ட்டியல் இனத்தில் உள்ள பழங்குடியைச் சேர்ந்த ஒருவர், திருத்தணி பகுதியிலிருந்து ரயில்வே பணிக்குத் தேர்வானார். அவரைப் பற்றி விசாரித்து, அவர் பழங்குடியினரா என விசாரிக்க காவல்துறை வந்தது. பழங்குடியினர் பகுதியில்போய் பேரைச் சொல்லி, விசாரிக்க... "இந்தப் பெயரில் யாரும் கிடையாதே' என்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், காவல்துறைக்கு விசாரித்து உறுதி செய்ய அனுப்பப்பட்ட உத்தரவை வாங்கிப் படித்துவிட்டு, "இவர் உயர்சாதிக்காரருங்க'…எனச்சொல்லி வீட்டையும் அடையாளம் காண்பித்துள்ளார். பக்கத்துத் தெருவுக்குப் போய் விசாரித்த போலீஸ் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையைப் பெற முயன்ற நபரைக் கண்டுபிடித்துள்ளது.

Advertisment

rto-jayaram

"இப்படி தற்செயலாக பிடிபடுபவர்கள் அபூர்வம். அப்படியே பிடிபட்டாலும் போலீசைக் கவனித்து பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட வேலையில் சேர்ந்துவிடுவார்கள்' என கொந்தளிக்கிறார்கள் பாதிப்புக்குள்ளாகும் கொண்டாரெட்டி பழங்குடியினர்.

Advertisment

ஒரு "ல'கர வித்தியாசத்தில், அசல் பழங்குடியினரான கொண்டாரெட்டிகளைவிட்டு, ஆந்திராவிலிருந்து வந்த உயர்சாதியினரான கொண்டால ரெட்டிகளுக்கு போலியாக எஸ்.டி. சான்றிதழ் வழங்கி, சான்றிதழுக்கு 2 லட்சம் வீதம் கல்லா கட்டிவந்திருக்கிறார் திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன்.

1960-களில் மாநில எல்லைப் பகிர்வு ஆணையின் மூலமாக ஆந்திராவிலிருந்து திருத்தணி, பள்ளிப்பட்டு வட்டங்கள் தமிழகத்தில் இணைக்கப்பட்டன. இங்கே மலைவாழ் மக்கள் இருளர், குரும்பர், கொண்டாரெட்டி ஆகிய மலைவாழ் மக்கள் வாழ்ந்துவந்தனர். இவர்களுடன் ஆந்திராவைச் சேர்ந்த கொண்டாலரெட்டி சமூகத்தினரும் வசித்தனர். இவர்கள் நிலம் உடைய, உயர்குடியினர்.

Advertisment

தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. பழங்குடியினர் பொதுவாக கல்வி வாய்ப்பு பெறுவதில் சிக்கல்களுக்குள்ளாவதைப் பயன்படுத்திக்கொண்டு, ரெட்டி மற்றும் இதர உயர்சாதியினர் போலி சாதிச் சான்றிதழ் பெற்று பணிக்குச் சென்றுள்ளனர். பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதன் பலனாக, இந்தப் பிரச்சனை அரசின் கவனத்துக்கு வந்து, தாசில்தாருக்குப் பதிலாக ஆர்.டி.ஓ.தான் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கமுடியும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்தது. மேலும் காவல்துறையினரும் விசாரித்து அவர்கள் பழங்குடியினர் என்பதை உறுதிசெய்யவேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டது.

collector

திருத்தணி ஆர்.டி.ஓ. ஜெயராமன் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பேருக்கு பழங்குடி சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், சான்றிதழுக்கு கையூட்டு பெற்றதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

இருளர் சங்க செயலாளர் குணசேகரன், ""பழங்குடியினரல்லாத நூற்றுக்கணக்கான பேர்களுக்கு பழங்குடிச் சான்றிதழ் வழங்கிய ஆர்.டி.ஓ.வை வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைதுசெய்யவேண்டும். இப்படி சான்றிதழ் பெற்று ஏராளமானவர் அரசுப் பணி, ரயில்வேயில் சேர்ந்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளிலும் இடம்பிடித்துள்ளனர். இதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும்''’என்றார்.

case

தலித் முன்னணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, ""இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளரிடம் மனுகொடுத்தோம். அவர் அதன்மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையான பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கேட்டுப்போனால், "உனக்குப் பாம்பு பிடிக்கத் தெரியுமா? இவ்ளோ வெள்ளையா இருக்கியே நீ பழங்குடிதானா?' என தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அலையவிடுகின்றனர்''’என்றார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளியிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, “""அந்த ஆர்.டி.ஓ. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிலிருந்தபோது வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை விசாரித்து வருகிறோம். குற்றச்சாட்டு உண்மையெனில் அவர்மீதும், போலிச்சான்றிதழ் பெற்று பணிக்குச் சென்றவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்''’என்றார்.

கலவரம் செய்பவர்களைவிட, அதிகார மட்டத்தில்தான் அதிக அளவில் சமூக விரோதிகள் நிறைந்திருக்கிறார்கள்.

-அருண்பாண்டியன்