐடியாவ கைவிட்டுடுவார்'’என எண்ணிய ரஜினி, மறுநாள் நான் சென்றபோது... “""ஐம்பதாயிரம் சம்பளம்... ஐந்தாயிரம் அட்வான்ஸ் கொடுங்க'' என்றார்.
""அவ்வளவுதானே... நாளைக்கி வர்றேன்'' எனச் சொல்லிவிட்டு வந்து, அதன்படி மறுநாள் முப்ப தாயிரம் ரூபாயை அட்வான் ஸாக கொடுத்து அசத்திவிட் டேன். அனுபவஸ்தர் ஒருத்தரை டைரக்டராகப் போட விரும்பி... பட்டு என்பவரை ஏற்கனவே பேசி வைத்திருந்தேன்.
"டைரக்டரான எனக்கு முதல்ல அட்வான்ஸ் கொடுக் காம... புதுமுகமான ரஜினி காந்துக்கு முதல்ல அட்வான்ஸ் கொடுக்கிறதா?'’என்று எண்ணிய பட்டு, "பைரவி'’படத்தை இயக்க மறுத்துவிட்டார்.
அடுத்து ஸ்ரீதர் அவர்களைச் சந்தித்து கதை யைச் சொன்னேன். டைரக்ஷன் செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால் அதுவும் ஒரு காரணத்தால் தடைப்பட்டது. அதன்பிறகுதான் ஸ்ரீதரின் உதவி யாளரான எம்.பாஸ்கர் அவர்களை டைரக்டராக நியமித்தேன்.
கடுமையான வெயிலில் ஒரு சண்டைக் காட்சியை எடுத்தோம். ரஜினிக்கு டூப் போட்டவர், வேகமாக ஜீப்பை ஓட்டிவந்ததால், கவிழ்ந்து கால் முறிந்துவிட்டது. இதனால் ஷூட்டிங் தடைப்பட் டது. பணமும் கிடைப்பதில் மிகுந்த இடையூறுகள் ஏற்பட்டன. அத்தனை கஷ்டத்தையும் கடந்து படத்தை எடுத்து முடித்து, வெளியிட்டேன். படம் செம ஹிட். ரஜினிகாந்த்தை கோடீஸ்வர தயாரிப்பாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவரும் ஓய்வில்லாமல் நிறையப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். வெற்றிப் படங்களையே தொடர்ந்து கொடுத்துவந்தார்.
நானும் சும்மா இருக்கவில்லை... என் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள்... ஏவி.எம். ஸ்டுடியோவிற்குச் சென்ற நான், அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருப்பதை தற்செயலாகப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டு எழுந்துநின்று... “""கலைஞானம் சார்...'' என அழைத்தார். சென்றேன். தன் அருகில் என்னை உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்த பிறகே ரஜினி உட்கார்ந்தார். அப்படி ஒரு பண்பு ரஜினியிடம் இப்போதும் உண்டு.
டீ வந்தது. இருவரும் குடித்த பிறகு... முகவாட்டத்துடன் ரஜினி பேச ஆரம்பித்தார்...
"ரஜினி சார் உங்களை நாளைக்கி தவறாமல் வரச்சொன்னார்' என அழைப்பு வந்தது.