அ.தி.மு.க.விற்கு அடித்தளம் அமைத்துத் தந்த நகரம் திண்டுக்கல். அதனை தி.மு.க. கோட்டையாக உருவாக்கியது அமைச்சர் ஐ.பெரியசாமி. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 48 வார்டுகளில் 44 வார்டுகளை தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்த்தெடுத்தார். திண்டுக்கல் லின் முதல் பெண் தி.மு.க. மேயராக இளமதியைக் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து தான் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுங்கட்சி கட்டுப்பாட்டில் மாநகராட்சி இருந்துவந்தது.

dd

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெ., 110-விதியின்படி திண்டுக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக திடீரென உயர்த்தினார். அதைத்தொடர்ந்து நகராட்சியைச் சுற்றியுள்ள 10 பஞ்சாயத்துக்களையும் மாநகராட்சியில் சேர்க்க உத்தர விட்டதுடன் மட்டுமல்லாமல் மாநகராட்சி வளர்ச்சிக்காக 150 கோடியும் ஒதுக்குவதாக அறிவித்தார். இதனால் நகர்மன்றத் தலைவராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருதராஜ் முதல் மேயராக பதவியேற்றார்.

பதவியேற்றவர் அதிகாரிகளை உசுப்பிவிட்டு அந்த பஞ்சாயத்துக்களை மாநகராட்சியில் சேர்க்க ஆர்வம்காட்டாமல் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டார். அதன்பின் எடப்பாடி ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. மூன்று வருடத்திற்கு ஒருமுறை காண்ட்ராக்ட் விடக்கூடிய மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள், குளச் சாலை, சந்தைகள், ஆத்தூர் டேம் மீன் பிடிப்பு ஏலம், மார்க்கெட்டுக்கள், பூங்காக்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களை கமிசனுக்காக குறைத்து ஏலம் விட்டு அதன்மூலம் பல லட்சங்களை கொள்ளையடித்து மாநகராட்சியிலுள்ள பல அதிகாரிகள் பங்கு போட்டு வந்தனர். வீட்டுவரி, குழாய்வரி மற்றும் புதிதாக கடைகளுக்கு வரி போடுவதன் மூலம் பல ஆயிரங்களையும் வருமானமாகப் பார்த்துவந்தனர்.

Advertisment

இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இருந்தும் அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தே இருந்துவரும் அதிகாரிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல இடங்களுக்கான ஏலத்தை வழக்கம் போலவே குறைந்த தொகைக்கு விட்டு அதன்மூலம் பல லட்சங்களை பார்த்து, கமி சனர் வரை பங்கு கொடுத்தும் வருகிறார்கள்.

அதுபோல் மாநகராட்சியிலுள்ள வருவாய்த்துறை டவுன் பிளானிங் இன்ஜினிய ரிங் பிரிவு, சுகாதாரப் பிரிவு உள்பட சில பிரிவுகளிலுள்ள பல அலுவலர்கள் மாநகராட்சி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டுவதைவிட தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவதில்தான் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாநகராட்சியிலுள்ள பல வார்டுகளுக்கு புதிதாக தெரு விளக்குகள் மாட்டியிருக்கிறார்கள். அந்த விளக்குகள் பெயரளவில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறதே தவிர மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. அந்த அளவுக்கு அலுவலர்கள் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். வீட்டுவரி கட்டி வந்த பொதுமக்கள் பலருக்கு, கடை வரியைப் போட்டுவிட்டனர். அதை மாற்றிக் கொடுக்கவேண்டும் என்றால் அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இதில் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து மாற்றிவிட்டனர். ஆனால் பெரும்பாலானோர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து வருகிறார்கள். இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான வரி வசூல் கிடப்பில் இருக்கிறது.

Advertisment

dd

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக 35 கடைகள் பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டன. அந்த கடைகள் ஏலம்விட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி கடந்த ஒரு வருடமாக கடைகள் பூட்டிக்கிடக்கிறதே தவிர அதற்கு ஒரு தீர்வுகாண அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் லட்சக் கணக்கில் பணம் கட்டி ஏலம் எடுத்த கடைக்காரர்கள் மனம்நொந்து போயிருக்கிறார்கள்.

"தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து போகும் பஸ் ஸ்டாண்டில் பாத்ரூம் வசதிகளும், குடிநீர் வசதிகளும் சரிவர இல்லை. கட்டணக் கழிப்பறையில் தண்ணீர் வசதி சரிவர இல்லை. துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் ஒரு நபருக்கு ஏழு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை வசூல் செய்து ஒரு நாளைக்கு பல ஆயிரங்களை கொள்ளையடித்து வருகிறார்கள். மார்க்கெட்டுகள், பூங்காக்கள், சந்தை, குளச்சாலை இப்படி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்திற்கு பொதுமக்களிடம் வசூல் செய்துவருகிறார்கள். இதைப்பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

மாநகரில் உள்ள பல வார்டுகளிலும், சாலைகளிலும் குப்பைகளை சரிவர அள்ளுவ தில்லை. வார்டுகளில் சாக்கடைகளை அள்ளுவதில்லை. ஓடைகளைச் சுத்தப்படுத்துவதில்லை. இதனால் ரோடுகளிலும் கழிவுநீர் தேங்கி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் அனுமதி இல்லாமலேயே கமிசனர் தன் இஷ்டத்திற்கு மாநகராட்சியிலுள்ள சில அலுவலர்களை மாற்றியமைத்து அதன்மூலமும் ஒரு வருமானத்தைப் பார்த்தும் வருகிறார். அந்த அளவுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீரழிந் துள்ளது. ஆட்சி மாறியும் அதி காரிகள் மாறவில்லை''’என்றார் சமூக ஆர்வலரான தமிழ்ச்செல்வன்.

மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து கேட்டபோது, “"மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை காண்ட் ராக்ட் எடுத்தவர்கள் விதிமுறைகளை மீறி வசூல் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களுடைய ஏலத்தை கேன்சல் செய்வோம்'' என்றார்.

ஆக ஆட்சி மாறியும் கூட இந்த மூன்றாண்டு காலத்தில் மாநகராட்சி வளர்ச்சி என்பது பெயரளவில்தான் இருந்து வருகிறது என்பது திண்டுக்கல் மக்களின் ஆதங்கம்! இந்த ஆதங்கத்தைத் தீர்க்க என்ன செய்யப்போகிறது தி.மு.க. அரசு.

-சக்தி